திரைப்படங்கள் உலகைக் காட்டுகின்ற கண்ணாடி என்று கூறப்படுவது ஓர் வழக்காகும், இன்றைய உலகைப் பாதிக்கும் பல பிரச்சினைகளை அறியவும், ஆராயவும் ஓர் வாய்ப்பாக திரைப்படங்கள் விளங்குகின்றன என்பதில் அய்யமில்லை. 

அதற்கு உதவுவது போல் இருந்தது சென்னையில் அண்மையில் நடந்து முடிந்த 8 ஆம் ஆண்டு பன்னாட்டு திரைப்பட விழா. 

தமிழ் திரைத்துறையினர் முன்பை விட அதிகப் பங்களித்த அல்லது பங்கேற்ற ஓர் விழாவாகவும், அதே போல தமிழக அரசு அளித்த ரூபாய் 25 இலட்ச நிதியுதவியுடன் நடந்த விழாவாகவும் இருந்தது. மேலும் இம்முறை தனியார் துறையினரும் அதிகளவில் ஆதரித்திருந்தனர். 

விழாவில் சுமார் 122 பன்னாட்டு படங்கள் திரையிடப்பட்டன. அது தவிர இந்திய மொழிப்படங்களும் திரையிடப்பட்டன. சமீபத்திய கோலிவுட் பரபரப்புக்களான அங்காடி தெரு, மைனா, நந்தலாலா, களவாணி ஆகியவையும் திரையிடப்பட்டன. 

சிறப்பு திரைப்படங்களாக புகழ்பெற்ற இத்தாலிய இயக்குநரான பெர்ட்ராண்டோ பெட்ருலூஸியின் திரைப்படங்களான தி லிட்டில் புத்தா, தி லாஸ்ட் எம்பரர், ஸ்டீலிங் பியூட்டி மற்றும் தி ட்ரீமெர்ஸ் ஆகியன திரையிடப்பட்டன. 

இன்று உலகில் அதிக கவனத்தைப் பெறும் உலகமயமாக்கல், நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் பகைமை, மாறி வரும் சமூக அமைப்புக்கள், சூழலியல் மேலும் இன்ன பிற பிரச்சினைகளை ஆயும் ஓர் சாதனமாக திரைப்படங்கள் ஆகி வருவதை அழுத்தமாக உணரக்கூடிய விதத்தில் திரைப்பட விழாவில் பங்கேற்ற பல படங்கள் அமைந்திருந்தன என்றால் மிகையில்லை. 

பங்கேற்றிருந்த திரைப்படங்களை ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று பன்னாட்டு அரசியல் பிரச்சினைகள், இரண்டு சமூக-பண்பாட்டு பிரச்சினைகள், மூன்று அரசியல் மாற்றங்கள், நான்கு தனி நபர் தேடல்கள், ஐந்து பொருளாதார இறுக்கங்கள். 

ஒவ்வொரு பிரிவிலும் முறையே ஒரு படமாவது தனது முத்திரையைப் பதித்தது. அம்முறையைக் கொண்டு நோக்குகையில் கீழ்க்காணும் படங்கள் சிறந்தவையாக அமையக்கூடியவையாகும். 

பன்னாட்டு அரசியல் பிரச்சினைகள் 

டூமன் ரிவர், பிராட் பை தி ஸீ, டியாகோ

சமூக-பண்பாட்டு பிரச்சினைகள் 

பிளாக் ஹெவன், சம்வேர், பாலிகாமி, ஓல்ட் பாய்ஸ், கோல்ட் ஃபிஷ். 

அரசியல் மாற்றங்கள் மற்றும் போர்கள் 

ஹென்றி 4, கேட்டர்பில்லர், வொயிட் ரிப்பன்

தனிநபர் தேடல்கள் 

எவ்ரிபடீஸ் கவுச், ஃபெயித், வேல்மா, சால்வே 

பொருளாதார இறுக்கங்கள் 

அனிமல் டவுன் 

இனி ஒரு சில படங்களைப் பற்றி பார்க்கலாம்.

டூமன் ரிவர் 

வட கொரியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நதியான டூமன் நதி பல்வேறு செய்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. அது போன்ற ஒன்றை இப்படம் விளக்குவதாக உள்ளது. வட கொரியா ஓர் இறுக்கமான மையப்படுத்தப்பட்ட பொருளுதார அமைப்பினைக் கொண்ட கம்யூனிச ஆட்சி முறையின் கீழ் ஆளப்படுகிறது. மக்களில் பலர் வளமான, சுதந்திரமான வாழ்க்கை முறையை கைக்கொள்ள இயலாமலும், வேறு வழியின்றியும் டூமன் நதியினைக் கடந்து சீனாவிற்கு சட்ட விரோதமாக அகதிகளாக வருகின்றனர். 

