உனக்குப் பிடித்த வில்லன் யார்?

ஒர் இளைஞனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவர், அவனது பதிலை ரொம்பவும் எதிர்பார்த்தார்.

நம்பியார், அசோகன், சத்யராஜ், ரகுவரன், பிரகாஷ்ராஜ்...

இவர்களில் ஒருவரை அந்த இளைஞன் பதிலாகச் சொல்வான் என எதிர்பார்த்தவர் அதிர்ந்து போனார். என்?

“எனக்குப் பிடிச்ச வில்லன்.... எங்கப்பாதான்'' என்றான் இளைஞன்.

பதின்பருவத்தில் உள்ள மாணவர்களுக்கும் அதனைக் கடந்த இளைஞர்களுக்கும் வில்லனாகத் தெரிபவர் அப்பாதான். கட்டறுத்து ஒடுகின்ற குதிரைவேக மனத்திற்குக் கடிவாளம் போடும் "அதிகாரம்' பெற்றவராக அவர் இருப்பதால், சிறகு கட்ட நினைக்கும் இளைய மனங்களுக்கு அவரே தான் வில்லனாகிறார்.

“எங்கடா போனே?'' - தாமதமாக வீட்டுக்கு வரும் மகனிடம் எல்லா அப்பாக்களும் கேட்கிற கேள்விதான் இது. பள்ளிக்கூட நாட்களிலிருந்தே இந்தக் கேள்வியை அவர் கேட்டுவந்தாலும், கல்லூரிக் காலத்திலோ அதற்குப் பிறகோ அதே கேள்வியை அவர் கேட்கும்போது மகனின் மனமும் முகமும் கொதிக்கிறது. பள்ளி வயதில், எங்கேடா போனே என்ற கேள்விக்கு டியூஷன் வகுப்பு, ஸ்பெஷல் கிளாஸ், வாத்தியார் வீட்டம்மா செய்யச் சொன்ன வேலை எனப் பல காரணங்கள் இருக்கும். தாமதத்திற்குத் தன் தரப்பில் எந்தக் காரணமும் இல்லை என்பதால் அப்போது அப்பா கேட்ட கேள்வி, கோபத்தை உண்டாக்கவில்லை.

இப்போது அதே "எங்கடா போனே?''வுக்கான காரணங்கள் மகன் வசம்தான் இருக்கின்றன. காதலியுடன் கடற்கரையில் உலவிவிட்டு வந்திருக்கலாம். நண்பர்களுடன் சென்று "பீர்' மட்டும் அருந்திவிட்டு வந்திருக்கலாம். டிஸ்கோதெவுக்கு ஜோடியாகப் போய்விட்டு வந்திருக்கலாம். இந்த "கலாம்'களில் ஒன்றை விஞ்ஞானி அப்துல்கலாம் போல அப்பா கண்டுபிடித்துவிட்டாரோ, அதனால் தான் “எங்கடா போனே?'' எனக் கேட்கிறாரோ என்று மகன் நினைப்பதால் உள்மன உறுத்தல்கள் முகத்தின் வழியே சீறல்களாக வெளிப்படுகின்றன.

உண்மையில் பல அப்பாக்கள், தனது மகன் இன்னமும் குழந்தையாகவே இருக்கிறான் என நினைத்துக்கொண்டு, அல்லது தன் மகன் யோக்கியன்-பிறத்தியாரால் பாழ் பட்டுவிடுவான் என நினைத்துக் கொண்டு “எங்கடா போனே?'' என்கிறார்கள் அப்பாவித்தனமாக. அப்படிப்பட்ட அப்பாவி அப்பாக்களில் ஒருவராகத் திரையில் வாழ்ந் திருக்கிறார் "தவமாய்த் தவமிருந்து' ராஜ்கிரன்.

