“இந்த பிரபஞ்சப் பெருவெளி எப்படி படைக்கப்பட்டது என்பதை யாரும் அறிந்திருக்க வில்லை. யாரும் கூறவும் முடியாது. மெய்ஞ் ஞானிகளும், ஜோதிடர்களும் காலத்தை கணித்துக் கூறுபவர்களும் பிரபஞ்சம் படைக்கப் பட்ட பிறகே வந்தவர்கள். அவர்களால் எப்படி பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதத்தை விண்டுரைக்க முடியும்? அப்போது சூரியனும் இல்லை. சந்திரனும் இல்லை. இரவும் இல்லை. பகலும் இல்லை. அறிவும் இல்லை. அறியாமையும் இல்லை. பிரம்மா மட்டுமே தனது சக்தியை பயன்படுத்தி பிரபஞ்சத்தை உருவாக்கினான்.”

அயோத்தி வழக்கு தொடர்பாக விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம்வீர் சர்மா தன்னுடைய தீர்ப்புரையில் மேற்கோள் காட்டியுள்ள ரிக் வேத வாசகங்கள் இவை. அவர் தனது தீர்ப்பை 21 பாகங்கள் கொண்ட 5 ஆயிரம் பக்கங்களில் எழுதியுள்ளார்.

அனுமன் பக்தர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் தரம்வீர் சர்மாவுக்கு இத்தகைய தீர்ப்பை வழங்கியதற்காக ஆர்எஸ்எஸ் சார்பில் சாமியார்கள் சபை பாராட்டுவிழா நடத்தி மகிழ்ந்துள்ளது.

பிரபஞ்சம் படைக்கப்பட்டது குறித்து ஒவ் வொரு மதமும் ஒவ்வொரு வகையான புராணக் கதைகளை கூறுகின்றன. ஆனால் அறிவியல் கூறும் கோட்பாடுகள் வேறு மாதிரி உள்ளன. பக்தி புராண சொற்பொழிவுகளில் இத்தகைய கதைகள் இடம்பெற்றால் அது குறித்து யாரும் ஆட்சே பிக்கப் போவதில்லை. நாடே பரபரப்போடும், பதட்டத்தோடும் எதிர்பார்த்த ஒரு தீர்ப்பில் பிரபஞ்சத்தின் படைப்பாக்கம் குறித்து பிரமிப் போடு இப்படிக் கூறியுள்ளார் ஒரு நீதிபதி.

இத்தகைய பிரமிப்பும் பக்தி பரவசமும் அவரது தீர்ப்பின் சாராம்சத்திலும் இடம் பெற் றிருப்பது தான் விசித்திரமானது. விபரீதமானது. அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடத்தில் தான் ராமர் பிறந்தார். குழந்தை ராமர் பிறந்த இடமாக கருதி பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ள சர்மா, தனது தீர்ப்புரையில் இதற்கு முரண்பட்ட கருத்தையும் கூறியுள்ளார். கடவுள் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. அவருக்கு உருவம் இல்லை. ஆனால் அவரை எந்த உருவத்திலும் வணங்கலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

கடவுள் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை என்றால் இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதி அறுதியிட்டுக் கூறுவது எப்படி? ராமாவதாரக் கதையின்படி கோசலைக்கு மகனாக ராமன் பிறந்ததாக கூறப்படுகிறது. நரசிம்ம அவதாரம் தோன்றிய இரணியன் கதையின்படி பகவான் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண் டால் எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார். கடவுள் இல்லாத இடத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த இந்த வழக்கில் மூன்று நீதிபதிகளும் தனித் தனியாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மூவரது தீர்ப்பிலும் பொதுவான அம்சமாக கருதப்படுவது சர்ச்சைக் குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை இந்து மகாசபை, நிர்மோகி அகோரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் மூன்றாக பிரித்து வழங்க வேண்டும் என்பதுதான்.

அதிலும் குறிப்பாக ராம் லல்லா விராஜ் எனப்படும் குழந்தை வடிவ ராமர் சிலை வைத்து வழிபடப்படும் மத்திய பகுதி இந்துக்களுக்கும், சீதா ரஸோய் எனப்படும் சமையல்கூடம், ராம் சபூத்ரா எனப்படும் யாக வேதிகை, பண்டார் ஆகிய பகுதிகள் நிர்மோகி அகோரா எனும் அமைப் பிடமும் எஞ்சிய மூன்றில் ஒரு பகுதி வக்பு வாரியத்திடமும் ஒப்படைக்க வேண்டும் என்பது தீர்ப்பின் சாரம்சம்.

