கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாம் குரல் கொடுக்கிறோம். மாநில அரசோ அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.


மாநிலத்திற்கோ அதை ஆளும் அரசுக்கோ ஆளும் கட்சிக்கோ கல்விக் கொள்கை என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்று பார்த்தால் கொள்ளை ஒன்றுதான் கொள்கை என்றாகிவிட்டது. நடுவணரசிற்கும் இதில் விதிவிலக்கு இல்லை.


நடுவணரசு திணிக்கும் புதிய புதிய கல்விக்கொள்கைகளால் மாநிலங்களின் நலன்கள் பறிக்கப்படுகின்றன. மாநிலங்களை ஆளும் கட்சிகள் இவற்றை எதிர்த்து வாய்திறக்க மறுக்கின்றன. நடக்கும் கொள்ளையில் இரண்டிற்கும் பங்கு கிடைக்கிறது.


நடுவணரசு அனைவருக்கும் கல்வித் திட்டம் என்று கொண்டு வந்தது. அரசியலமைப்புச் சட்டப்படி பதினான்கு அகவை வரை மாணவர்க்குக் கட்டாய இலவயக் கல்வி வழங்க வேண்டும். நாட்டை ஆளுகிறவர்களுக்கு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது நினைவுக்கு வருகிறது. அதற்காக ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடியைக் கொட்டி அழுகிறார்கள். பெருந்தொகையை ஆளும் கும்பலே தின்று ஏப்பம் விட்டுவிடுகிறது. வழக்கம்போல் நாட்டில் கல்வி கற்காதார் எண்ணிக்கை அறுபது விழுக்காட்டைத் தாண்டியே நிற்கிறது.


இப்போது இடைநிலைக் கல்வித் திட்டம் வருகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழியிலேயே நடக்கிறது. ஆனால் இடைநிலைக் கல்வித்திட்டம் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் நடத்தப்படும் என்று நடுவணரசு அறிவித்துள்ளது. மாநில அரசு வாயை மூடிக்கொண்டு இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு. இடைநிலைக் கல்வித் திட்டம் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மேனிலைக் கல்வி மாணவர்களுக்கு. இதற்கும் முப்பதாயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநின்ற மாணவர்களை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று அரசு திட்டமிடுகிறது. திட்டமிடுவதோடு சரி. திட்டத்தை நிறைவேற்றுவது யார்?


திட்டமிடும்போதே பணத்தைக் கொள்ளையடிக்கும் திட்டமும் உடன் வகுக்கப்படுகிறதே ஒழிய, திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை.


இந்திய அரசு வெளிப்படையாகச் சொல்லாமல் மாநிலங்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்துவருகிறது. இந்தியா பல மாநிலங் களின் ஒன்றியம் - இந்திய அரசு ஒன்றிய அரசு என்ற நிலை ஏட்டில்தான் உள்ளது. ஆளும் இந்திய அரசு இந்தியாவை ஒற்றை நாடாக ஆக்கும் முயற்சியில் மறைமுகமாகக் களமிறங்கிச் செயல்படுகிறது. அதன் வெள்ளோட்டம்தான் இலங்கையில் தமிழீழத்தை அழித்த கதை.


மாநிலத் தன்னாட்சி பேசிய திராவிடக் கட்சிகள் சிறு முணுமுணுப்பும் இல்லாமல் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற இந்திய ஆளும் கும்பலின் குரலை ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இக் கட்சிகளுக்குப் பழைய சொரணை கொஞ்சமும் இல்லை.


நடுவண் கல்வியமைச்சர் கபில்சிபல் அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து அவ்வப்போது அறிவித்து வருகிறார். நாடாளுமன்றத்தில் கட்டாயக் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதக்காலம் ஆகிறது.


தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று அரசு கல்வியைப் பகுத்து எல்லாத்துறைகளிலும் தனியாரை இறக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பல்வேறு கல்வி வாரியங்களின் பொதுத்தேர்வு முறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இனி பன்னிரண்டாம் வகுப்பில்தான் பொதுத்தேர்வு. இதையும் நடுவணரசு ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களிலும் கணக்கு, அறிவியல், வணிகவியல் பாடங்களுக்குப் பொதுப் பாடத்திட்டமும் பொதுத் தேர்வுமுறையும் இந்திய அளவில் கொண்டு வரப்படவுள்ளன. இதனால் ஒற்றை இந்தியாவைக் கட்டமைக்கலாம் என்று அரசு நம்புகிறது.


பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு என்ற நிலையை அடுத்து இந்தியா முழுவதும் உயர்கல்விக்கு - தொழில் நுட்பக் கல்விக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்தவும் முடிவு செய்துள்ளது. எப்படியும் இந்த முடிவுகளை நடுவணரசு செயல்படுத்துவதில் உறுதியாகவுள்ளது.


பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழக அரசு தேவைக்கு மிகுதியாகப் பொறியியல் கல்லூரிகளைத் தமிழ்நாட்டில் தொடங்கி ஓரிலக்கத்து இருபதினாயிரம் பேரைச் சேர்த்துள்ளது. நானூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள். இனித் தமிழ்நாட்டிற்குப் பொறியியல் கல்லூரி தொடங்க இந்தியத் தொழில்நுட்பக் குழுமம் இசைவு தரவேண்டாம் என்று தமிழக அரசு அறிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. கல்விக் கொள்ளை கணக்காக நடைபெறுகிறது. பொறியியல் முடித்து வெளிவரும் இலக்கக்கணக்கான மாணவர்களுக்கு யார் வேலை தரப்போகிறார்கள்?


