பாண்டிய நாட்டு சவுராஷ்டிரா மக்கள் நெசவு செய்த பட்டுத் துணிகளை சேர நாட்டு அரச குடும்பங்கள் விரும்பி வாங்குவார்களாம். அதனால் சவுராஷ்டிரா மக்கள் தாங்கள் நெய்த துணிகளை விற்பனைக்காக சேர நாட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி ஒரு சவுராஷ்டிரா வணிகர் தனது மகள் புஷ்கலையுடன் சேர நாட்டுக்குப் பயணிக்கிறார். ஆரியங்காவு என்னும் ஊரை அடைந்தபோது, இருட்டி விடுகிறது. அன்றிரவு அங்கே இருக்கும் கோயிலில் இருவரும் தங்குகின்றனர். கோயிலில் சிலையாக இருந்த அய்யப்பனின் உருவ அழகைக் கண்டு, புஷ்கலை மயங்குகிறாள்; அய்யப்பன் மீது காதல் கொள்கிறாள். மறுநாள் தந்தையுடன் கிளம்ப மறுக்கிறாள். தான் இந்தக் கோயிலிலேயே தங்கப் போவதாகவும், திரும்பி வரும்போது தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறுகிறாள். தந்தை ஏதோதோ சமாதானம் கூறியும், புஷ்கலை கேட்கவில்லை. வேறுவழியின்றி, கோயில் மேல்சாந்தியின் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, பயணத்தைத் தொடர்கிறார்.


முந்தைய பகுதிகள்:

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 8

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 9


அடர்ந்த காட்டின் வழியில் பயணிக்கும்போது, மதம் கொண்ட யானை ஒன்றிடம் மாட்டிக் கொள்கிறார். அச்சமுற்ற வணிகர், ஆரியங்காவில் பார்த்த அய்யப்பனை நினைத்து, தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார். அப்போது அங்கு வாலிப வயதில் ஒரு வேடன் வருகிறான். அவன் யானையை சைகையாலேயே அடக்குகிறான். மகிழ்ச்சி அடைந்த வணிகர், பட்டாடை ஒன்றைப் பரிசாக அளிக்கிறார். வேடன் அதை அப்போதே அணிந்து, அந்த ஆடையில் தான் எப்படி இருப்பதாக வணிகரிடம் கேட்கிறான். “மாப்பிள்ளை போல் இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார். “என்ன கேட்டாலும் தருவீர்களா?” என்று வேடன் கேட்க, “என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறீர்கள். என்ன வேண்டுமானாலும் தருவேன்” என்று வணிகர் பதில் சொல்கிறார். “அப்படியென்றால் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறான் வேடன். வணிகரும் சரி என்று சொல்ல, “திரும்பி வரும்போது ஆரியங்காவு கோயிலில் என்னை சந்தியுங்கள்” என்று சொல்லிவிட்டு வேடன் சென்று விடுகிறான்.

aariyankavu 600

(ஆரியங்காவு கோயில்)

வியாபாரத்தை முடித்துவிட்டு, ஆரியங்காவு திரும்பிய வணிகர், மகளைக் காணாது திகைக்கிறார். கோயில் சாந்தியும், வணிகரும் இரவு முழுவதும் தேடியும் புஷ்கலை கிடைக்கவில்லை. களைப்பு மேலிட, மேல் சாந்தி தூங்கிவிடுகிறார். கனவில் அய்யப்பன் தோன்றி, புஷ்கலையை தன்னுடன் அய்க்கியப்படுத்திக் கொண்டதாக கூறுகிறார். கனவு கலைந்து எழுந்த மேல்சாந்தி நடந்ததை வணிகரிடம் கூறுகிறார். காலையில் கோயில் திறந்து பார்க்கிறார்கள். காட்டில் வணிகர் கொடுத்த பட்டாடை அய்யப்பனின் இடுப்பில் உள்ளது. பக்கத்தில் புஷ்கலை தேவி வீற்றிருக்கிறார். மகளுக்கு முக்தி கிடைத்ததை உணர்ந்த வணிகர், மதுரை திரும்புகிறார். இப்படி ஒரு கதையை தல புரணமாக சொல்கிறார்கள்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 9ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் அய்யப்பன் - புஷ்கலை திருமண உற்சவம் கொண்டாடப்படுகிறது. பெண்வீட்டாராக மதுரை சவுராஷ்டிரா மக்கள் ஆரியங்காவுக்கு சீர்வரிசை கொண்டு செல்கிறார்கள்.

