‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று சொல்லி மாபெரும் தேசத்தின் சுதந்திரப் போரே அமைதியான வழியில் அன்று ஒரு முடிவுக்கு வந்தது அந்த அஹிம்சாவாதியின் திருமுயற்சியால். ஆனால் இன்று அதே தேசத்திலே, கத்தியின்றி இரத்தமின்றி சினிமா படம் வெளிவருவதில்லை. நீரோட்டம் இன்றிக் காய்ந்துபோய் கிடக்கும் காவிரி ஆற்றின் அவல நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம், சில வருடங்களாகியும், இன்றுவரை வெளியானதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் 'இரத்த ஆறு' ஓடும் எத்தனையோ படங்கள் வெளிவந்து, வெற்றிபெற்று, நிறைய மகசூலும் கண்டுவிட்டன.

Fightதற்போது வெளிவரும் பெரும்பான்மையான தமிழ்த் திரைப்படங்களில் 'அரிவாள்' தான் அதிகாரப்பூர்வமற்ற கதாநாயகன். படம் ஆரம்பிக்கும்போதே, கொலைக்காரக் கும்பல் ஒன்று அரிவாளோடு யாரையோ இராத்திரி இருட்டில் துரத்துவது போலவும், இடையிடையே பன்றிக்கூட்டங்கள் பயந்து ஒதுங்குவது போலவும் காட்டி நம்மை மிரட்சியடையச் செய்து, ஓடிக்கொண்டிருக்கும் உதிரத்தை ஒரு நொடியிலேயே உறையச் செய்து விடுகிறார்கள். மனிதனைக் கத்தியால் குத்துவதை அப்படியே ஒளிவு மறைவின்றி பச்சை பச்சையாகக் காட்டுகிறார்கள். காட்சிக்குச் காட்சி பச்சை இரத்தம் பரிமாறுகிறார்கள்.

கிராமத்துப் பொட்டல் காட்டுப் புழுதிக் காற்று மட்டுமே படிந்திருக்கும் 'வெள்ளை மனம்' கொண்ட அந்தக் கிராமத்தவர்களை, ஏதோ நித்தம் நித்தம் இரத்தத்திலே ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கும் காட்சிகள் நியாயமா? ஹீரோவும், ஹீரோயினும் தங்களின் பால்ய வயதிலேயே ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதைக் காட்டுவதற்காக, கடலை பிடுங்கி சாப்பிடுவது, நொங்கு வண்டி ஓட்டுவது, பம்பரம் விடுவது போன்ற என்றுமே நெஞ்சில் இனிக்கும் காட்சிகளைக் காட்டி சிறியவர் பெரியவர் என எல்லோரையும் கவர்ந்து இழுத்து அமரவைத்து, தடாலடியாக கத்திக்குத்து காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். எண்ணற்ற படங்களில் அதன் உக்கிரக் காட்சிகளில் எல்லாம் வக்கிரம் தொனிக்கிறது.

கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மல்லாந்து கிடக்கும் கதாநாயகியை, 4 பேர் மாறி மாறிக் கற்பழிக்கும் காட்சியை (படம்: பருத்தி வீரன்) முழுவதுமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, எப்படித்தான் நாமெல்லாம் அதைக் கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ? 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்ற அளவில் மறைவான சூழ்நிலையில் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு அரிதான நிகழ்ச்சியை, இப்படி நம் கண்ணெதிரே போட்டுக் காட்டுகிறார்களே, இது வன்முறைக்குத் துணை போவதாகாதா?

ஒரு படத்தைவிட மறு படத்தில் அதிகமான வன்முறை இருக்க வேண்டும் என்று இயக்குநர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு விதியை வகுத்துக்கொண்டு செயல்படுவதுபோல் தெரிகிறது. 'ரொம்ப நல்ல படம்' என்று விமர்சிக்கப்பட்ட 'வெயில்' படமும் இந்த வன்முறையின் வக்கிரத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொள்ளவில்லை. இப்படி எத்தனையோ சமீபத்திய படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்; பதிவு செய்ய இடம்தான் போதாது!

