ஒற்றை ஆளாய் ஒரு சம்பவம் செய்திருக்கும் கபிலை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கிரிக்கெட்- ஐ பெரிதாக விரும்பாதோரிடமும் கொண்டு சேர்த்த '83' டீமை கொண்டாடலாம். தகும். தகுந்த திரைக்கதையில்.... புனைவுக்கும் வழி விட்டு... நடந்தவைகளை நயமாக கோர்த்த விதம் கை தேர்ந்த கலை என்று உறுதிப்படுத்துகிறது. தரமான படைப்பாளிகளால் தான் வரலாற்றை மறு ஆக்கம் செய்ய முடியும். இந்த மறு ஆக்கத்தில் மனம் கொள்ளை போகிறது... உறுதி.

83 500நாடறிந்த கதையை மீண்டும் அரங்கேற்றுவதற்கு தைரியம் மட்டும் அல்ல புத்திசாலித்தனமும் வேண்டும். அது '83' குழுவுக்கு போதுமான அளவுக்கு இருக்கிறது.

அந்த 175 மட்டை அடி... ஆதி வெறியில் கிளம்பிய அசுர வேட்டை. சாது மிரண்டால் காடு கொள்ளாது தானே. முடிவெடுத்து இறங்கி விட்டால்... மனமும் உடலும் காலமும் காட்சியும் கை கோர்த்து களம் கொண்டால்... அது நிகழ்த்துவது தான் வரலாற்று சம்பவம். போராடும் குணம்... விடாத எண்ணத்தில் விட்டு விடவே கூடாது என்ற மன தைரியத்தில்... உரு ஏற்றி... உணர்வு பூட்டி.. உள்ளம் இறுக்கி... உடலை முறுக்கி கபில் எனும் செயல் வீரன் செய்து காட்டியது வரலாறு. காலத்துக்கும் முன் உதாரணம் போராடி பெற்ற இந்த வெற்றி.

எல்லாரும் கை விட்ட பிறகு எல்லைகளை கடக்க தனி ஒருவன் முயலுகிறான்.

ஜூஸை குடித்துக் கொண்டே "யாஷ் அந்த வாள எடு" என்று கபில் கேட்கையில்... அது மங்கூஸ் பேட் என தெரிய வருகையில்... வருகின்ற இசையாகட்டும்... சக வீரர்களின் பாவனையாகட்டும்... ஒரு ஹீரோ அடித்தாட எடுத்த முடிவு என்று இந்த நிஜ சினிமாவுக்கு டெம்ப் ஏறும் இடம். பிறகு மைதானத்தில் அந்த மங்கூஸ் மட்டையில்... மத்தளம் அடித்தது எல்லாம் அடி வாங்கியவன் மாண்டாலும் மறக்க முடியாத கிரிக்கெட் தழும்பு. அன்று கபிலின் அந்த தாக்குதல் எதிர் அணிக்கு ஒரு துர் கனவு தான்.

கபிலாக வந்த ரன்வீரின் உரு மாற்றம்... திகைக்க வைத்தது. நிற்பது நடப்பது... பார்ப்பது... ஓடுவது... சிரிப்பது என்று கபிலாகவே ஆகி இருந்த ரன்வீர் ரணகளம். மெருகேறிய பழுப்பு கண்களில் வெறி ஏறி நிற்கும் பேரமைதி... அது கபிலின் தீர்க்கத்தை அப்படியே நமக்கு மடை மாற்றுகிறது. ஒவ்வொரு பாத்திர தேர்வும் ஒரு நீண்ட நெடிய தீசிஸ். அதுவும் ஒவ்வொரு நாட்டு வீரர்களின் சாயலுக்கும் மெனக்கெட்டு சாதித்திருக்கிறார்கள். ஒரு பெரிய டீம் இன்றி இந்த மகத்துவம் அரங்கேறி இருக்காது. விளையாட்டு வாழ்வோடும் சமூகத்தோடும் இரண்டற கலந்திருக்கிறது என்று இடையே நடக்கும் அரசியலின் மூலம் மிக நெருக்கமாக வெளிப்படுகிறது. ஒரு கலவரத்தை கட்டுக்குள் கொண்ட வர விளையாட்டால் முடிகிறது. (இன்று கட்டவிழ்க்கவும் முடிகிறது...என்பது வேறு விஷயம்.) அதன் பின் தேசம் என்ற ஒற்றை சொல் தோள் அணைத்துக் கொண்டு நின்றது காட்சிக்கு காட்சி கலர் ஏற்றும் திரைக்கதை. ஒரு தேசம் முழுக்க ஒற்றை புள்ளியில் ஒன்றாய் நின்ற அந்த தருணத்தை மனம் வியந்தது உணர்கிறது.