மதம் கொண்ட யானையை அய்யப்பன் அடக்கியதால், ஆரியங்காவு அய்யப்பனுக்கு ‘மதகஜ வாகன ரூபன்’ என்ற பெயரும் உண்டு. மாப்பிள்ளை கோலத்தில் அய்யப்பன் இங்கு அருள் பாலிப்பதால், திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால், விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்புகிறார்கள். இக்கோயில் செங்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

அய்யப்பனின் சரவீடுகளில் எருமேலி, சபரிமலை கோயில்கள்தான் சுத்தமற்றுக் காணப்படுகின்றன. இங்குதான் பக்தர்கள் அதிகம் செல்கின்றனர். அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு கோயில்களுக்கு அய்யப்ப பக்தர்கள் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் குறைவான பக்தர்களே செல்கிறார்கள்; கோயில்களும் சுத்தமாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, இந்த மூன்று கோயில்களுக்கு மாலை போட்டு, விரதமிருந்துதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. பெண் பக்தர்களுக்கு எந்த வயதுக் கட்டுப்பாடும் இல்லை. அப்பம், அரவணை இங்கும் கிடைக்கிறது.

***

பூஜை முடிந்ததும், கோயில் வளாகத்திற்குள் இருந்த ஒரு மரத்தடியில் பக்தர்களுடன் உட்கார்ந்தேன். பயணத்தின் நான்காவது மற்றும் இறுதி நாள் இது. ஆனால் வீட்டை விட்டு வந்து, எத்தனையோ நாட்கள் ஆனதுபோல் இருந்தது. அலுவலக நாட்கள் அல்லது வார விடுமுறை நாட்கள் என்றால், புதிதாக ஒரு அனுபவம் கிடைப்பதே அரிது. வழக்கமாக அல்லது எதிர்பார்த்தபடியே தான் பொழுது கழியும். ஆனால், இந்த நான்கு நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. புதிய இடங்கள், புதிய கதைகள், புதிய நபர்கள் என பெற்றது மிக அதிகம். அதுவும் நான்கு நாட்களும் காலை நான்கு அல்லது ஐந்து மணியிலிருந்து இரவு 12 வரை உயிரோட்டமாகக் கழிந்தது. ஒரு நாளைக்கு 4 மணி நேரத் தூக்கம் மட்டுமே இருந்தது. அத்தனையும் சேர்ந்து நான்கு நாட்கள் என்பதை ஏதோ நாற்பது நாட்கள் போலக் காட்டின. சென்னையில் நாற்பது நாட்களில் கிடைக்காத அனுபவங்கள் இந்த நான்கு நாட்களில் கிடைத்தன.

aariyankavu 601

(ஆரியங்காவில் சரவணன், இரவி மாமாவுடன் நான்)

கோயிலில் அரைமணி நேரம் பொழுது போக்கி விட்டு, அங்கிருந்து குற்றாலம் நோக்கி கிளம்பினோம். குற்றாலத்தை நாங்கள் அடைந்தபோது மதியம் 1.30 மணி இருக்கும். சீஸன் இல்லாத நேரம் என்றாலும், அய்யப்ப பக்தர்களுக்காக குற்றாலம் பரபரப்பாக இருந்தது. மெயின் அருவி அருகே இருந்த ஒரு சத்திரத்தை எங்கள் குழுவினர் பிடித்தனர். மதிய சாப்பாடுக்குத் தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்களை இறக்கி வைத்தனர். சமையல்காரர்கள் உணவு தயாரிப்பு வேலைகளில் இறங்க, பக்தர்கள் அருவிப் பக்கம் சென்றனர்.

மழைக் காலத்தில் மொட்டை மாடியிலிருந்து மழை வடிகால் குழாய் மூலம் எந்தளவிற்கு தண்ணீர் வருமோ, அந்தளவிற்குத் தான் அருவியில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதில் குளிப்பதற்கு 30, 40 பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த வரிசையில் சேர விருப்பமில்லாமல், நானும், சரவணனும் கடைவீதிப் பக்கம் போனோம். நேந்திரம் சிப்ஸ் வாங்கினோம். சரவணன் அவனது குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கினான். சத்திரத்திற்குத் திரும்பி, கொஞ்சம் ஓய்வெடுத்தோம். 3.30 மணி வாக்கில் மதிய சாப்பாடு தயாரானது. சோறு, சாம்பார், ரசம், அப்பளம், பருப்பு பாயாசம் என சாப்பாடு அமர்க்களமாக இருந்தது. அதிலும் பருப்பு பாயசத்தின் சுவையும், மணமும் இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்றது.

