ராஜஸ்தானில் ஓர் இடத்தைப் பார்த்து மெய்மறந்தும் மெய்சிலிர்த்தும் நின்றேன் என்றால், அது சம்பல் நதியின் வளைந்த பள்ளத்தாக்கே! பார்த்த அந்த நிமிடம், பாறையின் முனைவரை சென்று, சற்று அமர்ந்து என்னை மறந்து உள்வாங்கினேன் அதன் அழகை!

garadia mahadev 1அதனோடு பேசிப் பார்க்க முயன்று தோற்றுப்போய்,மீண்டும் முயலாமல் எனது கேமராவை எடுத்தேன். அதன் வளைந்து செல்லும் அழகை ஒரே புகைப்படமாக எடுக்க சற்று கடினமாகத்தான் இருந்தது. ஏனென்றல் அத்தனை அகலமான செங்குத்தான பள்ளத்தாக்கு.

சுற்றிலும் சமவெளி, ஏறக்குறைய 300அடி ஆழத்தில் பள்ளத்தாக்கு, 1.2 கிலோமீட்டர் அகலத்தில் ப வடிவில் வளைந்து சென்ற சம்பல் நதி பார்க்கும் யாவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.

வாருங்கள் சம்பல் நதி பயணத்திற்கு!

சுதந்திர தின விடுமுறையில் (3 நாட்கள்) எங்கு செல்லலாம் என யோசிக்கும்போது ஜெய்ப்பூரிலிருந்து மவுண்ட் அபு, உதய்பூர், கோட்டா என 1200 கிலோமீட்டர் சுற்ற ஒரு எண்ணமிருந்தது. ஆனால் குறைந்தபட்சம் இதனைச் சுற்றிப் பார்க்க 6 நாட்கள் வேண்டுமென்ற காரணமும், விடுமுறை நாட்களில் அலைமோதும் கூட்டமும், என்னை மிகவும் உறுத்தியது.

இறுதியாக, இரு நாட்களில் கோட்டா மட்டும் சென்று வருவோம் என முடிவு செய்தேன். நண்பர்கள் சிலர் கோட்டாவில் என்ன உண்டு ? பார்க்கக்கூடிய அளவில் பெரிதாய் ஒன்றுமில்லையே என முட்டுக்கட்டையும் போட்டனர்.

ஆனால் எனக்கு அது நன்றாக இருக்கும் என எண்ணிக் கிளம்பினேன்.

நாள் 1:

நான், எனது மனைவி சிவகாமி மற்றும் மகன் சாந்தனுவோடு மகிழ்வுந்தில் காலை 5மணிக்கு கிளம்பவேண்டும் எனத் திட்டமிட்டு, உணவு தயாரித்துக் கிளம்ப 6 மணியானது! முதல் நாள் ஜெய்ப்பூரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் கோட்டா சென்று கரடியா மகாதேவ் கோவில், கேபர்நாத் கோவில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் வரும் வழியில் 50 கிலோமீட்டர் இடப்புறத்தில் பீம்லட் மகாதேவ் கோவில் சென்று வர எண்ணிக் கிளம்பினேன்.

என்னடா? ஒரே சிவமயமான ஆன்மீகச் சுற்றுலாவாக இருக்கிறதே? என்று எண்ணினால் அது சரியென்றும் கூறுவேன் மற்றும் தவறென்றும் கூறுவேன்.

250 கிலோமீட்டர் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை! மழைதர யோசித்த மேகங்கள் குளுமையான வானிலையைத் தந்தது. வழியில் ஓரிடத்தில் 9 மணியளவில் காலை உணவை உண்டு, மீண்டும் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் பருவ மழையின் பச்சை நிறங்கள். 

garadia mahadev 2ஓரிரு இடங்களில் மழையும் பொழிந்தது.

பயணம் ஆனந்தமாக இருந்தது இந்த மாரியினால்! 

11 மணியளவில் நெடுஞ்சாலை முடிந்து, கரடியா மகாதேவ் கோவில் செல்லும் காட்டுவழிப் பாதை ஆரம்பமானது. ஓரிடத்தில் நீரோடையை மரித்த பாதையை, அடித்துச்சென்றிருந்தது காட்டாறு!

