கொரியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து அங்கோர்வாட் கோயில்கள் இருக்கும் சயாம்ரீப் போவது எங்கள் திட்டம். சயாம் ரீப் கம்போடியாவிலுள்ள ஒரு சிறு நகரம். ஆனால் அன்று அந்த விமானம் ஏதோ காரணத்தால் ரத்து செய்யப் பட்டது. அதனால் நாங்கள் சிங்கப்பூரில் ஒரு நாள் தங்க வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸிலிருந்து, எங்களுக்குத் தங்குவதற்கு ஹோட்டல், அங்கு செல்ல, வர டாக்ஸி, உணவு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

கம்போடியாவில் இருக்க வேண்டிய மூன்று நாட்களில் ஒன்று வீணாகி விட்டதே என்ற வருத்தத்துடன் மறுநாள் சயாம்ரீப் சென்று சேர்ந்தோம்.

சயாம்ரீப் அதன் அருகிலுள்ள அங்கோர்வாட் கோயிலால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகி விட்டது. விமான நிலையம் நமது பழைய மதுரை விமான நிலையம் போல் இருக்கிறது.

விமான நிலையத்திலிருந்து நாங்கள் தங்கிய அனந்த்ரா ரிசார்ட்டிற்கு எங்களை அழைத்துச் செல்ல காருடன் வந்திருந்தனர். குனிந்து, நம்மைப்போல் வணக்கம் சொல்லி, தண்ணீர், முகம் துடைக்கத் துண்டு, தாமரை மலர்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர்.

கம்போடியா தென் கிழக்கு ஆசியாவில் பர்மா - தற்போது மியான்மார் - அதை அடுத்து அமைந்துள்ள ஒரு சிறிய நாடு. இதன் கிழக்கில் வியட்நாமும், மேற்கில் தாய்லாந்தும், வடக்கில் லாவோஸும், தெற்கில் தாய்லாந்து கடலும் அமைந்துள்ளன.

கம்போடிய மக்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இடுங்கிய கண்கள், சப்பை மூக்குடன், ஒல்லியாக இருக்கின்றனர் .கொரிய மக்களின் தள தளப்பு இவர்களிடம் இல்லை. மக்கள் பெரும்பாலும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.

siem reap area

கம்போடியா ஏழ்மையில் தவிக்கும் நாடு. பிரான்சின் ஆதிக்கத்தில் 1863 முதல் இருந்து 1953 வரை இருந்து பின்பு சுதந்திரம் பெற்று இருக்கிறது. அதன் பின் நடந்த வியட்னாம் போரினாலும், உள்நாட்டுப் போரினாலும் மிகவும் நலிவுற்று இருக்கிறது.

சயாம்ரீப் சுற்றுலாத் தலமாக இருப்பதால் எல்லா இடங்களிலும் சிறிது ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளிடம் நினைவுப் பொருட்கள் விற்க வரும் சிறு பிள்ளைகள் கூட சில வார்த்தைகள் ஆங்கிலம் பேசுகின்றனர். அவர்களில் சிலர் நான் வைத்திருந்த பொட்டைப் பார்த்து "பிந்தி "என்று கேட்டு வாங்கிக் கொண்டனர்.

அவர்களது நாணயம் ரியால். 4000 ரியால் ஒரு டாலர் ஆகும். ரியாலுக்கு மதிப்பே இல்லை. சயாமரீப் முழுவதும் டாலர் தான் புழக்கத்தில் இருக்கிறது. எல்லாக் கோயில்களையும் பார்க்க ஒரு நாளைக்கு 20 டாலர், மூன்று நாட்களுக்கு 40 டாலர் என்று வாங்குகின்றனர்.

அங்கு சுற்றிப் பார்க்க டாக்ஸிகளும், பைக், ஸ்கூட்டர்களும், டொக்டொக் என்ற வண்டிகளும் உண்டு. டொக்டொக் என்பது பைக், ஸ்கூட்டரின் பின்னால் இணைக்கப்பட்டுள்ள ஒரு வண்டி ஆகும். உட்காருமிடம் நம்மூர் ஆட்டோ போல் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தின் பின்னே நம்மூர் தள்ளுவண்டிகள் போல் கடைகளையும் இணைத்துக் கொள்கின்றனர்.

நாஙகள் மாலையில் தான் போய்ச் சேர்ந்ததால், சற்று நேரம் கடைத் தெருவைப் பார்த்து விட்டு, "அப்சரா ஷோ" என்னும் நடன நிகழ்ச்சியுடன் கூடிய "பூபே" சாப்பிடச் சென்றோம். பலப்பல அசைவ உணவுப் பொருட்கள் இருந்தன. எங்களால் சாப்பிட முடிந்தன சிலவே. எக்பிளாண்ட்(ஒருவித கத்தரிக்காய்), காரட், வாழைப்பழம் முதலியவற்றைப் பஜ்ஜி போல் செய்திருந்தனர்.

combodia apsara dance

அங்குள்ள கோயில்களிளெல்லாம் "அப்சரா" என்னும் தேவ கன்னிகைகளின் புடைப்புச்சிற்பங்கள் நிறைய உண்டு. அந்த அலங்காரங்களுடன் பெண்கள் ஆடும் நாட்டிய நிகழ்ச்சி, மீனவப் பெண்களும் ஆண்களும் ஆடும் ஒரு காதல் நடனம், மற்றும் சில நடனங்கள் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக "அப்சரா நடனம்" என்ற பெயரில் பல ஹோட்டல்களிலும் அந்த நிகழ்ச்சி சாப்பாடுடன் நடக்கிறது.

நாங்கள் தங்கிய ஹோட்டலும் நல்ல வசதியாக இருந்தது. படுக்கை அலங்காரம் எல்லாம் மிக நேர்த்தியாக இருந்தது. மறுநாள் ஐந்து மணிக்கெல்லாம் அங்கோர்வாட் கோயிலில் சூரிய உதயம் காணச் செல்ல வேண்டும் என்ற நினைவுடன் தூங்கச் சென்றோம்.