உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு ஷிரின் எபாடிக்கு (Shirin Ebadi) 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஒஸ்லோவில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் வழங்கப்பட்டது. ஷிரின், ஈரான் நாட்டில் உள்ள குழந்தைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடி வருபவர். இஸ்லாமிய சமூகத்தில் முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற ஈரான் தேசப் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றவர்.

Shirin Ebadiஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததையும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தபடி, தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, போர் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுவதையும், நோபல் பரிசு பெற்றபோது தான் ஆற்றிய சொற்பொழிவில், எடுத்துரைத்துக் கடுமையாகச் சாடினார். அமெரிக்காவின் அடாவடித்தனங்களை எதிர்த்து முழங்கினார்.

ஷிரின் எபாடி 1947 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் பிறந்தார். சட்டப் படிப்பை டெஹரான் பல்கலைக் கழகத்தில் முடித்து சிறந்த வழக்கறிஞராக விளங்கினார்.

ஈரான் நாட்டுப் பொருளாதாரம் பெட்ரோலியப் பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டதாகும். அங்கு, முகமது நீஜாஷா பாக்லவி என்பவர் 1941 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். இவர் நவீனமயமாக்கல் மற்றும் மேற்கத்தியக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தார். மக்களுக்கு எதிரான இவரது ஆட்சியை எதிர்த்து, போராட்டங்களும், கலவரங்களும், வெடித்தன. இப்புரட்சியின் எதிரொலியாய் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டார்; புகலிடம் தேடி வெளி நாட்டுக்கு ஓடி விட்டார். அத்தருணத்தில், கோமேனி தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் இஸ்லாமியக் குடியரசு ஏற்பட்டது.

இஸ்லாமிய மத அடிப்படைவாதியான கோமேனி மதக்கோட்பாடுகளைக் கடுமையாக அமல்படுத்தினார். பத்திரிக்கைகளின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறித்தார். மதத்தையும், மதத்தலைவர்களையும் விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன. உண்மையை எழுதிய எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்பொழுது, ஈரானில் நீதிபதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ‘ஷிரின் எபாடி’யைப், பதவியை விட்டு விலகுப்படி, மத அடிப்படைவாதிகளும், ஆணாதிக்கச் சிந்தனையாளர்களும் நிர்ப்பந்தித்தனர்.

ஈரான் மீது 1980 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையை ஈராக் மேற்கொண்டது. இதனால் ஈராக்-ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் போர் மூண்டது. போரினால் இரண்டு நாடுகளிலும் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்பட்டன. கொடுங்கோலன் கோமேனி 1989 ஆம் ஆண்டு இறந்தார்.

எபாடி போர் நிலைமைகளை கவனமாக ஆராய்ந்தார். அமைதி ஏற்படவும், சமூகத்தில் சனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடினார். பேச்சுரிமை, அரசியல் சுதந்திரம் ஆகியவற்றிற்காகப் போராடுவதில் தம்மை இணைத்துக் கொண்டார்.

இஸ்லாமியச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைச சுட்டிக் காட்டினார்; சீர்திருத்தங்கள் செயய்ப்பட வேண்டும் என்று வேண்டினார்; மக்களுக்கான அடிப்படை உரிமைகள வழங்கப்படவேண்டும் என்பதற்காகவும், பேச்சு, எழுத்து சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என்பதற்காகவும் குரல் எழுப்பினார். குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அதன் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். குழந்தைகளின் உரிமைக்காகப் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

‘ஈரான் குழந்தைகளின் சட்ட உரிமைகள்’, ‘ஈரானில் மனித உரிமைகள்’ முதலிய முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, ‘யூனிசெப்’ நிறுவனத்தின் உதவியுடன் 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளன.

ஈரான் நாட்டின் ஆட்சியாளர்களால் எழுத்தாளர்கள் மற்றும் அறிவாளிகள் பலர் 1999-2000 ஆண்டுகளில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டனர். அப்படுகொலைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வாதாடினார். பிற்போக்குத்தனமான ஆட்சிக்கு எதிராகப் போராடிய டெஹரான் பல்கலைக் கழக மாணவர்கள் ஈரானிய ஆட்சியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைகளை துணிச்சலுடன் வெளி உலகத்துக்குக் கொண்டு வந்ததனால் சிறையிலடைக்கப்பட்டார்.

ஷிரின் எபாடி, உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். மும்பை நகரில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமூக மாமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு, உலகம் முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும், அறிவாளிகளும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும் உலகமயத்திற்கு எதிராகப் போராட வேண்டுமென அறை கூவல் விடுத்தார்.

ஷிரின் எபாடி மனித உரிமைகளுக்காகவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காகவும், அகதிகளின் வாழ்வுரிமைக்காகவும், தொடர்ந்து போராடி வருபவர்.

 - பி.தயாளன்