நிசப்தம்.... சத்தமில்லை.... சப்தமில்லை... ச ச ச என உள்ளுக்குள் பதறுகிறது..... மெல்ல நகருகிறது கண்கள்... புத்தகம்... புத்தக பை.. காலணி என ஒரு எட்டு வயது சிறுமியின் சுருதி பாழாய் போன பயம் கொண்டு நெருஞ்சி முள்ளென துளிர்த்துக் கொண்டிருக்கிறது....

அது உறைய வைக்கும் நிமிடங்கள். அப்பா பிசியா இருப்பார் என்று 100 க்கே அந்த பிஞ்சு கைகள் நடுங்கிக் கொண்டே டயல் செய்கிறது. மழைக்கு குடை கேட்ட ஒருவன்... குடை சாய்த்து விட்டு போவதில் பக்கென்று வீட்டுக் குழந்தைகளை மனம் ஒரு முறை எட்டிப் பார்த்துக் கொள்கிறது.

nisaptham

கசக்கிப் போட்ட அந்த பிஞ்சுப் பூவின் அடுத்தடுத்த நாட்கள் அத்தனை கொடுமையானவை. கொடூரமானவை. யாரைக் கண்டாலும் பயம். எதற்கும் கேள்விகள். எல்லாவற்றுக்கும் ஒரு விசும்பல். அப்பாவைக் கண்டு கூட மிரளும் அந்த தருணத்தில் அப்பாவின் வலியை உணர மறுத்து ஓடி சென்று காடு மலை கடல் என ஒளிந்து கொள்ளும் கண்களை எங்கனம் விவரிப்பேன்.

அம்மாவின் சோகமோ பெரும் காடு. தன் குழந்தை கொண்ட அத்தனை மிருகத்தின் தோள்களையும் ஒவ்வொன்றாக களைந்து வந்து சேருவதில் அழுகையும் விரக்தியும்.. இயலாமையும்... தீராமையும் திக்கி திணறி.. திசையற்று போக செய்கிறது. அந்த குடும்பமே நிலை குலைந்து போகிறது. குடித்து விட்டு தான் செய்த எதுவும் எனக்கு நினைவில்லை என்று கூறும் அந்த கொடூரனின் அத்தனை செயல்களுக்கும் அவன் வாழ்வின் வழி நெடுக நிறைய பேர் காரணமாக இருக்கிறார்கள். இந்த சமுதாயத்தின் இருட்டுப் பக்கத்தின் பிரதிநிதி அவன். எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அந்த நேர பசிக்கு எந்த இரையும் அவனுக்கு இறையே.

அந்த குழந்தை அந்த பக்கமும் போக முடியாத இந்த பக்கமும் நிற்க முடியாத இரண்டுக்கும் இடையிலான மனப் போராட்டத்தில் சிக்கி தவித்து.... சிலேட்டை உடைத்து விட்ட நடுங்கும் பிஞ்சு இதயத்தோடு படுத்திருக்கையில் இது என்ன விதமான காம நிலை என்று அந்த கொடூரனின் தேவையை உற்று நோக்க தோன்றுகிறது. அவன் வீட்டு பிள்ளையாக இருந்தால் இந்த காரியம் செய்வானா.. என்று கேட்டுப் பார்க்கையில்.... நிறைய குழந்தைகளுக்கு இந்த மாதிரி மோசமான அனுபவங்கள் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களாலேதான் அதிகமாக நடக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. என்ன மாதிரியான மனநிலை உள்ள மனிதர்கள். மனநோய் முற்றிய சமுதாயத்தில் அவர்கள் நிழல்களை போல பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வடுக்கள் அவள் முகத்தில் மட்டும் இல்லை. முயங்கித் தவிக்கும் அவள் உள் வெளிக்குள்ளும் வடுக்களே. சட்டென தன் உடலே ஓர் அசிங்கத்தின் சாட்சியாக மாறி விட்டதாக அவள் நம்பும் தருணங்கள்.. திரைக்குள் கை நீட்டி அப்படி இல்லை கண்ணம்மா என்று கன்னம் துடைக்க தோன்றும். அதே நேரம் அவனைக் கொன்று விடலாம் என்றும் தோன்றியது.

