சித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் – ஜூன் 26 

ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் 26 ஆம் நாளை “சித்திரவதைகளால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக” ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலகில் சித்திரவதையை ஒழிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

நம் வீடுகளில் கூறிய கதைகளில் வரும் “நரகம்” என்ற உலகம் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?. நரகத்தில் தவறு செய்தவர்களை கடவுள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவார் என்பது தான் அந்தக் கதைகளின் நீதி.

police torture in india

சித்திரவதை என்றால் என்ன ?

 “சித்திரவதை” என்பது ஒரு தவறுக்கான தண்டனையாகவோ, ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக ஏற்கவைப்பதற்காகவோ, பாகுபடுத்தும் நோக்கத்திலோ, அச்சுறுத்தல் செய்வதற்காகவோ அல்லது வேண்டுமென்றே நடத்தப்படுகிறது.

“ஒருவர் தமக்கான உள்நோக்கத்துடன், தானாகவோ அல்லது தமது தூண்டுதலின் பேரிலோ, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னொருவர் மீது, உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ கடுமையான வலியையோ அல்லது மன வேதனையையோ ஏற்படுத்துவதையே சித்ரவதை” எனலாம்.

சித்திரவதை என்பதை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அதாவது 

முதலாவதாக நமது வீடுகளில் நிலவும் சித்திரவதை.

வீடுகளில் சித்திரவதை என்னும் போது ஆணாதிக்க சிந்தனையுடன் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மீதோ, பெண்கள் மீதோ அல்லது பெரியவர்கள் மீதோ செலுத்தும் வன்முறை மற்றும் சித்திரவதைகளைக் கூறலாம்.

இரண்டாவதாக சமூகத்தில் நிலவும் சித்திரவதை.

சமூகத்தில் நிலவும் சித்திரவதை என்னும் போது வேலையாட்கள் மீதோ, ஜாதி மற்றும் சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ பின்தங்கியவர்கள் மீது சமூகத்தில் அல்லது பொதுவான இடங்களில் ஆதிக்க சிந்தனையுடன் செலுத்தப்படும் சித்திரவதை எனலாம்.

மூன்றாவதாக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே மக்கள் மீது நடத்தும் சித்திரவதை.

மக்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரசே சாதாரண மக்கள் மீது நடத்தும் சித்திரவதையைக் குறிப்பிடலாம். குறிப்பாக காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மூலமாகவோ அல்லது அரசு எந்திரங்களின் ஏதாவது அமைப்புக்கள் மூலமாகவோ இது நடத்தப்படுகின்றது.

மனித உரிமைக் கண்ணோட்டத்தில் சித்திரவதை

மனித உரிமை என்பதன் அடிப்படைத் தத்துவம் என்ன?

சமத்துவம் – மனிதருள் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் சமம்.

சுதந்திரம் – நாம் ஒவ்வொருவரும் பிறரைப் பாதிக்காத வகையில் நம்முடைய சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.

மாண்பு – மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்மானம் என்கின்ற மாண்புரிமை உண்டு.

இவை தான் இந்தியாவின் அரசியல் சாசனங்களின் படியும், சர்வதேச சட்டங்களின் படியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமையின் அடிப்படைத் தத்துவம். எனவே தான் சித்திரவதையை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியுள்ளது.

“சித்திரவதை” என்பது மனித உரிமை மீறல்களில் மிகக் கொடூரமான வடிவமாகும். ஒருவரை மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துவதும், கொடுமைப் படுத்துவதும், அவர் தம் உரிமைகளை அனுபவிக்க விடாமல் மறுப்பதும் மனித நாகரீகமற்ற செயல் ஆகும்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வை உறுதிபடுத்தவும், சர்வதேச சட்டங்கள் வழிவகைகளைச் செய்கின்றன. இதற்காக ஐநா மூலம் சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தகள் ஏற்படுத்தி தற்போது பல்வேறு உலக நாடுகளில் சித்திரவதை என்பது முழுமையாக ஒழிக்கப்பட்டு வருகின்றது.