அப்படியொரு ஓடி வந்தச் சிறுவனின் சீன நண்பன் ஒருவனை சுற்றி நிகழும் சம்பவங்களைக் கொண்டே படம் நகர்கிறது. சிறுவனின் தாய் தென் கொரியாவில் பணி புரிந்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள். சிறுவனும் அவனது ஊமைச் சகோதரியும் அவர்களது தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைத் தவிர ஊர் தலைவர், அவரது மனைவி, வைப்பாட்டி, அகதி நண்பன், அவனது சகோதரி, சரக்கு போக்குவரத்து செய்யும் நபர், அவரது குழந்தைகள் ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். 

கதைப் போக்கில் ஓர் நாள் அகதியொருவன் நள்ளரவில் சிறுவனின் வீட்டிற்குள் அடைக்கலம் தேடி வருகின்றான். மறு நாள் தாத்தாவும் சிறுவனும் நகரம் சென்ற பிறகு ஊமைப் பெண் அகதியை எழுப்பி உணவும், சாராயமும் தருகிறாள். அவன் உணவருந்தி வருகையில் பெண் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்குகிறாள். வட கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று அதிபர் இரண்டாம் கிம் தனது சகாக்களுடன் தோன்றுகிறார். பின்னணியில் அவரைப் புகழ்ந்து ஓங்கியொலிக்கும் குரல் சாதனைகளையும் அவரது அயராத உழைப்பையும் அறிவிக்கிறது. கடும் ஆத்திரத்திற்கும் மன உளச்சலுக்கும் ஆளாகும் அகதி பெண்ணை வன் புணர்ச்சி செய்து விடுகிறான். இதை அவனது நண்பன் கண்டு விடுகிறான். இருப்பினும் அவனிடம் உடனடியாகச் சொல்வதில்லை. பெண்ணிற்கு பின்னர் மருத்துவ பரிசோதனைகள் நடக்கின்றன. 

ஊர்த் தலைவரும் அவரது கள்ளக்காதலியும் உடலுறவு கொள்வதைச் சிறுவர்கள் காண்கின்றனர். இதைத் தொடர்ந்து சரக்கு போக்குவரத்து செய்பவரைக் காவலர்கள் சட்ட விரோத ஆள் கடத்தலுக்காக கைது செய்கின்றனர். அப்போது நண்பன் சிறுவனிடம் அவன் சகோதரி வட கொரிய அகதியுடன் உடலுறவு கொண்டதைத் தெரிவிக்கிறான். பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு தாத்தா கூட்டிச் செல்கிறார். அதே சமயம் வட கொரிய சிறுவனை கைது செய்ய காவலர்கள் வருகின்றனர். சிறுவன் தன் நண்பனைக் கைது செய்வதைக் எதிர்க்கும் விதமாக உயரேயிருந்து கீழே விழுந்து உயிர் துறக்கிறான். மருத்துவ மனைத் தாதி தாத்தாவிடம் பெண்ணால் ஏன் பேச முடியாது என்று பொய் சொன்னீர்கள் என வினவுகிறாள். படத்தின் ஒரு கட்டத்தில் சிறுவன் தாத்தாவிடம் சகோதரி பேசுவது போல் கனவு கண்டதாகக் கூறியிருப்பான். 

வொயிட் ரிப்பன் 

ஜெர்மன் நாட்டின் ஓர் மூலையிலுள்ள கிராமத்தில் நடக்கும் மர்ம நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இச்சம்பவங்கள் முதலாம் உலகப் போரின் பின்னணியில் நிகழ்கின்றன. அக்கிராமத்தின் பள்ளி ஆசிரியரின் பார்வையில் படம் அமைகிறது, துவக்கத்திலிருந்து இறுதி வரை அவர் பின்னணியில் வர்ணணையைத் தொடர்ந்து கொடுக்கிறார். படத்தின் மிகப் பெரும் பலமே கருப்பு-வெள்ளையில் அமைந்திருப்பதுதான். காலகட்டத்தை நினைவூட்டுவதைத் தவிர அழுத்தமான கதாபாத்திரங்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்றதொரு சிறந்த வழிமுறையாகவும் அமைகிறது. வண்ணப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட இதன் தாக்கம் அதிகமிருந்தால் அதன் காரணமும் கருப்பு-வெள்ளையாக இருப்பதுவேயாகும். 

