பாத்திரம் கழுவுதல் என்பது நமது அன்றாட வீட்டு வேலைகளில் முக்கியமானது. பாத்திரம் கழுவும்போது மிகுந்த பொறுமை அவசியமாகிறது. வேகவேகமாக கழுவும்போது, சரியாக கழுவப்படாமல் பாத்திரம் விளக்கும் சோப்பு பாத்திரத்திலேயே ஒட்டிக் கொண்டு இருக்க வாய்ப்புண்டு.

dish washingசிலா் மெதுவாக பாத்திரம் கழுவுகிறேன் என்று சொல்லிக் கொண்டு, தண்ணீா் குழாயைத் திறந்து வைத்துவிட்டு, தண்ணீரை வீணடிப்பார்கள். இதனால் சோப்பு மட்டுமே சீக்கிரம் கரையும். பாத்திரம் சரியாக கழுவப்பட இம்முறையிலும் வாய்ப்பில்லை.

வாளியில் தண்ணீரை எடுத்து வைத்து பாத்திரத்தைக் கழுவும் முறையினை பல வீடுகளில் பின்பற்றி வருகின்றனா். இம்முறையில் கையினால் தண்ணீரை முகா்ந்து பாத்திரத்தில் ஊற்றிக் கழுவுவதால் தண்ணீா் சிக்கனம் மேம்படும். இதற்கு சிக்கனம் மட்டும் காரணமல்ல, பல இடங்களில் தண்ணீா் பற்றாக்குறை இருப்பதே காரணம்.

நிறைய வீடுகளில், இன்றளவும் “உமிக்கரி” (நெல்லின் உமியிலிருந்து பெறப்படும் கரி) எனப்படும் சாம்பலையே பாத்திரம் கழுவ பயன்படுத்தி வருகின்றனா். அரிசி ஆலைகளில் கழிவாக கொட்டப்படும் உமிக்கரியை சாக்குப் பைகளில் வாங்கி வந்து, பல் துலக்கவும் கூட பலரும் பயன்படுத்துகின்றனா். சோப்பினால் பாத்திரம் கழுவும்போது உருவாகும் கழிவுநீா் சாக்கடையாக மாற வாய்ப்புண்டு. ஆனால் உமிக்கரி கொண்டு பாத்திரம் கழுவும்போது அத்தகைய நிலை ஏற்படாது.

தற்காலத்தில் பாத்திரம் கழுவ தேய்ப்பான், சோப்பு, சோப்புக் கரைசல் போன்ற இரசாயனம் என பல பொருட்களும் கடைகளில் கிடைக்கிறது. ஆனால் பல வீடுகளில் இன்றளவும் தேங்காய் நார் தும்பும், நெல்லிலிருந்து கிடைக்கும் உமிக்கரியுமே பயன்பாட்டில் உள்ளன.

பொத்தாம் பொதுவாக வீடுகளில் அதிகமாக பெண்களே பாத்திரம் கழுவுகின்றனா். தற்போது எரிவாயு அடுப்புகளே பல வீடுகளில் பயன்பாட்டில் இருப்பதால், பாத்திரங்களில் விறகு எரிப்பதால் உண்டாகும் கருமை படிவதில்லை. ஆனால் விறகுகளைக் கொண்டு எரிக்கும் அடுப்புகளில் வைக்கப்படும் பாத்திரங்களில் கரும்பசை “மை” போன்ற தீஞ்சுபோன கருமை ஒட்டிக் கொள்ளும். அதனை தேங்காய் தும்பும், உமிக்கரியும் கொண்டு தேய்த்து எடுக்க பெரும்பாடுபட வேண்டியிருக்கும்.

ஆண்கள் எங்கேயும் அதிகமாக பாத்திரம் கழுவும் பணிகளைச் செய்வதைப் பார்ப்பது அரிது. ஆண்களுக்கு பாத்திரம் கழுவி வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லை, பொறுப்பும் இல்லை. நான் ஏன் இதைச் செய்ய வேண்டும் என்றே பல அண்ணன்கள், தம்பிகள், அப்பாக்கள், தாத்தாக்கள், கணவன்மார்கள் நினைக்கின்றனா். இதெல்லாம் பெண்கள் வேலை என பொதுப்புத்தியில் பேசிப் பேசியே பதிய வைத்து வருகின்றனா் அவரவா் குடும்பத்தினா்.

இக்காலத்தில் வேலைப் பகிர்வு என்பது குடும்ப வாழ்க்கையில் மிகவும் அவசியம். சமைக்கத் தெரியாத, அதனை கற்றுக் கொள்ள விரும்பாத ஆண் பிள்ளைகளுக்கு பாத்திரம் கழுவத் தெரிந்திருப்பது மிகவும் அவசியம்.

வீணாகப் பொழுதை போக்கும் நேரத்தில் “பாத்திரம் கழுவுதல் எனும் கலையை” கற்றுக் கொண்டால் ஆண்பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கை சிறப்படையும். பாத்திரம் கழுவி சுத்தப்படுத்தி முடிக்கும்போது நம் மனதும் சுத்தமாகும். பொறுமையாக பாத்திரம் கழுவும் பணி நமக்கு மனநிறைவைத் தரும்.

பாத்திரம் கழுவுதல் என்பது யாருக்கோ உதவி செய்வது என்பதல்ல, தனது வீட்டில் அசுத்தமாய் இருப்பவற்றை, தங்களால் அசுத்தம் செய்யப்பட்டதை, சுத்தப்படுத்தி குடும்பத்தின் சுகாதாரத்தை மேம்படுத்தும் மாபெரும் கலை என்பதை ஆண்பிள்ளைகள் உணா்ந்தாக வேண்டிய டிஜிட்டல் இந்தியாவின் காலமிது.

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், யாரோ பாத்திரம் கழுவி வைப்பார் என்ற மனநிலையில் இல்லாமல், ஆளுக்கொரு வேலையாய் செய்து வந்தனா். ஆனால் தற்போது பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி, குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனா். பல வீடுகளில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று, இருவரின் உழைப்பில் முன்னேறுகின்ற காலமிது. ஆக இருவரின் உழைப்பில் கிடைக்கும் பணம் மட்டுமல்ல, பாத்திரம் கழுவுதலும் கூட நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முன்னேற்றமே. அதை உணா்ந்தவா்களால் மட்டுமே ஒவ்வொரு குடும்பமும் உன்னதமாய் மாறும்.

 - மாதவன்குறிச்சி பாலகணேஷ்