பெண்கள் 21 வயது ஆகும் வரையில் தாங்களாகவே தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கக் கூடாது என்று கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் பகுதி நடுவர் ஆய நீதிபதிகள் கருதுகின்றனர். அரசியல் சட்டத்தின்படி, பெண்களுக்குத் திருமணம் செய்ய வயது 18 முடிந்து இருக்கவேண்டும். இருந்தாலும் அவர்களுக்கு 21 வயதுக்கு முன் காதலித்து தாங்களாகவே துணையைத் தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவம் போதாது என்றும் சொல்கிறார்கள்.

பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்திற்கு 18 வயது ஆகி இருக்கவேண்டும் என்றும், காதலித்துத் திருமணம் செய்ய 21 வயது முடிந்திருக்க வேண்டும் என்றும் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் நடுவர் ஆய நீதிபதிகள் முன்மொழிகிறார்கள். 21 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு தான் விரும்பும் ஆண் தனக்குத் தகுதியானவனா என அறிவார்ந்த, விவேகமான முடிவெடுக்க இயலாது எனவும் கருதுகிறார்கள்.

பருவ வயதில் ஏற்படும் உடல் உறுப்புகளை உசுப்பி விடுகிற Hormone சமநிலை மாற்றத்தால் பெண்கள் ஆண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுகிறார்கள் என்றும், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக காதல், திருமணம் என்று தாங்களாகவே முடிவெடுத்து பின்னாளில் வருந்தி வேதனைப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்து திருமணச் சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சமயத்தில் காதல் திருமணம் பற்றி எதுவும் முடிவெடுக்கவில்லை என்று கர்நாடக மாநில நடுவர் ஆய நீதிபதிகள் K.பக்தவட்சலாவும், K.  கோவிந்தராஜுலுவும் தெரிவிக்கின்றனர். இந்து திருமணச் சட்டம் காதல் திருமணம் பற்றி எந்த நிலைப்பாடும் எடுக்காத பட்சத்தில், காதல் திருமணத்தின் விளைவாக பெண்களும், பெற்றோர்களும் பாதிக்கப்படாத வண்ணம் தகுந்த சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றும் தெரிவிக்கிறார்கள்.

21 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பெற்றோர் விருப்பத்தை மீறி ஓடிச் சென்று தன்னிச்சையாக முடிவெடுத்துத் திருமணம் செய்வதை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

(ஆதாரம்: 07 Jun, 2011 தேதியில் Yahoo Education பகுதியில் வெளியான செய்தியிலிருந்து)

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)