டைகிரிஸ் மற்றும் யூப்பிரடீஸ் நதிகளின் இரு கரையோரம் இருந்த நகரங்களில் பாபிலோன் நகரமும் ஒன்று. சுமேரிய மற்றும் அக்கேடிய நாகரீகங்களின் காலகட்டத்தில் ஊர், ஊர்க், கிஷ் மற்றும் அக்கேட் நகரங்கள் அரசியல் அதிகாரத்தில் முதன்மை நகரங்களாக இருந்து, இரு நதி கரையோரம் இருந்த மற்ற நகரங்களை வென்று, அடக்கி, பெரும் பேரரசுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இந்த நகரங்களின் வரிசையில் அடுத்து வருவது பாபிலோன். இந்த நகரின் எழுச்சியே மெசபட்டோமியாவில் பாபிலோனிய நாகரீகத்தை உருவாக்கியது. கி.மு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் ஊருக் வம்சாவளியின் வீழ்ச்சியுடன் மெசபட்டோமியாவில் சுமேரிய நாகரீகம் முழுவதுமாக முடிவிற்கு வந்தது. இதை முடிவிற்கு கொண்டுவந்தவர்கள் அமோரைட் இனக் குழு மக்கள். அரேபிய வளைகுடா பகுதியிலிருந்து மெசபட்டோமிய பகுதி நகரங்களுக்குள் ஊடுருவியவர்கள் அமோரைட் மக்கள்.

இவர்களின் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகள் பாபிலோன் நகரை மெசபட்டோமிய பகுதி அரசியல் அதிகாரப் போட்டியில் முதன்மை இடத்திற்குக் கொண்டு வந்தது. இது நடந்தது கி.மு. 1820-ல். இதைத் தொடர்ந்து பதினொரு வெவ்வேறு இனக் குழு மக்களின் அரச வம்சாவளிகள் பாபிலோனை முதன்மையாகக் கொண்டு மெசபட்டோமிய பகுதியை ஆண்டிருக்கிறார்கள். கி.மு. 1820 தொடங்கி கி.மு. 539 முடிய சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் இது நீடித்திருக்கிறது. பிறகு பாபிலோன் அலெக்சாண்டரின் கைகளுக்குள் சென்றுவிட்டது. பாபிலோனை ஆண்ட மத்திய கிழக்கின் முக்கிய இனக் குழுக்கள் அமோரைட் (இவர்களை கானானியர்களின் ஒரு கிளை என்று சொல்பவர்களும் உண்டு), காசைட், எலமைட், அசிரியர்கள் மற்றும் சால்டியன். அம்முராபி, நெபுசாண்ட்நேசர், பிளைசர் என்று பல வரலாற்று புகழ்ப்பெற்ற அரசர்கள் பாபிலோனை ஆட்சி செய்திருக்கிறார்கள். அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளில் சுமேரிய, அக்கேடிய நாகரீகங்களின் தொடர்ச்சியாகவே பாபிலோனிய நாகரீகம் விளங்கியிருக்கிறது.

பாபிலோனிய கலை காலகட்டங்கள்

பழைய பாபிலோனிய காலகட்டம், இடை பாபிலோனிய காலகட்டம் (காசைட் கலை) மற்றும் புது பாபிலோனிய காலகட்டம் என்று மூன்று வகையாக பாபிலோனிய கலை வரலாறு பிரிக்கப்படுகிறது.

பழைய பாபிலோனிய காலகட்டம் கி.மு. 1792 - 1595

கட்டிடக் கலை

இந்த காலகட்ட கட்டிடக் கலைக்கு உதாரணமாக இருக்கும் எத்தகைய கட்டிடங்களும் இப்போது கிடைக்கவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் இந்த காலகட்ட கட்டிடங்களின் அடிப்படை அமைப்புகளும் கூட குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. இந்த காலகட்டத்தின் புகழ் பெற்ற அரசனான அம்முராபியின் அரண்மனை எச்சங்களும் கூட தற்பொழுது நமக்கு கிடைக்கவில்லை.