அரசே நடத்தும் சித்திரவதை

வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் சித்திரவதை நடைபெறுகின்றதா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆம் கால மாற்றத்திற்கேற்ப சித்திரவதையின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

தீவிரவாதிகளைக் கண்டு பிடிப்பதற்காக சாமானியர் மீது பதுகாப்புப் படை வீரர்கள் நிகழ்த்தும் சித்திரவதை.

தனி மனிதர் தவறு செய்தால் உண்மையை அல்லது உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அப்பாவி மக்கள் மீது காவல்துறை நிகழ்த்தும் சித்திரவதை.

அரசு எந்திரத்தின் முக்கிய அங்கமான காவல்துறை, பாதுகாப்புப்படை ஆகியோர் அப்பாவி மக்கள் மீது நடத்தும் சித்திரவதைகள்  ஜனநாயகத்தின் அடிபடையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

சித்திரவதையின் வடிவங்கள்

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் படும் இன்னல்களை ஆய்வு செய்தோமானால் எழுதி மாளாது. நீங்கள் சித்திரவதையின் சில வடிவங்களை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதே சித்திரவதையை தினமும் பல்லாயிரம் பேர் அனுபவிக்கின்றார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? சித்தரவதை மூலமாகவும் போலி மோதல் கொலை (என்கவுண்டர்) மூலமாகவும் பலர் கொல்லப்படுகின்றனர். சித்திரவதையால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் படும் துயரம் நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. பல மாதங்களாக சட்டவிரோதமாக தனி அறைகளில் வைத்து, கை கால்களைக் கட்டி வைத்திருத்தல். கை கால் எலும்புகள் முறிக்கப்படுதல், உடலில் முக்கிய நரம்புகளைத்துண்டித்தல் போன்ற மனித நேயமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் தலை, கண், காது, வாய், மூக்கு, சிறுநீரகம், ஆசன வாய் போன்ற பல்வேறு முக்கிய பாகங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துதல் மற்றும் உடலில் மின்சக்தியைச் செலுத்துதல் போன்ற பல்வேறு வகையிலான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் உயிர் பிழைத்தாலும் தம் வாழ்நாள் முழுமையும் இயலாமை மற்றும் வேதனையுடன் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐக்கியநாடுகள் சபையின் முயற்சிகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் சித்திரவதை என்ற கொடுமையே இருக்கக் கூடாது என்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலும் உறுப்பு நாடுகளும் திட்டமிட்டன. சித்திரவதையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் சித்திரவதையால் பாதிக்கபடுவோருக்கு ஆதரவு தெரிவித்து ஆறுதல் அளித்து மன ரீதியாக தைரியப்படுத்தி அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இதற்காக முதலாவதாக 1984 ஆம் ஆண்டு ஐநாவின் பொதுச் சபையில் சித்திரவதைகெதிரான ஓர் உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு முதற்கட்டமாக 20 நாடுகள் இந்த சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டன. அதன்பிறகு படிப்படியாக பெரும்பாலான நாடுகளும் ஏற்றுக் கொண்டுவிட்டன.   

இந்தியாவும் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் 1997இல் கையொப்பமிட்டது. சித்திரவதையை ஒழிப்பதற்காக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகள் தமது நாட்டில் சித்திரவதையைத் தடை செய்வதுடன் தனது குடிமக்கள் அனைவரும் எந்த விதமான சித்திரவதைக்கும் உள்ளாகாமல் பாதுகாப்புடன் இருப்பதை உரிய அறிக்கைகள் மூலம் உறுதி செய்தல் வேண்டும். மேலும் சித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கு சட்டரீதியாகவும், மறுவாழ்வு ரீதியிலும் ஆதரவுக் கரம் நீட்டவேண்டியதும் குறிப்பிட்ட அரசுகளின் கடமை ஆகும்.

இந்தியாவில் சித்திரவதை உள்ளதா?