ஐந்தரை மணி வாக்கில் குற்றாலத்திலிருந்து கிளம்பினோம். சில பக்தர்கள் இராஜபாளையத்திலிருந்து வந்ததால், அவர்களை இறக்கிவிடும் பொருட்டு, இராஜபாளையம் வழியாக வண்டிகள் சென்றன. இரவு 9 மணி வாக்கில் அருப்புக்கோட்டை சிவன் கோயில் வந்தடைந்தோம். அங்கு இரவி மாமாவின் டாடா சுமோ காருடன் அவரது நண்பர் காத்திருந்தார். இரவி மாமா வீட்டிற்குச் சென்றோம். சரவணனது Maruthi Ritz அங்குதான் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, மீண்டும் சிவன் கோயிலுக்கு வந்தோம்.

பொறுப்பாளர்கள் பிரசாதப் பைகளை கட்டிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பக்தராக குரு சாமி அழைத்தார். வழக்கப்படி அவர்கள் குரு சாமி விழுந்து, பைகளைப் பெற்றுக் கொண்டார்கள். எனக்கும் ஒரு பிரசாதப் பை இருக்கிறது என்று சொன்னார்கள். இரவி மாமா என்னிடம் “குரு சாமி காலில் விழுந்து வணங்கிவிட்டு, வாங்கிக் கொள்” என்று சொன்னார்கள்.

“மாமா... நான் சுயமரியாதைக்காரன். யார் காலிலும் எதன் பொருட்டும் விழ மாட்டேன்.” என்று மறுத்தேன்.

குரு சாமி என்னை அழைக்கும்போது, அவரிடம் பயண ஏற்பாடு சிறப்பாக இருந்தன என்றும், பொறுமையுடன் எங்கள் அனைவரையும் வழிநடத்திச் சென்றதற்கு நன்றி என்றும் கூறினேன். குரு சாமி, “அடுத்த ஆண்டு மாலை போட்டு வருவீர்கள் என நம்புகிறேன்” என்று கூறினார். நான் புன்னகைத்தவாறு விடை பெற்றுக் கொண்டேன்.

***

விருதுநகர் சாலையில் சரவணன் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

“இந்தக் குழு இரண்டு மாதங்கள் கழித்து, திருச்செந்தூருக்கு பாதயாத்திரை போகிறார்கள். நானும் போவதாக இருக்கிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டான்.

aariyankavu 602

(ஆரியங்காவில் நாகராஜ சிலைகளின் முன்பு)

“வாய்ப்பு இருந்தால் நிச்சயம் வருகிறேன்” என்று பதில் சொன்னேன்.

“அடுத்த ஆண்டு சபரிமலைக்கு வருவாயா?”

“இல்லை. வர மாட்டேன். நான் திருச்செந்தூருக்கு வருகிறேன் என்று சொன்னது, அந்த நடைபயண அனுபவம் எப்படி இருக்கிறது என்று உணரத்தானே தவிர, பக்தியினால் அல்ல. இந்த முறை சபரிமலை வந்ததும் அப்படித்தான். சபரிமலையில் என்னதான் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வந்தேன். அடுத்த ஆண்டும் அதே இடத்திற்குச் செல்வது வீண். அதுவும் அங்கிருக்கும் அசுத்தத்திற்கு மீண்டும் ஒரு முறை அங்கு செல்லும் எண்ணமே எனக்கு வராது”

“உனக்கு எப்படியோ, எனக்கு இந்தப் பயணம் பிடித்திருந்தது. அடுத்த வருடமும் போகப் போகிறேன்” என்றான். ‘அசிங்கம் இருக்கிறது; அந்தப் பக்கம் போகாதே’ என்று சொல்லத்தான் முடியும். மீறிப் போவேன் என்று அடம்பிடிப்பவர்களுடன் மல்லுக்கட்டவா முடியும்?

