ஹாலிவுட் சினிமா

சினிமா கலையா வியாபாரமா என கேள்வி எழுந்த போது ஐரோப்பிய நாடுகள் அது கலை உன்னதமான கலை என்றது. ஹாலிவுட் அது வியாபாரம் தரமான வியாபாரம் என்றது 1930க்கும் 70க்குமிடைப்பட்ட காலங்களில் சினிமா ஆகச்சிறந்த கலை எழுச்சிக்கு ஐரோப்பிய இயக்குனர்களால் உந்தித் தள்ளப்பட்டு அதன் சிகரத்துக்கு இழுத்துவரப்பட்ட அதேநேரம் ஹாலிவுட் வணிக சினிமா பல பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது. அதில்சில இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகள் பல முத்திரைகளைப் பதித்து உலகசினிமாவுக்கும் ஹாலிவுட்டுக்கும் பெருமை சேர்த்தனர். அவையனைத்திலும் வியாபாரம் தான் நோக்கமாக இருந்தாலும் அந்த முயற்சிகளனைத்தும் குறிப்பிடத்தக்க படைப்புகளாக வெளிவந்தன. முழுவதும் இசைமற்றும் நடனத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்ட இசைப்படங்கள், நாயகனை கொள்ளைக் கூட்ட ஆளாகவோ அல்லது அவர்களின் தலைவனாகவோ சித்தரித்து தீமையின் அறத்தைப் பேசும் கேங்ஸ்டர் வகைப்படங்கள் நகைச்சுவைப் படங்கள் என பலவகையிலிருந்தன. இவற்றோடு குவாடிஸ் ஸ்பார்டகஸ்,பென்ஹர், டென் கமாண் மண்ட்ஸ் போன்ற இதிகாசம் மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட படைப்புகளும் வெளியாகி உலகசினிமாவுக்கும் தொழில் நுட்பத்துக்கும் வளம் சேர்த்தன. இவர்களின் சாதனை பெரும்பாலும் பொழுது போக்கு வகையைச் சார்ந்தவை என்றாலும் வரலாற்றில் அவை குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இசைப்படங்கள்

1.விக்டர் பிளமிங்

வண்ணப்படங்களின் மீதான முயற்சி சினிமா கண்டுபிடிக்கப்பட்ட துவக்க காலத்திலிருந்தே மிலி போன்ற மேதைகளால் பரிசோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது என்றாலும் அவை வண்ண பிலிம் சுருளில் அல்லாமல் பிற்பாடான படக்கலவைப் பட்டறைகளில் உருவாக்கப்பட்டு வந்தன. ஆனாலும் முதன்முறையாக பிரத்யேகமான முழுமையான வண்ணப்படம் எனும் பெருமையை உருவாக்கிய பெருமை இயக்குனர் விக்டர் ப்ளெமிங்கையே சாரும். 1939ல் ஒரே ஆண்டில் இவர் இயக்கத்தில் உருவான இரண்டுபடங்கள்தான் ஹாலிவுட்டின் முழுமையான வண்ணப்படங்கள். இரண்டுமே வெவ்வெறு விதங்களில் வரலாற்றில் நிலைத்து நின்றபடங்கள். அதில்முதலில் வெளியான படம் Wizard of oz விசார்ட் ஆப் ஓஸ். அதிசய உலகங்களும் வினோத உருவசித்திரங்களுமாக நிரம்பியிருந்த இப்படம் முழுவதும் பாடல்களால் ஆன இசைப்படம். ஹாலிவுட் வரலாற்றில் இசைப்படங்கள் எனப்படும் அத்தியாயத்தில் இந்தப் படத்துக்கென எப்போதும் ஒருமுக்கியத்துவம் உண்டு. சிறந்த ஐந்து இசைப்படங்கள் என்ற பட்டியலிலும் எல்லா காலத்திலும் இடம்பெறக் கூடிய படமாக இது இருந்துவருகிறது. அதே போல பிளமிங் இயக்கத்தில் தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான இன்னொரு வண்ணப்படம் கான் வித்த விண்ட். மார்கரட் மிட்செல் என்பவர் எழுதிய அமெரிக்காவின் உள் நாட்டுப் போரின் போது உண்டாகும் காதலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் 1936ல் வெளியாகி அவ்வாண்டின் புலிட்சர் பரிசையும் ஈட்டியிருந்தது. இக்கதைக்கு சிட்னி ஹாவர்ட் திரைக்கதை எழுத புகழ்பெற்ற நட்சத்திரங்களான கிளார்க் கேபிள் மற்றும் விவியன் லீ ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கு ப்போட்டியிட்டு பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று ஹாலிவுட்டின் புகழ்மிக்க காவியமாக நிலைத்து நின்றது.

