நாட்டில் ஒருபுறம், புதிதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறமோ வழக்குகள் அதைவிட அதிகமாக தீர்ப்பிடப்படாமல் தேக்கமடைந்து வருகின்றன. இதன் காரணமாக நியாயமான காலத்திற்குள் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை நாடிய குடிமகனுக்கு நீதி தாமதிக்கப்படுகிறது. இப்படியாக வழக்குகள் தேக்கமடைவதற்கு, நீதித்துறையால் பொதுவாக சொல்லப்படும் காரணங்களில் பிரதானமானது வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்பு என்பதேயாகும். [மனித உரிமைப் பிரச்சனைகள், காவல்துறை அத்துமீறல்கள், அரசுகளின் எதேச்சதிகார போக்கு என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக தங்களது எதிர்ப்பினையும், கண்டனத்தையும் பதிவு செய்யும் விதமாக வழக்குரைஞர்கள் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்]. இந்த வாதமானது, அடிக்கடி அதுவும் நீதித்துறையாலேயே பயன்படுத்தப்படுவதால், மனுதாரர்களும், பொதுமக்களும், செய்தி ஊடகங்களும் மற்றும் நீதிமன்றப் பணிகளைச் சாராத இதர தரப்பினர்களும், மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய நீதியானது, தாமதிக்கப்படுவதற்கு இது மட்டுமே காரணம் என்று பரவலாக எண்ணம் கொண்டுள்ளார்கள். இது மெய்யான காரணத்தை திட்டமிட்டு மூடிமறைக்கும் கருத்தாகும்.

மக்கள் தொகை – நீதிபதிகள் விகிதம்:

“இன்னும் அதிகமான விசாரணை நீதிமன்றங்கள் செயல்படும்போதுதான், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விடவும், கூடுதலான வழக்குகளை தீர்ப்பிட்டு அதன் மூலமாக, நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்” என்று, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.பி.பரூசா கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

1988ம் ஆண்டில் சமர்பிக்கப்பட்ட, 127வது சட்ட ஆணைய அறிக்கையில், பத்து லட்சம் மக்களுக்கு, 10.5 நீதிபதிகள்தான் பணியிலுள்ளார்கள்; இந்த விகிதமானது, 50 நீதிபதிகளாக உயர்த்தப்பட வேண்டுமென கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்த 1993ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், அகில இந்திய நீதிபதிகள் சங்கம் எதிர் இந்திய அரசு எனும் வழக்கில், பத்து லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. ஆனபோதிலும், சட்ட ஆணையத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், உச்சநீதிமன்றம் தீர்ப்பிட்டு 10 ஆண்டுகள் கடந்துபோன பின்னரும், தற்போது பத்து லட்சம் மக்களுக்கு 12-13 நீதிபதிகள்தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

காலியாக வைக்கப்பட்டுள்ள பணியிடங்கள்:

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின், நீதித்துறைக்கான இணைய தளத்தில் கடந்த 26.06.2013ம் நாளில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, உச்ச நீதிமன்றத்தில் வரையறுக்கப்பட்ட 31 பணியிடத்தில் 29 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; 2 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அதேபோல நாட்டில் மொத்தமுள்ள 24 உயர்நீதிமன்றங்களில், வரையறுக்கப்பட்டுள்ள 906 நீதிபதிகளின் எண்ணிக்கையில் 630 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; 276 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்படியாக முன்றில் ஏறக்குறைய ஒரு பங்கு பணியிடம், உயர்நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல், காலியாக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மிகவும் பழமை வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில், வரையறுக்கப்பட்டுள்ள 60 நீதிபதிகளின் எண்ணிக்கையில் தற்போது 44 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; 16 பணியிடம் கடந்த 6 மாத காலமாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. அதில் கடந்த மாதத்தில் 15 பணியிடங்களுக்கு நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி பார்த்தாலும் இன்னமும் 1 இடம் காலியாகவே தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல 18.05.13 அன்றைய நாளின் நிலவரப்படி தமிழ்நாட்டில் நிரப்பப்படாமலுள்ள மாவட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 51 ஆகும். தற்போது அதில் 23 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. அப்படி பார்த்தாலும் இன்னமும் 28 பணியிடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கான தேர்வு குறித்த எந்த அறிவிப்பும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பிட, அதற்கு தகுதி வாய்ந்த நபர்களை அரசுக்கு பரிந்துரைப்பது அந்தந்த மாநில தலைமை நீதிபதிகளின் பொறுப்பாகும். எனவே, இதில் நீதித்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது.

