தற்போது சென்னையை மட்டுமே மையம் கொண்டுள்ள தமிழ்த்திரைப்பட உலகம் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் தனது தயாரிப்பு மையங் களைக் கொண்டிருந்தது. குறிப்பாகக் காரைக்குடியில் ஏ.வி.எம்., சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற வற்றை நாம் அறிந்திருக்கிறோம். அதுபோலவே மதுரையிலும் இருந்திருக்கிறது. திருநகரில் இன்றும் தன் அடையாளத்தைக் கொண்டு விளங்கும் சித்ரகலா ஸ்டூடியோ அதற்குச் சான்றாகத் திகழ்கிறது. அதுபோலவே சினிமா தோன்றிய பின் தனக்கென வேறு பொழுது போக்கைக் கொண்டிராத, அல்லது வேறு பொழுது போக்கிடங்கள் இல்லாத நகரமாக மதுரையே திகழ்கிறது. மதுரை இரசிகர்களே இன்றும் திரைப்படங்களின் வெற்றியைக் கணிப்பவர்களாக இருக்கிறார்கள். வளர்ந்த நகரமாயும் இல்லாமல், முழுக்கக் கிராமமாகவும் இல்லாமல், பெரு நகர் போல் தோற்றமுள்ள ஒரு பெருங் கிராமமாகவே இன்றும் மதுரை திகழ்கிறது. பெரிய உற்பத்தி சார்ந்த தொழில் நகரமாக மதுரை இன்னும் மாறவில்லை. அதற்கான நிலவியல் சார்ந்த புறச் சூழல்களும் இங்கில்லை. வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதன் பொருள் மதுரையில் பழமை என்கிற பெயரில் நிலப்பிரபுத்துவப் பண்பாட்டுக் கூறுகள் மிகுதியாகவும், முதலாளித்துவ வளர்ச்சி சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் குறைவாகவுமே காணப்படுகின்றன. மதுரையை மையமிட்டுத் தற்காலத்தில் உருவாக்கப்படும் பல படங்கள் அதனை மெய்ப்பிப்பதாகவே உள்ளன.

காமிராவை மையமிட்ட திரைப்படக்கலை என்ன தான் விஞ்ஞானத்தின் குழந்தை யென்றாலும், விஞ்ஞானம் மனித குலத்தின் கைகளில் தந்த மகத்தான கலைச் சாதனம் என்றாலும், அந்தச் சாதனத்தின் பயன்படு தளங்களை அதன் உடைமையாளர்களும், அன்றைக்கு நிலவுகிற அரசுகளுமே தீர்மானம் செய்பவையாக உள்ளன. அதன்படி இந்தியச் சமூகத்துக்குள் நுழைந்த சினிமா தன் வழியாக இந்தியாவில் நிலவும் சமூக மதிப்பீடுகளை, சமூக முரண்களை, அதற்கான இருத்தலியல் நியாயங்கள் சார்ந்த கருத்தியல்களை மறு உற்பத்தி செய்கிறது. ஒரு இலாப கரமான முதலாளித்துவச் சந்தையைக் கொண்டுள்ள சினிமாத்துறை முதலாளித்துவம், தன் இலாபத்திற்கான கச்சாப் பொருட்களை நிலவும் சமூகத்தின் யதார்த்தத்தி லிருந்தே உற்பத்தி செய்கிறது. இந்தியச் சமூகமும், அதற்குள்ளான தமிழ்ச் சமூகமும் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இருப்பது சிதைந்து, முழு முற்றான புதியதைப் பெறுவதற்கும் வழியில்லாத கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. அதன் பொருள், இங்கிலாந்து அரசு முதலாளித்துவத்தால் இங்கே கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவம் மற்ற ஐரோப்பிய நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சியைப் போல நிலப்பிரபுத்துவத்தின் சாம்பல் மேட்டில் வடிவமைக்கப்படாமல் தனக்குத் தேவையான அளவில் மட்டுமே நிலப்பிரபுத்துவ அழிப்பை நிகழ்த்தியது.