ஐநாவின் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா 1997இல் கையொப்பமிட்டு இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் சித்திரவதையை ஒழிப்பதற்காகவோ, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவோ, எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.  மாறாக அரசே மக்கள் மீதான சித்திரவதையை நடத்தி வருகிறது என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் காவல்துறையும், பாதுகாப்புப் படையும் விசாரணை என்ற பெயரில் சந்தேகப்படும் நபரை பலவந்தப்படுத்துவது, சித்திரவதை செய்வது, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குவது, எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட அதிகாரங்களைப் பெற்றுள்ளன.  இது போன்ற நடவடிக்கைகளுக்கு அதிகாரங்களை அளிப்பதற்காக இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தச் சட்டங்கள் அனைத்தும் சாமானியர்களின் மனித உரிமைகளை அத்துமீறுவதற்கும், சித்திரவதை செய்வதற்கும் இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

போன்ற சட்டங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி, அப்பாவி மக்கள் மீது பல்வேறு வகையிலான வன்முறைகளும், சித்திரவதைகளும் நிகழ்த்தப்பட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது. இது போன்ற அரசின் வன்முறைகளை கண்காணித்து அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளியிடுவதில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை தொடர்பான நிறுவனங்கள் போன்றோர் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இதற்காக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றன.

இவையெல்லாம் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளில் இருந்து தொகுக்கப்பட்ட தேசிய அளவிலான மிக முக்கியமான காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் சித்திரவதைகள் குறித்த செய்திகள் மட்டும் தான். இவை தவிர சித்திரவதையால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்து, வாழ்நாள் முழுமையும் இன்னல் படுவோர் பலர். மேலும் திருட்டு, கொள்ளை, கொலை மற்றும் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அப்பாவிகளின் துயரங்கள் கணக்கிலடங்காது.

ஜனநாயக இந்தியாவில் நடக்கும் “சித்திரவதை” குறித்து சர்வதேச நாடுகளின் கவலை

உலகின் ஜனநாயக நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடாகும். இது போன்ற ஜனநாயக நாட்டில் சித்திரவதை என்பது இயற்கையாகவே களையப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாகவே உள்ளது. அதாவது ஐநாவின் மனித உரிமைகளுக்கான பல்வேறு கூட்டங்களில் இந்தியாவிடம் பல்வேறு உலக நாடுகள் சித்திரவதையை ஒழிப்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

இதே காலகட்டத்தில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த திரு.அஸ்வின்குமார் என்பவர் தாம் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில், சித்திரவதையைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் தாம் செய்ய மறந்ததை தற்போது எதிர்கட்சி வரிசையில் உள்ளதால் உச்ச[RC1]  நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதில் இந்தியா உடனே சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை இயற்ற நடவடிக்கைகை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தமது பதவி காலத்தின் பெரும் பகுதியை வெளிநாட்டுப் பயணங்களிலேயே கழித்து வருவதை நாம் அறிவோம். இந்தப் பயணங்களின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் சித்திரவதையைத் தடுப்பது குறித்த தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். எனவே  இதற்கு முன் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பிரதமர் விட்டுச் சென்ற பணியை முடிக்க வேண்டிய கடமை உள்ளது. அதே சமயம் சித்திரவதையை ஒழிக்கும் பணியில் தற்போதைய ஆட்சியாளர்களும் காலம் தாழ்த்தி வருவதை மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச சமூகமும், பத்திரிகைகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதை உணர வேண்டும்.

நமது கடமை

சித்திரவதையை முழுமையாக ஒழிப்பதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசு சாரா அமைப்புகளும் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் அனைத்து குடிமைச் சமூக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.

எனவே தான் “ஐநாவின் சித்திரவதைக்கெதிரான நாளில்” பல்வேறு அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள்.

மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதன் மூலம் தான் சித்திரவதை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.

மேலும் இந்த சர்வதேச தினத்தில் சித்திரவதையை ஒழிப்பதில் ஒவ்வொரு தனி மனிதரும் உறுதியேற்க வேண்டும். குறிப்பாக சித்திரவதையை நமது வீடுகளில் மற்றும் சமூகத்தில் இருந்தே ஒழிக்க சபதமேற்க வேண்டும்.

(நன்றி – ஆதாரம் - தகவல்கள் மற்றும் அறிக்கைகள், மக்கள் கண்காணிப்பக நூலகம், மதுரை)

- ரா.சொக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை