மிக நீண்டவரிசையில் கையில் அடையாள அட்டையுடன் காத்திருந்து வாக்களித்த 3.24 கோடி வாக்காளர்கள் கோடி கோடியாய் பணத்தைக் கொட்டியவர்கள் முதல் தேர்தல் காப்புத் தொகைக்காக ஆடு மாடுகளையும், உழுது பிழைத்த காணி நிலத்தையும் விற்றவர்கள், ஓட்டிப் பிழைத்த ஆட்டோவையும் அடமானம் வைத்தவர்கள் வரை 2,586 வேட்பாளர்கள் 51,534 வாக்குச் சாவடிகள் லட்சக்கணக்கான தமிழகக் காவல் துறையினருடன் சேர்ந்து, இந்திய துணை நிலை ராணுவத்தின் 198 படைப் பிவுகள் கொடுத்த பாதுகாப்பு கொடும் ஆயுதங்களாக மாறிவிட்ட ஊடகங்களின் பேரைச்சல் ஓட்டுப் போடுவதற்கு சாதிவாரியாக, வீடுவீடாக விநியோகிக்கப்பட்ட கையூட்டுகள் கள்ள ஓட்டுகள் கலவரங்கள் படுகொலைகள் மிரட்டல்கள் தற்கொலைகள் என்று ஏகப் பெருகளமாக நடந்து முடிந்திருக்கிறது, தமிழக சட்டமன்றத் தேர்தல்.

Women
தமிழகத்தோடு சட்டமன்ற பொதுத் தேர்தலைச் சந்தித்த மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இதே நிலைதான். ஆனாலும் தேர்தல் நாளன்று மக்கள் திரண்டு சென்று வாக்களித்திருக்கிறார்கள். கேரளாவில் 72.3 சதவிகிதம் தமிழகத்தில் 70.1 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஏன் பெருந்திரளாகச் சென்று மக்கள் வாக்களிக்கிறார்கள்? அதற்குக் காரணம், ஜனநாயகத்தின் மீது தீவிரமான பற்றுடையவர்கள் இந்தியர்கள் என்று எவரேனும் கூறடியுமா? அரசியல், சட்டம், ஜனநாயகம் இவை பற்றி எதுவும் அறியாத மக்களே தேர்தல்களில் அதிகமாக வாக்களிக்கிறார்கள். நடந்து கொண்டிருப்பது என்ன வகையான ஆட்சிமுறை என்பதைப் பற்றிக்கூட அறியாத மக்கள் அவர்கள். 2004 இல் நடந்த இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்களில் 74.2 சதவிகிதம் கல்வியறிவற்றவர்கள் என்று "சமூக வளர்ச்சி பற்றிய ஆய்வு மய்யத்தின் ஆய்வறிக்கை 2005'தெரிவிக்கிறது. அதில் 80 சதவிகிதத்தினர் ஒடுக்கப்பட்ட மக்களாவர்.

தலித் மக்களும், சிறுபான்மை சமூகத்தவர்களும் பெண்களும்தான் தேர்தலில் அதிக ஆர்வமுடனும், வேகத்துடனும் வாக்களிக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? அந்த மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டதா? அம்மக்களின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறதா? நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சி முறையே தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சரியான வழிமுறை என்று அவர்கள் நம்புகிறார்களா? இவற்றில் எதுவும் இல்லை என்றால், ஏன் அவர்கள் திரண்டு வந்து வாக்களிக்கிறார்கள்? வாக்குச் சாவடியை நோக்கி அம்மக்களை இழுத்து வருவது எது?