ஸ்ரீகாந்தின் விளையாட்டுத்தனம் சற்று எரிச்சல் ஏற்படுத்தினாலும்.. இடையே அவர் பேசும் வசனத்தின் மூலம் அவர் ஐடியாலஜி புரிய நேர்கிறது. ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு தோரணம். அதை கட்டி அழகான... கசங்காத மாலை ஆக்கிய தலைவன் கபில். நல்ல ஆக்குபவன் இருந்தால் தான் ஆக்கங்கள் நல்லவையாக அமையும். அப்படி... ஆக சிறந்த நிகழ்வை... மிக மிகு வலிமையாக படம் செய்த நேர்த்தி.. பிரமிக்க செய்கிறது.

"vee heare too vinnn"என்று பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் கபில் சிரித்துக் கொண்டே மெல்ல ஆங்கிலத்தில் பேசும் போது இருக்கும் நம்பிக்கை... மொழி தாண்டி நம்மை கவ்விக் கொள்ளும் உறுதி மொழி. எது வேண்டுமோ அதை நோக்கிய வேகம் அந்த சொற்களில் தீ கொண்டிருந்த்தை உணர்ந்தோம். கபில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சிகள் கூட எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது தான். கண் கலங்க செய்யும் இடங்கள் நிறைய. மனம் நிறைய செய்யும் இடங்கள் நிறைய நிறைய.

ஒரு காட்சியில்... "குட் ஷாட் கபில்" என்று கத்தியபடியே மைதானத்துக்கு வெளியே போன பந்தை பிடித்தபடி திரையில் வரும் கபில்... சில நொடிகள் என்றாலும்... சிலிர்க்கும் நொடிகள். அந்த வாய் கொள்ளா சிரிப்பில் அவர் முகம் பூரித்து தேஜஸ் நிரம்பி இருந்ததை காண காண இதயம் நிரம்பும் நமக்கும்.

ஒவ்வொரு வீட்டோட்டும் ஒவ்வொரு தனி மனிதனோடும்... தேசமும் அதன் மேல் இருந்த நேசமும் மிக அழகாக வெளிப்பட்டதை காணுகையில்... மெய் சிலிர்த்தது. கிரிக்கெட் இந்தியாவுக்குள் தன் சிறகுகளை அசைக்க ஆரம்பித்த தருணத்தை ஒவ்வொரு மனிதனும் தனக்கான வெற்றியாகவே பார்க்கிறான். மிக நுட்பமான புள்ளியில் கிரிக்கெட் எனும் விளையாட்டு நம்மோடு இணைந்தது. போராடி வெற்றி பெறுவது என்பதற்கு காலத்துக்கும் உதாரணம் அந்த 175 நாட் அவுட் மேட்ச். இறுதி போட்டியில் கூட..183 ரன்கள் தான். எதிர் அணியை சேசிங் செய்ய விடாமல்... போட்டு கவிழ்த்தியது எல்லாம்... ஒவ்வொரு வீரனும் உயிரை கொடுத்து விளையாட வேண்டும் என்று கபில் சொன்ன வார்த்தையின் செயல் வடிவங்கள்.

"என்ன பவுலாராவே மதிக்கல கேப்ஸ்... ஒரு ஓவர் குடு... முடிச்சு காட்றேன்" என்று மதன் லால் கெஞ்சி கேட்கும் இடமாகட்டும்... அதைத் தொடர்ந்து அடுத்த பந்தில் ரிச்சர்ட் அடித்த அடியை ஆகாயம் வேண்டுமானால் அசந்து பார்க்கலாம்... நாங்க பிடிப்போன்டா என்று இந்த பக்கம் கபிலும்... அந்த பக்கம்,...யாஷ்ம் ஓடி வர.. (அதுவும் யாஷின் முக மொழி... கிளாசிக்.) அந்த கணம்... கால கனம். மைதானமே அண்ணாந்து வானத்தை பார்க்க... ரிச்சர்ட் கூட அதுவரை இருந்த தெனாவெட்டில் இருந்து ஒரு நொடி கீழிறங்கி ஆழ்மனம் பதறும் கண்களோடு தவிக்க... அங்கே நடந்த அந்த மேஜிக் இன்றும் கண் திறந்த வித்தை தான்.

