anant rajகீழ் கன்னம் வரை கிருதா... கண்களில் நயவஞ்சக வெறி... கொஞ்சம் வளைந்த நாசியில்... பெருங்கோப பலி வாங்கல். கேப்டனின் தலையில் பலமாக தாக்கி விட்டு கழுத்தில் வெட்டுப்பட்டு சாகும் அந்த பாத்திரம் தான் 'செந்தூரப் பூவே' படத்தின் அடித்தளம்.

சூப்பர் ஸ்டாரை வேறு யார் அடித்திருந்தாலும் ரசிகர்கள் கொந்தளித்திருப்பார்கள். வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீர செந்நிற தேகத்தோடு இவர் அடிக்க சினிமா உலகம் ஒப்புக் கொண்டது. பாஷாவின் திருப்பு முனை இவரிடம் இருந்து தான்.

90 களில் நானெல்லாம் இவரைக் கண்டு மிரண்டு.. அதுவரை கொடுத்துக் கொண்டிருந்த ரன்னிங் கமெண்ட்ரியைப் படக்கென்று நிறுத்தி எச்சில் விழுங்காமல் பார்த்திருக்கிறேன்... கொலகார பாவி என்னத்த செய்ய போறானோன்னு. வில்லன்னா வில்லன்... அப்படி ஒரு வில்லன். தலை மொட்டை அடிச்சு.. மீசை முறுக்கி... மீசையை எடுத்து... கிருதா நீளமா வெச்சு... தாடி வெச்சு... எந்த தோற்றத்திலும்... கடைசிவரை கதைநாயகனுக்கு இம்சை தான்.

ஏதோ வட நாட்டுக்காரர் போல உடல் அமைப்பும்... முக அமைப்பும் சாதாரண சிரிப்பில் கூட வஞ்சம் நிறைந்த பாவனை இயல்பாகவே இருப்பது அவர் வில்லத்தனத்துக்கு பக்க பலமாக அமைந்து விட்டது. பேசிக்கொண்டே காதை நோண்டி நோண்டி அவ்வப்போது ரத்தம் பார்த்துக் கொள்ளும் மேனரிஸமாகட்டும்.

"நான் தொடமாட்டேன்... தொட்டா விட மாட்டேன்" 'புலன் விசாரணை' தர்மாவாகட்டும். "மாநகர காவல் " மொட்டைத்தலை கொலைகாரனாகட்டும். எத்தனை கதாபாத்திரங்கள்… எத்தனை விதமான மிரட்டல்கள். பெண்களை வெகு இயல்பாக தூக்கிக் கொண்டு வைத்து வன்புணர்வு செய்யும் காட்சிகளிலெல்லாம் லட்டு தின்பது போல போகிற போக்கில் அப்படிங்கற மாதிரி செய்து விடுவார்.

கொலைகாரன்... கொள்ளைக்காரன்... ஈவு இரக்கமற்ற கொடுங்கோல் மனிதன்... நம்பிக்கை துரோகி... அடியாள்... தலைவன்... அரசியல்வாதி... போலீஸ் பாத்திரம்.... திருடன்... என்று வாயைக் கோணித்தபடி நக்கல் அடித்துக் கொண்டே ஆனந்தராஜ் செய்ததெல்லாம் பெரியவர் 'நம்பியா'ரையும் மிஞ்சிய செயல்கள்.

90 களில் கிட்டத்தட்ட எல்லா கதாநாயகர்களையும் எதிர்த்து நின்ற வில்லன். வில்லனாக எதிர்புறம் நிற்கையில்... கதாநாயகர்களுக்கு நிறைய வேலை இருக்கும். பிறகு தப்பித்தவறி கதாநாயகர்களுக்கு நண்பனாக வரும் பாத்திரங்களில் கூட நாம் நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். இடையில் ஹீரோவாகவும் சில படங்களில் வந்தார். அவர் திறமைக்கு ஹீரோவாக வேலையே இல்லை. அவர் வில்லன் தான். அதில் தான் அவரால் வெரைட்டி காட்ட முடிந்தது.

ஆக... மீண்டும் வில்லன். வித்யாசமான வில்லன். நக்கல் நையாண்டி.... கிண்டல் கேலி... போகிற போக்கில் வசனம் பேசும் லாவகம்.. சிரித்துக் கொண்டே வெச்சு செய்யும்… துரோகம் என்று ஆனந்தராஜ் வில்லன் வகையாறாக்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை. கொடுமை செய்து... கொலை செய்வது... கொஞ்சிக் கொண்டே ரேப் செய்வது என்று இவரைக் கண்டாலே திரையில் பெண்கள் பயந்து நடுங்கினார்கள். ஃபிரேமில் வந்து நின்றாலே... 'சரி.. இனி கதை சூடு பிடிக்க போகுது' என்று அர்த்தம்.

'சில்க்'கோடு ஆடிய "பதினாறு வயசைத் தொட்டு மலராத சின்ன மொட்டு... மாமா..." பாடல் எல்லாம் இன்றும் பிரெஷ் தான். உடலை எப்போதும் பேணிக் காக்கும் நடிகன். "காவல் நிலையம்" படத்தில் "மா... மன் வேட்டி... ஜரிகை வேட்டி... தான்" பாடல் வில்லனில் இருந்து கொஞ்சம் நல்ல ஷாட்டுக்கு வந்த காலத்தில் கிடைத்த வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டார். நிதானமான ஆட்டம். படத்திலும்... கேரியரிலும். இடையே அரசியல் சறுக்கல் தனிக்கதை.

காலம் ஓடுகிறது. வாழ்க்கை மாறுகிறது. வாழ்க்கை முறை மாறுகிறது. சினிமாவின் போக்கு மாறுகிறது. திடும்மென்று இன்னொரு அவதாரத்தில் வந்து நிற்கிறார். என்னடா நடக்குது என்று கண்கள் விரிய கன்னம் விரிந்த புன்னகையில் காண.. மனுஷன் காமெடியில் பின்னி பெடலெடுக்க ஆரம்பித்தார். காமெடி கலந்த வில்லத்தனம்... சுய பகடியில் நேராக காமெடி... என்று வெரைட்டி காட்ட ஆரம்பித்தார். உள்ளிருக்கும் கலைஞன் ஒருபோதும் தன்னை திருப்திபடுத்திக் கொள்வதிலை. தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறான். இவரும் தனக்குள் இருக்கும் நடிகனை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறார்.

"உன் கண் கட்டை அவுக்கும் போது நான் உனக்கு வணக்கம் போட்டேன். ஆனா பதிலுக்கு நீ போடல..." என்று பேசிக் கொண்டே வில்லத்தனம் செய்யும் "மரகத நாணயம் " "டிவிங்கில் ராமனாதன்" நவீன ஆனந்தராஜ் வெர்சன்.

"நானும் ரவுடிதான்" நயன்தாரா - விஜய் சேதுபதி – பத்துலட்சம் - ட்ராமா சீன் நடந்து முடிக்கையில்.. நயன்தாரா கிளம்பு போது நின்று ஆனந்தராஜை முறைக்க.. டக்கென்று கையெடுத்துக் கும்பிட்டு... "போதும்மா... போதும்... கிளம்பு..." என்று ஒரு ரி- ஆக்சன் கொடுப்பார். சிரிச்சே சாகனும். முன்பெல்லாம் முறைத்தே சாகடித்த கலைஞன்... இப்போது சிரிச்சே சாகடிக்கிறார்.

நல்ல விதை எந்த மண்ணிலும் தன்னை உருப்படுத்திக் கொள்ளும். ஆனந்தராஜ் நல்ல விதை. கம்பீர தோற்றத்தில்.. இன்னமும் உடலை கட்டுக்குள் வைத்துக் கொண்டு தனக்கான இமேஜை தக்க வைத்துக் கொள்ளும் அழகன். காலத்துக்குத் தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் இந்த கலைஞனுக்கு சினிமாவில் ரிட்டையர்மென்ட் என்று ஒன்று இல்லவே இல்லை.

இந்த பழைய வில்லன்... தோற்றம் கரடு முரடாக இருந்தாலும்.. பல நேர்காணல்களில் அத்தனை மேன்மையான மானுடம் பேசுகிறார். நகைச்சுவை பளிச்சிடுகிறது. வாழ்வின் தரிசனம் கிடைக்கப்பட்டவராகவே இருக்கிறார். சக புரிதல் சாத்வீகமாக வாய்த்திருக்கிறது.

சினிமாவில் தான் அத்தனை கொடூரம். நிஜத்தில்... பால் போல புன்னகை. நிதானமான பதில்கள். சமூகம் சார்ந்த சிந்தனை என்று ஆனந்தராஜ் என்ற நடிகன் பொறுப்புள்ள சக மனிதன்.

"அடங்கொப்பன் தாமரபரணில தலை முழுக.." 'ஏழுமலை' படத்தில் இவர் சொல்லும் போதே எனெர்ஜி கொப்பளிக்கும். அதுவும் அவர் உடல் மொழியில்... குலுங்கி சிரிக்கத்தான் வேண்டும்.

- கவிஜி