மிகச்சிறந்த பகுத்தறிவாளர்; பிரிட்டன் நாட்டுத் தத்துவமேதை; பத்தொன்பதாம் நூற்றாண்டின் சுதந்திரச் சிந்தனையாளர்; மத மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியப் பாடுபட்டவர்; பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முதன் முதல் குரல் எழுப்பியவர்; அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியவர்; ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என வாதாடியவர்; ‘அறிவுச் சோம்பேறித்தனம் கண்டுபிடித்ததே கடவுள்’ எனக் கூறியவர்.   சிந்திக்க மறுத்த பழமைவாதிகளைத் தோலுரித்துக் காட்டியவர்; ‘எந்தவொரு கருத்தையும் பிறர் மீது திணிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது’ என்று அறிவித்தவர்.  அவர் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஜான் ஸ்டூவர்ட் மில்’.

                ஜான் ஸ்டூவர்ட் மில் 20.05.1806 ஆம் நாள், இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகருக்கு அருகில் உள்ள பென்டன்விலி என்னும் ஊரில், ஜேம்ஸ்மில் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.  தமது தந்தையிடம் கல்வி கற்றார்.  சிறந்த அறிவுள்ள மனிதராக உருவாகும் வகையிலும், சமூகத்திற்குப் பயனுடையவராக விளங்கும் வகையிலும் வளர்க்கப் பட்டார். 

                தமது சிறுவயதிலேயே, சாக்ரடீசின் கருத்துகள், பிளாட்டோவின் உரையாடல்கள், லூசியன், டயோஜெனிஸ், ஸாரிடஸ் முதலிய தத்துவ மேதைகளின் நூல்கள் ஆகியவற்றை விரும்பிப் படித்தார்.  மேலும், லத்தீன், கிரேக்கம்  முதலிய மொழிகளையும் கற்றார்.  பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ ஆகியோரின் பொருளாதாரச் சிந்தனைகளையும் தேடித் தெரிந்துகொண்டார். 

                தமது பதினான்காவது வயதில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று ஓராண்டு தங்கினார்.  அங்கு ஒரு பேராசிரியரின் உதவியோடு வேதியியல், விலங்கியல், மேல்நிலைக் கணிதம் முதலியப் பாடங்களைப் பயின்றார். 

                ஒரு பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்படும் அனைத்துக் கலைகளையும் கற்ற இவர், அக்காலத்தில் சிறந்து புகழ் பெற்று விளங்கிய ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க மறுத்துவிட்டார்.  அதற்குக் காரணம், அங்கே பிறப்பிக்கப்படும் கிறித்துவக் கட்டளைகளை ‘வெள்ளைப் பிசாசு’களிடம் இருந்து பெற்றிட அவர் விரும்பாததேயாகும். 

                அவரது தந்தை ஜேம்ஸ் மில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணி புரிந்தார்.  அவர் அரசியலிலும், நீதித் துறையிலும் சீர்திருத்தம் வேண்டுமென குரலெழுப்பினார்.  ‘இந்திய வரலாறு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.  அவரது தந்தை தன் நண்பர், ‘ஜோமி பென்தாம்’ என்பவருடன் இணைந்து, தமது கொள்கைகளையும், கருத்துக்களையும் பரப்பிட இதழ்கள் நடத்தினார்.  ஜான் ஸ்டூவர்ட் மில்லும் அவர்களுடன் இணைந்து ‘லண்டன் ரெவ்யூ’ என்னும் இதழை நடத்தினார்.  அந்த இதழ் சீர்திருத்தத்தை விரும்பும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. 

                தாமஸ் கார்லைல், ஸ்பென்சர் முதலிய அறிஞர் பெருமக்களின் படைப்புகளைத் தேடிப் படித்துத் தமது அறிவை வளர்த்துக் கொண்டார். 

                தமது தந்தை வேலைபார்த்த கிழக்கிந்திய கம்பெனியில், சேர்ந்து, இருபது ஆண்டுகள் பணி புரிந்தார். 

                ஜான் ஸ்டூவர்ட் மில், ‘ஹாரியட் டெய்லர்’ என்னும் பெயர் கொண்ட விதவைப்

பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார்.  அவரது துணைவியார் ‘ஹாரியட் டெய்லர்’, பெண்களுக்கான உரிமைகள் குறித்து குரல் எழுப்பவும், நூல் எழுதவும், இவருக்குத் தூண்டுகோலாக விளங்கினார்.  ஏழு ஆண்டுகள் மட்டுமே இருவரும் இணைந்து வாழ்ந்தனர்.  ஹாரியட் டெய்லர் திடீரென்று  உடல் குறைவினால் 1853 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.  

                இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பாராளுமன்றத்தில் 1867 ஆம் ஆண்டின் சீர்திருத்தச் சட்டம் விவாதிக்கப்பட்ட போது, ‘மனிதன்’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘நபர்’ என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

                இன்று பெண்களும் தலைமைப் பொறுப்புக்கு வந்து விட்டனர்! ஆகவே, ‘சேர்மன்’ என்று எழுதுவதற்குப் பதில் ‘தலைவர்’ எனப் பொதுச்சொல்லால் குறிப்பிட வேண்டும் எனும் உணர்வு ஏற்பட்டுவிட்டது.  ஆனால், 1867 ஆம் ஆண்டு, ‘ஜான் ஸ்டூவர்ட் மில்’ எழுப்பிய குரல், அன்று புதுமையாகவும் புரட்சியாகவும் இருந்தது.  ஆணாதிக்கத்திற்கு சாவுமணி அடிப்பதாகவும் இருந்தது.

                பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என உலகிலேயே முதன் முதலிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் ஜான் ஸ்டூவர்ட் மில், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இதற்காகவே வாதாடினார். 

                ஆன்ட்ரூ பல்கலைக் கழகத்தில் ‘ரெக்டர்’ (Rector) பதவிகயையும் வகித்தார்.  கலாச்சாரம், பண்பாடு முதலியன குறித்தும் பல்கலைக் கழகத்தில் சிறப்புமிகு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

                “மனிதன் தன்னை அடிமையாக்கிக் கொள்ளும் வகையில் தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளக் கூடாது’’ என்று  முழங்கினார்.

                ‘பெண்களின் அடிமைத்தனம்’ (Subjection of Women) என்ற நூலை எழுதி வெளியிட்டார்.  அந்த நூல் மிகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  போகப் பொருளாக பெண்கள் பாவிக்கப்படுவதை கண்டித்தும், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் உலகுக்கு உணர்த்திய முதல்நூல் அது, என்று வரலாற்று அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர்.

                “பாலினத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு கிடையாது.  இருவரும் சமமானவர்களே’’- என்று மில் கூறினார்.  மேலும், ‘மானுடத்தின் மதம்’ (Religion of Humanity) என்ற கொள்கையைப் பரப்பினார்.

- பி.தயாளன்