Nayattu

இந்த ஆண்டு வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சனுக்கு நிகரான/அடர்த்தியான படைப்புகளை தொடர்ச்சியாக வழங்கமுடியும் என மறுபடியும் நிருபித்திருக்கிறார்கள் மலையாள சினிமா படைப்பாளிகள். கடந்த 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான நாயட்டு திரைப்படம்தான் அந்த இன்னொரு படம்.

இந்திய தேர்தல் அமைப்பைப் பற்றிய சித்திரத்தை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் புரிந்துகொள்ள மூன்று திரைப்படங்கள் முக்கியமானவை. ஒன்று 2017ல் இந்தியில் வெளியான நியூட்டன், சமீபத்தில் தமிழில் வெளியான மண்டேலா, அதற்கு பிறகு மலையாளத்தின் வெளியாகியிருக்கும் Nayattu (வேட்டை).

நியூட்டன் இந்திய தேர்தல்களின் நடைமுறை இயங்கியல் தன்மைகளை அதன் எல்லை வரை படம் பிடித்துக் காட்டியிருந்து. அதேசமயம், 2021ல் வெளியான மண்டேலா தேர்தலில் பங்குபெறும் கட்சிகள் மற்றும் மக்கள் பற்றிய நடைமுறை யதார்த்த சித்திரத்தை காட்டியிருந்தது. இந்த வரிசையில் நாயட்டுதான் மிக முக்கியமான/உச்சமான திரைப்படம்.

ஏனெனில், அது தேர்தலையொட்டி இயங்கும் அரசையும், அதன் உப நிறுவனங்களையும், தொடர்ந்து அதில் உள்ளார்ந்து இயங்கும் சமூகத்தையும் என மூன்று வகைவகையாகப் பிரித்து மிக நுட்பமாக காட்சிப் படுத்தியிருக்கிறது.

நாயட்டு கதை மூன்று தலித்துகளையும் ஒரு சிறுபான்மை இளைஞரையும் மிகமுக்கிய பாத்திரங்களாக கொண்டது. உதவி ஆய்வாளராக வரும் தலித் மணியன் (ஜோஜுஜார்ஜ்) அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு தலித்தான சுனிதா(நிமிஷா சஜயன்), சுனிதாவின் அண்டை வீட்டுக்கருகில் அவர்க்கு தொல்லைத்தரும் ஒரு அடாவடி தலித் இளைஞரும், அந்தகாவல் நிலையத்திற்கு ஓட்டுநராக வரும் பிரவீன் மைக்கேல் (குஞ்சாகோ போபன்) என்கிற தனிமனிதர்களின் கதையாக துவங்கும் நாயட்டு, முதல் அரைமணி நேரத்தில் இவர்கள்/இவர் குடும்பங்கள் பற்றிய் முன்னுரைகள் போல சாதரணமாக நகர்கிறது.

அந்த அரைமணி நேரத்திற்கு பிறகு நிகழம் ஒரு உச்சகட்ட சம்பவத்தைத் தொடர்ந்து படம் பல திருப்பங்களைக் கொண்ட கிரைம் திரில்லராக வேகமெடுக்கிறது.பெரும்பான்மை குற்றங்களை அதிகாரங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் போலீஸ் நடைமுறைகளே வாடிக்கை.

அதே நடைமுறைகள் சமயங்களில் அவர்களுக்கே எதிராகவும் திரும்பும் சாத்தியமும் இருக்கிறது. மாநிலத்தில் தேர்தல் நிகழப்போகும் ஒரு அசாதாரணமான சந்தர்பத்தில் ஒரு விபத்து நிகழ்கிறது.

அந்த விபத்து கதைமாந்தர்களான மூன்று போலீஸ்காரர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய ஒரு குற்றமாக வடிவமைந்து கொள்கிறது. அதற்கு முந்தைய காட்சிகள் இயல்பாக இந்த சூழலை வடிவமைக்கின்றது. இது படத்தின் முக்கியமான மையம். இங்கிருந்து விக்டீமான தலித்தும், அக்கியூஸ்ட்டாக கட்டமைக்கப்படும் தலித் குழுவுமாக திரைக்கதை வேகமெடுக்கிறது.

அரசியல்வாதிகளால் தலித் பாதுகாப்பு சட்டங்கள் எப்படி அரசியல் சூழ்ச்சிகளுக்கு, வாக்கரசியலின் தேவைகளுக்காக நகர்கிறது என்பதையும், தேர்தல் வாக்குகளுக்காக அரசமைப்பால், தீட்டப்பட்டு வீரியமாக்கப்படும் தலித் மரணங்கள் சங்கிலிகளாக நீண்டு மீண்டும் வேறு தலித்துகளை எப்படி பலி கொள்கிறது என ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில், உண்மையில் தலித் பாதுகாப்பு சட்டங்கள் அதிகாரங்களால்தான் தவறாக கையாளப்படுகிறது. படத்தில் இது எதிர்மறையாக கையாளப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அதேசமயம், படத்தின் நோக்கம் அதுவல்ல என்பதும், 60 சதவீத தலித் வாக்காளர்களுக்காக பொது மைய அரசியல்வாதிகள் அதை தீவிரமாக கையாள்வதும் குறித்தும் ஓரளவு நடுநிலையுடன் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் ஒடுக்கப்பட்டோர் குறித்த சட்டங்களை கையாள்கிற படைப்பாளிகள் அதீத உண்மைத்தன்மையுடன் அதைக் கையாளவேண்டும்.