தினமணி நாளேடு தனது தலையங்கத்தில் “நல்ல வேளை, இதே போல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்கு தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமூகமான சமரசத்திற்கு வழி வகுக் கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ?” என்று பொருத்தமாகவே குறிப்பிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பு கிராமத்து ஆலமரத்தில் அமர்ந்துகொண்டு வழங்கப்படும் கட்டப் பஞ்சாயத்தை ஒத்திருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப் பட்ட இந்தத் தீர்ப்பை வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

கே.என்.பணிக்கர், உமா சக்ரவர்த்தி, சைய்யது ஹமீது, ஹர்ஷ் மந்திர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை இந்தத் தீர்ப்பு கவனத்தில் கொள்ள வில்லை என்றும், உண்மையை நம்பிக்கை தோற்கடித்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

“கற்பனையின் அடிப்படையில் உருவான நம்பிக்கையை கருதுகோளாகக் கொண்ட இந்தத் தீர்ப்பு ஒரு ஆபத்தான முன்னுதாரணம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றியல் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரான இர்பான் ஹபீப் கூறு கையில், “ஒரு தரப்புக்கு இரண்டு பகுதி, மற்றொரு தரப்புக்கு ஒரு பகுதி என்ற தீர்ப்பு தர்க்கவியல் அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல. 1949ம் ஆண்டில்தான் பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் ராமர் சிலை இருப்பதை ஒரு வலுவான ஆதார மாகக் கொண்டிருப்பது விசித்திரமானது. ஆனால் அதே நேரத்தில் 1992ல் பாபர் மசூதி கட்டிடம் இடிக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தில்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர், டி.என்.ஷா “வரலாற்று உண்மைகளை கருத்தில் கொள்ளாத தீர்ப்பு இது. புராணங்கள் ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளதே யன்றி அகழ்வாய்வு முடிவுகள் கருத்தில் கொள்ளப் படவில்லை” என்கிறார்.

2003ம் ஆண்டு பாஜக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வும் அதன் முடிவுகளும் நம்பகத்தன்மை கொண்டதல்ல என்கிறார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அகழ்வாய்வுத்துறையைச் சேர்ந்த சுப்ரியா வர்மா.

நீதிபதிகள் அகர்வாலோ, தரம்வீர் சர்மாவோ கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான எந்தவொரு அகழ்வாய்வு முடிவையும் மேற்கோள் காட்ட வில்லை என்றும் சுப்ரியா வர்மா மேலும் கூறுகிறார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வுத் துறை பேராசிரியர் ஜெயா மேனன் கூறுகையில், நீதிபதிகள் கோவில் இருந்த இடத் தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்ற கூற்றிற்கு எதை ஆதாரமாகக் கொண்டனர் என்று தெரிய வில்லை. சர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாய்வு நடத்தப்பட்டபோது விலங்குகளின் எலும்புகளும், கண்ணாடி பீங்கான்களும் புதைகுழி இருந்ததற் கான தடயங்களும் கண்டறியப்பட்டன. இவற்றை நீதிமான்கள் கருத்தில் கொண்டார்களா என்பது தெரியவில்லை என்கிறார்.

பண்டைக்கால இந்தியா குறித்த வரலாற்று ஆய்வாளரான ரொமீலா தாப்பர் “வரலாற்றுக் குள்ள மரியாதையை இந்தத் தீர்ப்பு செல்லாக் காசாக்கிவிட்டது. வரலாற்றின் இடத்தில், மத நம்பிக்கையை அமர்த்திவிட்டது” என்று கூறியுள்ள தோடு “மசூதியைக் கட்டுவதற்காக 12ம் நூற்றாண் டில் அங்கிருந்த கோவில் தகர்க்கப்பட்டதாக தீர்ப்பு கூறுகிறது. இதனால் புதியகோவில் கட்டுவதை நியாயப்படுத்தி உள்ளார்கள்” என்றும் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கு வழிவகுக்கும் தீர்ப்பு இது என்றார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். மசூதியை இடிக்க ரத யாத்திரை நடத்திய எல்.கே.அத்வானி, தாம் நடத்திய ரத யாத்திரை நியாயமானது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துவிட்டது என்கிறார்.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தீர்ப்பை வரவேற்றதோடு அந்த இடத்தை முஸ்லிம்கள் விட்டுக்கொடுத்துவிட வேண்டுமென்றும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தாம் உதவத் தயார் என்றும் கூறுகிறார்.