***

சரவணனை வீட்டில் விட்டுவிட்டு, அவனது காரை எடுத்துக் கொண்டு கோவில்பட்டி வந்தேன். இரவு 1 மணி இருக்கும். எனக்காக ஹேமா காத்துக் கொண்டிருந்தாள். முதலில் போய் குளித்தேன். பேக்கில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து, மற்ற அழுக்குத் துணிகளோடு போடாமல், தனியாகப் போட்டேன். பம்பை, சபரிமலையில் வெறும் தரையில் குப்பைகளோடு குப்பையாய் படுத்துக் கிடந்தபோது போட்டிருந்த துணிகள். அத்தையிடம் சொல்லி, இரண்டு முறை வாஷிங் மெஷினில் போட்டு எடுக்கச் சொல்ல வேண்டும்.

பயண அனுபவங்களை எல்லாம் ஹேமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். தூங்குவதற்கு மூன்று மணி ஆகிவிட்டது.

குரு சாமி எனக்குக் கொடுத்த அன்பளிப்பு பணத்தை அத்தையிடம் கொடுத்தேன். “இதன் மூலமாக கோடி, கோடியாக பணம் கொட்டினால், அதில் எனக்கு 50% கொடுத்து விட வேண்டும்” என்று சொன்னேன்.

“50% என்ன... முழுவதும் கொடுத்து விடுகிறேன்” என்று பதில் சொன்னார்கள்.

மறுநாள் காலை 11 மணிக்கு சரவணன் அழைத்தான். மதியம் வீட்டில் விருந்து இருக்கிறது என்று என்னையும், ஹேமாவையும் அழைத்தான். போனோம்.

செப்டிக் டேங்க் போன்ற பம்பை நதியில் சரவணன் குளித்தான் அல்லவா? அப்போது பயன்படுத்திய துணிகளை ஒரு வாளியில் போட்டு, முக்கி எடுத்து, அந்தத் தண்ணீரை வீடு முழுக்கத் தெளித்துக் கொண்டிருந்தான். புனிதமாம்!

***

ஜனவரி மாதக் குளிரில் அலைந்தது, அதிகாலையில் பச்சைத் தண்ணீரில் குளித்தது, தூக்கமில்லாமல் திரிந்தது, பயண அலுப்பு எல்லாம் சேர்ந்து மறுநாள் சளி, இருமலுடன் காய்ச்சல் பிடித்துக் கொண்டது. ஒரு நாளில் சரியாகி விடும் என்று பார்த்தால், சரியாகவில்லை. சரவணனுக்கும் அதே சளி, காய்ச்சல்.

நெய்த் தேங்காயிலிருந்து கொஞ்சம் நெய்யை எடுத்து, உடம்பு சரியில்லாதபோது தடவிக் கொள்ளச் சொல்லி, சரவணனுக்கு குரு சாமி கொடுத்தார் அல்லவா? (எனக்குத் தரவில்லை). அதை தடவியிருப்பான் என்று நினைத்தேன்.

ஆனால், அவன் “இப்போதுதான் டாக்டரைப் பார்த்து, ஊசி போட்டுவிட்டு வருகிறேன்” என்றான்.

“குரு சாமி கொடுத்த நெய்?”

“அது வீட்டில் இருக்கு”

***

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்:

இந்து மதப் புராணங்களின்படி, அய்யப்பன் பிறந்தது கிருத யுகத்தில். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, பூமியில் அவதரிக்கும் அய்யப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு, இருபது வயதுகளிலேயே முக்தி அடைந்துவிடுகிறார். அதாவது 17,28,000 ஆண்டுகள் நீளம் கொண்ட கிருத யுகத்திலேயே அவரது வாழ்க்கை முடிந்துவிடுகிறது. கலிகாலத்தில்தான் - அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் - இஸ்லாமிய மதம் தோன்றியதும், அரேபியர்கள் இந்தியா வந்ததும். அப்படியென்றால், கிருத யுகத்தில் அதாவது 21,60,000 ஆண்டுகளுக்கு முன்பு முக்தியடைந்த அய்யப்பனுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வாபர் நண்பர் ஆனது எப்படி?