அரசியல்தளத்தில் தனக்குக் கட்டுப்படாத மன்னர்களை அழித்தது. கட்டுப்பட்ட நிலப்பிரபுக் களையும், ஜமீன்களையும், நிஜாம்களையும் இன்ன பிற பிரபுத்துவவாதிகளையும் ஊட்டி வளர்த்தது. அவர்கள் மூலமே தனக்கான பொருளியல் பலன்களை அறுவடை செய்தது. தனக்குத் தேவையான அரசியல் அமைப்பு, ராணுவ, காவல், அதிகார அமைப்புகளைத் தோற்றுவித்தது. இரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை, அணைகள் கட்டுமானம், பாலங்கள் கட்டுதல் போன்ற நவீன தொழில் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்தது. அது போலவே, கல்வித் துறையிலும் தனக்குத் தேவையான அளவில் குமாஸ்தாக்களையும், அறிவுஜீவிகளையும் உற்பத்தி செய்யவே நவீன கல்வியை அறிமுகம் செய்து, பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களைக் கட்டியது. அதன் பொருள் என்னவென்றால் தனக்குத் தேவையான அளவிலான முதலாளித்துவ வளர்ச்சி நிலைமைகளை உருவாக்கியது. மறுதலையாக, தனக்குத் தேவையில்லாத, ஓப்பீட்டளவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அதாவது முதலாளித்துவ நவீனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற, இன்றளவும் போட்டு வருகிற கட்டமைப்பு, சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ இருத்தலியலை அப்படியே விட்டு வைத்துள்ளது. அத்தகைய நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் கலந்து செய்த கலவையான பண்பாட்டுக் கூறுகளையே இன்றளவும் நாம் மரபின் பெயராலும், புதுமையின் பெயராலும் தனிச்சிறப்புடைய இந்திய, தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று அறிவார்ந்த தளங்களிலும், அறிவில்லாத தளங்களிலும், பிதற்றியும் பெருமை பாராட்டியும் வருகிறோம்.

தமிழ்த்திரைப்படங்களில் மதுரையைப் பற்றிய சித்திரிப்புகளை ஒரு பருந்துப் பார்வை பார்த்தோ மென்றாலும் இது தெற்றென விளங்கும். மதுரை தமிழகத்தின் அறியப்பட்ட வரலாற்றுக்காலம் நெடுகிலும் தன் இருப்பைக் காத்திரமான வகையில் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நகரமாகும். தமிழ் மொழி, தமிழகத்தின் அரசியல், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மற்றும் தமிழரின் வரலாறு என்று தமிழ் சார்ந்த எந்தவொரு சொல்லாடலும் மதுரையைத் தவிர்த்துவிட்டு நிகழ்த்தப் படுதல் தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றில் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்துள்ளது. தமிழரின் அறியப்பட்ட எழுத்துவகை இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் தொட்டு இன்று வரை மதுரை பற்றிய குறிப்புக்கள், சித்திரிப்புக்கள் கலை இலக்கியப் பிரதிகளில் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமேயுள்ளன. தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரக் கதையின் மிக முக்கிய பகுதி மதுரையில் நிகழ்வதாகவே உள்ளது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது, தமிழ்ப் புலவர்கள் பலரின் வரலாற்றுக் கதைகள், மதுரை பற்றிய புராணப் புனைவுகள், கூடல் நகர், ஆலவாய், தாய்த் தெய்வக் கடவுள் மீனாட்சி, மீனாட்சியம்மன் கோவில், அழகர் மலை, சித்திரைத் திருவிழா, திருமலை நாயக்கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், மதுரையெங்கும் வெயில் காலங்களில் நடக்கும் மாரியம்மன் வழிபாடு சார்ந்த முளைப்பார் உற்சவம், மல்லிகைப் பூ, காந்தி அருங் காட்சியகம் என்று மதுரையின் அடையாளங்களான நெடுங்காலந் தொட்டு, இன்றளவும் நிலவும் பல்வேறு அடையாளங்கள் மதுரைபற்றிய காட்சிச் சித்திரிப்புகளில் திரைப்படங்களாலும், ஏனைய பிற கலை இலக்கியப் பிரதிகளாலும் சித்திரிக்கப்பட்டே வந்துள்ளன. எல்லா வற்றையும் விட நகைச்சுவை நடிகர் வடிவேலு தன் மதுரைப் பக்கத்துத் தமிழின் உச்சரிப்பு முறையால் தனக்கென ஓப்பாரும் மிக்காரும் இல்லாத தனி இடத்தைப் பிடித்துள்ளார் வடிவேலு. வடிவேலுவின் தமிழ் உச்சரிப்பு, அது அவரது நகைச்சுவையில் வகிக்கும் பங்கு முதலியவை தனித்த ஆய்வுக்குரியவை. அவை இன்று தமிழ்ப் பண்பாட்டு வெளிப்பாடுகளில், சொல்லாடல் வெளிகளில் பிடித்துள்ள இடம் சிறப்பான ஆய்வுக்குரியதாகும்.