அரசின் பாதுகாப்பு, சமூக மதிப்பு, பொருளாதார வளம் ஆகியவற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மேல்தட்டு வகுப்பினர் தேர்தலில் வாக்களிப்பதில்லை. நாட்டின் வளத்தை உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருக்கும் ஆதிக்கச் சாதியினரே அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களாகவும், பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அத்தகைய வகுப்பினருக்கு இந்திய ஜனநாயகம் முக்கியமானதாகப் படவில்லை. அதைப் பற்றிய உயர்வான மதிப்பீடும் அவர்களிடமில்லை. இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்வதிலிருந்துதான் இந்திய ஜனநாயகம் சந்தித்துக் கொண்டிருக்கிற சிக்கல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். அது யாருக்கு அதிக பாதுகாப்பானதாகவும், யாருக்கு தேவையானதாகவும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கடந்த அய்ம்பதாண்டு காலமாக இந்திய ஜனநாயகத்தின் மீதும், அதன் அரசமைப்புச் சட்டங்களின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு செயலாற்றி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள்தான். தேர்தலில் தீவிரமாகப் பங்கேற்பதன் மூலம், இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக விளங்குகிறார்கள் தலித் மக்கள். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தலித் மக்கள்தான் வாக்கு வங்கிகளாக உள்ளனர். ஆயினும் அம்மக்களின் அடிப்படைத் தேவைகள்கூட, இன்று வரையிலும் நிறைவு செய்யப்படவில்லை.

இந்து சாதியச் சமூகத்தின் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் தலித் மக்கள் நிரந்தரமான கொடிய வறுமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குடிநீர், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக அம்மக்கள் மீது கடுமையான பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இருபத்தைந்து கோடி தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை சமூக இழிவிலிருந்து மீட்கவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும் இந்திய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். தலித் மக்களுக்கு வந்து சேரவேண்டிய நலன்களைத் தடுத்து நிறுத்துபவர்களாகவும் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இது, சமூகத்தளத்தில் அம்மக்களை ஒடுக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டி, வறுமையிலும் அறியாமையிலும் அவர்களை நிலை நிறுத்தி வைத்திருக்கும் ஆதிக்க சாதி ஆண்டைகளின் செயலுக்கு இணையானதாக இருக்கிறது. எனவேதான், எந்நாளும் ஆண்டைகளையும் அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் தலித்துகள். நல்வாய்ப்பாக அந்தப் போராட்டம் ஜனநாயக வழியில்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவேதான், இந்திய ஜனநாயகம் எந்தவித சேதாரமின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளை மீட்க, ஜனநாயக வழிப் போராட்டங்களைத் தான் விரும்புகிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்வதற்கு நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஏனெனில், நடைமுறை அரசையும் சமூக அமைப்பையும் உடைத்தெறியும் புரட்சிகர ஆயுதப் போராட்டங்களில், அம்மக்கள் இன்றுவரை ஆர்வம் காட்டவில்லை. அதற்குக் காரணம், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, அரசியல் எழுச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அம்மக்களுக்குக் காட்டியது ஜனநாயகப் பாதைதான்.

இந்திய சாதியச் சமூகம் பலநூறாண்டுகளாக மறுத்து வந்த மனித உரிமைகளையும், காலனி ஆட்சிக் காலத்தில் மறுக்கப்பட்ட குடியுரிமை வாக்குரிமை போன்ற அரசியல் உரிமைகளையும் இன்று தலித் மக்கள் பெற்றிருக்கிறார்கள். அதைப் பெற்றுத் தந்த ஜனநாயக மதிப்பீடுகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதென்பது, அதில் பங்கேற்பதும் அதைப் பரவச் செய்வதுமாகும். அதைத்தான் தலித் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஜனநாயகத்தில் பங்கேற்பதன் மூலம், தங்களுக்கு இணையானவர்களாக தலித் மக்கள் மாறுவதை சனாதனப் பற்றுக் கொண்ட சாதி ஆதிக்கவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஜனநாயகத்திலும் தலித் மக்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், சாதி இந்துக்கள் அனைவரின் சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இணைந்து நின்று, தலித் மக்களை ஜனநாயகச் சுழற்சியிலிருந்து வெளியேற்றத் துடிக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் தலித் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்; தங்கள் பிரதிநிதிக்கு வாக்களிக்க முனையும்போது தாக்கப்படுகிறார்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பதவிகளில் அமரும்போது படுகொலை செய்யப்படுகிறார்கள். மதுரை மேலவளவில் அதுதான் நடந்தது.