Cheran and Rajkiran

தமிழ்திரையில் நாகைய்யா போன்ற "அழு மூஞ்சி' அப்பாக்கள், மேஜர் சுந்தரராஜன் போன்ற "கறார்' குரல் அப்பாக்கள், எஸ்.வி. ரங்காராவ் போன்ற "கம்பீர' அப்பாக்கள், வி.கே.ராமசாமி போன்ற "லவுடு ஸ்பீக்கர்' அப்பாக் கள் என எத்தனையோ அப்பாக்களைப் பார்த்திருக்கிறோம். இரண்டொரு காட்சிகளில் இருமிச் சாவதற்கென்றே படைக்கப்பட்ட அப்பா பாத்திரங்களும் உண்டு. சிவாஜி, கமல், ரஜினி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களும் அப்பா பாத்திரத்தில் மின்னியிருக்கிறார்கள் என்றாலும் அந்த அப்பாக்களுக்கு டூயட் பாட ஒரு ஜோடியும் அதற்காகவே முன் நிகழ்வுக் (ஃப்ளாஷ்பேக்) காட்சிகளும் அமைக்கப்படும். இந்தத் திரை இலக்கணங்கள் எதற்கும் உட்படாமல் அப்பாவை அப்பாவாகக் காட்டும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது சேரனின் "தவமாய்த் தவமிருந்து.'

இரண்டு பையன்கள். இருவரின் நலன்களுக்காகவே தனது ரத்தத்தை வியர்வையாக்கும் அப்பா. அவர்கள் விரும்பியபடி படிக்க வைப்பதற்காகக் கடன்படுகிறார். இரண்டு பிள்ளைகளுமே படித்து முடித்ததும் அப்பாவை ஏமாற்றுகிறார்கள். ஒருகட்டத்தில், இளையவன் தவற்றை உணர்ந்து பெற்றோரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஆதரவாக இருக்கிறான். அந்த மகிழ்ச்சியிலேயே அம்மாவின் உயிர் பிரிந்துவிடுகிறது. சொந்த ஊருக்குத் திரும்புகிறார் அப்பா. ஒரு நாள் மூத்த மகன் வருகிறான். “தம்பிக்கு எல்லாமே செய்தீங்களே... எனக்கு ஏம்ப்பா குறை வச்சீங்க'' என்று கேட்கிறான். "ஏம்ப்பா குறை வச்சீங்க' என்ற சொல், அப்பாவின் நெஞ்சில் சம்மட்டி அடியாக விழுகிறது. அவரும் வயல்வெளிக்குச் செல்லும்போது தடுமாறி விழுகிறார். மரணத்தைத் தவிர வேறு யாரும் அவருக்குத் துணையாக இருக்க முடியவில்லை. அப்பாவை வில்லனாகப் பார்க்கும் இளந்தலைமுறைக்குத் தவமாய்த் தவமிருந்து அப்பா என்ன தகவலைச் சொல்கிறார்?

நாம் வெளிப்படையாக உணர்ந்தது அம்மாவின் பாசத்தைத்தான். அதிலும் ஆண்பிள்ளைகள் எப்போதுமே அம்மா "கோண்டு'கள். அப்பாவிடம் எதைச் சொல்ல வேண்டுமென்றாலும் அம்மா எனும் அஞ்சல்காரர்தான் அவசியப்படுவார். அப்பாவின் கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றாலும் அம்மாவே கேடயம். அதனால் அப்பாவுக்குள் இருக்கும் பாசத்தைப் பிள்ளைகள் உணர்வதில்லை. பல அப்பாக்களும் ஹிட்லரின் தூரத்துச் சொந்தக்காரர்கள் போல இறுக்கமாக இருப்பார்கள். அல்லது அப்படிக் காட்டிக் கொள்வார்கள். வெளிப் படுத்தத் தெரியாத பாசத்தினால், அப்பாவின் தியாகம் பல நேரங்களில் அறிய முடியாமலேயே போய்விடுகிறது.