தமிழ்த்திரைப்படங்களில் மதுரை பற்றிச் சித்திரிக்கும் படங்களை நாம் வசதி கருதி புராண, இதிகாசக் கதைப் படங்கள், வரலாற்றுக் கதைப் படங்கள், சமகாலக் கதைப் படங்கள் எனப் பிரித்துக் கொள்ளலாம்.

புராண, இதிகாசக் கதைப் படங்களில் மதுரை

புராண, இதிகாசக் கதைப்படங்களில் மதுரையைப் பற்றிச் சித்திரிக்கிற மிக முக்கியமான படமாக, ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார், சிலப்பதிகாரக் கதையை மையமாகக் கொண்ட பூம்புகார், ஆதிபராசக்தி, திருவிளை யாடல் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். ஒளவையார் படம் ஒளவையாரின் வாழ்க்கைச் சம்பவங்களில் சில மதுரையில் நடைபெறுவதைச் சித்திரிக்கிறது. அது

போலவே தமிழகத்தை அறிமுகம் செய்கிறபோது, “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடித்த அழகான தென் மதுரை” என்ற சொலவடைக் கவிதை வரியை நிஜமாகவே யானைகளைக் கட்டி நெற் போரடிக்க வைத்துக் காட்சிப்படுத்தியிருக் கிறார் அமரர் எஸ்.எஸ்.வாசன். அது தவிர, மீனாட்சி யம்மன் கோவிலில் திருவள்ளுவரின் திருக்குறளை அரங்கேற்றும் நிகழ்வும் அந்தப்படத்தில் சித்திரிக்கப் படுகிறது. பூம்புகார் படம் எல்லோருக்கும் தெரிந்தது போல, கண்ணகி மதுரைக்கு வருவது முதல் கோவலன் கொலையுண்ட பின் கோபத்தில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்வுவரை சித்திரிக்கிறது. ஆதிபராசக்தி படத்தில் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடும் நிகழ்வுக்கு மீனாட்சித் தெய்வம் குழந்தையுருவில் வந்து அருள்பாலிப்பது சித்திரிக்கப்பட்டுள்ளது. திருவிளை யாடல் புராணக் கதையும், படக்கதை அனைவருக்கும் தெரியும். கயிலாயத்தில் ஆரம்பித்து, பழனி வந்து, அப்புறம் பார்வதி தேவியின் கூற்றுக்கள் வழியாக மதுரையில் சிவன் நடத்திய திருவிளையாடல்களில் சில சித்திரிக்கப்படு கின்றன. தருமிக்குப் பொற்கிழி கொடுத்தது, பாண பத்திரருக்காகச் சிவன் விறகு வெட்டியாகச் சென்று பிரபல பாடகரை வென்றது போன்ற திருவிளையாடற் புராணச் சித்திரிப்புக்கள் சில ஏ.பி. நாகராஜனின் கைவண்ணத்தில், சிவாஜி, சாவித்திரி, நாகேஷ், கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலையா, டி.ஆர். மகாலிங்கம் போன்ற மாபெரும் நடிகர்களின் நடிப்பாற்றலாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுக் கதைப் படங்களில் மதுரை

வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதைப் படங்களில் மதுரையைச் சித்திரிப்பவனவற்றுள் மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய இரண்டு படங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இரண்டுமே தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களாக அமைந்துவிட்டன வாகும். அவற்றுள் கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான மதுரை வீரன் படம் குறிப்பிடத் தக்க படமாகும். மதுரையில் சமகாலத்திற்குச் சற்று முந்திய வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்து மறைந்த வீரனான மதுரை வீரன் சக்கிலியர் குலத்தில் பிறந்து, தன் வீரத்தால் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாக வளர்ந்து, அழகர் மலைக் கள்ளர்களை ஒடுக்கி, பின்னர் அரசு, மற்றும் அரசியல் சார்ந்த சதிகளால், திருமலை நாயக்கரால் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டுக் கொலையுண்டவன். இன்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிப்புறம் மதுரை வீரன் கோவில் உள்ளது. பெருவாரியான மக்களால் இன்றளவும் வணங்கப்படும் மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் குலசாமியாக இல்லாமல், அவன் இறப்புக்கு வரலாற்று நிகழ்வுப் போக்கில் காரணமான நாயக்கர் சமூக மக்களின் ஒரு பகுதியினராலும் குல தெய்வமாக வணங்கப்படும் தெய்வமாக இருப்பது பலத்த ஆய்வுக்குரியதாகும். கொலைப்பட்ட வாழ்வாங்கு வாழ்ந்த வீரன், கொலைப்பட்டவரின் சமூகத்தினருக்கு மட்டுமல்ல, கொலைசெய்த சமூகத்தவருக்கும், வணங்கத்தக்க தெய்வமாவது, மானுடவியல் ஆய்வு முறைகளால் விடைகாணப்பட வேண்டிய விஷயமாகும். அது போலவே இன்று வரை தொடரும் கள்ளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான பகை முரண்களுக்கான வித்துக்களையும் நாம் இந்தக் கதையிலிருந்து தேறலாம்.

அதுபோல, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் குலோத்துங்க சோழனின் ஆளுகையிலிருந்து, அவனுக்கு அடிமை நாடாக இருந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் கதையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்து அவரே இயக்கியப் படம் இதுவாகும். எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிப்போக்கோடு ஓப்புநோக்கிக் காணவேண்டிய படம். எம்.ஜி.ஆர். முதன் முதலில் மதுரைப்பக்கமுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியைத் தேர்ந்தெடுத்து நின்று வென்றதற்கும், தமிழகத்தின் முதல்வராக ஆகியதற்குமான நெருக்கமான அரசியல் செய்திகள் இப்படத்தில் நிறைய உள்ளன. சோழனைக் கருணாநிதியாகவும், மதுரையைத் தமிழகமாகவும், கருணாநிதியின் ஆட்சியிலிருந்து மீட்கும் சுந்தரபாண்டியனாக எம்.ஜி.ஆரையும் உருவகிக்கும் அரசியல் செய்தியை உள்ளடக்கிய படம் அது. குலோத்துங்க சோழனின் மகன் ராஜராஜனை மதுரைப் பிரதிநிதியாக, ஆட்சி செய்ய அனுப்பிய வரலாறு இன்றைக்கும் தொடர் கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. அத்தகைய சூழலில் இத்தகைய படங்கள் மறுவாசிப்புக்கு ஏற்றவையாக உள்ளன.

சமகாலக் கதைப் படங்களில் மதுரை

புராண, இதிகாச, வரலாற்றுக்காலங்களை அடிப் படையாகக் கொண்ட கதைப்படங்களில் சித்திரிக்கப்படும் மதுரை சமகாலத்தில் திரைத்துறையினரின் கண்பார்வை பட்ட களமாகத் திகழ்கிறது. அத்தகைய படங்கள் பல உள்ளன. சிவாஜி கணேசன் என்ற நடிகரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கலைஞரின் கதை வசனத்தில் வெளிவந்த பராசக்தி படத்தின் கதை மதுரையில் தொடங்குகிறது. பர்மா சென்று சென்னை வந்து தொடர்ந்து மதுரையில் நிகழ்கிறது. படத்தின் முக்கிய பாத்திரமான கல்யாணி தாலியறுத்த பெண்களுக்கெல்லாம் இட்லிக் கடை தானுங்க தாசில் உத்தியோகம் என்று வசனம் பேசப்படும். அதே கல்யாணியைத்தான் மதுரையின் கோயில் பூசாரி பெண்டாள முயல்வார். அதை எதிர்த்துத்தான் கதை நாயகன் குணசேகரன் வசன மழை பொழிவான். எழுபதுகளில் வந்த படங்களில் சிவாஜி கணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை படம் திண்டுக்கல்லில் துவங்கி மதுரை வழியாய்த் தூத்துக்குடி செல்லும் ரயிலில் ஆரம்பிக்கிறது. மதுரையில் ஒரு காலத்தில் நிலவிய பாய்ஸ் கம்பெனி நாடகக்குழுவினரை நினைவுபடுத்தும் வகையில் இதன் ஆரம்பக் காட்சிகள் அமைந்தன. அது போலவே சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் உருவாகி இன்றளவும் தமிழ் மக்களால் நினைவு கூரத்தக்க படமாக அமைந்த, புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட தில்லானா மோகனாம்பாள் படம் மதுரை அழகர் கோவிலில் கதை நாயகனும், நாயகியும் சந்திப்பதாக அமைந்தது.

