ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

சபரிமலை செல்பவர்கள் போகும்போதும், வரும்போதும் வழியிலிருக்கும் பிரபலமான கோயில்களுக்கு எல்லாம் செல்வது வழக்கம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் தென்தமிழகத்தில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் அய்யப்ப பக்தர்களைக் காண முடியும். அப்படித்தான் அய்யப்ப பக்தர்களுடான எனது முதல் அனுபவம் ஏற்பட்டது. 1996, ஜனவரி 1ம் தேதி (பதினொன்றாம் வகுப்பு படித்தபோது), எங்களது கிராமத்துப் பள்ளியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் சென்றோம்.

கன்னியாகுமரியில் அதிகாலை நான்கரை மணிக்கு நாங்கள் இறங்கியபோது, கடற்கரையில் போடப்பட்டிருந்த பெரிய பெரிய பாறைக்கற்கள் பக்கம் அய்யப்ப பக்தர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சூரிய உதயமான பின்புதான் தெரிந்தது, அந்தப் பாறைக்கற்கள் அனைத்தையும் திறந்தவெளி கழிப்பிடங்களாக மாற்றி இருக்கிறார்கள் என்பது. அதன்பின்பு, திற்பரப்பு அருவிக்கு சென்றபோது, அருவிக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களை எல்லாம் அய்யப்ப பக்தர்கள் நாறடித்துக் கொண்டிருந்தார்கள் (அண்மைக்காலத்தில்தான் அந்தப் பக்கம் செல்வதற்கு தடுப்பு போடப்பட்டிருக்கிறது).

கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை பயணத் திட்டத்துடன் தமிழகத்தை சுற்றிப் பார்க்கும் திட்டத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால் மொத்தப் பயணம் ஒரு வாரம், பத்து நாட்கள் வரை நீடிக்கிறது.

ayyappa devotees

(ஜனவரி மாதத்தில் கன்னியாகுமரியில் குவிந்திருக்கும் அய்யப்ப பக்தர்கள்)

பெரும்பாலும் டாடா சுமோ, வேன் மாதிரியான வாகனங்களில் தான் பயணிப்பார்கள். தினம் ஒரு துணி உடுத்துமளவிற்கு லக்கேஜ் அதிகம் கொண்டுவர முடியாது. இருமுடி கட்டு, இதனுடன் இரண்டு செட் கருப்பு உடைகள், ஒரு துண்டு அடங்கிய தோள்பை இவற்றுடன்தான் வருவார்கள்.

பயணச் செலவைக் குறைப்பதற்காக, போகிற இடங்களில் அறை எடுத்துத் தங்க மாட்டார்கள். ஒன்று வேனில் தூங்குவார்கள் அல்லது வேன் நிற்கும்போது, கிடைக்கிற இடங்களில் துண்டு விரித்து, படுத்துக் கொள்வார்கள். அறை எடுக்காததால், துணிகளை சரியாகத் துவைத்து உடுத்துவதற்கும் முடியாது. ஊர் திரும்பும்வரை இரண்டு செட் துணிகளையே மாற்றி, மாற்றி உடுத்துவதால், பெரும்பாலும் அவை அழுக்கேறித்தான் காணப்படும். 48 நாட்கள் அல்லது 60 நாட்கள் முடி வெட்டாமல், சவரம் செய்யாமல் தலை புதர் மண்டிக் காணப்படும். அறை வசதி இல்லாததால், காலைக் கடன்களைக் கழிப்பதற்கு, தண்ணீர் கிடைக்கிற இடங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இப்படித்தான் அழுக்காக, சுற்றுப்புறத்தை அசுத்தமாக்குபவர்களாக அய்யப்ப பக்தர்கள் என்னுடைய 16 வயதில் அறிமுகமானார்கள். இன்றுவரையும் தமிழகத்திற்குள் அய்யப்ப பக்தர்களின் இந்த ‘Swachh Bharat’ நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.

