chitra"சின்ன தங்கம் எந்தன் செல்லத்தங்கம்......ஏன் கண்ணு கலக்குது....."

"சேரன் பாண்டியன்" படத்தில் அந்த தங்கை பாத்திரம் காலத்துக்கும் உயிரோட்டம். மெல்லிய அழகு. துடைத்து வைத்த புன்னகை. துலங்கும் சிரிப்பு. பெரிய நடிகையாக தமிழில் வரா விட்டாலும்.... பெண் வானம் பூத்து குலுங்கும் பளீர் முகம். ஏழாவது படிக்கையில் "சுவாமி" தியேட்டரில் இரண்டாம் காட்சி பார்த்த படம் இது. அந்த வாரத்திலேயே அடுத்தடுத்து இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.

எப்போதும் சித்ரா அவர்கள் மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. "புத்தம் புது பயணம்" படத்தில்... கண்ணை சிமிட்டி சிமிட்டி கருணை மீட்டும் நர்ஸ் பாத்திரத்தில்... வெண்ணிறம் பூக்க கொஞ்சம் குண்டு தேவதை மருத்துவமனை வந்திருப்பாள். ஒரு வெயில் கால சனிக்கிழமை மேட்னி தனியாக நடந்தே சென்று "செல்லகுமா"ரில்..... பார்த்த படம்.

"எதிர்காற்று" படத்தில்.... நிழல் உலகில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நடுத்தர இயலாமையை உடல் வழியே ஈடுகட்டும் பாத்திரத்தில் அச்சமூட்டி இருப்பார். எப்போது வேண்டுமானாலும் அழுது விடும் உதடு. மென் சோகம் மிதக்கும் பார்வை. பதின்பருவத்தில்... திரையில் இவரைக் கண்டாலே... இன்னதென தெளியாத புன் சிரிப்பு கொண்டிருக்கிறேன். பெரிதாக எங்கும் இவர் பற்றி எந்த செய்தியும் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். இன்று வந்த மரண செய்தி.... மனதுக்குள் காலம் தொலைத்த ஒரு கொலு பொம்மையை தேடி எடுத்து வாசிக்கிறது. துக்கத்துக்கு துழாவும் மனதில் தூர் வாரியும் தூரங்கள் குறைவதில்லை.

மலையாளத்தில் சினிமாவை ஆரம்பித்தாலும்... தமிழ் சொன்ன சில கதைகளால்........சினிமா சித்திரம் தான் சித்ரா.

பூவே உனக்காக "சங்கீதா"வின் முந்தைய வெர்சன் தான் சித்ரா என்று தோன்றும். ஊர்காவலன் விதவையை மறக்க இயலுமா.

"ஊருக்குள்ள உன்னையும் பத்தி என்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க.... நிஜமா...... அது பொய்யா..... அதை நீ தான் சொல்ல வேனும் ராசா...."- முரளியோடு வாய் சிவந்த வெற்றிலை வாய்க்காரியாய்....... பூக்காரியாய் "நினைவு சின்னம்" படத்தில்... கிராமத்து பூச்செண்டு தான் சித்ரா.

"என் தங்கச்சி வந்துட்டா பஸ் மேல ஏறி...
இந்த அண்ணன் தான் பாடறேன் ராகங்களை பாடி....
நல்ல காலம் பொறந்திடுச்சு....
என்னோட கஷ்டமெல்லாம் பறந்துடுச்சு..." என்று அண்ணன் பிரபு ஆடி பாடுவதெல்லாம் இந்த தங்கை சித்ராவின் வருகைக்காக தான். "என் தங்கச்சி படிச்சவ" படம் எப்போதோ பார்த்தது. இப்போது உள்ளே கண்கள் வேர்க்கிறது. நூறு படங்களுக்கு மேல் நடித்தவர். நூதனம் புன்னகையில் வடித்தவர்.

மரணம் இயல்பு தான். மரணம் பொது தான். ஆனாலும் தூரத்து நட்சத்திரங்கள் சடாரென எரிந்து வீழ்வது ஸ்தம்பித்தல் தானே...வேடிக்கை காரனுக்கு. நினைவுகளை போல நிர்கதி வேறொன்று ஏது. சினிமாவின் திரை நுழைந்து ஆச்சரியங்களை மட்டுமே அசை போட்ட சிறுவனுக்கு தேவதைகளின் மரணம் திக்கி திணறும் வர்ணனை தானே.

- கவிஜி