ஓர் இலக்கு... அதன் மீது கட்டமைத்த நம்பிக்கை. அது தான் பலம். எதிரே எமனே நின்றாலும்... எதிர்த்து நிற்பவனுக்கு தான் இந்த வாழ்வின் அனுபவம் வாய்க்கும். அது வெற்றி தோல்வி தாண்டிய போராட்டம். சுயத்தின் தீபம்... ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கையில் அந்த சமூகம் நேர் கொண்ட பார்வைக்குள் நிஜம் தேடி முன்னேறும்.

கபிலின் குழுவில்... ஒவ்வொரு வீரனுமே ஒருவனுக்கு ஒருவன் தோள் கொடுக்கும் முதிர்ச்சி கொண்டிருக்கிறான். எல்லாம் தாண்டி அனைவருக்கும் இடையே அழகான நட்பு இருக்கிறது. அது விட்டு கொடுத்து தட்டி கொடுத்து ஓட செய்கிறது. ஒருவன் சோர்ந்து போகையில்.. இன்னொருவரின் தேற்றி அழைத்து செல்லும் பாங்கு தெளிவு கொண்டிருக்கிறது. கேப்டன் பேச்சுக்கு மரியாதை தரும் குழு ஒத்த கருத்தோடு திரண்டு நிற்கையில் வெற்றி தவிர வேறென்ன. ஒருங்கிணைப்பும் ஒப்புக்கொடுத்தலும் அந்த குழுவில் ஓர் அங்கமாகவே இருக்கிறது.

183 க்கு எதிராக விளையாடிய மொத்த டீமும்... ஒற்றை ஆள் அடித்த 175 ம்... முதல் உலக கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. கபில் எனும் பில்லரை கிரிக்கெட் வரலாறு ஒரு போதும் மறக்காது. அதன் சாட்சி தான் இந்த '83'. அந்த 175 க்கு காணொளி இல்லை என்ற கவலை இனி இல்லை. டிஜிட்டல் வடிவத்தில்... செதுக்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த உள்ள கோப்பை கபிலுக்கு இன்னொரு உலக கோப்பை தான். இந்தியாவை உலக தராசில் நிறுத்திய மாமனிதனுக்கு சல்யூட்.

கிரிக்கெட் ஒரு கொண்டாட்டமாக மாறிய தருணம் தான் இந்த படத்தின் இறுதிக்காட்சி. மைதானத்தில் ஸ்டம்பை பிடுங்கிக் கொண்டு ஓடி வரும் ஸ்லோ மோஷன் காட்சி.. மக்கள் வெள்ளம் ஒவ்வொரு பந்தாக வீரர்களை நோக்கி வரும் கண்கொள்ளா காட்சி...ஆனந்த பரவசம். அது தான் இன்று வரை நம்மோடு கிரிக்கெட்டை கொண்டிருக்க செய்கிறது. உணர்ச்சியோடு கலந்திருக்கும் இந்த கிரிக்கெட்டை நாட்டின் பெருமையோடும் மானத்தோடும் பொருத்திக் கொண்டது எப்படியோ நிகழ்த்து விட்டவை. ஆனால் அதில் ஒற்றுமையும் இருக்கிறது என்பது நல்ல விஷயம் தானே. இந்த வெற்றி மற்ற நாடுகள் மத்தியில் மரியாதையை பெற்று தந்தது என்பது உண்மை தானே. சுதந்திரத்தை விடவும் பெரியது மரியாதை.

இசையில் தசை முறுக்கேற....வரியில் நிறை எழுந்த நேர்த்தி... பின்னணியில் பிகில் செய்கிறது. இயக்குனர் Kabir Khan மற்றும் டீம் க்கு வாழ்த்துக்கள். தரமான படைப்பு.

தவம் செய்திருந்தால் தான் இப்படி ஒரு வரம் கிடைக்கும். இன்னும் எத்தனை முறை பார்க்க போகிறேன் என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் உற்சாகத்தோடும் உத்வேகமும் உள்ளத்தில் பலமும் கூடுகிறது. விளையாட்டு வாழ்வின் அங்கம். விளையாடுவோம், நேர்மையோடும் அறத்தோடும்... உண்மையோடும் உணர்வோடும். கபில் சாட்சி.

Film : 83
Director : Kabir khan
Language : Hindi
Year : 2022

- கவிஜி