கதையில் காதலர்களுக்கிடையேயான காதலுக்கு முந்திய மோதல் முரணும் இங்கே தான் துவங்குகிறது. பாரதிராஜாவின் பல படங்கள் மதுரை சுத்துக்கட்டுக் கிராமங்களை மையமிட்ட கதையாடல் களை நிகழ்த்துவனவாகவே உள்ளன. பரதன் இயக்கத்தில் உருவான, கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், கமலஹாசனின் இயக்கத்தில் உருவான விருமாண்டி, சங்கிலி முருகனின் தயாரிப்பில் வெளிவந்த, எங்க ஊருப் பாட்டுக்காரன், பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் போன்ற பல படங்கள், இராம. நாராயணன் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கரிமேடு கருவாயன் மற்றும் கும்பக்கரை தங்கையா போன்ற உள்ளூர் நாயகர்களைப் பற்றிய படங்கள், விஜயகாந்த் நடித்த கள்ளழகர், அதுபோலவே அழகர் மலை என்றொரு படம் விஜய் நடித்த கில்லி, பாலாவின் சேது, அஜித் நடித்த ரெட், ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மாத்தியோசி போன்ற படங்கள், வசந்த பாலனின் வெயில், நட்ராஜ் நாயகனாக நடித்த மிளகா, ஹரிக்குமார் நாயகனாக நடித்த மதுரை சம்பவம், புதியவர்கள் இயக்கிய மதுரை வடி தேனி வழி உசிலம்பட்டி, அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்தி வீரன், சசிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணிய புரம், பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த காதல், சீனு ராமசாமி இயக்கிய கூடல் நகர், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த சண்டைக்கோழி, மேலும் விஷால் நடித்த திமிரு போன்ற பல படங்கள் மதுரை மற்றும் மதுரையின் சுற்றுக் களங்களை மையமிட்டு வந்த வண்ணமுள்ளன.

ஆனால் சமகால மதுரையை மையமிட்ட மேற்கண்ட படங்களின் கதைப் போக்குகளில், சித்திரிப்புக்களில் மிக முக்கியமாகத் தெரிகிற ஒரே ஒரு ஒற்றுமை மேற்குறிப் பிட்ட படங்கள் அனைத்துமே தேவர் சாதியை மைய மிட்ட பாத்திரங்களையே, கதை நிகழ்வுகளையே தம்முடைய தேர்வாகக் கொண்டுள்ளன. மதுரையில் வசிக்கும் மற்றவர்களைப் பற்றிய பதிவுகள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். தற்காலத் தமிழ்த் திரைப் படங்களில் சண்டை, காதல், இரண்டிலும் கலக்குகிற தன்னேரில்லாத் தலைவன், சண்டையிலும் துவந்த யுத்தம் என்று சொல்லப்படுகிற உடல் வலிவைக் காட்டும் சண்டைகள், நவீனமான துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விட அரிவாள், கத்தி, கம்பு சுற்றுதல் போன்ற சண்டைகள் போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை. இத்தகைய கறித்துண்டங்களுக்குள், அந்தந்த ஊர்க் காதல், குடும்பம், கோயில் விழாக்கள், பழக்கவழக்கங்கள், மொழிப் பயன் பாடுகள் போன்றவற்றைத் தூவிவிட்டு அரைக்கப்படும் ஒருவிதமான விநோதக் கலவை மசாலாவாகவே பெரும் பாலான படங்கள் அமைந்துவிடுகின்றன.