கிராமத்தின் நிலப் பிரபு, நிர்வாகி, மருத்துவர் மற்றும் பாதிரியார் ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரும் முக்கியப் பாத்திரங்களாவர். பாதிரியார் தனது பிள்ளைகளுக்கு பதின் வயது பழக்கங்களுக்காகத் தண்டிக்கிறார். அதற்கு அடையாளமாகக் கையில் ஒரு வெள்ளை ரிப்பன் கட்டப்படுகிறது. சிறார்கள் தவறுகளைக் களைந்து திருந்து போது அது அவிழ்க்கப்படும் என்று கூறப்படுகிறது. 

அவ்வாறே அவர்களது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் சடங்கிற்கு முன்பு ரிப்பன் அவிழ்க்கப்படுகிறது. 

இதனுடனேயே கிராமத்தில் நடக்கும் மர்மச் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனிடையே செர்பிய இளவரசர் கொல்லப்படும் செய்தி வருகிறது. போர் மூளும் சூழல் ஏற்படுகிறது. திடீரென்று மருத்துவரும் அவரது குழந்தைகளும், தாதியும் காணாமற் போகின்றனர். மருத்துவர் தனது மனைவியை தாதியுடனான கள்ள உறவிற்காக கொன்றதாகவும், அவரது குழந்தைகளே நடந்து முடிந்த மர்மச் சம்பவங்களுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. படத்தின் நடுவே மருத்துவர் தனது பெண்ணை பாலுறவு துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது காட்டப்படுகிறது. ஒரு காட்சியில் பாதிரியின் பெண் தாதியின் மன வளர்ச்சி குன்றிய மகன் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகக் கனவு கண்டதாக ஆசிரியரிடம் கூறுகிறாள். அதே போல நிகழவும் செய்கிறது. ஆசிரியர் பாதிரியிடம் மர்மச் சம்பவங்களின் பின்னணியில் அவரது குழந்தைகளே இருப்பதாகக் கூறுகிறார். பாதிரி இன்னொருமுறை அவ்வாறு கூறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார். சில காலம் கழித்து கிராமத்தின் ஆண்டு கூட்டத்திற்கு ஆசிரியரின் வருங்கால மாமனார் வருகைத் தருகிறார். படத்தின் இறுதியில் மருத்துவர் காணாமற் போன பிறகு ஆசிரியர் நகரத்திற்கு திரும்பி தையற்காரர் வேலையை மேற்கொள்கிறார். பின்னர் எப்போதும் கிராமத்தினரை அவர் வாழ்வில் சந்திப்பதில்லை. இக் கூற்றோடு படம் நிறைவு பெறுகிறது. 

முதலாம் உலகப் போர் ஏற்பட்ட காரணத்தைக் கேட்டால் அது பல சம்பவங்களின் தொடர்ச்சி எனக் கூறுவர். படமும் அவ்வாறே அமைகிறது. படத்தின் இயக்குநர் படமானது தீவிரவாதத்தின் தோற்றத்தைப் பற்றியது - அது அரசியலோ அல்லது மதம் தொடர்பிலானதோ எவ்விதமாயினும் அதன் தோற்றுவாயை குறிப்பதாக இருக்கிறது என்கிறார். 

கோல்ட் ஃபிஷ் 

பொதுவாக ஜப்பானிய படங்கள் ஆழமான விமர்சனங்களை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பவையாகும். இப்படமும் மனிதனின் உள்மனதின் வன்முறையை பற்றி விசனத்துடன் அணுகுகிறது. படத்தின் முக்கியப் பாத்திரங்கள் முராடா எனும் வியாபாரியை சுற்றி அமைந்துள்ளன. முராடா வியாபாரி மட்டுமல்ல, கொடூரமான கொலைகளைச் செய்பவனாகவும் இருக்கிறான். ஐம்பதிற்கும் மேற்பட்ட மனிதர்கள் மர்மமான முறையில் காணாமற் போனதற்காக காவலர்களால் சந்தேகிக்கப்பட்டு வருகிறான். 

கதாநாயகனான ஷோமோட்டோ தனது இரண்டாவது மனைவியுடனும் தனக்கு அடங்கிப் போகாத இளம் பெண்ணுடனும் போராடி வருகிறான். பெண் முராடாவின் கடையில் திருடும் போது மாட்டிக் கொள்கிறாள். இங்குத் துவங்கும் ஷோமோட்டோவின் பிரச்சினைகளை அவன் எவ்வாறு தீர்த்துக் கொள்கிறான் என்பதே படத்தின் இதரப் பகுதிகளாகும். 