இப்படியாக ஒரே ஆண்டில் தனது அடுத்தடுத்த இரண்டு படங்களின் மூலம் ஹாலிவுட்டில் அழுத்தமாக முத்திரைபதித்த விக்டர் பிளமிங் அடிப்படையில் ஒரு சண்டைப்பயிற்சியாளராக சினிமாவுக்குள் நுழைந்து பின் காமராமேனாக மாறி இயக்குனராக அவதாரமெடுத்தவர்.

இந்த இரண்டுபடங்கள் வண்ணப்படங்களுக்கான அலையை ஹாலிவுட்டில் துவக்கி வைத்தாலும் அதற்குண்டான பெரும் பொருட்செலவுகாரணமாக மக்கள் கறுப்பு வெள்ளைப் படம் எடுப்பதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்திவந்தனர்.

2.ப்ரெட் ஆஸ்டர் & ஜிஞ்ஜர் ரோஜர்ஸ்
 Fred astaire and ginger rogers

இருவருமே டாப் டான்ஸ் எனும் தங்களது நடனத்தால் ஹாலிவுட் இசைப் படங்களின் மறக்க முடியாத ஜோடிகளாக கொடிகட்டிப் பறந்தனர்.இருவரது நான்கு கால்களும் இணைந்து ஆடிய இசைப்படங்கள் மொத்தம் பத்து. பத்து திரைப்படங் களும் இன்றும் பார்வையாளர்களைக் கட்டிப் போடும் இசை நடன காவியங்களக விமர்சகர்களால் வரவேற்கப்படுகின்றன. இருவருமே அமெரிக்காவின் புகழ்பெற்ற வாடுவெல்லி நடனக்குழுவில் தங்களது சிறுவயதிலிருந்து பயிற்சிபெற்று நடனமாடிவந்தவர்கள். இவர்களுள் ப்ரெட் ஆஸ்டர் முன்னதாக திரைக்கு நடனம் ஆடவந்து புகழ்பெற்று வந்தார். தனது படங்களின் நாயகிக்கு நடனம் கற்றுத் தர ஒரு பெண்ணைத் தேடிய போதுதான் அறிமுகமானார் ஜிஞ்ஜர் ரோஜர்ஸ். தன் பதினேழாம் வயதில் திருமணமாகி அந்தவருடமே விவாகரத்தும் ஆகியிருந்த ஜிஞ்ஜர் ரோஜர்சின் நடனத் திறமையைக் கண்ட ப்ரெட் ஆஸ்டர் அவரையே நாயகியாக நியமித்தார். 1933ல் வெளியான Flying Down to Rio ப்ளையிங் டவுன் டு ரியோ தான் இருவரும் இணைந்துநடித்த முதல் படம்.பிறகு The Gay Divorcee, Roberta, Tob Hat என 1939வரை அடுத்த ஆறு ஆண்டுகளில் இருவரும் ஒன்பது படங்கள் தொடர்ந்து இணைந்து ஆடி இசைப்படங்களின் அழிக்க முடியாத சகாப்தமாக விளங்கினர். 39க்குப்பின் சரியாக பத்து வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து இறுதியாக ஒருபடத்தில் ஜோடி சேர்ந்தனர். THE BARKLES OF BRODWAY (1949). அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிப்படமான இது அவர்கள் நடிப்பில் வெளியான ஒரே வண்ணப் படமும் ஆகும்.