மதுரைக்கு சவுராஷ்டிரா மக்கள் குடிபெயர்ந்து வந்தது கி.பி. 16ம் நூற்றாண்டில். கிருதயுகத்தில் பிறந்து, மடிந்த அய்யப்பன், கலியுகத்தில் பிறந்த சவுராஷ்டிரா பெண்ணான புஷ்கலாவை மணந்தது எப்படி? கிருத யுகம், கலியுகம் முதலான கட்டுக்கதைகளை எங்களைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் நம்பவில்லை. ஆனால் அவற்றை நம்பும் பக்தர்களே, நீங்கள் யோசித்துப் பாருங்கள்... உங்கள் காலக் கணக்குப்படி பார்த்தால், அய்யப்பன் வரலாற்றில் நான் மேலே சொன்ன பெரிய ஓட்டை எப்படி வந்தது? காரணம் என்னவென்றால், இந்தக் கதையெல்லாம் பக்தர்களை மடையர்களாக நினைத்து புளுகப்பட்டிருப்பவை. நீங்கள் அந்தப் புளுகையெல்லாம் அப்படியே நம்புவதால்தான், ‘ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும். அப்படி பிறந்த குழந்தைதான் அய்யப்பன்’ முதலான அறிவுக்கு ஒவ்வாத கதைகளை எல்லாம் எழுதிக் கொண்டே போகிறார்கள். உலகில் வேறு எந்த மதத்திலாவது இவ்வளவு கேவலமான, முட்டாள்தனமான கதைகள் உண்டா?

அய்யப்பனுக்கு மாலை போட்ட பின்பு, வீடுகளில் நீங்கள் எத்தனை சுத்தம் பார்க்கிறீர்கள்? அதில் ஒரு சதவீதமாவது சபரிமலையிலும், பம்பையிலும் இருக்கிறதா?

என்னுடன் சபரிமலைக்கு வந்த பக்தர்களில் ஒருவரிடம் “இனி இந்த ஆண்டு பொய் சொல்லாமல், யாரையும் ஏமாற்றாமல் தொழில் செய்வீர்களா?” என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “தொழில் வேற; பக்தி வேற” என்று சொல்லி விட்டார். ஆண்டு முழுவதும் பொய் சொல்லி, பிறரை ஏமாற்றிச் சம்பாதித்து, ஒழுக்கமில்லாமல் வாழ்ந்துவிட்டு, ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வந்தால், அய்யப்பன் உங்களை மன்னித்து விடுவாரா? அய்யப்பனை அந்தளவுக்கு அப்பாவியாகக் கருதுகிறீர்களா?

உங்களை யாராவது கூவம் நதியில் தள்ளிவிட்டால், எவ்வளவு கோபம் வரும்? அதைவிட அசுத்தமான பம்பை நதியில் வருடா வருடம் குரு சாமி உங்களைத் தள்ளி விடுகிறார். நீங்கள் என்னடாவென்றால் அவரது காலில் விழுந்து வணங்குகிறீர்கள்!

200 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டித் தருகிறீர்கள். அதில் பாதியையாவது திருவிதாங்கூர் தேவஸ்தானம் உங்களுக்காக செலவிடுகிறதா? தங்குமிடம், உணவு எதிலாவது தரம், சுத்தம் இருக்கிறதா?

இவ்வளவு அசுத்தத்திற்கும் ஒரேயடியாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. இன்னொரு காரணம் பக்தர்களாகிய நீங்கள்தான். ஒரு நாளைக்கு 5 இலட்சம் பேர், 10 இலட்சம் பேர் என்று நீங்கள் குவிந்தால், யார்தான் சமாளிக்க முடியும்? மகர பூஜையன்றுதான் அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது? கடவுளைக் கும்பிடுவதற்குக்கூட காலம், நேரம் பார்க்க வேண்டுமா? ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலும் சபரிமலை கோயில் திறக்கப்படுகிறது. அப்போது சென்று தரிசித்தால், அய்யப்பன் வேண்டாம் என்று சொல்கிறாரா?

தற்போது தமிழ்நாட்டிலும் அய்யப்பன் கோயில்கள் நிறைய இருக்கின்றன. அங்கு சென்று வழிபட்டால் ஆகாதா? தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் உங்களது கடவுள் தமிழ்நாட்டுக் கோயில்களில் இருக்க மாட்டாரா?

ஒரு முறை சென்றாலே அத்தனை பலன்களும் கிடைத்து விடும்போது, ஆண்டுதோறும் செல்வது தேவையற்ற செலவுதானே?