நீதிமன்றங்களின் எண்ணிக்கை:

உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில், 1 உச்ச நீதிமன்றமும், 24 உயர்நீதிமன்றமும், சுமார் 600 மாவட்ட நீதிமன்றங்களும் உள்ளன. இது அதிகரிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றமானது நாட்டின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல உயர்நீதிமன்ற கிளைகள் 8 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. தேவையின் பொருட்டு இதர மாநிலங்களிலும், உயர்நீதிமன்ற கிளைகள் உருவாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

நீதிபதிகள் நியமனம்:

அரசியல் அமைப்பு சாசனத்தின் 217வது சரத்து, ‘’கீழமை நீதிமன்றங்களிலோ, உயர் நீதிமன்றங்களிலோ 10 வருடங்களுக்கு வழக்கறிஞராக பணிசெய்தவர்களையே உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கலாம்’’ என்று சொல்வதை தவிர, வேறு தகுதிகள் எதையும் வரையறுக்கவில்லை. இந்நிலையில், கடந்த 26.06.13 அன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமானது, “சென்னை உயர்நீதிமன்றத்திற்கென புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பெயர்கள் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஏனெனில் அவர்களில் பலர், விரைவாக நீதி வழங்கிடும் தகுதி அற்றவர்கள்” என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கவனிக்கத்தக்கது. “காலதாமதமின்றி தீர்ப்பு வழங்குவது ஒரு நல்ல நீதிபதியின் கடமை” என்று ஒரு சட்ட பழமொழி கூறுகிறது.

1993ஆம் ஆண்டிற்கு பின்னர், புதிய நீதித்துறை நியமனங்கள், அரசின் தலையீடு ஏதுமின்றி, மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் ஒன்றின் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்து எடுப்பதற்கு, மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் இருவர் கொண்ட குழு பெயர்களைப் பரிந்துரைக்கின்றது. அவற்றை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து, தகுந்தோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கின்றனர்.

இப்படியாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக, ‘அரசின் தலையீடு நீதித்துறையில் நிலவக்கூடாது’ என்று கூறி, நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றமே தன்கையில் எடுத்துக்கொண்டது. நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, நீதித்துறையே எடுத்துக்கொண்டிருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான். இவ்வுரிமையை, அரசியல் சாசனமும் நீதித்துறைக்கு வழங்கவில்லை. ஒருவரை நீதிபதியாக நியமிக்கும் முன்னர் நீதிமன்றங்களில் அவரது செயல்பாடு, குற்றப் பின்னணி போன்ற பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது பொதுவிதியாக சொல்லப்பட்டாலும், பொதுவாக அவைகள் கவனிக்கப்படுவதில்லை என்றே கூறப்படுகிறது. இப்படியாக, தெளிவான வரையறைகள் ஏதும் கடைபிடிக்காமல் நியமனங்கள் நிகழ்தப்படுவதால் இந்த கொலீஜிய நியமன முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்; மேலும், நீதிபதிகள் நியமனங்களைப் பரிந்துரை செய்ய, தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று, சட்ட அமைச்சர் கபில் சிபல் சமீபத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அடிப்படை கடமை:

நிர்வாகத்துறை மற்றும் சட்டத்துறை மூலமாக மீறப்படும் அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, நீதிமன்றங்களில் பெருவாரியான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட வழக்குகளை தீர்ப்பிடுவதில் ஏற்படும் தாமதாமானது, நாட்டின் ஒட்டு மொத்த ஜனநாயக கட்டமைப்பையும் பாதிப்பிற்குள்ளாக்கும்.

எனவே, நீதிபதிகள் நியமனத்தில், அதிலும் குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மையுடன் இருப்பதுடன், விரைவாகப் பணி நியமனமும் செய்வது நீதித்துறையும், அரசும் குடிமக்களுக்கு செய்யவேண்டிய அடிப்படை கடமையாகும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்