இந்த தீர்ப்பை குதூகலமாக வரவேற்றுள்ள ஆர்எஸ்எஸ் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வு காண முன்வரவேண்டுமென முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பேச்சு வார்த்தையின் பொருள் என்னவென்றால் அந்த இடத்தை அப்படியே கோவில் கட்ட கொடுத்து விட்டு அகன்றுவிட வேண்டுமென்பதுதான். பாபர் காலத்தில் நடந்த பாவத்திற்கு முஸ்லிம்கள் பரி காரம் தேடிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேதான் அத்து மீறி மசூதிக்குள் பாலராமர் சிலை வைக்கப் பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போதுதான் பாபர் மசூதி இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அப்போது நடந்த கரசேவைக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக இப்போது தீர்ப்பை வரவேற் றுள்ளதிலிருந்து வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால் பகுத்தறிவு பாரம்பரியத்தில் வந்ததாக கூறிக்கொள்ளும் திமுகவின் தலைவர் கலைஞர் அனைவருக்கும் திருப்தியளிக்கும் தீர்ப்பு இது என்று ஒரு போடு போட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ராமன் பிறந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜ ராஜனை புதைத்த இடம் தெரியவில்லையே என்று ஆதங்கப்பட்டார். அந்த இடத்தைத் தெரிந்து கொண்டு இவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை பெரிய கோவிலில் ஆயிரம் நடனமணிகளை வைத்து நாட்டியாஞ்சலி நடத்தியதுபோல ராஜராஜன் கல்லறையில் ஆயிரம் பெண்களை ஒப்பாரி வைக்கச் சொல்லப் போகிறாரோ என்னவோ?

உண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் இந்த தீர்ப்பு குறித்த நிதானமான மதிப்பீட்டை முன் வைத்ததோடு, இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விபரீதங்கள் குறித்தும் எச்சரித்துள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று திரேதா யுகத்திலிருந்தே யாரும் உரிமை கொண்டாடவில்லை. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்த பிறகு மக்களை பிரித்தாளும் நோக்கத்துடன் அவர்கள் கிளப்பிவிட்ட கதைதான் இது. பைசாபாத்தில் சிப்பாய்க்கலகம் வெடித்தபோது அயோத்தி மடாதிபதிகள் பிரிட்டிஷாரை ஆதரித்தனர். ராணுவத் தினருக்கு உணவும் தங்கும் இடமும் கொடுத்து உபசரித்தனர். இதற்கு சன்மானமாக பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும், வேலி அமைக்கவும் பிரிட்டிஷார் அனுமதித்தனர். அன்று தொடங்கி புகைந்துகொண்டிருக்கிறது இந்தப் பிரச்சனை.

இந்த வழக்கு ஏற்படுத்திய பரபரப்பில் வசதி யான பலரும் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறந்து விடுகின்றனர் அல்லது மறைக்க முயல்கின்றனர். இந்த வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக்சிங்கால், உமாபாரதி ஆகியோர் பிரதான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு முறைகூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை முறையாக நடப்பதாகவும் தெரியவில்லை.

ஆனால் இப்போது வந்துள்ள தீர்ப்பை மேற்கோள் காட்டி, தாங்கள் செய்தது சரிதான் என்று வாதிடத் துவங்கியுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தவறிழைத்தோர் தண்டிக்கப்படும்போது தான் நீதியின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை வரும். இல்லையென்றால் “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற கிராமத்து மொழி நவீன நீதிமொழியாகும் ஆபத்து ஏற்பட்டு விடும்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யூ. கான், “சர்ச்சைக்குரிய 1500 சதுர கஜ இடத்தில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டிருப்பதை நாங்கள் அறிவோம். எனினும், இந்தச் சவாலைச் சந்தித்துத் தீர்வது என்று நாங்கள் முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்தத் தீர்ப்பு கண்ணிவெடிகளை அகற்றியதாகத் தெரியவில்லை. மாறாக பிரச்சனைக்குள்ளாக்கப்பட்ட இடத்தில் புதிய கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாகவே படுகிறது.

இந்த வழக்கில் இரு தரப்பினரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்தியாவில் உயர்ந்த பட்ச நீதிபீடமான உச்சநீதி மன்றம் வழக்கு விசாரணைக்கு புராணப் புத்தகங்களைத் தேடாமல் வரலாறையும் சட்டத்தையும் இரு கரைகளாகக் கொண்டு வழக்கை நடத்திச் செல்லும் என்பதே சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் நம்பிக்கையாகும். 

  • நாடே பரபரப்போடும், பதட்டத்தோடும் எதிர்பார்த்த ஒரு தீர்ப்பில் பிரபஞ்சத்தின் படைப்பாக்கம் குறித்து பிரமிப்போடு கூறியுள்ளார் ஒரு நீதிபதி. 
  • கடவுள் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை என்றால் இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதி அறுதியிட்டுக் கூறுவது எப்படி? 
  • ஒரு தரப்புக்கு இரண்டு பகுதி, மற்றொரு தரப்புக்கு ஒரு பகுதி என்ற தீர்ப்பு தர்க்கவியல் அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல. 
  • மசூதியை கட்டுவதற்காக 12ம் நூற்றாண்டில் அங்கிருந்த கோவில் தகர்க்கப்பட்டதாக தீர்ப்பு கூறுகிறது. இதனால் புதியகோவில் கட்டுவதை நியாயப்படுத்தி உள்ளார்கள்
Pin It