அடுத்த 5 நிமிடத்தில் நுழைவு வாயில் வந்தது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வரும் வாகனங்களுக்கு மற்றும் நபர்களுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. இவ்விடம் புலிகள் இல்லாவிட்டாலும், முகுந்தரா புலிகள் காப்பகத்தோடு சேர்ந்த பகுதியே!

ஆனால் அன்றைய தினம் நான் கட்டணமின்றிச் செல்ல, இந்திய வனத்துறை பணியிலுள்ள எங்கள் ஊரைச்சேர்ந்த அண்ணனே காரணம். இரு தினங்களுக்கு முன்னர், அவரை எதேச்சையாக இரண்டாம் முறை பார்க்க நேர்ந்தது.

விடுமுறையில் என்ன திட்டம் ? என அவர் கேட்க, நானும் கோட்டா பயணத்தைச் சொல்ல, உடனே மாவட்ட வன அதிகாரியை அழைத்து எனது பெயர் மற்றும் காரின் பதிவெண்ணைப் பகிர்ந்தார். அவர் படித்த பள்ளியில் நானும் படித்ததால், அதைப்பற்றிய பேச்சு ஏறக்குறைய 1 மணி நேரம் நீண்டது..

பயண நாளில் நான் அங்கு செல்லும்போது, என்னைப் பற்றிய குறுந்தகவல் அவர்களிடமிருந்தது! அன்று எனக்கு 900 ரூபாய் மிச்சம் மற்றும் வனத்துறைக்கு இழப்பு! இருப்பினும் காருக்கு 600 ரூபாய், ஒருவருக்கு 150 ரூபாய் என 900 ரூபாய் மிக மிக அதிகமே!

மீண்டும் 2 கிலோமீட்டர் கரடு முரடான காட்டுப்பாதையில் பயணம்!

சரியாக 11.30 மணியளவில், கோவிலுக்கு அருகில் சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். பின் புறம் திரும்பிப்பார்த்தால், அழகிய சம்பல் நதி! அதன் பாறை நுனி வரை சென்று, சற்று அமர்ந்து அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். கூடவே சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நகர்த்தேன் கோவிலுக்கு! garadia mahadev 3கரடியா மகாதேவ் கோவிலுக்குச் சென்று பாறையினுள் வழிந்தோடும் அருவியில், புனித நீராடி, வழிபட்டுவிட்டு, காட்டருவியிடம் தஞ்சமடைந்தேன். 

garadia mahadev 4இந்த இடத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்,

எங்கும் பசுமைச் சமவெளி,
புற்கள் சுமக்கும் சிறிய மரங்கள்,
ஆங்காங்கே அதனை காக்கும் பெரிய மரங்கள்,
ஓடித்திரியும் சிற்றோடைகள்

அதனை கவர்ந்திழுக்கும் காட்டாறு,
காட்டாற்றின் ஒரு கிளை பாறைக்குள் புகுந்து,
இறைவனை நனைத்து,
புனிதநீராய் பக்தர்களை மகிழ்வித்து,
சம்பல் நதியில் குதித்து,
செல்லும் திசை தெரியாமல்,

வெள்ளியும் செப்பும் கலந்தது போல்,
நதியின் அடியே ஒரு ஓட்டம்!

இங்கு சிலமணி நேரமும் செலவிடலாம், ஒரு நாள் முழுவதும் செலவிடலாம்! அனைத்தும் இயற்கையைப் புரிவதில்!

வசதிகள் என எதுவும் இங்கில்லை. கழிப்பறை, குளித்து துணிமாற்றும் அறை, கடைகள் என தேவையான எதுவும் இல்லை. கடைகள் இல்லாவிட்டாலும், அடிப்படைத் தேவைகளை வனத்துறை செய்து தரலாம். 

garadia mahadev 5மீண்டும் எனது புகைப்பட பசியும், மதியவேளை பசியும் ஒன்று சேர்ந்தன.  

garadia mahadev 6விருப்பம் போல் புகைப்படம் எடுத்துவிட்டு, கொண்டு சென்ற உணவைப் புசித்தேன். 

என்னால் இவ்விடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் நகர்ந்தேன்.

garadia mahadev 7கேபர்நாத் கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதியென்பதால், விரைவாய்ப் பயணித்தோம். கோவில் ஆற்றின் மறுபுறம் 25கிலோமீட்டர் தொலைவிலுள்ளதால், கோட்டா நகரை அடைந்து மீண்டும் செல்ல வேண்டும்.