இயக்குநர் சியோன் சோனோ மன நிலைப் பிறழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு படங்களை எடுக்கிறவர். இப்படம் உண்மை நிகழ்வு ஒன்றினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

அனிமல் டவுன் 

உலகமயமாக்கல் ஏற்படுத்தும் பொருளாதார சிக்கல்களையும் அது ஏற்படுத்தும் தனி நபர் பாதிப்புகளையும் இப்படம் அலசுகிறது. கட்டட தொழிலாளியான கதாநாயகன் வேலையிழப்பதுடன் படம் துவங்குகிறது. அவன் தங்கியுள்ள விடுதியும் விரைவில் இடிக்கப்பட உள்ளது. வேறொரு வேலையும் கிடைக்கவில்லை. தனக்கு வர வேண்டிய மீதமுள்ள பணத்திற்காகவும் அலைய வேண்டியுள்ளது. ஏற்கனவே அவனுக்கு மன அழுத்த நோய் உள்ளது; அதற்கு மருந்தும் உட்கொண்டு வருகிறான். அவனது உறவினன் ஓர் அச்சு தொழிலகத்தினை நடத்தி வருகிறான். 

இச்சூழ்நிலையில் ஓட்டுநர் வேலை கிடைக்கிறது. அப் பணியின் போது உறவினனுடன் தொடர்புள்ள பெண்ணை அவன் கொல்ல நேர்கிறது. மனம் நிம்மதியிழந்த அவன் தற்கொலைக்கு முயல்கையில் உறவினனால் காப்பாற்றப்படுகிறான். அதன் பிறகு ஏற்படும் விபத்து ஒன்றில் உறவினனின் மனைவியையும் கொன்று தானும் இறக்கிறான். 

உறவினன் தன் மனைவியின் நினைவுகளினூடே வாழ்வதைக் காட்டுவதுடன் படம் நிறைவுறுகிறது. கதாநாயக்னுக்கும் உறவினனுக்குமான சோக இணைப்பாக இப்விபத்து மடுமே இருக்கிறது. 

கேட்டர் பில்லர் 

மற்றொரு ஜப்பானிய திரைப்படமான கேட்டர் பில்லர் போரின் கோரத்தை வீரன் ஒருவனின் கதை மூலம் வரைந்து காட்டுகிறது. போரில் வன் புணர்ச்சியின் போது படுகாயம் அடைந்து இரண்டு கால்களையும், கைகளையும் இழந்து, கோர முகத்துடனும், பேச இயலாத நிலையில் ஊர் திரும்புகிறான் வீரன் ஒருவன். அவனை அரசும், ஊர் மக்களும் வாழும் போர் கடவுள் என வர்ணித்து ஆராதிக்கின்றனர். அவனது போர் குற்றங்களை அவன் மட்டுமே அறிவான். அவன் மனைவி ஊராரின் பாராட்டுதல்களுக்காக அவனை கவனித்துக் கொள்வதை துவக்கத்தில் பெருமையாகக் கருதுகிறாள். நாட்பட வீரனின் இயலாத பாலுறவு ஆசைகளால் எரிச்சல்படுகிறாள். போரின் கோரத்தோடு ஊரில் வறட்சியும் இணைந்து அவளது உழைப்பையும், மன உளைச்சலையும் அதிகரிக்கிறது. இதனிடையே வீரனும் தனது தவறுகளை எண்ணி பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். போர் முடிவை எட்டும் சமயத்தில் வீரன் தற்கொலை செய்துக் கொள்கிறான். 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பெற்ற தோல்வியையும், அணு குண்டு வீச்சின் அழிவுகளையும் படத்தின் இறுதிக் காட்சிகள் விவரிக்கின்றன. போர்கள் எவ்வாறான மோசமான பின் விளைவுகளைத் தரும் என்பதைப் படம் விவரிக்கிறது. 

இவைத் தவிர பிராட் பை தி ஸீ, டியாகோ, ஹென்றி 4 ஆகியவையும் நாடுகளுக்கிடையிலான அரசியல் பிரச்சினைகளை அலசுகின்றன. பிராட் பை தி ஸீ ஆப்பிரிக்க மக்கள் துருக்கி நாட்டிற்கு சட்ட விரோதமாக ஊடுருவது பற்றிய பின்னணியைக் கொண்டுள்ளது. டியாகோ போர்ச்சுகல் நாட்டின் காலனியான மக்காவோ சீனாவிடம் மீண்டும் கையகப்படுத்தபடுவதையும் அதன் தாக்கங்களையும் பேசுகிறது. மிக மெதுவாக நகரும் இப்படம் முதலில் விவரணப்படமாக துவங்கப்பட்டு பின்னர் கதைப் படமாக ஆக்கப்பட்டது என்பது போன்ற உணர்வினைத் தருகிறது. ஆட்சி மாற்றத்தின் தாக்கம் ஒரு தனிமனிதனின் சோகத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதால் முழுமையான விவகாரம் என்ன என்பது வெளிக்காட்டப்படும் வாய்ப்பின்றி போகிறது. 