இதற்குக் காரணம் அவர்கள் மட்டும்தானா? பொதுஇடங்களில், அதிகமானோர் கூடும் சுற்றுலாத் தளங்களில் முறையான கழிப்பிட வசதிகளை எந்தவொரு அரசாவது செய்து கொடுத்திருக்கிறதா? ஓரிரு இடங்களில் கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைகளும், ‘ஒருத்தரும் உள்ளே போயிறக்கூடாது’ என்ற நிலையில்தான் பராமரிக்கப்படுகின்றன. சுத்தம் என்ற வஸ்துவைப் பற்றி நாம் கவலையே படுவதில்லை. அது வீடுகளில் பெண்களின் தலையிலும், பொதுவிடங்களில் அரசாங்கத்தின் தலையிலும் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுக் கழிப்பிடங்களில் நாம் உள்ளே போகும்போது என்ன மாதிரியான சுத்தத்தை எதிர்பார்க்கிறோமோ, அதேமாதிரியான சுத்தத்தை அங்கிருந்து வெளியேறும்போது மற்றவர்களுக்குத் தர வேண்டும் என்பது குறித்து நாம் கவலையே படுவதில்லை. முறையாக தண்ணீர் ஊற்றாமல், சிகரெட் துண்டுகள், வத்திக்குச்சிகள், நாப்கின்கள், சட்டைப் பைகளில் இருக்கும் தேவையில்லாத காகிதங்கள் ஆகியவற்றை போட்டுவிட்டு வருகிறோம். அதோடு அசிங்க, அசிங்கமான கெட்ட வார்த்தைகள், பிடிக்காத பெண்களின் கைபேசி எண்களை எழுதும் பலகையாகவும் கழிப்பறை சுவர்களை மாற்றுகிறோம். இதில் அய்யப்ப பக்தர்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

***

நமது சுத்தமின்மைக்கும், இந்து மதப் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன். மன்னர்கள் காலத்தில் இருந்து, இன்றுவரை பொதுமக்கள் கூடும் வெளியாக எல்லா ஊர்களிலும் இருப்பது கோயில்கள் மட்டுமே. அதற்கு அடுத்து சந்தைகள் என்றாலும், அவை எல்லா ஊர்களிலும் இல்லாமல், சற்று பெரிய ஊர்களில் மட்டும்தான் இருக்கும். அப்படி இருக்கையில், ஒரே பொதுமக்கள் வெளியான கோயில்களை இந்துக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள்? தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் இருக்கும் சுத்தம் இந்துக் கோயில்களில் பேணப்படுகிறதா? இந்துக்களின் வழிபாட்டு முறையே அசுத்தமாக இருக்கும்போது, கோயில்கள் மட்டும் எப்படி சுத்தமாக இருக்க முடியும்?

அங்கப் பிரதட்சணம் செய்கிறோம் என்று கோயில் முழுக்க தண்ணீர் ஊற்றுகிறார்கள். தேங்காய், பூசணிக்காயை கோயில் வாசலில் உடைத்து குப்பையாக்குகிறார்கள். அபிஷேகம் செய்கிறோம் என்று பால், மஞ்சள், இளநீர், தேன், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், தயிர், விபூதி, குங்குமம், நெய் ஆகியவற்றை சிலைகளின் மீது கொட்டுகிறார்கள். அபிஷேகத்திற்குப் பின் இதே பொருட்கள் குப்பையாக கோயிலின் பின்புறம் சேர்கின்றன. பிரசாதத்தை சாப்பிட்ட பின்பு, இலையை அப்படியே கோயில் சுவருக்கு வெளியே எறிகிறார்கள்.

கோயிலில் தரப்படும் விபூதி, சந்தனத்தைப் பூசியதுபோக, சுவர்களில் தேய்க்கவோ, பிரகாரத் தூண்களின் கீழ்ப்புறத்தில் கொட்டவோ செய்கிறார்கள். தமிழர்களின் கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற சாட்சியமாக இருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் சுவரிலும் இப்படித்தான் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.