வழியில் தொங்கும் பாலத்தின் அழகையும் ரசித்துவிட்டு, கடந்து கொண்டிருந்தோம். 

மாலை 3.30 மணியளவில் அங்கு செல்ல, நதிநீர் மட்டம் உயர்ந்துள்ளதால் யாரையும் அனுமதிக்கவில்லை என்றனர். என்ன செய்யலாம் ? என யோசித்து அருகிலுள்ள ஜவகர் சாகர் அணைக்குச் சென்று வருவோம் எனக் கிளம்பினோம்.

சாலையின் நிலை மிக மிக மோசம் என்றே சொல்ல வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு செல்ல, “அணை மதகு வரை செல்லலாம், அதை கடந்து செல்ல முடியாது” என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூற, சரி சம்பல் நதி அணைக்கட்டாவது (ஜவகர் சாகர் அணை) பார்த்து வருவோம் என எண்ணி, நடந்து சென்றோம். 

garadia mahadev 8அணையில் தடுப்புச் சுவர்கள் பராமரிப்புப் பணி நடந்து வருவதால், மறுபுறம் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. மறுபுறம் சென்றால், நதியில் படகு சவாரி, தங்கும் விடுதி, அப்படியே கரடியா மகாதேவ் கோவில் கூட செல்லலாம். 

garadia mahadev 9அரை மணி நேரம் அங்கிருந்துவிட்டு, மீண்டும் கோட்டா நகரத்தை அடைந்தோம்.

அன்றைய தினம் தங்கும் விடுதியில் இரவு உணவு உண்டு, களைப்பில் முடிந்தது.

நாள் 2:

மறுநாள் காலை 8 மணியளவில் அனைவரும் கிளம்பி, பீம்லட் மகாதேவ் அருவிக்குச் சென்று கொண்டிருந்தோம். 

பூண்டி அடைந்து அங்கிருந்து 35 கிலோமீட்டர் செல்ல, மீண்டும் காட்டுவழிப்பாதை ஆரம்பமானது!

மோசமான சாலை ஒரு அற்புதமான இடத்திற்கு கூட்டிச் செல்லும் என்ற கூற்றிற்கு உகந்தவாறே, ஒரு சமவெளிப் பள்ளத்தாக்கு தெரிந்தது. 

garadia mahadev 10மீண்டும் 2 கிலோமீட்டர் சென்று வண்டியை நிறுத்திவிட்டு, ரயில்வே பாதையைக் கடந்து சென்றோம். அங்கு கோவிலும், சிறிய அருவியும் அதில் ஓரமாக நீர் வழிந்தோடினாலே அதிசயம்தான் என்று தோணுமளவிற்கு அவ்விடம் இருந்தது.

கடைகளும் சிறிய தடுப்புகளையும் கடந்து சென்று, “என்னடா! பேரிரைச்சல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக காதுக்கு வருகிறது” என்று பார்த்தால், வாயடைத்து நிற்க வைத்தது!

ராஜஸ்தானின் நயாகரா இல்லையென்றால் கேரளா மாநில அதிரப்பள்ளி அருவியின் மறுவுருவம் என்றே கூறலாம். அத்தனை அழகு மற்றும் பிரமாண்டம்! garadia mahadev 11

இன்றையநாள் முழுவதுமே இங்கே செலவிடலாம் என்ற எண்ணம் வந்தது எனக்குள். ஏனென்றால், மேலிருந்து பார்ப்பது மட்டுமின்றி, கீழே அருவி கொட்டுமிடத்திற்கும் செல்லலாம் என்பதால்!

garadia mahadev 12சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கீழே கிளம்பினோம். படிக்கட்டு ஏறக்குறைய அருவி கொட்டுமிடத்திற்கே சென்றது. garadia mahadev 13

கீழே செல்லச் செல்ல சாரல் எனது வியர்வையைச் சலவை செய்து குளிக்கச் செய்தது. மரங்களுக்கிடையே அருவியைக் காண்பது அழகென்றாலும் அதன் சாரல் மற்றும் கீழே உள்ள பாறைகள் நம்மை அதி கவனமாய் இருக்கச் செய்தது. 