சாதிய அடையாளங்கள் வெளிப்பாடுகளிலும் தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலங்களில் அம்பி, மாமி கதைகளைக் கொண்ட படங்கள், செட்டியார்வாள், முதலியார்வாள் படங்கள், அப்புறம் கவுண்டர் கதைகள், தொடர்ந்து தேவமார் கதைகள், தவிர தலித் நாயகர்களைக் கொண்ட படங்கள் என்று வகைப்படுத்தி யோசிக்க வைக்கும் வகையில் பல தமிழ்த் திரைப்படங்கள் அமைந்துள்ளன. இவை தவிர, கிறித்தவர், இஸ்லாமியரை மையமிட்ட கதைகளும் உண்டு. இவையெல்லாம் தவிர்த்த தொழிலாளி முதலாளி படங்கள், விவசாயி பண்ணையாள் படங்கள், சாதிய அடையாளங்கள் சிதைந்த நகர் சார் படங்கள், அரசியல்வாதிப் படங்கள், பெண்ணை மையமிட்ட படங்கள், குழந்தைத்தனமில்லாத குழந்தைகள் படங்கள், இவை தவிர பக்தி, பேய் போன்ற பலவித வகைப்பாடுகளும் உள்ளன.

ஆனால் மதுரையை மையமிட்ட தற்காலப் படைப்புக்கள் பலவும் முன்னரே கூறியது போலத் தேவர் சாதிக் கட்டமைப்பை மையப் பொருளாகக் கொண்டுள்ளன. தேவர் சாதியினரே கதை நாயகர்கள், தேவர் சாதியினரே எதிர் நாயகர்கள் அதாவது வில்லன்கள். இவர்கள் போகக் குறிப்பிட்ட இடம் தேவர் சாதிப் பெண்களுக்கு உண்டு. சொல்லப்போனால் இந்தக் கதைகளைத் தேவர் சாதிப் பெண்களை மையமிட்ட படங்கள் என்றே சொல்லலாம்.

தேவர் சாதி நிலவுடைமையாளர்கள், அவர்களிடம் கைகட்டிச் சேவகம் செய்யும் தேவர் மற்றும் சிற்சில பிற சாதியினர், தேவர் சாதிக் கந்துவட்டிக்காரர்கள், தேவர் சாதிப் படித்த இளைஞர்கள், தேவர் சாதி அரசியல் பிரமுகர்கள் தேவர் சாதிப் பழக்க வழக்கங்கள் போன்ற வையே மதுரையை மையமிட்ட சமகாலப் படங்களில் தொண்ணூற்றொன்பது சதமானப் படங்களின் கதைச் சித்திரிப்பாக அமைந்துள்ளன. இவை தவிர்த்துச் சில படங்களில் தலித், இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களைப் பற்றிய சித்திரிப்புக்கள் உள்ளன.

முன்னர்க் குறிப்பிட்ட தமிழ்த் திரைப்படத்தின் வடிவமைப்புக் கூறுகளில் மிக முக்கியமாக உள்ள காதல், கல்யாணம், மோதல் போன்றவற்றில் இத்தகைய குறிப் பிட்ட தேவர் சமூகத்தை மையமிட்ட களம் தமிழ்த் திரைப்படக்காரர்களின் மிகுந்த கவனத்துக்குரிய ஒன்றாக உள்ளது. மோதலில் தேவர் சமூகத்தின் மிக முக்கிய ஆயுதமான அரிவாள் நமது திரைக்காரர்களின் கவனத்தை ஈர்க்கிற விஷயமாக உள்ளது. விருமாண்டி படம் வெளிவந்த போது அது அரிவாள் கலாச்சாரத்தை முன்னெடுக்கிறது என்று தேவேந்திரர் தலைவர் கிருஷ்ணசாமி இயக்கம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கடுத்து நிறைய படங்களில் அரிவாள் வீச்சுக்கள் கணக்கின்றி நடத்தப்பட்டுக்கொண்டே உள்ளன. அவர் கண்ணில் அவை படவில்லையோ அல்லது கண்மூடிக் கொண்டாரோ தெரியவில்லை.

