கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமத்தின் சலசலக்கும் நீரோடைகளும், தாமரைகள் பூத்த குளங்களும், தென்னையும் - வாழையும் - வயல்வெளியுமாக விரியும் பசுமையும், இளவரசன்களும் - தவ்ஃபீக் சுல்தானாக்களும் வீசப்படாத தண்டவாளங்களும், இவற்றிற்கு நடுவே ஒரு தந்தையும் மகளுமாக, என் சொந்த மண்ணில் பெரும் பகுதி பதிவு செய்யப்பட்ட படம் தங்க மீன்கள்.

thanga_meengal_406

2007 இல் எனது இயக்கத்தில் வெளியான 'கைதியின் கதை' ஆவணப்படத்தில் இறுதியாக ஒரு காட்சி வரும். குற்றமே செய்யாமல் விசாரணைக் கைதியாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் தோழரின் தாய் விம்மி வெடித்து அழும் காட்சி அது. 'விசாரணை விசாரணை என்று இன்னும் விசாரணையா? 8 வருஷம் ஆச்சு. எனக்கும் இருதய நோய். பேத்திக்கு 10 வயசு ஆகப்போகுது. இன்னும் சில மாதங்களில் அது வயசுக்கு வந்து விடும்' என்று கூறி கதறினார் அந்தத் தாய்.

இப்போது 'தங்க மீன்கள்' பார்த்த போது, அந்தத் தாயின் கதறலின் பின்னால் இருக்கும் வலியின் ஆழம் புரிந்தது. படத்தில் மகளாக வரும் செல்லம்மா தன் தாயிடம், தான் எப்போது வயசுக்கு வருவேன் என்று கேட்டவுடன் அந்தத் தாய் பதற்றமடைந்து நிலைகுலைகிறார். வேலை தேடி வெளியூர் சென்றிருக்கும் கணவரிடம் தொலைபேசியில் விசும்புகிறார். ஒரு பெண் பிள்ளையை குழந்தையாக அணுகுவதற்கும், வயதுக்கு வந்த பெரிய மனுஷியாக அணுகுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சொல்லி கலங்குகிறார்.

ஒரு மகளுக்கும் - அவள் தந்தைக்குமான தொடல் ரீதியான உறவு அவள் வயதுக்கு வருவதோடு முடிந்து விடுகிறது. ஒரு குழந்தையை தூக்கி வைத்து மடியில் வைத்துக் கொஞ்சுவதைப் போல, வயதுக்கு வந்த மகளை ஒரு தந்தையால் கொஞ்ச முடியாது. நம் சமூக மரபும் அமைப்பும் அதற்கு இடமளிப்பதில்லை. அப்படியிருக்க 10 ஆண்டுகளுக்கு மேல் விசாரணைக் கைதியாக ஒரு தந்தை சிறையில் வாடிவிட்டு, பின்னர் குற்றமற்றவனாக விடுவிக்கப்படும் போது அவன் திரும்பி வந்து தன் குழந்தையை எப்படி எதிர்கொள்வான்? அவனுக்கும் அவன் பிள்ளைக்குமான தொடல் ரீதியான உறவில் மண்ணை அள்ளிப்போட்ட அந்த அரச பயங்கரவாதத்தை என்ன செய்யப்போகிறோம்?

இந்தியச் சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் பெரும்பாலும், ஒன்று சிறையில் வாடுகிறார்கள்; அல்லது பாலைவனங்களில் வாழ்கிறார்கள். கொடிய வறுமையும், வேலையின்மையும் அவர்களின் வாழ்வையே சூறையாடி விடுகிறது. ஒரு சராசரி மனிதனுக்குக் கிடைக்கும் அற்ப இன்பங்கள் கூட முஸ்லிம் இளைஞனுக்குக் கிடைப்பதில்லை. வேலையில்லாமல் உள்ளூரில் முடங்கியவன் குற்றவாளி ஆக்கப்படுகிறான். ஊர் உலகில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் அவனே சிக்கவைக்கப் படுகிறான். கட்டிய இளம் மனைவியையும், கைக் குழந்தையையும் பிரிந்து பல்லாண்டுகளை சிறையிலேயே இழக்கிறான்.