3. வின்சன்ட் டி மின்னளி Vicents Minnelli

An American in Paris (1951) Brigadoon (1954), Kismet (1955 and Gigi (1958) போன்ற புகழ்பெற்ற இசைப்படங்கள் முலம் ஹாலிவுட் இசைப்படங்களுக்கு பெருமை சேர்த்தவர் வின்சன்ட்டி மின்னலி. துவக்கத்தில் நாடகங்களுக்கு நடன ஒத்திகை செய்துவந்த மின்னளியின் முதல்படம் Cabin in the Sky இரண்டாவதுபடம் Meet Me in St. Louis இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் நாயகி ஜூடி கர்லண்டின் மீது காதல்வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார் இருவருக்கும் பிறந்த மகள் லிசா மின்னளி. பின்னாளில் ஆஸ்கார் பரிசுபெற்ற புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்ந்தார்.

தனது Gigi (1958)படத்துக்காக சிறந்த இயக்குனருக் கான ஆஸ்கார் பரிசுபெற்ற இயக்குனர் மின்னளி அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நடிகர்கள் Spencer Tracy, Gloria Grahame, Kirk Douglas, Anthony Quinn, Arthur Kennaedy, Shirley MacLaine and Martha Hyer. என அனைவரையும் தன் இசை நடனப் படங்களில் நடிக்கவைத்து புகழீட்டித்தந்துள்ளார். 1986ம் ஆண்டு இவர் இறப்பதற்கு ஒருவாரத்திற்குமுன் பிரெஞ்சு அரசாங்கம் இவரது திரையுலக சாதனைகளைப் பாராட்டி, the Commander National of the Legion of Honou, எனும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது

.4,ஜீன் கெல்லி Jean Kelly

அமெரிக்க இசைப்படங்களின் வரலாற்றில் ப்ரெட் ஆஸ்டருக்கு பிறகு வந்த நடன நட்சத்திரம் ஜீன் கெல்லி. துவக்கத்தில் ப்ரெட் ஆஸ்டரின் ரசிகனாக இருந்த கெல்லி பிற்பாடு தானும் அதுபோல ஹாலிவுட்டின் நடன நட்சத்திரமாக மாற விரும்பி திரைப்படத்துறைக்குள் வாய்ப்புத்தேடிஅலைந்தார். For Me and My Gal இவரது முதல்படம் . ஆனால் இப்படம் சரியாகப் போகவில்லை. துவக்கத்தில் நடித்த மற்ற சில படங்களும் படு தோல்வியைத் தழுவின. இரண்டுவருடம் ராணுவசேவைக்குச் சென்று திரும்பினார். 1951ல் வெளியான அமெரிக்கன் இன் பாரீஸ் An American in Paris எனும் ஒரேபடம் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றியது. இதுநாள் வரையிலுமான அமெரிக்காவின் முழுவதுமான இசை வகைப்பாட்டு படங்களில் மிகச்சிறந்தபடமாக இரண்டு படங்கள் கருதப்படுகின்றன. அவற்றில் அமெரிக்கன் இன் பாரீஸ் ஒன்று. இரண்டாவதாகக் கருதப்படும் படமும் ஜின்கெல்லி நடித்த படமே. அது அடுத்த வருடமே வெளியாகி அமெரிக்கப் படங்களின் வசூல் வரிசையில் பெரும் சாதனை நிகழ்த்தியது அத்திரைப்படம் சிங்கிங் இன் தி ரைன் (1952) Singing in the Rain. மவுனப்பட காலங்களில் பின்னணி இசைக்கலைஞர்கள் தியேட்டர்களில் பாத்திரங்களுக்கு வாய் அசைப்பதும் அவ்வப்போது பாடல் பாடுவதுமாக தொழிலில் கொடிகட்டிப் பறந்தனர். சத்தசினிமா வந்ததும் நடிகர்களே பாடத் துவங்கியபின் இந்த திரைமறைவுக் கலைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து வீதிக்கு வந்தனர். அப்படி வீதிக்கு வந்த கலைஞர்கள் சத்த சினிமாவில் நடிகர்களாக மாறி எப்படி சாதனை செய்தார்கள் என்பதுதான் கதை. முழுவதும் பாடலும் நடனமுமாக இருந்த இப்படத்தில் ஜீன்கெல்லி இணை இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