சிற்பக் கலை

மூன்றாம் ஊருக் வம்சாவளி (சுமேரிய பின்நவீனத்துவ காலகட்டம்) கலைகளின் மீட்சியாகவே பழைய பாபிலோனிய சிற்பங்கள் இருக்கின்றன. கடவுளர் தொடர்பான கதைகளும், அரசர்களின் போர் வெற்றிக் காட்சிகளுமே சிற்பக் கலையின் பேசுபொருள்கள். ஆனால் பாபிலோனிய சிற்பிகள் கூடுதலாக ஒரு அம்சத்தையும் தங்களின் சிற்பங்களில் சேர்த்துக்கொண்டார்கள். அவைகள் மந்திர சடங்கு சார்ந்த குறியீடுகள் மற்றும் குறியீட்டு உருவங்கள் (ஒருவகையில் மேஜிகல் ரியலிச வகைப்பாட்டை சேர்ந்தவைகள் என்று கொள்ளலாம்). இந்த குறியீடுகள் மற்றும் குறியீட்டு உருவங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் குறித்த ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. இவைகள் இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கின்றன. கலை என்கிற தளத்தில் இல்லாமல் மனித வரலாற்றின் முக்கிய நிகழ்வு என்பதன் அடிப்படையில் உலகப் புகழ்பெற்ற புடைப்பு சிற்பம் அரசன் அம்முராபியின் கற்பலகை. இந்த கற்பலகை ஒரு வகையில் மனித சமூகத்தின் முதல் சட்டப் புத்தகமாக கருதப்படுகிறது. அம்முராபி தன் குடிமக்களுக்கான சட்டங்களை வகுத்து அதை மக்களுக்கு வழங்கிய நிகழ்வு இந்த கற்பலகையில் புடைப்பு சிற்பமாக காட்டப்பட்டிருக்கிறது. அத்தோடில்லாமல் அம்முராபி வகுத்த சட்டங்களும் இந்த கற்பலகை முழுவதிலும் குனிபார்ம் எழுத்து வடிவில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

ammurabi sculpture

(அரசன் அம்முராபி உருவாக்கிய சட்டங்களை கொண்ட கற்பலகை. சாமஷ் கடவுளிடமிருந்து அம்முராபி சட்டங்களைக் கேட்கும் காட்சி சித்தரிப்பு)

சுமேரிய பின்நவீனத்துவ கால, மாரி அரண்மனை ஓவியத்தில் நாம் கண்ட ஃபோர்ஷார்டனிங் உத்தி இந்த புடைப்பு சிற்பத்தில் தொடக்க அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த சிற்பத்தின் அடுத்த சிறப்பு. சாமஷ் கடவுளின் (உட்கார்ந்திருக்கும் உருவம்) கிரீடத்தை முப்பரிமாணத் தோற்றத்தில் காட்ட ஃபோர்ஷார்டனிங் உத்தியை இந்த புடைப்பு சிற்பத்தை வடித்த கலைஞர்கள் சோதனை முயற்சியாக பயன்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். சாமஷின் முகத் தாடியும் கூட இதே முறையில்தான் வடிக்கப்பட்டிருக்கிறது. அருவிபோல தத்ரூபமாக வழிந்தோடும் தோற்றத்தை தரும் அம்முராபியின் உடை செதுக்கிக் காட்டப்பட்டிருக்கும் நேர்த்தியும் அழகும் பாபிலோனிய சிற்பக் கலைக்கான உதாரணங்கள். அம்முராபியின் உடை காற்றில் அழைத்தாடும் தோற்றத்தை உண்டாக்கி இந்த புடைப்பு சிற்பத்தில் இயங்கியலை (மூவ்மெண்ட்) வெளிப்படுத்துகிறது. இந்த காலகட்டத்தின் அடுத்த பிரசித்திப்பெற்ற புடைப்பு சிற்பம் இஸ்தார் கடவுளுடையது. இது மாரி அரண்மனை வளாகத்திலிருந்து அகழ்வாராய்ச்சியின்போது பெறப்பட்டது.

istar god

(இஸ்தார் கடவுளின் புடைப்புச் சிற்பம்)

இது புடைப்புச் சிற்பம் என்றாலும் இஸ்தார் கடவுளின் உடலில் வெளிப்படும் கனப் பரிமாணம் (மாஸ்) காண்பவர்களை அசத்தக் கூடியதாக இருக்கிறது. மனித உருவத்தில் விலங்குகளின் உறுப்புகளை கலந்து வினோத வடிவங்களை (மேஜிக்கல் ரியலிச உருவங்கள்) உருவாக்குவது பாபிலோனிய சிற்பக் கலையின் தனிச் சிறப்புகளில் ஒன்று. அந்த வகையில் இங்கே இஸ்தார் கடவுள் பாதி மனித உருவத்திலும், மீதி ஆந்தையின் உருவத்திலும் காட்டப்பட்டிருக்கிறார். இஸ்தார் கடவுளின் கீரிடத்திலும் ஃபோர்ஷார்டனிங் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முழு உருவ சிலைகளைப் பொருத்தவரையில் இந்த காலகட்ட சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது நீர் கடவுளின் ஆள் உயர சுண்ணாம்பு கல் சிற்பம்.

