Drishyam 2ஜித்து ஜோசப்பின் இரண்டாவது கல்லும் பல கனிகளை தட்டிச் சென்றது. இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தொடுபுழா நகரத்தை அழகாக காட்டியிருக்கிறார் சதீஷ் க்ரூப். எப்போதுமே மலையாளப் படங்களில் கவர்ச்சிக் கொள்ளும் இயற்கையின் அழகு, கலாச்சாரம், பன்மையான மனைகள் போன்றவை இந்தப் படத்திலும் கதைக்கேற்ப மிகைப்படாமல் காட்சிப் படுத்தப்பட்டது.

முதல் பாதியில் எப்போதும் போல கதை ஆமை வேகம் கொள்கிறது. இரண்டாம் பாதியில் கணிக்க முடியாத சில திருப்பங்களைக் கொண்டு முடிகிறது கதை.

முதல் பகுதியை தொடரும் கதை, அமைதியாக வாழ்ந்துவரும் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. திரையரங்கு ஒன்றை நடத்திவரும் ஜார்ஜ்குட்டி ஒரு படத்திற்கான திரைக்கதை அமைப்பதற்கு வினாயச்சந்திரன் என்பவரை சந்திக்கிறார்.

இதற்கிடையில் இவர்களை சுற்றி ஒரு வலையை விரிக்கிறது உளவுத்துறை. ஜோஸ் என்னும் குற்றவாளி சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் கொடுத்த தகவலின் பெயரில் வருணுடைய பிரேதம் இருக்கும் இடத்தை நெருங்குகிறது காவல் துறை. கடைசியில் ஜார்ஜ்குட்டி குற்றவாளி என்பது உறுதிசெய்யப்படுகிறது.

ஆனால் அந்த கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என்று அதற்காக இணைக்கப்படும் ஆதாரங்கள் திரையரங்கையே திணறடிக்க செய்கிறது.

ஜார்ஜ்க்குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லால் நடிப்பை இயல்பாகியிருக்கிறார். கணவனாகவும், தந்தையாகவும் இருக்கும் கதாபாத்திரத்தைத் தாண்டி ஒரு ரகசியத்தை கண்களுக்குள் பதுக்கிக் கொண்டு எதையும் நிதானமாக கடந்து போவது நடிப்பின் உச்சம்.

அவர் முகபாவனைகளைக் கொண்டு கதையின் முடிச்சுகளை அவிழ்த்து விட முடியாது. திரைக்கதைக் கேற்ப தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார் மோகன்லால்.

ராணி என்ற கதாபாத்திரத்தில் வலம் வரும் மீனா மோகன்லாலோடு சேர்ந்து ரகசியத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கிறார். வரையறை தாண்டாத நடிப்பு கதைக்குப் பக்கபலமாக அமைகிறது.

சரிதாவாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர் தனது உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரும் அவர் கணவரும் ரகசிய காவல் துறையை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை தெரிந்துக் கொள்ளாமல் படத்தில் நடிப்பவர்களோடு சேர்ந்து நாமும் ஏமாந்துகொள்ளும் வகையில் திரைக்கதையும் நடிப்பும் ஒளிர்ந்துகொள்கிறது.

தடய அறிவியல் துறையின் அலட்சியப் போக்கு ஒரு கொலைக்கான குற்றத்தை பெரியளவில் மறைக்கக்கூடும் அல்லது வழக்கை திசை திருப்பக் கூடும் என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

சட்டத்திற்கு புறமானதாக இருந்தாலும் தன் மகளை பெரிய இன்னல்களில் இருந்துக் காப்பாற்றும் ஒரு தந்தையாகப் பார்த்தால் சரி என்றே படும். சட்டசிக்கல்களை அலசி ஆராய்ந்து கதைக்கு ஏற்ப அதற்கு புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பதில் கொடுத்திருப்பது திரைக்கதையின் பலம்.

திரிஷ்யம் -2 வெற்றிக் காண மகுடத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டது.

- சன்மது