கோயில்களில் பொங்கல் வைத்துவிட்டு, கற்களையும், கரித்துண்டுகளையும் குப்பையாக போட்டுவிட்டுச் செல்கிறார்கள். அன்னதானம் போட்டுவிட்டு, எச்சில் இலைகளை கோயில் சொத்தாக விட்டுச் செல்கிறார்கள். சட்டி விளக்கு, எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறோம் என கோயில் பிரகாரங்களில் எண்ணெய் கொட்டுகிறார்கள். விளக்கு ஏற்றிய கையோடு, நம் கடமை முடிந்துவிட்டது எனக் கிளம்பி வந்து விடுகிறார்கள். அவற்றை அகற்றும் வேலை அடுத்தவர் தலையில்தான் விழுகிறது. தீர்த்தமாடிவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட கோயிலைச் சுற்றி வருகிறார்கள்.

மிகவும் சுத்தமாக இருக்கும் தேவாலயங்களில் (இந்துக்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் RC தேவலாயங்களை நான் குறிப்பிடவில்லை) செருப்பு அணிந்து போக முடிகிறது. ஆனால் அசுத்தமாக இருக்கும் இந்துக் கோயில்களில் செருப்பு அணியாமல்தான் போக முடியும். இந்துக்களின் புகழ் பெற்ற கோயில்களான இராமேஸ்வரம், சபரிமலைக்குள் ஓர் அந்நிய நாட்டு சுற்றுலாப் பயணியை செருப்பில்லாமல் போகச் சொன்னால், அவர் என்னவிதமான அருவெறுப்புக்கு உள்ளாவர் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

வழிபாட்டு முறை இப்படி இருந்தால் கோயில் எப்படி சுத்தமாக இருக்கும்? இன்னொரு முக்கிய காரணம், பொது இடங்களை சுத்தப்படுத்தும் வேலை சமூகத்தின் அடித்தட்டில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் அருந்ததிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. அதனால் மற்ற சாதியினர் சுத்தத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்கிக் கொள்கின்றனர்.

புனிதமாக நினைக்கும் கோயிலையே இந்த இலட்சணத்தில்தான் பராமரிக்கிறார்கள் என்றால், மற்ற இடங்கள் சுத்தமற்று இருப்பதைச் சொல்ல வேண்டுமா?

நல்வினையாக நான் சென்ற பயணக்குழு எந்தவொரு இடத்திலும் திறந்தவெளிகளை கழிப்பிடங்களாக மாற்றவில்லை.

***

வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக அருப்புக்கோட்டை – கோவில்பட்டி சாலையில் உருள ஆரம்பித்ததும், என் மனதில் ஒரு பயம் மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. எனது சிறுவயதில் சாத்தூர் – கோவில்பட்டியில் சாலை வழியாகச் சென்ற அய்யப்ப பக்தர்கள் பாடிக் கொண்டே செல்வதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல் நான் இருந்த வண்டியில் இருப்பவர்களும் பாடுவார்களோ?

20 ஆண்டுகளுக்கு முன்னர், எங்களது கிராமத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இரவி மாமா ‘சுபமங்களம்’ பாட்டு பாடினார்; அதுவும் ஒலிப்பெருக்கியில். அன்றைக்கு ஊரைவிட்டு ஓடிய நாலைந்து நாய்கள்  அதன்பின் திரும்பவேயில்லை. மாமாவின் குரல் வளம் அப்படி…