ஆண்டுதோறும் சபரிமலை செல்கிறீர்கள். அதனால் வாழ்க்கையில் கிடைத்த முன்னேற்றம் என்ன என்று என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை செல்கிறார். அவர் இன்றளவும் அன்றாடங் காய்ச்சியாகத்தான் இருக்கிறார். பத்து ஆண்டுகளில் இரண்டு முறை மிகப் பெரிய விபத்துக்களைச் சந்தித்து, படுத்த படுக்கையாக மாதக்கணக்கில் கிடந்தார். இவரைப் போல் எத்தனை பக்தர்கள் கஷ்டப்படுகிறார்கள்? சபரிமலை போய்விட்டுத் திரும்பும்போது, விபத்தில் மரணித்தவர்கள் எத்தனை பேர்? அய்யப்பனின் சக்தி இவ்வளவுதான் என்றால், அவரைப் பிடித்துத் தொங்குவதன் அவசியம் என்ன? சாமியைக் கும்பிட்டுத்தான் தீருவேன் என்றால், அதற்கு ஊரில் இருக்கும் ஏதாவது மாடனையோ, கருப்பசாமியையோ கும்பிட்டுப் போகலாமே!

அய்யப்பன் மீது உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறதா? அய்யப்பனுக்குப் படைத்த நெய், தீராத வியாதியை எல்லாம் தீர்க்கும் வல்லமை கொண்டது என்கிறீர்கள். ஆனால், உடல்நலம் சரியில்லை என்றால், அய்யப்பனை நம்பி, அந்த நெய்யைத் தடவாமல், மருத்துவமனைக்குத்தானே ஓடுகிறீர்கள்?

அய்யப்பனுக்கு பூர்ணா, புஷ்கலை என இரண்டு பொண்டாட்டிகள் இருக்கும்போது, அவரை பிரம்மச்சாரி என்று சொல்வது ஏன்?

அப்படியே பிரம்மச்சாரி என்றாலும், வயதுக்கு வந்த பெண்களைப் பார்த்தால் தன்னுடைய பிரம்மச்சரிய விரதம் கெட்டுவிடும் என்று பயப்படும் அளவுக்கு அய்யப்பன் பலவீனமானவரா?

***

ஆடைகளின்றி, முடி மழிக்காமல், சுத்தமற்று இருந்ததுதான் ஆதிமனிதனின் வாழ்க்கையாக இருந்தது. சுத்தமாக இருப்பது, சக மனிதர்களை மதிப்பது, தன்னைத் தேடி வந்தவர்களை வரவேற்று, வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து விருந்தோம்புவது எல்லாம் மனித குலம் வளர்ச்சிப் போக்கில் தன்னிடம் சேர்த்துக் கொண்ட மாண்புகள். இந்த மாண்புகளை எல்லாம் தொலைக்கும் இடமாக சபரிமலை இருக்கிறது.

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தவறாமல் செல்லும் மாநிலங்களில் கேரளா முதன்மையானது. ‘கடவுளின் தேசம்’ என்று விளம்பரப்படுத்தப்படும் மாநிலம். கேரளாவில் மூணாறு, திருவனந்தபுரம், கொச்சி, வயநாடு, ஆலப்புழா, கோழிக்கோடு, பாலக்காடு என பல்வேறு பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். சுற்றுலா முக்கிய வருமானமாக இருப்பதால், கேரள அரசு பயணிகளுக்கு செய்து கொடுத்திருக்கும் வசதிகள் அநேகம். சுற்றுலாத் துறையில் இந்தியாவின் பிற மாநிலங்கள், கேரளாவைவிட பல மடங்கு பின்தங்கி உள்ளதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், அந்த கேரளா வேறு, சபரிமலை இருக்கும் கேரளா வேறு.

எருமேலி, பம்பை, சபரிமலையில் கண்ட அசுத்தம், இப்போது நினைத்தாலும் என் உடலைக் கூசச் செய்கிறது. எனது வாழ்க்கையில் நான் மறுபடியும் போகவே விரும்பாத இடங்களாக அவை இருக்கின்றன. பக்தி என்ற பெயரில் மக்களை எந்தக் கீழ்நிலையிலும் வைத்திருக்கலாம் என்பதற்கு அடையாளங்களாக அந்த இடங்கள் இருக்கின்றன.

