the walking fishவெறும் இருபத்தி ஏழு வயதை மட்டுமே எட்டிய ‘தசா மேஜர்’ என்ற இளம் இயக்குனர் கையில் முழுமை பெற்றதுதான் 'தி வாக்கிங் பிஷ்'.

பத்தொன்பது நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும் படம், பார்ப்பவர்களின் இதயத்தில் ஒருவிதமான மென்சோகத்தை கொட்டிச் செல்கிறது.

2019 -20 ஆண்டுகளுக்கான விருதுகளில் ஏராளமான விருதுகளை தனதாக்கிக் கொண்டிருக்கிறது இந்த குறும் படம்.

நடக்கும் மீன் ஒரு பெண்ணாக மாறி வாழ்க்கையின் ஒவ்வொருக் கட்டத்தையும் கடந்தேறி முடிவில் நீர்நிலைகளைத் தேடிச் செல்வதோடு முடிகிறது இந்தக் குறும் படம்.

கரையில் மீனைக் கண்டவுடன் அந்த மீனை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக இணைத்துக் கொள்வது, இணைந்தவுடன் அதை கவனித்துக் கொள்வது போன்றக் காட்சிகளைக் கட்சிதமாகத் தொகுத்து வடித்திருக்கிறது அந்த குழு.

‘மட்சுமி’ என்ற கதாபாத்திரம் ஒரு மீனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. சிறு வயது மட்சுமியாக வரும் ‘கோமே ஹிவாதாரி’ என்ற அந்த சிறுமி ஒரு கடல்வாழ் உயிரினம், மனிதாக மாறுவதற்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் அழகாக தன் சைகையாலும், முகஜாடையிலும்  வெளிக்கொணர்ந்து அசத்தியிருக்கிறது.

பின்னாளில் வளர்ந்த மட்சுமியாக நடிக்கும் ‘யோய்ட்டோ ஒஸிமா’ தன் கண்கள் மூலமாகப்  படம் முழுவதும் பேசியிருக்கிறாள். ஒரு உணவு விடுதியில் தன் தோழியுடன் உணவருந்தும் போது தனக்கு அருகில் இருந்தவர் மீன்வகை ஒன்றை ருசிக்கும் போது தன் எதிர்ப்பையும்,கோபத்தையும் கண்கள் மூலமாகவே கடத்தி விடுகிறாள்.

மீனுக்கும் மனிதனுக்குமான பரிமாணம் ஊடுருவினாலும், மனிதன் ஆன பிறகு ஏற்படும் காதல் சார்ந்தக் காட்சிகள் அதீதம் காட்டாமல் நம் கண்களில் கவனமாக அமர்ந்து போகிறது.

மட்சுமிக்கு தோழியாக வரும் ‘அயாக டேக்ஸாகி’ தன் நடிப்பில் மிளிர்கிறாள்.

நீச்சல் போட்டியில் ‘மட்சுமியின்’ அபார வெற்றி, மீன் குளத்தின் மேன்மையை திரைக்கதைக்கு பின்னால் உயிரோட்டம் பெறச் செய்கிறது.

எவ்வளவு போராடினாலும், இருப்பிடம் விட்டு அகலுவதால் ஏற்படும் இன்னல்கள் மட்சுமியை முடக்கச் செய்கிறது.

ஒளிப்பதிவு கதையின் சாராம்சம். காட்சிகளை மனதிலிருந்து நீங்கா வண்ணம் நீண்ட நேரம் சோகத்தால் நெருடும் ஓர் அங்கமாக வீற்றிருக்கிறது

ஒரு முழு திரைப்படம் பார்த்தத் தாக்கத்தை ஏற்படுத்திப் போகிறது. கதைக்கேற்ப கதாபாத்திரத்தில் அனைவரும் வாழ்கிறார்கள். ஜப்பானியக் கடற்கரையும், ஜப்பானிய மொழியும் திரை தாண்டி மணக்கிறது.

எத்தனை சூழல் வந்தாலும் ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதில்லை, ஒரு வேற்று கிரக வாசியாகவோ அல்லது ஒரு மிருகமாகவோ வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு கடல் வாழ் உயிரினம் தன்னை ஒரு மனிதனாக்கி வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் கடக்க முற்படுகிறது என்பது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான அபாயக் குரல்.

தண்ணீரில் இருந்து வந்து, வாழ்க்கை உமிழ்ந்த கண்ணீரோடு வந்த இடத்திற்கே செல்கிறது 'தி வாக்கிங் பிஷ்'.

- சன்மது