வண்டியில் சரவணனும், நானும் அருகருகே உட்கார்ந்திருக்க, மாமா எனக்குப் பின்னால்தான் உட்கார்ந்திருந்தார். அவர் பாடினால் நிச்சயம் எனது காதுக்குள்தான் நேரடியாக ஒலிக்கும். 'எந்த ஒரு தற்காப்பும் இல்லாமல் இப்படி முழுசா மாட்டிக் கொண்டோமே' என்று மனதுக்குள் பயம் மலைபோல் எழ ஆரம்பித்தது. நல்வாய்ப்பாக, வண்டி ஓட்டுனர் அய்யப்ப பக்திப் பாடல்கள் அடங்கிய காணொளி குறுந்தகட்டை இயக்கி, என் உயிரைக் காப்பாற்றினார்.

srihari and veeramanidasan

பாப் ஆல்பங்களை ஒலி வடிவில் மட்டுமின்றி, காணொளி வடிவிலும் வெளியிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் தானே! தலேர் மெஹந்தி, அட்னன் சாமி ஆல்பங்களில் அவர்களே ஆடிப் பாடி நடித்திருப்பார்கள். அதேபோல் அய்யப்பன் பாடல் ஆல்பங்களும் வெளிவந்துள்ளன. வீரமணிதாசன், ஶ்ரீஹரி முதலான பாடகர்கள் அய்யப்ப பக்தர்களாக ஆடிப் பாடி, சபரிமலைக்கு செல்வதுபோல் நடித்திருக்கிறார்கள். சபரிமலை போகும் வழிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பாடகர் முன்னே பாடி ஆடி வர, பின்னே பத்து, பதினைந்து அய்யப்ப பக்தர்கள் கோரஸ் பாடுவது போலவும், குழு நடனம் ஆடுவது போலவும் எடுத்திருக்கிறார்கள். பல பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. வீரமணிதாசனும், ஶ்ரீஹரியும் தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருக்கிறார்கள். (உதாரணத்திற்குப் பார்க்க... https://www.youtube.com/watch?v=irOJYnKsyqg, https://www.youtube.com/watch?v=AZTcLlV3Bzk

எல்லாப் பாடல்களின் கருத்துக்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அய்யப்பனின் வாழ்க்கை வரலாறை சொல்வது அல்லது ‘கல்லும், முள்ளும் தாண்டி வாரோம், எங்களைக் காப்பாத்து’ என்று வேண்டுவது. பாடல்களுக்கு இடையே ‘அசல் சிம்பொனி நிறுவன குறுந்தகடுகளை வாங்கி, பாடகர்களை வாழ வையுங்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். திருட்டு விசிடி பிரச்சினையை அய்யப்பனிடம் முறையிடாமல், பக்தர்களிடம் முறையிடுகிறார்கள். திருட்டு விசிடியை அய்யப்பனால்கூட ஒழிக்க முடியாது போலும்.

***

‘கல்லும், முள்ளும் தாண்டி வாரோம்’ இரகப் பாடல்களைக் கேட்டால், அய்யப்ப பக்தர்கள் மேற்கொள்ளும் விரதமுறைகளைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். மேலும் சிலவற்றை சீனியர் சாமிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவை என்ன என்கிறீர்களா?

சபரிமலை செல்பவர்கள் 60 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் (சிலர் 45 நாட்கள் என்றும், சிலர் 48 நாட்கள் என்றும் சொல்கிறார்கள்) விரதம் இருக்க வேண்டும். கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை போடுவதாக இருந்தால் நல்ல நாள் பார்க்க வேண்டியதில்லை. இல்லை என்றால் நல்ல நாள் பார்த்து மாலை போட வேண்டும். அதிகாலையில் நீராடி, குரு சாமியின் முன்னிலையில் கோயிலில் வைத்து மாலை போட்டுக் கொள்ள வேண்டும். உருத்திராட்ச மணி 54 கொண்டதாகவோ, துளசி மணி 108 கொண்டதாகவோ மாலை இருக்க வேண்டும்.