அதனால்தான் ஆண் படைப்பாளிகள் பலரும் அம்மாப் பாசத்தை முன் வைத்தே படங்களை எடுத்துத் தள்ளினார்கள். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் தாய்க்குப்பின் தாரம், தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே என எம்.ஜி.அர். தாய்ப்பாசப் படங்களைத் தந்தார். சிவாஜியும் அன்னை, அன்னையின் ஆணை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரஜினியின் மன்னன் படத்தில் வாலி எழுதி இளையராஜா இசையமைத்த அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாட்டுதான் அம்மா சென்ட்டிமெண்ட்டின் தேசியகீதமாக இன்றைய தலைமுறையினரால் கருதப்படுகிறது. இயக்குநர் அமீரும் தனது ராம் படத்தில் அம்மா பற்றிய பாடலை அழகாகப் பதிவு செய்திருந்தார். பிள்ளைகளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் பாடுபடும் தாயுள்ளத்தைத் தமிழ்த் திரைப்படங்களில் நிறைய பார்த்திருக்கிறோம். ஒரு குடும்பத்தில் தந்தையின் பொறுப்பு என்ன, அவர் காட்டும் பாசம் எப்படிப்பட்டது என்பதை முழுமையாகச் சொன்ன படங்களை பார்த்ததில்லை. அதனைச் சொல்ல முயன்று, வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் சேரன்.

தவமாய்த் தவமிருந்து அப்பா ராஜ்கிரன் தனது பிள்ளைகளின் நலனுக்காகத் தன்னையே தியாகம் செய்து கொள்கிறார். தன்னிடமுள்ள பாசத்தை சின்னச்சின்ன விஷயங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பள்ளியிலிருந்து திரும்பும் பிள்ளைகளைத் தனது அச்சகத்தில் உட்கார வைத்து, டீயில் பன்னை நனைத்து ஊட்டிவிட்டு, “இப்படிச் சாப்ட்டுகிட்டிருங்கப்பா. அப்பா வேலைய முடிச்சிட்டு வந்திடுறேன்'' என்பதும், வேலை முடிந்ததும் மகன்களைச் சைக்கிளின் முன்னும் பின்னும் ஏற்றிக் கொண்டு உற்சாகமாக மிதிப்பதும் அப்பா என்பவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டுமல்ல, எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது. தீபாவளி நேரத்தில் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதை ஏக்கத்துடன் பார்க்கும் தன் மகன்களுக்குப் பட்டாசும் புதுசொக்காயும் வாங்குவதற்காக, விடியவிடியச் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு அந்தப்பணத்தில் அவர்களின் கனவுகளை நிறைவேற்றி வைக்கிறார். அவர்கள் அதனை அணிந்துகொண்டு எழுப்பும் போது, அசதியில் கண்விழிக்க முடியாமல் “சரிப்பா... சரிப்பா...'' என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு சராசரி அப்பாவின் தன்மையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறது.

எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பிட்ட காட்சி, கர்பமாகிய காதலியுடன் தன் மகன் ஒடப் போகிறான் என அறியாமல், இன்டர்விவுக்குச் செல்வதாக அவன் சொல்லும் பொய்யை நம்பி அவனை ஆசீர்வதித்துத் திருநீறு பூசி, 500 ரூபாய் கொடுக்குமிடமாகும். உண்மையைச் சொல்ல முடியாமல் மகன் குலுங்கியழ, தன்னைப் பிரிந்து செல்லும் வருத்தத்தில் மகன் அழுகிறானோ என நினைத்து அவனைத் தேற்றும் இடத்தில் ரசிகர்களின் கண்கள் கலங்கிவிடுகின்றன.