தேவர் மகன் படம் தேவர் சமூகத்தின் இரண்டு பெரிய சக்திகளுக்கிடையே நடக்கும் மோதலைச் சித்திரித்தது. ஆனால் அதோடு அது ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னது. அரிவாளைக் கீழே போட்டுவிட்டுப் படிக்கச் செல்லுங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உட்படுங்கள் என்பது தான் அது. ஆனால் அதைத் தொடர்ந்து இன்று வரும் சண்டைக் கோழி முதலான படங்கள் நகரம் சென்று படித்தாலும் உடல் ரீதியாய்ச் சண்டையிடும் குணத்தை இழக்காதே என அறிவுறுத்துகின்றன.

எல்லாவற்றிலும் சாதிய முறைமைகளை அப்படியே பேணுவதில் இத்தகைய படங்கள் தெளிவாக முன்னிற் கின்றன. குறிப்பாக மணமுறை விஷயங்களில், பெண்ணிடம் பிறசாதி இரத்தக் கலப்பு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அவை தெளிவாக இருக்கின்றன. சேரனின் பாரதி கண்ணம்மா இது விஷயத்தில் சந்தித்த எதிர்ப்பைத் தமிழகம் அறியும். பெரிய வீட்டுப் பண்ணைக்காரன், கரிமேடு கருவாயன், விருமாண்டி, மதுரை வடி தேனி வழி உசிலம்பட்டி போன்ற படங்களில் தேவர் சாதிக்குள்ளேயே நடக்கும் காதல், கதைப் பொருளாகிறது. அதற்குள் வர்க்க வேறுபாடுகள் காதலுக்கு எதிராக உள்ளன. விரிவாக விவாதிக்க முடியாவிட்டாலும் இந்த விஷயத்தில் நாம் அமீரின் பருத்தி வீரனைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். அதில் வரும் பருத்தி வீரனின் தாய் தந்தையர் நம் கவனத்துக்குரியவர்கள். அவனது தந்தை தேவர் சமூகத்தவர், தாய் மணிக்குறவர் இனத்தவர். இருவருக்கும் பிறப்பவன் பருத்தி வீரன். அவனது காதலியும் ஒரு வழியில் மாமன் மகளுமான முத்தழகி சுத்தமான தேவர் இனப் பெண். அவளோடு அவனது இரத்தம் கலந்து விடக் கூடாது என்பதில், இயக்குநர் அமீர் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார். அதற்காக மனுதர்மத் தண்டனை போல அவர்களுக்குத் தண்டனையும் தருகிறார்.

பாலாஜி சக்திவேலின் காதல் படமும் அந்தவகையில் நாம் குறிப்பிட்டுப் பேச வேண்டிய ஒன்று. தேவர் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கும் தலித் இளைஞன் அவளை மணமுடிக்கமுடியாமல் பைத்தியமாக்கப்படு கிறான். பைத்தியமான அவனைத் தேவர் சாதிக் காதலியும் அவளுக்கு அமைக்கப்பட்ட தேவர் சாதிக் கணவனும் தங்கள் பராமரிப்பில் வைத்துக் காப்பாற்றுகின்றனர் என்று தேவர் சாதியினர் மீது அனுதாபம் வரும் வகையிலேயே கதை கட்டமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட கூடல் நகர் படத்திலும் கூட இதே சாயலிலான கதைக் கட்டமைப்பு, இதில் காதலால் தலித் தம்பி சாக, தலித் அண்ணன் பழிவாங்குகிறான். கிட்டத்தட்ட சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் நாயகனுக்கு நேர்கிற கதியும் இதேபோல எண்ணத்தக்கதே. அது போலவே திமிரு படத்தில் வருகிற வில்லி நாயகிக்கு ஏற்படுகிற மரணமும் இத்தகையதே.

ஆனால் அதே நேரம் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவர் சாதி ஆண்கள் பிறசாதிப் பெண்களை மணப்பது யாதொரு வில்லங்கமும் இல்லாமல் இயல்பாகச் சொல்லப்படுகிறது. பருத்தி வீரனின் தந்தை குறவர் சமூகப் பெண்ணை மணப்பது, சண்டைக் கோழியின் நாயகன் தன் சாதி அடையாளம் ஏதென்று நமக்குத் தெரியாத (நிச்சயம் தேவரல்ல) காதலியைக் கைப்பிடிப்பது போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். வசந்தபாலனின் வெயில் படத்தில் வரும் ஒரு நாயகன் மதுரையில் சவுராஷ்டிரப் பெண்ணைக் காதலித்து மணப்பதையும் இதோடு சேர்த்து எண்ணலாம்.