இந்நிலை அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் அழுத்தமாக வெளிப்பட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. முன்னதாக தேர்தல் கூட்டணி அமைப்பதில் தலித் அமைப்புகள் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டன. "அழைப்பிற்காகக் காத்திருக்கிறோம்' என்று வெளிப்படையாகவே அறிவித்தும் கூட, அதற்குச் செவிமடுப்பால்லை. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் அ.தி..க.வுடன் தேர்தல் கூட்டணி உடன்பாடு கண்டது. அதற்காகத் தன்னை "அரசியல் கட்சி'யாக அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானது. புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தனித்துப் போட்டியிட்டது. எதிர்பார்த்தது போலவே இரண்டு முன்னணி தலித் அமைப்புகளுமே இந்தத் தேர்தலில் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி கொண்ட போதிலும் அக்கட்சியைச் சார்ந்த சாதி வெறியர்களால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர். அ.தி.மு.க.வைச் சார்ந்த சாதி இந்துக்கள் யாரும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை. ஏனெனில், 2001 இல் சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெற்ற 1.29 சதவிகித வாக்குகள், இந்தத் தேர்தலில் அதிகரிக்கவில்லை. “மங்களூர், காட்டுமன்னார் கோயில் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் தனித்து நின்றிருந்தால்கூட, குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெற்றிருப்போம் என்பதை மறுக்க முடியாது. கூட்டணி சேர்ந்தது மூலம் அ.தி.மு.க. மற்றும் ம.தி..க. தொண்டர்களின் ஆதரவையும், ஒற்றுமையையும் பெற்றோம் என்றாலும்கூட, அவர்களின் வாக்கு வங்கி முழுமையும் விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கிடைக்கவில்லை என்பதை என்னால் உணர முடிகிறது'' என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகத்திற்கோ பாதகமான முடிவே ஏற்பட்டுள்ளது. தலித் மக்கள் அமைப்புகளை ஆதரிக்கும் சிந்தனை இன்றளவும் சாதி இந்துக்களிடம் உருவாகவில்லை. சாதி இந்து வாக்காளர்கள் தலித் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க, தொடர்ந்து மறுத்து வருவதற்கு என்ன காரணம்? ஜனநாயகத்தில் பங்கேற்று ஆட்சி அதிகாரத்தில் அமருகிற வாய்ப்பை தலித் மக்கள் பெற்றுவிடக் கூடாது என்ற ஒரே ஒரு முடிவுதான். எனவேதான், இந்து சாதியத்தின் அநீதியான சமூக அமைப்பிற்கு எதிராகப் போராடுவதைப் போலவே, அதே சக்திகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் போராட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தைத்தான், இந்திய ஜனநாயகத்தைக் காக்கவும், சாதியவாதிகளிடமிருந்து அதை மீட்கவும் நடைபெறுகிற உண்மையான "ஜனநாயகப் புரட்சி' என்றார் புரட்சியாளர் அம்பேத்கர்.

Krishnasamy
இரட்டை வாக்குரிமைக்கு மாற்றாக பூனா ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற தனித் தொகுதிகளை, 1937 க்குப் பிறகு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் "கபளீகரம்' செய்யத் தொடங்கிய போதே இந்திய ஜனநாயகத்தின் மய்ய இழை அறுபட்டுப் போனது. 1942 இல் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் 1945, 1947 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் களமிறங்கினார். ஆனாலும் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதிகபட்சமாக 9.9 சதவிகித வாக்குகளையே அது பெற்றது. 1952 இல் நேருவின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய பின்னர், நடைபெற்ற தேர்தலில் "தேசிய கட்சி' என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பினும் கூட, ஒரு தொகுதியில்கூட பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு வெற்றி பெற முடியவில்லை. பாம்பே வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அம்பேத்கர் தோல்வி அடைந்தார்.