மாலை போடும் தினத்திலிருந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். கறுப்பு, நீலம், மஞ்சள், பச்சை வண்ணங்களில் மட்டுமே துணி உடுத்த வேண்டும். மாமிசம், போதைப் பொருட்கள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். பெண்களை பாலியல் எண்ணத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். படுக்கை, தலையணை இல்லாமல் வெறும் தரையில் துண்டு விரித்து தூங்க வேண்டும். காலணிகள், குடை ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சவரம் செய்து கொள்ளக் கூடாது. பொய் சொல்லுதல், கோபம், குரோதம் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒருவரிடம் பேச்சைத் தொடங்கும்போதும், முடிக்கும்போதும், ‘சாமி சரணம்’ சொல்ல வேண்டும். அனைவரையும் ‘சாமி’ என்றுதான் விளிக்க வேண்டும்.

மரணம் சம்பவித்த வீடுகள், குழந்தை பிறந்த வீடுகள் மற்றும் பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு மாலை அணிந்தவரும், அவரது குடும்பத்தினரும் செல்லக் கூடாது. முதன்முதலாக மாலை போடும் ‘கன்னி சாமி’, குரு சாமி தலைமையில் மற்ற சாமிகளோடு சேர்ந்து ‘கன்னி பூஜை’ நடத்த வேண்டும். சபரிமலைக்குப் புறப்படும்போது, யாரிடமும் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போகக் கூடாது.

பயணம் முடிந்து திரும்பும்போது, பிரசாதக் கட்டை தலையில் வைத்துக் கொண்டு, வீட்டு வாசலில் விடலைத் தேங்காயை உடைத்து, உள்ளே போக வேண்டும். பூஜை அறையில்தான் பிரசாதக் கட்டினை இறக்கி, விநியோகிக்க வேண்டும். குரு சாமி கையாலோ, குரு சாமி இல்லை என்றால் பெரியவர்கள் கையாலோ மாலையை இறக்கி, ஒரு குவளை பாலில் மூழ்கும்படி போட வேண்டும். மாலையை இறக்கிய பின்புதான் இயல்பு வாழ்க்கைக்கு - அதாவது மனைவி பக்கமோ, டாஸ்மாக் பக்கமோ - போக வேண்டும்.

***

அருப்புக்கோட்டையிலிருந்து கிளம்பிய அரைமணி நேரத்தில், நொறுக்குத் தீனி பொட்டலங்கள் வண்டியிலிருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. 50 கிராம் மிக்ஸர் மற்றும் ஓர் இனிப்பை பேக் செய்து, எடுத்து வந்திருந்தார்கள். கூடவே, ஆளுக்கொரு தண்ணீர் பாட்டீல். அய்யப்பன் மீதுள்ள பக்தியில் லௌகீக விஷயங்களை மறந்து, நம்மை பட்டினி போட்டுவிடுவார்களோ என்ற பயம் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. ஆனால், அப்படி எல்லாம் எந்த ஒரு அசம்பாவிதமும் பயணத்தில் எந்தவொரு இடத்திலும் நடக்கவில்லை. மூன்று வேளையும் வகைவகையான உணவு சமைக்கப்பட்டு, அனைத்து சாமிகளுக்கும் குறைவில்லாமல் படைக்கப்பட்டது.

நாங்கள் பயணம் செய்த வண்டியும் சொகுசான வேன். LED TV, DVD Player, Digital Surround system, Push back seat முதலான வசதிகள் அடங்கியது. போகும்போது அய்யப்பனை நினைத்துக் கொண்டு பக்திமயமாக செல்வதற்கு அய்யப்பன் பக்திப் பாடல்களும், வரும்போது அய்யப்பனை மறந்து, குஜாலாக வருவதற்கு தமிழ்ப் படங்களும் காண்பித்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, பயண ஏற்பாடுகளில் அவ்வளவு ஒரு கச்சிதம் இருந்தது.