இப்படத்தில் இவரது அபாரமான கலைச்சேவையை பாராட்டி ஆஸ்கார் இவருக்கு சிறப்பு விருது தந்து கவுரவப்படுத்தியது. 1996.ன் ஒரு நாளில் உறங்கிக்கொண்டிருக்கும்பொது இறந்து காலத்தில் உறைந்து போனார் ஜீன்கெல்லி.

 5.ராபர்ட் வைஸ்

ஜீன் கெல்லிக்குப் பிறகு அமெரிக்க இசைப் படவரலாற்றின் முக்கிய நட்சத்திரம் ராபர்ட் வைஸ்.திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் திரைப்பட மொழி ஆளுமையில் தனித்தன்மை கொண்டவரான ராபர்ட் வைஸ் இயக்கிய இரண்டு படங்கள் இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரைப்பட மொழி மற்றும் புதிய உத்திகளின் மேல் ஆர்வம் கொண்ட பலருக்கும் மிகச்சிறந்த பாடபுத்தகமாய் விளங்குபவை 1961ல் வெளியான வெஸ்ட் சைட் ஸ்டோரி West Side Story மற்றும் 1965ல் வெளியான் சவுண்ட் அப் மியூசிக் The Sound of Music இவைதான் அந்த இரண்டுபடங்கள். இரண்டுக்கும் இவரே இயக்குனர் இவரே தயாரிப்பாளர். இவற்றுள் வெஸ்ட் சைட் ஸ்டோரி ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் கதையை 60களின் இளைஞர்களின் உலகுக்கு ஏற்றாற் போல் மாற்றி உருவாக்கப்பட்ட திரைக்கதை. தொழில் நுட்பத்தில் இன்றைய நவீன படங்களுக்கும் சவால் விடும் உயர்ந்த தொழில் நுட்பம். பெரும்பாலும் இரவில் எடுக்கப்பட்ட இப்படம் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒருநல்ல கையேடு என்று கூட சொல்லலாம். அந்தவருட ஆஸ்கார் போட்டியில் இப்படம் மொத்தம் பத்து விருதுகளை வென்று சரித்திர சாதனை படைத்தது. ஜெர்மி ராபின்ஸ் Jeroms Robbins எனும் நண்பரோடு சேர்ந்து இப்படத்தை அவர் இயக்கியிருந்த காரணத்தால் சிறந்த இயக்குனருக்கான விருதை தன் நண்பருடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்.

அதுபோல 1965ல் வெளியான சவுண்ட் ஆப் மியூசிக்கின் பாடல்கள் இன்றளவும் பிரசித்தம். இந்தப்படமும் அந்தவருடத்துக்கான ஆஸ்கார் போட்டியில் கலந்துகொண்டு ஐந்து விருதுகளை வென்று சாதனை படைத்தது. மட்டுமல்லாமல் இப்படம் வசூலில் ஏற்படுத்திய மகத்தான சாதனையை அடுத்த பத்துவருடங்களுக்குப் பிறகு வந்த ஸ்டார் வார்ஸ் எனும் படத்தால் மட்டுமே முறியடிக்க முடிந்தது.

(தொடரும்)

 (புத்தகம் பேசுது பிப்ரவரி 2011 இதழில் வெளியானது)