பொம்மை வேஷம் போட்டுக் கொண்டு அவளின் உலகத்துக்குள் நுழையும் அவளின் அப்பா... வெளியே சிரித்து உள்ளே அழும் காட்சிகள் குலை நடுங்க செய்பவை. யாருக்கு வேண்டுமானாலும் இந்த மாதிரி நடக்கலாம். அப்படி பட்ட பாலியல் வக்கிரம் கொண்ட சமுதாயத்தின் ஒரு பகுதியைத்தான் நாம் முன்னும் பின்னும் வைத்துக் கொண்டு வாழ்கிறோம். பாலியல் கல்வி பற்றிய தேவை இங்குதான் முளைக்கிறது. தனிமனித ஒழுக்கம் பற்றிய சிந்தனை இங்குதான் வலுக்கிறது. நாகரிகம்.....பரிணாம வளர்ச்சி பற்றி நாம் இன்னும் ஆழமாக விவாதிக்க வேண்டிய சூழலை இன்னமும் இந்த இருட்டு சமூகம் தண்டுவடத்தில் கட்டிக் கொண்டு விரைப்போடு திரிகிறது.

நண்பனுக்கு உதவும் நண்பன்.. தோழிக்கு உதவும் நண்பனின் மனைவி.. மனைவியின் தோழி... பெண் போலீஸ் என்று நல்ல உள்ளங்கள் அவர்களை சுற்றி வளையம் போல இருக்கிறார்கள். மனநல ஆலோசகராக வரும் கால் செயலிழந்த பெண்மணி எட்டு வயது வாழ்க்கையை அந்த சிறுமிக்கு மீட்டெடுக்கும் பக்கங்களில்... நாம் சற்று ஆசுவாசப் பட்டுக் கொள்ளலாம். வன்கல்வி செய்ததில் சிறுகுடல் பெருங்குடல் என்று இயற்கை உபாதைகள் கழிப்பதில் பிரச்சினை வந்து அது காலம் முழுக்க அவளுக்கு இருக்கும் என்று மருத்துவர் கூறும் பொழுதில் அந்த பாவியை வெட்டினால் என்ன என்று கொந்தளிக்கும் கோபத்தில்........நம் வீட்டு ஆண் குழந்தைக்கு பெண் குழந்தைகளை மதிக்க.....அன்பாய் பழக..... அரவணைக்க......விட்டுக் கொடுக்க.....சக உயிர் என்று நிஜத்தை வளர்க்க நாம் கடமைப் பட்டுள்ளோம் என்று கற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது.

அது ஒன்று தான் வழி. தவறுகளை வேரோடு அறுக்காமல் எந்த செக்சனாலும் தடை போட முடியாது. ஒரு வக்கீல் உண்மைக்காக வாதாடினால் இன்னொரு வக்கீல் காசுக்காக வாதாடுகிறார். நீதிதேவதை என்ன தான் செய்வாள். அவளுக்கு அவள் ஆடையை காப்பாற்றிக் கொள்ளவே போதுமானதாக இருக்கிறது போதாத காலம் .

திரைக்கதை வசனம் காட்சி அமைப்பு ஒளிப்பதிவு இசை நடிப்பு.. எடிட்டிங் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் கதை இருந்தது. அதில் நிஜம் இருந்தது. நிசப்தத்தின் ஒலியை தாங்கமுடியாத செவிப்பறையின் ரத்தக் கசிவு....உள்ளத்தின் சவ்வுகளை உளி கொண்டு செதுக்குதல் போல உணர்ந்தேன். மருத்துவமனையில் தலையோடு பெட்ஷீட்டை போர்த்திக் கொண்டு அப்பா கேட்கும் கேள்விக்கு உடல் அசைவில் மட்டுமே பதில் சொல்லும் அந்த பிஞ்சுக் குழந்தையின் அந்த ஒரு செயல் போதும்....அந்த காயத்தின் ஆழம் எத்தனை பெரிதென்று. இன்னும் கண்களை விட்டு அகலாத அந்தக் அக்காட்சியை மறுமுறை நினைக்கக் கூட முடியாத நெஞ்சத்தின் கனத்தோடு இந்த நிசப்தத்தின் பேரொலியை......பேரழுகையை இங்கே கொட்டி விட்டு போகிறேன்....

நிசப்தம் - இயக்கம் : மைக்கேல் அருண்

- கவிஜி