மகன் ஏமாற்றிவிட்டான் என்பதைத் தெரிந்து கொண்டு, சென்னையிலிருக்கும் அவன் வீட்டுக்குத் தேடி வந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் அப்பா. வெளியே சென்றிருந்த மகன் வருகிறான். கனத்த மௌனம் நிலவுகிறது. அந்த மௌனத்தைக் கலைக்கிறது அப்பாவின் அளவான வார்த்தைகள். “ஏம்ப்பா இப்படி செஞ்சே?'' - அவ்வளவுதான். இந்த ஒரு கேள்வியில்தான் எத்தனை கேள்விகள் பொதிந்திருக்கின்றன. உன் அண்ணன்தான் எங்களை ஏமாற்றினான், நீயுமா? காதலியைக் கைப்பிடிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கலாமே, எதற்காக இன்டர்வியூ என்று சொன்னே? திருநீறு பூசிப் பணம் கொடுத்தேனே அப்போதாவது உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாதா? இங்கு வந்து கஷ்டப்படும்போது தகவல் அனுப்பியிருக்கக் கூடாதா? குழந்தை பிறந்ததையாவது சொல்லியிருக்கக்கூடாதா? எனப் பல கேள்விகளும் அடர்த்தியாகி “ஏம்ப்பா இப்படி செஞ்சே?'' என வெளிப்படுகிறது அப்பாவிடமிருந்து.

அதேபோல் மூத்த மகன் கேட்கும் ஒரு கேள்வி அப்பாவின் உயிருக்குள் கோடரியைப் பாய்ச்சுகிறது. “எனக்கு ஏம்ப்பா குறை வச்சீங்க?'' என்பதுதான் அந்தக் கேள்வி. நான் பட்ட கடனெல்லாம் உங்களுக்காகத்தானே, வியர்வை மணக்க உடலைத் தேய்த்தது உங்களுக்காகத்தானே, உங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்றுதானே கஷ்டப்பட்டேன். அதற்கெல்லாம் அர்த்தமில்லாதது போலாகி விட்டதே உன் கேள்வி என்று நெஞ்சு விம்மி மரணத்தை நோக்கிய பயணத்திற்குத் தள்ளப்படுகிறார் அப்பா.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அப்பா எப்படி இருப்பார் என்பதை கண்முன்னே நிறுத்திவிட்டார் ராஜ்கிரண். நடுத்தரக் குடும்பத்தில் உள்ள எல்லா அப்பாக்களும் இப்படித்தான் இருக்கிறார்களா? என்று கேள்வி கேட்கலாம். குடித்துவிட்டுத் தள்ளாடி வரும் அப்பா, அம்மாவை அஃறிணையாக நடத்தும் அப்பா, பிள்ளைகள் என்ன படிக்கி றார்கள் என்பதைக் கூடத் தெரிந்துகொள்ளாமல் உதாரித்தனங்களில் கவனம் செலுத்தும் அப்பா என எத்தனையோ அப்பாக்கள் இருக்கிறார்களே என்றுக் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களும் இப்படிப்பட்ட அப்பாவாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது தவமாய்த் தவமிருந்து அப்பா பாத்திரம்.

அப்பாவை வில்லனாகப் பார்க்கும் இளந் தலைமுறையினரிடம், "நம் அப்பாவின் உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமே' என்ற தாக்கத்தை எற்படுத்தியிருக்கிறது இப்படம். (சில இடங்களில் கல்லூரி மாணவர்கள் பறக்கவிடும் விசில் சத்தத்தையும் மீறி)

கட்டபொம்மன் என்றால் சிவாஜி, மதுரைவீரன் என்றால் எம்.ஜி.ஆர். அப்பா என்றால் ராஜ்கிரன் என்பதைத் திரை ரசிகர்கள் மறுக்கமாட்டார்கள். மீனா-சங்கீதா என தன் பேத்தி வயது நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து "பால்ய விவாகக்' குற்றத்திற்கு ஆளாகியிருந்த ராஜ்கிரன், தவமாய்த் தவமிருந்து அப்பா பாத்திரம் வாயிலாக அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டு, விருதுக்குத் தகுதியுடையவராகியிருக்கிறார்.