இவையெல்லாம் மணமுறைகளில் நிலப்பிரபுத்துவ உறவு முறைகளைப் பேணுவதில் சமூகமும், தமிழ்த் திரைப்படமும் எவ்வளவு கவனத்துடன் உள்ளன என்பதையே நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆனால் இதனை உடைக்கின்ற ஒரு படம் நமது கவனத்துக்குரியதாக இருக்கிறது. அதுதான் விஜய் நடித்த தரணியின் இயக்கத்தில் வெளிவந்த கில்லி. இதில் தேவர் சமூகப் பெண்ணை வில்லன் தாய்மாமனின் கட்டுக் காவலை மீறி அவளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு தற்செயலாக வேறு வேலையாக மதுரைக்கு வரும் கதாநாயகன் கதாநாயகியைச் சென்னைக்கு அழைத்துச் செல்கிறான். தொடர்ந்து தாய் மாமன் தேடுகிறான். இறுதியில் மோதலில் தாய் மாமன் தோற்க, நாயகன் அதாவது தேவர் சமூக அடையாளமற்ற நாயகன் தேவர் சமூகப் பெண்ணைக் கைப்பிடிக்கிறான். இந்தப் படத்திற்கு (அவ்வளவு எதிர்ப்பு) ஏன் எதிர்ப்பே வரவில்லை. ஒருவேளை அதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த எதிர்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். இதுவும் கூடத் தனித்த ஆய்வுக்குரியதே.

இது தவிர விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம். மதுரையில் மதமோதல் களத்தைத் தேர்வு செய்கிறது. வழக்கமான விஜயகாந்த் படத்தில் வரும் ஃபார்முலாக் கதையான இஸ்லாமியத் தீவிரவாதக் கதையை மதுரையில் அழகர் திருவிழாவோடு இணைத்து, இந்து வேடமிட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை, இந்து வேடமிட்ட இஸ்லாமியர், கிறித்தவ அதிகாரியின் துணையோடு முறியடிப்பதே இந்தக் கதை. இதில் வரும் இந்து அனைவருமே அப்பாவிகளிலும் அப்பாவியாக இருப்பது நமது கவனத்துக்குரியது. இதிலும் வழக்கம் போல, இஸ்லாமியக் கதாநாயகனோடு இந்துக் கதாநாயகி இணைவது தவிர்க்கப்பட்டு அவள் இயக்குநரால் சாகடிக்கப்படுகிறாள். இது தவிர மதுரை சம்பவம் படத்தில் வரும் ஆட்டுத் தொட்டி உரிமையாளர், அவர் கோனார் சமூகத்தவரா என்பது தெரியவில்லை. ஆனால் தேவமார் சமூக நிகழ்வுகள் போலவே சகல சம்பவங்களும் சித்திரிக்கப்படுகின்றன.

இது போக, தேவமார் சமூகப் புதிய படிப்பாளிகள் வக்கீல் மற்றும் போலீஸ் துறைகளை நோக்கியே செல்பவர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். இதுவும் தனித்த ஆய்வுக்குரியது.

இப்படி யோசிக்க யோசிக்க விரிவடைந்து கொண்டே செல்லும் மதுரை பற்றிய படங்களில் நமது கவனத்துக்குரிய, மிகவும் அதிர்ச்சி தரத்தக்கதாக அமைகிற ஒரே விஷயம் மதுரை என்றால் தேவர் சமூகம், அரிவாள் கலாச்சாரம் போன்றவை மட்டும் தானா? வேறெதுவும் இல்லையா? தமிழ்ச் சமூகம் விரிவாக விடைகாண வேண்டிய வினா இது.

ஒரு வேளை, இன்றைய காலத்தின் தமிழ்த் திரை உலகுக்குள், தயாரிப்பு, பண விநியோகம், இயக்கம், நடிப்பு போன்ற பல துறைகளில் மதுரைப் பக்கமிருந்து கிளம்பிச் சென்ற தேவர் இனத்தவரின் ஆதிக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். யோசிக்க வேண்டியிருக்கிறது, நிறைய்ய்ய....

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)