அதன்பிறகு, அவரது ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட இந்திய குடியரசுக் கட்சி, 1962, 1967, 1969 தேர்தல்களில் போட்டியிட்டு 3.5 முதல் 4.1 சதவிகிதம் ஓட்டுகளையே பெறமுடிந்தது. எனவே, கடந்த நூற்றாண்டு காலம் நடந்த தேர்தல்களில் சாதி இந்துக்கள், தலித் இயக்கங்கள் தேர்தலில் போட்டியிடுகிறபோது, அதற்கு வாக்களிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியும். மேலும், தலித் இயக்கங்களுக்கு தலித் மக்கள் அனைவரும் வாக்களித்து விடாதபடி சாதி இந்துக்களால் தடுத்து நறுத்தப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு வளர்ந்து வருகின்ற இயக்கங்களை திட்டமிட்டுச் சிதறடிக்கிறார்கள். எல்லா தடைகளையும் கடந்து வெற்றி பெற்றுவிடும் தலித் இயக்கப் பிரதிநிதிகள், சாதி இந்துக்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு அல்லது ஆசை காட்டப்பட்டு விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.

இந்தியா முழுவதிலும் ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகளை தேர்தல்களத்தில், சாதி இந்துக்களின் கட்சிகளாகிய தி.மு.க., அ.தி.மு.க., போன்ற திராவிடக் கட்சிகள் முளையிலேயே கிள்ளி எறியத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன. 1989 இல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இருபெரும் சாதி இந்துக் கட்சிகளை எதிர்த்து நின்று, காட்டுமன்னார்கோயில் தொகுதியில், எல் . இளையபெருமாளின் மனித உரிமை இயக்கத்தின் வேட்பாளர் தங்கசாமி, சாதி இந்துக்களின் ஓட்டுகள் இல்லாமலேயே வெற்றி பெற்றார். அவரைத் தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. 1991 இல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காட்டுமன்னார்கோயில், வானூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது மனித உரிமை இயக்கம்; இரண்டு தொகுதிகளிலுமே இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு இயக்கம் வெற்றி பெற்றது. ஓராண்டு முடியும் முன்னரே, மனித உரிமை இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்களான சித்தாமூர் ஆறுமுகம் (வானூர் தொகுதி), ராஜேந்திரன் (காட்டுமன்னார்கோயில்) இருவரையும் அ.தி.மு.க. தனது கட்சியில் இணைத்துக் கொண்டது. அதன்பிறகு, மனித உரிமை இயக்கம் சிதையத் தொடங்கியது. இன்று அப்படியொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்ற மனித உரிமை இயக்கம் இல்லாமலேயே போய்விட்டது.

எனவேதான், இந்தியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகம் ஒரு தலைப்பட்சமானது; அநீதியானது; முழுமையற்றது; மக்கள் விரோதமானது என்கிறோம். இந்தியாவில் ஜனநாயகம் உருவாகாமல் போனதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவான பதிலைத் தருகிறார்: “இந்தியாவில் ஜனநாயகம் உருவாகாமல் போனதற்கு இந்து மதம்தான் காரணம். சகோதரத்துவம் என்பதன் எதிர்க் கொள்கையை மூலமாகக் கொண்டிருக்கிறது அது. சமத்துவமின்மையே இந்து மதத்தின் மூலக் கோட்பாடு. இந்துமதத்தின் சமத்துவமின்மை ஒழியும்வரை எந்தத் தேர்தலாலும் ஜனநாயக ஆட்சியைத் தரடியாது'' என்கிறார். அத்தகைய இந்துமதம் வளர்த்தெடுத்த கருத்துகளே சாதி இந்துக்களை இயக்குகிறது.

எனவேதான், தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்று வெற்றி பெறுவதை சாதி இந்துக்கள் தடுக்க முனைகிறார்கள். ஜனநாயகத்திற்கு விரோதமான இந்து மதக் கோட்பாடுகள், இந்தியச் சமூகத்திலிருந்து ஒழிக்கப்படும் வரை இந்தியாவின் ஜனநாயகம், உயிரற்றதாகவே இருக்கும். அவ்வப்போது நடைபெறும் தேர்தல்கள், உயிரற்ற ஜனநாயகப் பிணத்தை மேலும் கீழும் புரட்டிப் பார்க்கும் செயலாகவே இருக்கும்.

.
-யாக்கன்

 

Pin It