2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஏ.கே.கங்குலி, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர். இப்போது மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ‘பிரண்ட்லைன்’ பத்திரிகைக்கு அவர் தூக்குத் தண்டனை தொடர்பாக அளித்த பேட்டியில் வெளியிட்ட சில முக்கிய கருத்துகள்.

•              ‘அரிதிலும் அரிதான’ வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்று ‘பச்சன்’ வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட நெறிமுறை மீறப்பட்டு பல வழக்குகளில் தவறாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது உண்மை. இருந்தவரை நான் ஒப்புக் கொள்கிறேன்.

•              கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டு விட்டால் அதனடிப் படையிலேயே தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்ற கருத்தை நான் ஏற்கிறேன். உச்சநீதிமன்றமே, இந்த அடிப்படையில் தண்டனையை ரத்து செய்துள்ளது.

•              (பம்பாய் குண்டு வெடிப்பில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள) அஜ்மல் கசாப்பின் இளம் வயது அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக இழைத்த குற்றம் என்ற இரண்டு அடிப்படையில் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கலாம். ஆனாலும், நீதிபதியின் மனசாட்சிதான் இதில் தீர்ப்பாக இருக்க முடியும். வழக்கு விசாரணையில் இருக்கும்போது நான் இதில் உறுதியாக கருத்து கூறுவது நீதிமன்றத் தலையீடாகிவிடும்.

•              ‘தீவிரவாத இயக்கத்தோடு’ தொடர்புடையவர்கள் என்றும், அந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்கள் என்றும் அதன் காரணமாகவே ஏனையோருக்கு வழங்கப்படும் ‘தண்டனைக் குறைப்பை’ அனுமதிக்க முடியாது என்றும் கூறுவது சரியான கருத்து அல்ல. தண்டனைக் குறைப்புக்கு சட்டபூர்வமான விதிகள் ஏதும் கிடையாது. தண்டனைக் குறைப்பு கோருவோரின் நடத்தை, குற்றமிழைத்ததற்கான சூழ்நிலை, கடந்தகால குற்றச் செயல்கள், சமூக மற்றும் குடும்பப் பின்னணி போன்றவை கவனத்தில் எடுத்துத்தான் தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது.

•              1967 ஆம் ஆண்டு 35வது சட்ட ஆணையத்தின் அறிக்கையில் இந்தியா போன்ற பெரிய பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் மரண தண்டனை தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஜெகமோகன் வழக்கில் மரணதண்டனை சட்டபூர்வமாக நிலைநிறுத்தப்பட்டது. 1980 இல் பச்சன்சிங் வழக்கில் அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே மரணதண்டனை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் அதே சட்ட ஆணையத்தின் பரிந்துரை தான் சுட்டிக்காட்டப்பட்டது. 1967க்குப் பிறகு உலகில் பல நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. மாறி வரும் சர்தேச சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய சட்ட ஆணையம் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

•              ஆயுள் தண்டனை என்றால் வாழ்நாள் இறுதி வரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தண்டனைக்கான நடைமுறைகளை நீதிமன்றமே வகுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கெல்லாம் சட்டங்கள் கிடையாது. வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டும் என்பது, ஒரு கைதியின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரிடமோ, 161வது பிரிவின் கீழ் மாநில ஆளுநரிடமோ தண்டனைக் குறைப்போ அல்லது பொது மன்னிப்பையோ கோரும் உரிமையை இதனால் ஒரு கைதி இழந்து விடுகிறார். இது 21வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது.

•   தூக்குத் தண்டனை வழங்கும் வழக்குகளை குறைந்தது மூன்று நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். அனைவரும் ஒருமித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்; தீர்ப்புகள் மாறுபட்டிருந்தால் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது என்பதே என் கருத்து.

•  காந்தி, தாகூர், அம்பேத்கர், நேரு போன்ற மகத்தான தலைவர்களின் கொள்கைகளை உண்மையாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழுமையடையும். அவர்களின் படங்களுக்கு மாலை அணிவிப்பதால் மட்டும பயனில்லை. காந்தியை தேசத் தந்தையாக நாம் ஏற்கிறோம். ஆனால், தூக்குத் தண்டனை தேசத் தந்தை கொள்கைக்கு எதிரானது அல்லவா?