நாட்டில் உண்மையிலேயே நடந்த சில கொலை நிகழ்ச்சிகளை, நிழற்படங்களாக ஒரு சில தமிழ் நாளிதழ்கள் வெளியிட்டன என்பதற்காக எத்தனையோ கண்டனக்குரல்கள் எழுந்தன; எதிர்ப்புக் கட்டுரைகள் எழுதப்பட்டன. அதை ஏற்று, தற்போது அந்த நாளிதழ்கள் அப்படிப்பட்ட படங்களைப் பிரசுரிப்பதில்லை. பாராட்டுக்கள். ஆனால், மக்களை வெகு எளிதில் சென்றடையும் வகையில் சினிமாவில் 'ஒலி-ஒளி' வடிவில் காட்டப்படும் இந்த வன்முறைக்காட்சிகளைக் கண்டித்து பெரிய அளவில் கண்டனங்கள் வந்ததாக நான் அறியவில்லை.

சினிமா விமர்சனம் எழுதுபவர்களும் கூட, நல்லக் காட்சிகளைப் பற்றி மட்டுமே எழுதிவிட்டு, குறைகளை நாசுக்காகக் கூட சுட்டிக் காட்டாமல் ஊளக்கும்பிடு போடுவதன் உள்நோக்கம் தான் என்னவோ? வன்முறையாளனாக, கொலைக்காரனாக நடித்த ஹீரோ, 'அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறார்' என்று பஜனை பாடி பல்லக்குத் தூக்குகிறார்கள் பலர். 'நீங்கள் நல்ல விசயத்தை மட்டுமே பாருங்கள்; கெட்டதைப் பார்க்காதீர்கள்' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் நல்லவனாக வாழ்ந்த ஒருவன், ஒரே ஒரு கொலை செய்துவிட்டான் என்பதற்காக அவனை நீதியின் முன் நிறுத்தாமல் விட்டுவிடுகிறோமா? இல்லையே.

சிலர் தங்களின் படங்களில் ஒட்டு மொத்த பெண்ணினத்தையே 'திமிர்' பிடித்தவர்களாக திரும்பத் திரும்பக் காட்டுவது பெண்களை இழிவுபடுத்துவதேயன்றி வேறென்ன? வெறும் ஆயிரக்கணக்கானவர்களை மட்டுமே சென்றடையும் பொது நிகழ்ச்சியில் பேசும்போது வாய்தவறி பெண்ணை 'அவள்' என்று சொல்லிவிட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்; பொது மன்னிப்பு கோருகிறார்கள். நியாயம் தான். ஆனால், பல கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் சினிமாவில் 'தேவடியா' என்று சொல்வதை யாரும் கண்டுகொள்வதில்லையே ஏன்? அல்லது கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற இந்த நிலைக்கு முடிவுகட்ட, பெண்ணியப் பற்றாளர்கள் இனிமேலாவது முன்வருவார்களா? லஞ்சத்தை ஒழிக்க சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதைப்போல, தரங்கெட்ட சினிமாக் காட்சிகளை எதிர்க்க ஓர் அமைப்பை உருவாக்க ஆவணம் செய்வார்களா? ஏனெனில் பெண்ணைக் கேவலப்படுத்துவதும் வன்முறைக்குச் சமமானதே!

10 ரூபாய், 50 ரூபாய் லஞ்சம் வாங்கியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்க, பலகோடி ஊழல் செய்தவர்கள் நாடாள்வதும், பெரிய மனிதர்களாக உலாவருவதும் நாம் அறிந்ததுதான். அதாவது, செய்யும் தவறையே பெரிதாகச் செய்துவிட்டால் அந்தத் தவறு, தவறு அல்ல என்று ஆகிவிடுகிறது. அதுபோல, வன்முறையைத் தூண்டும் விதமாகப் 'பேசி'னாலே ஒருவன் சிறையில் அடைக்கப்படும்போது, ஜாதி மோதலைத் தூண்டும் வசனங்களையும், வன்முறைக் காட்சிகளையும் மூலதனமாக்கிப் படமெடுத்து, படைப்பாளிகள் தங்களின் பாக்கெட்டை பணத்தால் நிறைத்துக் கொள்கிறார்களே, இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமில்லையா? குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தப்பட வேண்டியதல்லவா? இந்த வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும் பிஞ்சு நெஞ்சங்களின் மனமெல்லாம் கல்லாகிப் போய்விடாதா? நாமும் அப்படிச் செய்யவேண்டும் என்று அந்த இளம்பிஞ்சுகளைத் தூண்டிவிடாதா?

தலையில் சரியாக முடி இல்லாதவர்கள் கூட, அழகான ஆறடிக் கூந்தல் இருப்பதுபோல் சிகை அலங்காரம் செய்துகொண்டு வந்து தன் ரசிகனை ஏமாற்றி, அவனுடைய குடிசையில் அடுப்பெரிய உதவும் அந்த அஞ்சு பத்து ரூபாயையும் பறித்துக்கொண்டு, ஈவு இரக்கமின்றி தன் ரசிகனின் குடும்பத்தையே குழியில் தள்ளுகிறார்களே, இந்தப் பித்தலாட்டத்தை எல்லாம் நாம் எப்போது உணரப்போகிறோம்? "அத்தனை பேரும் வெள்ள வெளேர் என்று மின்னுவார்கள்" என்று எம்மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் கூட எத்தனையோ கருப்பு நிறத்தவர்கள் நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் கருப்பு நிறத்தவர்களையே உள்ளடக்கிய எம் பாரத தேசத்தில் எடுக்கப்படும் படங்களில் உள்ள எதார்த்தம் யாவரும் அறிந்ததே.

இலவசமாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள், தமது அணி தோற்றுவிட்டதால் அந்த கிரிக்கெட் வீரர் கட்டிய வீட்டைத் தாக்கினார்கள். தவறுதான். ஆனால் காசு கொடுத்து போய் பார்த்த சினிமா, கண்றாவியாக இருந்தும் அதன் படைப்பாளிகள் மற்றும் நடிகர், நடிகைகள் மீது சிறிது கோபம்கூட வருவதில்லையே, அது ஏனோ? 'சினிமா இந்த நாட்டைப் பிடித்த நோய்; சினிமாக்காரர்கள் எல்லாம் கூத்தாடிகள்; நாடு உருப்படவேண்டுமானால், சினிமா ஒழிக்கப்படவேண்டும்' என்று உரத்த குரல் கொடுத்தானே, அந்த பெரியார் ஈ.வெ.ரா.-க்கள் மீண்டும் பிறந்து வரவேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற சமுதாயச் சீரழிவுக் காட்சிகளை சினிமாவில் காட்டக்கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மருத்துவர் ராமதாசு அவர்கள் பாராட்டுக்குரியவரே.

சினிமா ஒரு பொழுதுபோக்காம். அடுத்தவனை 'போட்டுத் தள்ளுவது' எப்படி என்று வெள்ளித் திரையிலே மணிக்கணக்கில் போட்டுக் காட்டுகிறார்களே, அதைப் பச்சைக் குழந்தைகளைப் பக்கத்திலே வைத்துக்கொண்டு குடும்பத்தோடு அமர்ந்து பார்த்துவிட்டு, அங்கே திரையிலே பரிமாறப்படும் அந்தப் பச்சை இரத்தத்தை நாமும் பருகிவிட்டு அந்தப் பச்சைக் குழந்தைகளுக்கும் ஊட்டிவிட்டு வருகிறோமே, அது தான் பொழுதுபோக்கா?

புகை பிடிப்பவர்களைவிட அதனை சுவாசிப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். அதுபோல, சினிமா எடுப்பவர்களைவிட அதனைப் பார்ப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். இரத்தக் கறை படிந்த இதுபோன்ற படங்களையே பார்த்துவிட்டு, ஒன்றுக்குமே உதவாத சில மசாலாப் படங்களைப் பார்க்கும்போது, 'அப்பாடா... இது பரவாயில்லை' என்று தோன்றுகிறது. ஆதலால் படைப்பாளிகளே, நீங்கள் ஒன்றும் கருத்துச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை; 'வன்முறை' இருக்கக்கூடாது என்று ஒரு 'வரைமுறை'யை ஏற்படுத்திக் கொண்டு படம் எடுங்கள்... இப்போதைக்கு அது போதும்.

- ஜான் பீ.பெனடிக்ட்