தனிமனிதர்களால் (அவர்கள் அதே அரசமைப்பின் ஊழியர்களாக இருந்தாலும்) எப்படி அரசமைப்பின் அரசியல் சூழ்ச்சிகளை வெல்ல முடியாது என்பது படம் பேசும் மற்றுமொரு முக்கியமான அரசியல் குரல். இதேவடிவத்தில் நமக்குத் தமிழில் மிக நெருக்கமான திரைப்படமாக வெற்றிமாறனின் விசாரணை இருக்கிறது.

ஒரு அரசு தலித்துகள் தொடர்பான சிக்கல்களை தேர்தல் சமயத்தில் எப்படிக் கையாளும், மற்ற இதர சமயங்களில் எப்படிக் கையாளும் என்பதும் விலாவரியாக சொல்லப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களை கவர்மெண்டுகள்/ கட்சிகள் அரசியல் சுயலாபத்திற்காக எத்தனை தூரம் வளர்க்க் காத்திருக்கிறது. அது விரும்பும் முடிவை நோக்கி நகர என்னென்ன அரசியல் செய்கிறது என்பதும் ஊசி ஏற்றுவதைப் போல இதன் இறுதிக்காட்சிகள் ஏற்றுகிறது.

படம் நுட்பமான போலீஸ் நடைமுறைகளைப் பேசுகிறது. 20வருட குற்றங்கள் ஜோடிக்கும் அனுபவமுடைய ஜோஜூ ஜார்ஜ் தன் புதிய சகாவிடம் : "ரவுடிகளுக்கு கூட கட்டளைகளை ஏற்கவோ நிராகரிக்கவோ ஒரு தேர்வு இருக்கிறது, நமக்கு அந்த சுதந்திரமும் இல்லை." என்பார்.

இது பின்னர் இவர்களை தேடியலைந்து கண்டுபிடிக்கும் உயரதிகாரி வரைத் தொடரும் விதமாக பின்னப்பட்டிருக்கும் இதன் திரைக்கதை சுவாரஸ்யமானது. மேலும், ஜோஜூஜார்ஜின் அந்த முன் அனுபவ காட்சிகள் படத்தின் உச்ச காட்சிக்கும், அதைத் தொடர்ந்து நிகழும் திரைக்கதைக்கும் பெரும் நம்பகத்தன்மை கொண்டு வந்து சேர்கிறது.

தன் தாயின் உடைகளைத் துவைத்து, உலர்த்தப் போடும் குஞ்சாகோ போபன், பின்னர் நீண்ட தப்பித்தல் நடைமுறையில் தன் சக அலுவலரான நிமிஷாவிற்கு, அவர் கேட்காமலேயே நாப்கின் வாங்கித்தருவதாக வரும் காட்சி கவித்துவமானது.

'அத்தனைச் சிக்கல்களிலிருந்தும் எதாவது ஒரு முனையில் மீளமாட்டோமா?' என்கிற பரிதவிப்புடன் அலைவதாகட்டும், தன் சக அதிகாரியின் மேல் கொலைப்பழி சுமத்தக் கோரும் உயரதிக்கு உறுதியான குரலில் மறுப்பு சொல்வதாகட்டும் என நிமிஷா தன் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டு இருக்கிறார். போலவே, படத்தின் மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரமான அனுராதா (யாமி கில்காமேஷ்) படத்தில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி விரிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதில் தன் குழுவுடன் கயிற்றை பலமாக இழுத்து வெல்லும் நாயகன் பிற்பாடு, அரசியல் சூழ்ச்சி எனும் கயிற்றை எவ்வாறு இழுக்கமுடியாமல் பலியாகிறான் என்பதாக நடந்து முடியும் நாயட்டு திரைப்படம் இந்திய அரசியல் திரைப்படங்களில் முக்கியமான ஒரு திரைப்படமாகும்.

கேரள-தமிழக எல்லைப்புற தமிழர்கள் சிலர் போதைப்பயிர்கள் பயிரிடுகிறவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது விரும்பத்தாகதது. ஒரு சில மலையாள படைப்பாளிகளின் தொடர்ச்சியாக வைக்கும் அவதூறுகளில் இது மேலும் ஒன்று.

- கர்ணாசக்தி