இந்திய நாடு சுதந்திரமடைந்து 63 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்திய நாட்டில் வேலையின்மை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய பிரதமராக நரசிம்மராவ் பொறுப்பேற்ற பிறகு வேலையின்மை என்பது மேலும் பெருகிவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையே அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசும் கடைபிடித்தது. 2000இல் வாஜ்பாய் தலைமையில் அன்று இருந்த பி.ஜே.பி அரசு பொருளாதார நெருக்கடிக்கு காரணம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியமாற்றம் செய்ததுதான் என்றும். ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் அறிவித்தது. அரசுஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்க முடியும் என மத்திய அரசு மாநிலங்களை நிர்பந்தித்தது

ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் பின்னணி

முன்னதாக மத்திய அரசு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமயில் அமைத்த 5வது ஊதியக்குழு 30 விழுக்காடு பணியிடங்களை குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு அமைத்த டாக்டர் கீதா கிருஷ்ணன் 5000 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அளித்திருந்தார். அதில் அரசுத் துறைகளை தனியார் மயப்படுத்துவதே பிரதான பரிந்துரையாக இருந்தது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் எதாவது ஒரு வடிவத்தில் தனியார் நுழைய அது வழி வகுத்தது. அதே போல் ராகேஷ் மோகன் கமிட்டி அறிக்கையும் அரசுத்துறைகளை தனியார் மயமாக்க பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையிலேயே இரயில்வேயில் பிளாட்பாரங்களை பராமரிக்கவும் உணவு தயாரித்து வழங்கும் பணியையும் பயணச்சீட்டு வழங்கும் பணியையும் படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கப்ட்டுள்ளது தபால் தந்தி துறைகளில் ஒரு பகுதி தனியார் கைவசம் மாறி இன்று அந்த துறையில் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. தொலைபேசி துறை இன்று முழுவதும் தனியார் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். பி.எஸ்.என்.எல் ஆட்சியாளர்களின் ஊழல் நடவடிக்கைகளால் தினறிக்கொண்டுள்ளது.

தொலைபேசி இணைப்பகங்கள் மூடப்பட்டு நவீன தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்படும்போதும் அரசுத்துறையாக இருந்த தொலைபேசித் துறையை பொதுத்துறையாக மாற்றி தனியாரிடம் மோதவிட்டது என்பது மத்திய அரசின் குள்ளநரித் தந்திரங்களில் ஒன்று. இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையை கைப்பற்ற ஏகாதிபத்திய சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டிருக்கின்றன. நீண்டகாலம் அரசின் பொறுப்பில் இருந்த இரயில்வே துறை மற்றும் தபால் தந்தி துறைகளை மக்களின் வரிப்பணம் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கியவுடன் இன்று தனியார் கைக்கு கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறது.

தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்

மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது

தமிழக அரசு 2001 இறுதியில் நேரடி பணி நியமனங்களுக்கு தடை விதித்து பணி நியமன தடை ஆணையை (ஆணை 212) தமிழக அரசு பிறப்பித்தது. இந்த தடை ஆணை 5 ஆண்டுகாலம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ஸ்டாப் கமிட்டி ஒவ்வொரு துறையிலும் குறைக்கப்பட வேண்டிய பணியிடங்களை முடிவு செய்தது. அண்ணா திமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட பணி நியமன தடை ஆணை அண்ணா திமுக ஆட்சிக் காலத்திலேயே அகற்றப்பட்டாலும் (ஆணை 14) பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள் விதித்தது. (ஆணை 91)

இந்த நான்கு ஆண்டுகாலத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை. வேளாண்மைத்துறை. வணிகவரித்துறை வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில் ஆயிரக் கணக்கான பணியிடங்கள் நிர்ப்பப்படாமல் தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள ஸ்டாப் கமிட்டியால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இப் பணியிடங்கள் காலப்போக்கில் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பன்னெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பகுதியினருக்கு வேலைவாய்ப்பு மூலம் அனுமதிக்கப்பட்டு வந்த சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக அரசுத் துறைகளில் முறையான பணி நியமனங்கள் நடைபெறாத காரணத்தினால் இன்று நிர்வாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய மீண்டும் சட்ட மீறல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு வடிவமே ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் அரசுப்பணியில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்ய அரசு ஆணையிட்டிருப்பது ஆகும். (ஆணை 170)

இலவச திட்டங்கள்

மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றுவதற்காக அரசு அறிவித்து வரும் திட்டங்களை நிறைவேற்றிட போதுமான ஊழியர்களை நியமனம் செய்வது கிடையாது. தற்போது பிரபல்யமாகியிருக்கும் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட துறைகளில் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மாறாக ஏற்கெனவே நடைபெற்று வரும் வேலைகள் நிறுத்தப்பட்டு இந்தப் பணிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு நிர்பந்தித்து வருகிறது. இதே போல் கடந்த காலங்களில் இலவச கலர் டி.வி. இலவச கியாஸ் அடுப்பு என அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களுக்கு இதே கதிதான்.