ஹென்றி 4 கதையானது கிறிஸ்துவத்தின் இரு முக்கிய பிரிவுகளான கத்தோலிக மற்றும் பிரொட்டஸ்டெண்ட் ஆகியோரிடையே நிகழ்ந்த மோதலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். ஹென்றி எனும் தெற்கு பிரெஞ்சு இளைஞன் பிரொட்டெஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தவன். பலவீனமான பிரெஞ்சு அரசி தனது தந்திரங்களால் ஹென்றியை கத்தோலிக்கனாக மாற்றி பிரெஞ்சு அரசனாக்குகிறாள். எனினும் அவன் தொடர்ந்து அரசனாக அமைதியை நிலைநாட்டி நாட்டை ஒற்றுமைபடுத்தி சுபிட்சத்தை கொண்டு வந்தானா என்பதுவே கதை. வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட கதையில் திருப்பங்களுக்கும் அன்றைய பிரெஞ்சு சமூக பொருளாதார நிலைமைகளையும் சகிப்புத் தன்மையற்ற ஐரோப்பிய அரசுகளையும் தூய கத்தோலிக்க ஆதிக்கத்தை நிறுவ விழைந்த வாடிகனையும் படத்தில் கண்டுணரும் வாய்ப்புண்டு. 

இதர படங்களில் ஓல்ட் பாய்ஸ், எவ்ரிபடீஸ் கவுச், ஸ்டே அவே ஃப்ரம் ஹெர், பாலிகாமி, பிளாக் ஹெவன், வேல்மா ஆகியன காதல், முதுமை, தனி நபர்களின் மன அழுத்தங்களின் விளைவாய் ஏற்படும் சிக்கல்கள், குற்றங்கள், புதிய உறவுகளைத் தேடும் போக்கு, உண்மையான அன்பு போன்ற உணர்வுகளை மையப்படுத்தியிருந்தன. பிளாக் ஹெவன் படம் புதிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு தவறான பயன்பாடுகளுக்கும் வழிவகுக்கும் என்பதை விவரித்திருந்தது. ஓல்ட் பாய்ஸ் வயதானவர்களும் சமூகத்திற்கு பயந்தரத்தக்க வகையில் பங்காற்ற முடியும் என்பதை விளக்குவதாக இருந்தது. பாலிகாமி சபல புத்தியுடைய கணவன்மார்களின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுவதாகும். இயக்கமும் திரைக்கதையும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுத் தந்தது. எவ்ரிபடீஸ் கவுச் ஓர் மென்மையான காதல் கதையாகும். தனிமையால் உண்மையான அன்பிற்கு ஏற்படும் வெற்றிடம் ஒரு உறவின் விளிம்பு வரை செல்வதே கதை. இயக்குநர் வழக்கமான கதையென்றாலும் அலுப்பு தட்டாமல் இயக்குவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுப்பது போல் படம் விளங்குகிறது. 

ஈரானிய படங்களான ஃபெயித் மற்றும் சால்வே ஆகியன இஸ்லாமிய சமூகத்தின் பன்முகத்தன்மையையும், மத அடிப்படைவாதம் எவ்வாறு மனிதர்களின் இயல்பான உணர்வுகளுக்கும், மாறிவரும் நாகரீக மதிப்பீடுகளுக்கும் இடையே ஒப்புமைகளையும், முரண்களையும் தோற்றுவிக்கிறது என்பது பற்றியும் விவாதிக்கின்றன. 

அனைத்துத் திரைப்படங்களும் மனிதர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்களைக் கடந்தும் கடக்காமலும், சூழ்நிலைகளால் வஞ்சிக்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும், பொது நலன்களை முன்னிறுத்தி தியாகங்களைப் புரிந்தும், மனிதர்கள் தங்களுக்கின்றி சக மனிதர்களுக்காகவாவது வாழ்வையும் மரணத்தையும் உறுதியாகப் பற்றி நிற்கின்றனர் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கூறுகின்றன.

- கி.ரமேஷ் பாபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)