புகைப்படம் எடுக்கலாம் என்றால், எடுக்கும் முன் சாரல் நனைத்து விடுகிறது கேமராவை ! சில நிமிடங்களில் சாந்தனு அழ ஆரம்பிக்க, மேலே செல்வது என முடிவாக, அங்கிருந்து கிளம்பினோம்! பின்னர் சில மரங்களுக்குப் பின்னே நின்று கொண்டால், சாரல் வராது என்று எண்ணி ஆற்றை கடந்து நிற்க முயன்றோம். garadia mahadev 14

வழுக்கும் பாறை, புரட்டிடும் கற்கள், ஆற்றுநீரின் வேகம், அடித்துச் செல்லும் குச்சிகள், கையில் சாந்தனு மறுகையில் கேமரா பை இருக்க, கவனமாய் கடந்து சென்றேன்.

என்ன அதிசயம்! மறுபுறம் சாரல் முற்றிலும் இல்லை!

அருவியின் உயரத்திற்கு மரங்கள், அதனோடு வளைந்து சாய்ந்தாடும் மரங்கள், பாலருவி போன்ற நீர் மற்றும் அதன் ஆர்ப்பரிக்கும் குரல்! garadia mahadev 15

கீழிருந்து அருவியை மேல் நோக்கிப் பார்த்தால் ஆகாயத்திலிருந்து பாலைக் கொட்டிவிடுவதைப்போன்ற உணர்வு. அதுவும் பாறைத்திட்டில் முட்டி மோதி மேலெழும்பி வரும் அழகே அழகு! garadia mahadev 16

பின்னர் அருகிலுள்ள பீம்லட் மகாதேவ் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு, மேலே வந்தோம்!

அருவி கொட்டுமிடத்திற்கு சற்று பின்னே சென்று, முழங்கால் ஆழத்தில் பாறை இடுக்குகளில் பாய்ந்தோடும் நீரில் அமர்ந்து சிறிது நேரம் குளித்தோம்.

கனமழையில் அருவியைச் சுற்றியுள்ள அனைத்துச் சமவெளி பகுதியிலுள்ள நீர், இங்கு வந்து கொட்டும் அழகு, நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாக உள்ளது.garadia mahadev 17குளித்த பின்னர் அருகிலுள்ள கடைகளில் மதிய உணவு உண்டு, மீண்டும் வீடு திரும்பும் பயணம் ஆரம்பமானது. 

எப்போதும் கோட்டைகள், அலுத்துப்போன சுற்றுலா தளங்கள் செல்வதில் உள்ள வெறுப்புகளை இங்கு நான் கண்ட காட்சிகள் மறக்கடிக்கச் செய்தன.

இதே விடுமுறையில் இந்த இடங்களைத் தவிர்த்து மற்ற இடமான உதய்ப்பூர் அதன் அருகிலுள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்த நண்பர்கள் எனது புகைப்படங்களைப் பார்த்தபின்னர் வியந்து பாராட்டினர்!

இங்கு உள்ள பலரும், இந்த இடம் எங்கு உள்ளது? எனக் கேள்விகளை கேட்டனர். பலருக்கு இடம் தெரியும், ஆனால் அதன் அழகும், பிரமாண்டமும் தெரிந்திருக்கவில்லை.

இரெண்டு நாட்களில் இயற்கையோடு இரண்டரக் கலக்க வேறென்ன இடம் வேண்டும் இங்கு ? மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்!

garadia mahadev 18நீங்களும் ராஜஸ்தான் சுற்றுலா சென்றால், இவ்வாறான இடங்களை தவிர்க்காமல் கண்டுகளியுங்கள்! எனக்குத் தெரிந்து, பாலை நிலம் என்ற எண்ணமே இம்மாநிலத்தின் மேல் உள்ளது!

அது 60-70 விழுக்காடு இருப்பினும், மீதமுள்ள அனைத்தும் அடர்ந்த காடு, ஆரவல்லி மலைத்தொடர், விளை நிலங்கள், கோட்டைகள், நகரங்கள்,சமவெளி என அனைத்து விதமான நில அமைப்புகளை கொண்ட ஒரே மாநிலமாகத் திகழ்கிறது.

- ப சிவலிங்கம்