அது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிவாரணத்தொகை வழங்கவும் போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.            

தமிழக அரசில் உள்ள காலிப்பணியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இன்று லட்சக் கணக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வரும் வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடம் மட்டும் சுமார் 4000 இடங்கள் காலியாகவுள்ளன. இதே துறையில் 2000 உதவியாளர் பணியிடங்கள் ஆண்டு கணக்கில் காலியாக உள்ளன. ஊரகவளர்ச்சித்துறையில் 2000 உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. சுகாதாரத்தறையில் 10000க்கும் மேற்பட்ட சுகாதரா ஆய்வாளர் மற்றும் சுகாதரா செவிலியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று இலட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலாவதியாகிவிட்டன. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேரரிசிரியர் பணியிடங்கள் வரை பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தமிழக முதல்வர் அவர்களும் துணை முதல்வர் அவர்களும் அடிக்கடி 4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரி வித்துவருகின்றனர். இது குறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் 302517 ஊழியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னரே பணியில் அமர்த்தப்பட்டவர்கள். இவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து கொடுத்து இப்பொழுது பணியில் அமர்த்தியிருப்பதைப்போல் அரசு கணக்கு காட்டி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.

வேலை வாய்ப்பகங்கள்

தமிழக அரசு கண்துடைப்பிற்காகவே வேலைவாய்ப்பகங்களை வைத்துள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டும் முடிந்த பிறகு வேலைவாய்ப்பகங்களில் இலட்சக் கணக்கான மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்ய வேலை வாய்ப்பகங்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால் அரசோ அவர்கள் பெயர்களை பதிவு செய்வதற்குக் கூட போதுமான பணியாளர்களை நியமனம் செய்வதில்லை. எனவே பதிவு செய்ய வருகின்றவர்களுக்கும் அரசுஊழியர்களுக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்படுகின்றன. கையலாகத அரசு இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 1980இல் 1115 பணியாளர் பணியாற்றிக்கொண்டிருந்த வேலை வாய்ப்புத்துறையில் இன்று 573 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 1980இல் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்திருந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் 2010இல் 70 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பை உருவாக்காத அரசு வேலைவாய்ப்பகங்கள் தேவையில்லை என கருதுகிறது போலும்!

உலகம் முழுவதும் இன்று வேலையின்மை என்பது பூதாகரமான பிரச்சனையாக உருவாகி வருகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் நெருக்கடியை உண்டாக்கிவிட்டது. அமெரிக்காவில் வேலையின்மை பெருகி அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க அதிபர் ஓபாமா அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவே தனது சமீப கால வெளிநாட்டு பயணங்களை துவக்கியுள்ளார். சமீபத்தில் இந்தியவிற்கு வந்ததும் அதன் ஒரு பகுதியே!

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

செப்டம்பர் 2010இல் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இன்றைய வேலையின்மை மற்றும் வறுமை குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வேலைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய வைக்கப்பட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் இந்த ஆண்டில் (2010) மட்டும் 210 மில்லியன் தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர் என்றும் இது வரலாற்றில் முன் எப்பொழுதும் கண்டிராத நிலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையின்மை என்பது 34 மில்லியன் உயர்ந்துள்ளது எனவும் உலகில் 80 சதவிகித மக்கள் எவ்வித சமூக நலத்திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை என்றும் கிட்டத்தட்ட 12 பில்லியன் மக்கள் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெற்று வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி

மனிதனின் வாங்கும் திறனை உயர்த்த முடியாத எந்த வளர்ச்சியினாலும பயனில்லை..நவீன தொழில் நுட்பங்களின் காரணமாக அபரித உற்பத்தி பெருகினாலும் அது சென்றடைய வேண்டிய பகுதிக்கு சென்றடையவில்லை. முதலாளித்துவம் தனது மரணக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் என்பதற்கேற்ப அபரித வளர்ச்சி ஏற்பட்டும் சீரான விநியோகம் இல்லாத காரணத்தினால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பொதுமக்கள் பங்கேற்காத எந்த திட்டமும் பலனளிக்காது. பொதுவுடைமை சமூகம் மட்டுமே உற்பத்தி பொருளை அனைவருக்கும் சீராக விநியோகிக்கும் எனவே எத்தகைய அபரித வளர்ச்சி ஏற்பட்டாலும் அது மனித குலத்திற்கு சென்றடையும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வயிற்றுடன் மட்டுமல்ல இரு கை இரு கால்களுடனும் பிறந்துள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்கி தந்தால் உழைப்பதற்கு தயாராக உள்ள மக்களை இலவச திட்டங்கள் மூலம் கையேந்தி நிற்க வைத்து வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டு நின்று போராட முன்வரவேண்டும்.

(கட்டுரையாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்)

Pin It