சபரிமலைக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் கூடும் இடம் திருப்பதி. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அண்மையில் திருப்பதி சென்றிருந்தேன். திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அவ்வளவு சுத்தமாகப் பேணப்படுகிறது. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஓர் இலவசக் கழிப்பறை இருக்கிறது. 50 ரூபாய்க்கு, 100 ரூபாய்க்கு எல்லாம் தங்கும் அறை கிடைக்கிறது; அதையும் சுத்தப்படுத்தி விட்டுத்தான் நமக்குத் தருகிறார்கள். மூன்றுவேளையும் சுவையான அன்னதானம் பரிமாறுகிறார்கள். அதுவும் காத்திருக்க அவசியமில்லாத வகையில், பெரிய பெரிய கூடங்களில்.... அங்கு இருக்கும் உணவு விடுதிகளிலும் தரமான உணவு, நியாயமான விலையில் கிடைக்கிறது. அங்கு செல்லும் பக்தர்களை மதித்து, அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் திருப்பதி தேவஸ்தானம் செய்து கொடுக்கிறது.

ஆனால் சபரிமலை தேவஸ்தானம்? ஒவ்வொரு ஆண்டும் கோடிகளில் சம்பாதிக்கிறது. இந்த 2015ம் ஆண்டு மகரபூஜை முடிந்தபோது 200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது. ஆனால் பக்தர்களை மனிதர்களாகவேனும் மதிக்கிறதா? கேரளாவின் பிற பகுதிகளுக்கு வரும் பயணிகளைப் பார்த்து, பார்த்து கவனிக்கும் கேரள அரசு, சபரிமலைப் பயணிகளை அவ்வாறு கவனிக்கிறதா? ஆடு, மாடுகளை அடைக்கும் தொட்டிகூட சபரிமலையை விட சுத்தமாக இருக்கும். காரணம் என்ன? சபரிமலைக்குச் செல்லும் முக்கால்வாசி பக்தர்கள் தமிழர்கள்... எவ்வளவு கேவலமாக நடத்தினாலும் சொரணையற்று ஆண்டுதோறும் அங்கு செல்வதற்குத் தயாராக நம்மவர்கள் இருக்கிறார்கள்.

எத்தனையோ இடங்களுக்கு நாம் பயணிக்கிறோம். அவை இயற்கை அழகு நிறைந்த இடங்களாகவோ, கட்டடக் கலை சிறப்பு மிக்க கோயில்கள், மசூதிகள், தேவலாயங்கள், அரண்மனைகளாகவோ இருக்கும். அந்த இடங்கள் குறித்து பசுமையான நினைவுகள் இருக்கும்; மற்றவர்களுக்கு அந்த இடங்களைப் பரிந்துரைப்போம்; வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு முறை செல்லலாம் என்றுகூடத் தோன்றும். ஆனால் இவை எதிலும் சேராத இடங்கள்தான் எருமேலி, பம்பை மற்றும் சபரிமலை. நம்மை மதிக்காதவர்கள் வீட்டுக்கு, விருந்துக்கு செல்ல மாட்டோம் அல்லவா? அந்த உணர்வுதான் சபரிமலைக்கு மீண்டும் செல்வதைத் தடுக்கிறது.

***

இந்த ஆண்டு சபரிமலை நடை திறந்தாகி விட்டது. ரஷ்யாவில் இருந்து பக்தர்கள் குழு வந்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வாபர் பள்ளிவாசலுக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

நேற்று இரவு கோவில்பட்டி இலட்சுமி திரையரங்கில் 10.30 மணி காட்சிக்கு சென்று இருந்தேன். நான்கு இளவயது அய்யப்ப பக்தர்கள் டிக்கட் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கோயில் திருவிழாவின்போதும், புதுப்பட ரிலீஸின்போதும் குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர்களாக இவர்களைப் பார்த்து இருக்கிறேன். விளக்குகள் அணைந்து, திரையில் எழுத்துக்கள் ஒளிர்ந்தபோது, ஒரு சிகரெட் எரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு இழுப்புக்குப் பின்னரும், சிகரெட் அடுத்த பக்தருக்கு கை மாறியது. சாமியே சரணம் அய்யப்பா!!

(முற்றும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)