தமிழ்நாட்டுப் பொறியியல் கல்லூரிகளில் அண்டை மாநில மாணவர்களும் வடமாநில மாணவர்களுந்தான் பெரும்பான்மையாகப் படிக்கிறார்கள். பொறியியல் கல்வி ஆங்கிலத்தில் இருப்பதனால் தமிழ்வழியில் படித்துச் சென்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது.


இப்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தனியார்தான் கல்விக் கொள்ளையில் முன்னிற்கிறார்கள். இனி உயர்கல்வியில் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களும் போட்டிக்கு வரப்போகின்றன. இந்தியாவின் கல்விக் கொள்கை இந்திய மக்களுக்கா உலக மக்களுக்கா என்று தெரியவில்லை.


எல்லாத்துறையிலும் உள்ள போலிகளைப் போலவே கல்வித் துறையிலும் தரமற்ற சுரண்டும் உலகப் பல்கலைக் கழகங்கள் களமிறங்கவுள்ளன. கழித்துக்கட்டப் பட்ட பல்கலைக்கழகங்கள் வெறும் பெயர்ப்பலகைகளோடு வந்து நம்மைச் சுரண்டப்போகின்றன.


கல்வியில் தனியார் தலையீட்டைத் தவிர்க்க முடியாது என்று கூறுவதோடு அவர்களுடைய பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் அரசுகள் வேண்டி விரும்பி வரவேற்கின்றன. கல்வித்துறையில் தனியாரை ஊக்குவிப்பதே இவர்கள் கொள்கையாகிவிட்டது.


இதனால் தனியார் அடிக்கும் கொட்டம் அளவிடமுடியாதது. பள்ளி மாணவர்களுக்கு ஓரிலக்கம் உருவா வரை கட்டணம் வாங்குகிறார்கள். கேட்டால் எங்கள் உள்கட்டமைப்பு ஏந்துக்கு இவ்வளவு தொகை வேண்டும் என்று கூசாமல் கூறுகிறார்கள்.


தமிழக அரசு நடுவர் கோவிந்தராசன் தலைமையில் குழு அமைத்துக் கட்டணத்தை வரையறுக்கக் கூறியது. குழு வகுத்தளித்த கட்டணத்தை எதிர்த்து ஆறாயிரம் பள்ளிகள் முறையீடு செய்துள்ளன. பதினிலைப் பள்ளிகள் மூவாயிரம் கூட இல்லையென்று தமிழக அரசு சொல்லிவந்தது. இப்போது பன்னிரண்டாயிரம் பள்ளிகள் இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. அண்டை மாநிலங்களில் பதினிலைப் பள்ளிகள் என்ற முறையே இல்லை. விரும்பும் மாணவர்கள் அரசுப் பாடத்திட்டத்தில் இயங்கும் ஆங்கில வழிப் பள்ளியில்தான் படிக்க முடியும்.


தமிழக அரசின் கையாலாகாத்தனத்தால் அல்லது கையூட்டு பெறுவதால் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கொட்டம் அரசை மிரட்டும் அளவிற்குச் சென்றுவிட்டது. ஐந்தாம் வகுப்புவரை கட்டாயத் தமிழ்வழிக் கல்வி என்று நாம் போராடிப் பெற்ற ஆணையைத் தமிழக அரசால் காப்பாற்றி நடைமுறைப்படுத்த முடியவில்லை. தனியார் பள்ளிக் கல்விக் கொள்ளையர்கள் உச்ச வழக்குமன்றம் வரை சென்று அதை முறியடித்துவிட்டார்கள். அரசு மேல்முறையீடு செய்யாமல் கண்டுகொள்ளாமல் உள்ளது. பொன்முட்டை இடும் வாத்தைக் கொலைசெய்வார்களா என்ன?


இத்தகு கொள்ளைகள் எத்தனை நடந்தாலும் நாம் மனந்தளராமல் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்குத் துணையாகத் தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டும். இன்றைக்கும் எண்பது விழுக்காட்டு மாணவர்கள் தமிழ்வழியில்தான் படிக்கிறார்கள். நாற்பத்து மூன்றாண்டுக் காலத் திராவிட ஆட்சியில் இருபது விழுக்காட்டினரை ஆங்கில வழிக் கல்வியில் தள்ளிவிட்டார்கள்.


ஆங்கில வழிக் கொள்ளையில் இன்னார் இனியார் என்றில்லை. எல்லாக் கட்சிக்காரர்களும் எல்லாச் சாதிக்காரர்களும் எல்லா மதத்துக்காரர்களும் எல்லா மொழிக்காரர்களும் எல்லா நாட்டுக்காரர்களும் களமிறங்கிச் செயல்படுகிறார்கள். தமிழ்நாடு இதைத் தாங்குமா என்று ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இந்தப் பாழுங் கல்விக்கொள்கைக்கிடையிலும் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறதென்றால் அது இன்னும் ஏழை எளிய உழைக்கும் மக்களோடு ஒட்டிக்கொண்டிருப்பதனால்தான் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?


இவர்கள்தான் தமிழர்கள். இந்த மக்களின் முன்னேற்றத்திற்காகத் திட்டமிட்டுப் பணிபுரிய வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகள் பல இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் பணிபுரிகின்றன. தங்கள் பாதைதான் தமிழர்களை மீட்கும் பாதை என்று நம்புகின்றன. அந்த நம்பிக்கைக்குள் நாம் தலையிட வேண்டாம். அவரவர்களுடைய பட்டறிவுக்கேற்பத் தமிழர்களை அணிதிரட்டட்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையான கல்வியில் - தமிழ்வழிக் கல்வியில் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குக் கருத்து வேறுபாடு இல்லை. இந்தத் தளத்திலிருந்தாவது தமிழர்களை ஒன்றிணைக்கக் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது நம் விருப்பம்.

 

 

 

Pin It