அருப்புக்கோட்டையிலிருந்து சபரிமலைக்கு இராஜபாளையம் வழியாகவோ, கோவில்பட்டி வழியாகவோ செல்லலாம். கோவில்பட்டி வழியாக என்றால் கொஞ்சம் கிலோமீட்டர்களை மிச்சப்படுத்தலாம். எங்களது பயணம் போகும்போது கோவில்பட்டி வழியாகவும், வரும்போது இராஜபாளையம் வழியாகவும் இருந்தது. கோவில்பட்டி வழி என்றதும் ஹேமாவிற்கு அழைத்துச் சொன்னேன். ஹேமாவின் வீடு கோவில்பட்டியின் முக்கிய சாலையில் இருக்கிறது. அவர்களது வீட்டைக் கடந்துதான் சபரிமலை செல்லும் சங்கரன்கோவில் சாலையைப் பிடிக்க முடியும். வீட்டிற்கு அருகில் வரும்போது, ஹேமா, மாமா, அத்தை சாலைப் பக்கம் வந்து எனக்கும், சரவணனுக்கும் டாடா காட்டினார்கள்.

***

சபரிமலைக்குச் செல்பவர்கள் வழியில் இருக்கும் கோயில்களுக்குச் செல்வார்கள் என்று சொன்னேன் அல்லவா? எங்கள் குழுவின் தொடக்கமாக சங்கரன்கோவிலுக்குப் போனோம். அப்போது மாலை ஐந்தரை மணி இருக்கலாம்.

sultan briyani sankarankovilசங்கரன்கோவில் என்றதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது சுல்தான் கடை பிரியாணி. நான் ஒரு பிரியாணிராமன். தினமும் பிரியாணி என்றால்கூட அலுக்காமல் சாப்பிடுவேன். எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் பிரியாணி எப்படி செய்கிறார்கள் என்பதை ருசித்துப் பார்ப்பேன். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகச் செய்கிறார்கள் என்றாலும், ஆம்பூர் பிரியாணி, சென்னை பிரியாணி (இராவுத்தர் தலைப்பாகட்டு, புகாரி, அஞ்சப்பர், ஆசிப் கடை), திண்டுக்கல் தலைப்பாகட்டி, ஹைதராபாத் பிரியாணி, சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி ஆகியவை எல்லோராலும் சிலாகிக்கப்படுபவை. எனக்கு விருப்பமானது சென்னையில் தயாரிக்கப்படும் பிரியாணிதான். சுவையும், மணமும் அள்ளும். ஹைதராபாத், திண்டுக்கல் வகைகளை என்னால் பிரியாணியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பிரியாணிக்குரிய எந்த மணமும், சுவையும் அவற்றில் இல்லை. ஆம்பூர் பிரியாணியில் சுவை இருந்தாலும், எண்ணெய் அதிகமாக இருக்கும்.

தென்தமிழகத்தில் பெரும்பாலானோர்க்கு பிரியாணி செய்யத் தெரியாது என்பது எனது திடமான கருத்து. படித்து முடித்து, சென்னை வரும்வரை ஒரு நல்ல பிரியாணியை நான் சாப்பிட்டதே இல்லை. புலாவ் செய்துவிட்டு பிரியாணி என்பார்கள். இல்லையென்றால் அது புளிசாதமாக இருக்கும். ஆனால் சுல்தான் கடை பிரியாணி அப்படி இல்லை. சென்னைக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த பிரியாணி.

சுல்தான் கடை ரொம்பவும் பெரிய கடை எல்லாம் இல்லை. ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 25 பேர் தான் சாப்பிட முடியும் என நினைக்கிறேன். அந்த 25 பேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்குப்  பின்னால் அடுத்த 25 பேர் இடத்தைப் பிடிக்க நின்று கொண்டிருப்பார்கள். மட்டன் பிரியாணி மட்டும்தான் கிடைக்கும்; அதுவும் சீரகச் சம்பா அரிசியில்தான் செய்யப்பட்டிருக்கும். அரைத் தட்டு மட்டன் பிரியாணி 100 ரூபாய். அளவு குறைவாக இருக்கும். ரெண்டு அரைத் தட்டு பிரியாணி வாங்கினால்தான் வயிறு நிறையும். அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், நிறைய பேர் பார்சல் வாங்கிக் கொள்வார்கள். கொஞ்சம் தாமதமாகப் போனால், காலியாகிவிடும். 2 மணிக்குப் போய் ஒரு முறையும், ஒன்றரை மணிக்குப் போய் ஒரு முறையும், பிரியாணிக்குப் பதில் ‘காலியாகி விட்டது’ என்ற பதிலை வாங்கி வந்திருக்கிறேன். அதன் பின்பு உஷாராகி, அந்தப் பக்கம் போவதாக இருந்தால், 12 மணிக்கு எல்லாம் கடைப்பக்கம் இருப்பதுபோல் பார்த்துக் கொள்வேன். மட்டனை அவ்வளவு பக்குவமாக சமைத்திருப்பார்கள். சங்கரன்கோவில் போகிறவர்கள் தவறாமல் சுல்தான் கடைப் பக்கம் போய் வாருங்கள்.

சுல்தான் கடையைத் தாண்டி, எங்கள் வண்டி போனபோது, மிட்டாய்க் கடையைப் பார்க்கும் சிறுவன்போல் ஏக்கமாகப் பார்த்தபடி போனேன். கோவில் பக்கம் போய்த்தான் வண்டி நின்றது. மனசை சுத்தமாக வைத்துக் கொண்டு தம்மடித்தால் அய்யப்பன் ஏற்றுக் கொள்வது போல், சுல்தான் பிரியாணியையும் ஏற்றுக் கொள்வாரா என்று எந்த சாமியிடமாவது கேட்கலாம் என்று பார்த்தால், எல்லா சாமிகளும் பக்தியோங்கி, கோவிலுக்குள் போய்விட்டார்கள். சுல்தான் கடைப்பக்கமாகத் திரும்பியிருந்த நாக்கை மடக்கி, வாய்க்குள் போட்டுக்கொண்டு சோகமாக கோயிலுக்குள் போனேன்.

***

சங்கரன்கோவிலுக்கு பலமுறை வந்திருந்தாலும், கோவில் பக்கம் இதுவரை போனதில்லை. நமக்கு அங்கே என்ன சோலி, வந்த வேலையை பார்த்தோமோ, பிரியாணி சாப்பிட்டோமா என்றுதான் இருந்திருக்கிறேன். முதன்முறையாக இப்போதுதான் உள்ளே போகிறேன், அதுவும் பக்தர்கள் சூழ...

சங்கரநாராயணர் கோவில் என்பதுதான் காலப்போக்கில் மருவி, சங்கரன்கோவிலாக மாறியது என்பதை எங்கோ படித்திருக்கிறேன். தென்தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஊர்களில் இதுவும் ஒன்று.

கோயிலினுள்ளே சென்றதும், தல புராணம், வழிபாட்டு முறைகள், இங்கு வழிபடுவதால் கிடைக்கும் புண்ணியங்கள் பற்றி மற்ற சாமிகளுக்கு குரு சாமி விரிவாக விளக்கினார். அவற்றை இங்கே விளக்கினால், இந்த அத்தியாயம் நீண்டுவிடும்.

‘அய்யப்பனின் பிரம்மச்சரியம் குறித்து முதல் நாளிலேயே அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது’ என்று முந்தைய அத்தியாயத்தில் சொன்னேன் அல்லவா? அது என்ன என்பதை மட்டும் சொல்லிவிட்டு, இந்த அத்தியாயத்தை முடித்துக் கொள்கிறேன்.

‘பிரம்மச்சாரி’யான அய்யப்பனுக்கு உண்மையில் இரண்டு பொண்டாட்டிகள். இது குரு சாமியே சொன்னது. அது என்ன கதை என்பதையும், சங்கரன்கோவில் செல்வதால் உண்டாகும் ‘மகிமை’களையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)