அப்பா ராஜ்கிரனே படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார் என்றாலும் அம்மா சரண்யா, மூத்த மருமகள் மீனாள் ஆகியோரும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். அச்சகத் தொழிலாளியாக வருபவரும் அசத்தியுள்ளார். நாயகி பத்மபிரியாவின் அப்பா பாத்திரத்தில் வரும் த.மு.எ.ச. கலைஞர் பிரளயன் பேசாமலேயே உருக வைக்கிறார் என்றால், சென்னையில் பிழைப்பு தேடும் சேரனுக்கு வேலை தரும் அச்சக முதலாளி பாத்திரத்தில் தோன்றும் மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், தான் பேசிய ஒன்றிரண்டு வசனங்கள் மூலமே கலகலப்பை எற்படுத்தி கவர்ந்து விடுகிறார்.

தரமான படமாகத் தரவேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல் செயல்பட்டிருக்கும் இயக்குநர் சேரன் பாராட்டுக்குரியவர்தான் எனினும், அவரது படங்கள் சாதாரண மக்களுக்கானவை. அவர்களின் உணர்வுகளை அவர்களுக்கே கொடுத்து வெற்றி பெறுபவை. அப்படிப்பட்டவர், விருதுக்கான நடுவர்கள் மட்டுமே பார்க்கும் படம்போலத் தவமாய்த் தவமிருந்து படத்தை இறுக்கமான காட்சிகளால் நிரப்பியிருப்பது திரை ரசிகர்களுக்கு சில இடங்களில் சலிப்பை ஊட்டுகிறது. சோற்றுக்கு அல்லல்படும் ஏழைக் குடும்பங்களிலும் கலகலப்பான நிகழ்வுகள் நிறைய இருக்கும். அதுபோன்ற கலகலப்புச் சம்பவங்கள் இப்படத்தில் மிகக் குறைவு. அதுபோல் இசையமைப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் நீளமோ 3 மணி 20 நிமிடம். வரலாற்றுப் படங்களுக்கு இவ்வளவு நேரம் தேவைப்படலாம். சமூகப்படத்திற்கு தேவையா? அரை மணி நேர அளவிற்காவது படத்தின் நீளத்தை குறைப்பதற்கான காட்சிகள் இருப்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. இத்தனை நீளம் என்பது ரசிகர்களின் நேரத்தை விரயம் செய்வதாகும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப் பெருமையும் சேரனைச் சென்றடைகிறது. தயாரிப்பாளரும் பாராட்டுக்குரியவர். இதற்கு முன் தானே கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் வணிக ரீதியில் வசூலைக் குவித்திருக்கும் நிலையிலும், தன்னை இரண்டாம் பட்சமாக்கிக்கொண்டு அப்பா பாத்திரத்தையே படம் நெடுகக் காட்டிய சேரனின் துணிச்சலுக்கே ஒரு விருது தரலாம். குத்துப்பாட்டு, குலுக்கல் ஆட்டம், வெளிநாட்டில் படப்பிடிப்பு, கிராஃபிக்ஸ் மாய்மாலங்கள் எதற்கும் ஆட்படாமல் ஆங்கிலத் தலைப்பும் சூட்டாமல் வெளிவந்த ஒரு படத்தை வெற்றிபெறச் செய்திருக்கும் திரை ரசிகர்களை பாராட்டியே ஆகவேண்டும். மக்கள் விருப்பம் என்ற பெயரில் மசாலா அரைக்கும் சால்ஜாப்புக்காரர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் வித்தியாசமான படத்தை விரும்பிப் பார்க்கும் விதத்தில் கொடுத்தால் நிச்சயம் நாங்கள் ஏமாற்ற மாட்டோம் என்பதைச் சேது, பிதாமகன், அழகி, ஆட்டோகிராஃப் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார்கள்.

மலையாள - வங்கமொழித் திரைப்படங்கள் போல தமிழிலும் பரிசோதனை முயற்சிகள் வரவேற்பைப் பெறும் என்பதைத் "தவமாய்த் தவமிருந்து' நிரூபித்திருக்கிறார் சேரன்.

- கோவி. லெனின்