உள்ளூரில் இருந்து தப்பித்து வேலைதேடி வெளிநாடுகளுக்குச் செல்பவனோ அங்கே ஒரு திறந்த வெளிச் சிறையில் வதை படுகிறான். கல்வியின்மையும், அறியாமையும் அவனைப் பாடாய்ப் படுத்துகிறது. குறைந்த ஊதியம், அதிக உழைப்பு என அவன் நிர்மூலமாக்கப்படுகிறான். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமாத விடுப்பில் தாயகம் வந்து, வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்று விடும் அவல வாழ்க்கை வாழ்கிறான்.

தங்க மீன்கள் படத்தில் உள்ளூரில் வேலையிழந்து வெளியூர் செல்லும் தந்தை கல்யாணி தன் மகளைப் பிரிவதை நினைத்துக் கலங்குவதும், மகளின் படிப்புச் செலவுக்காக பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உழல்வதுமாக காட்சிகள் விரியும் போது என் மனத்திரையில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் வந்து சென்றனர். முஸ்லிம் இளைஞர்கள் என்றில்லை; பல ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சமூக இளைஞர்களின் நிலையும் அதுவாகத்தான் உள்ளது.

தங்க மீன்கள் மிக முக்கியமான ஒரு அரசியலைப் பேசுகிறது. அது தனியார் பள்ளிகள் என்ற பெயரில் நடக்கும் கல்விக் கொள்ளையைப் பற்றியது. அரசின் தவறான கல்விக் கொள்கையும், தனியார் கல்விக் கூடங்களின் வணிக வெறியும், பெற்றோரின் தனியார் பள்ளி மோகமும் ஒரு குழந்தையை எப்படி குதறுகிறது என்பதை மிக அழுத்தமாகச் சொல்கிறது. கல்வி தனியார் மயமாவதன் விளைவாக எளிய மனிதர்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப் படுகிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது.

படத்தில் வரும் குழந்தை செல்லம்மா தன் அப்பாவிடம், டிவி விளம்பரத்தில் வரும் வோடஃபோன் நாய் வாங்கிக் கேட்பதும், விளம்பரத்தில் நடித்த ஒரே காரணத்துக்காக அந்த நாயின் விலை 25,000 ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும், மகள் கேட்டு விட்டாளே என்பதற்காக அந்த நாயை வாங்குவதற்கு அப்பா கல்யாணி நாய் படாத பாடு படுவதுமாக வரும் காட்சிகள் மனதை உலுக்கி எடுக்கின்றன. விளம்பரங்கள் குழந்தைகளை குறிவைக்கும் அரசியலை மிக நுட்பமாக பதிவு செய்த படம் தங்க மீன்கள்.

கல்விக் கட்டணக் கொள்ளையின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவதா? அல்லது ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் மென் உணர்வுகளைப் பட்டியலிடுவதா? என்கிற இயக்குனரின் ஊசலாட்டம் படத்தில் ஆங்காங்கே பளிச்சிட்டாலும், வன்முறை இல்லாத, ஆபாசம் இல்லாத, துளி கூட விரசம் இல்லாத, இரட்டை அர்த்த பாடல் வரிகள் இல்லாத, குத்துப் பாட்டு இல்லாத, டாஸ்மாக் கடையில் சரக்கடிக்கும் சந்தானத்தின் மலிவான காமெடிகள் இல்லாத சமூக அக்கறையுள்ள ஒரு படமாக வெளிவந்துள்ளது தங்க மீன்கள்.

தங்க மீன்களைத் தந்த தோழர் ராம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும், மகளாகவே வாழ்ந்து காட்டிய குழந்தை சாதனாவுக்கும் அன்பும், வாழ்த்தும், நன்றியும்!

- ஆளூர் ஷாநவாஸ்