babylonian god

(பாபிலோனிய நீர் கடவுளின் முழு உருவ ஆளுயர சிலை)

ஓவியக் கலை

இந்த காலகட்டத்தின் சிறப்பாக அடையாளம் காணுமளவிற்கு ஓவியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் சுமேரிய பின்நவீனத்துவ காலகட்டத்தைச் சேர்ந்த மாரி அரண்மனை சுவர் ஓவியங்களே பழைய பாபிலோனிய ஓவியக் கலைக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

இடை பாபிலோனிய காலகட்டம் (காசைட் கலை) கி.மு. 1595 - 985

அரோமைட்டுகள் உருவாக்கிய பழைய பாபிலோனிய பேரரசை ஹிட்டைட்டுகள் போர் நடவடிக்கைகளின் மூலம் முடிவிற்கு கொண்டுவந்தார்கள். இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட காசைட்டுகள் பாபிலோனின் அரியணையில் வந்து அமர்ந்தார்கள். இதைத் தொடர்ந்து சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு பாபிலோன் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.

கட்டிடக் கலை

மெசபட்டோமிய கட்டிடக் கலையில் மீண்டும் ஒரு புதுவகை மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் காசைட்டுகள். அச்சில் வார்க்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கோயில்களையும், அரண்மனைகளையும் கட்டி எழுப்பினார்கள். கட்டிட சுவர்ப் பகுதியில் செங்கற்களைக் கொண்டே புடைப்பு சிற்பங்களை உருவாக்கியது இவர்களின் தனிச் சிறப்பு. மேலும் கோயில் கட்டிட அடிப்படை அமைப்பிலும் சில மாறுதல்களை செய்தார்கள். அதேபோல காசைட் அரண்மனை கட்டிடங்களும் பல மாறுதல்களைக் கொண்டிருந்தன. ஆனால் அவைகள் முழு வடிவில் கிடைக்கவில்லை. தர்-குரிகால்சு இடத்திலிருக்கும் அரண்மனை அரையும், குறையுமாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த கட்டிடத்தின் மேல் சிதிலமடைந்து நிற்கும் செங்கல் குன்று என்ன வடிவத்திலிருந்திருக்கும் அல்லது எதற்காக அந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறித்து இன்றைக்கு தெளிவான முடிவுகளுக்கு வருவதில் பிரச்சினை நீடிக்கின்றது.

inin god temple

(ஊர்க் நகரில் இருந்த இனின் கடவுளின் கோயில் கட்டிடச் சுவரின் சிதிலமடைந்த ஒரு பகுதி. இது காசைட் அரசன் காரையின்டாஷ் கட்டியது)

babylonian palace

(தர்-குரிகால்சு அரண்மனை வளாக நுழைவாயில்களில் ஒன்று)

சிற்பக் கலை

காசைட்டுகள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பாபிலோனை ஆண்டிருந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற முழு உருவ சிற்பங்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கிறது. இது நம் புருவங்களை உயர்த்தக் கூடிய சங்கதிகளில் ஒன்று என்றாலும், இது குறித்த தெளிவான கருத்துக்கள் ஏதும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அகழ்வாராய்ச்சிகளும் காசைட்டுகளின் முழு உருவ சிற்பங்களை வெளிக்கொண்டு வருவதாக இல்லை. கிடைக்கும் ஒன்று இரண்டு சிற்பங்களை வைத்துக்கொண்டு பார்க்கும்போது காசைட் சிற்ப கலைஞர்கள் சிற்பங்களில் ரியலிசத்தைக் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதற்கு உதாரணமாக சிங்க உருவ சிற்பத்தை சொல்லலாம். இது தர்-குர்கால்சு அரண்மனை வளாகத்திலிருந்து கண்டு எடுக்கப்பட்டது.

babylonian sculpture

(காசைட் கால சிற்ப உருவம்)

மெசபட்டோமிய நாகரீகம் கடந்த நான்காயிரம் ஆண்டுகளாக கண்டு வந்த முத்திரை மற்றும் கல்பலகை புடைப்பு சிற்பங்களை காசைட்டுகள் முற்றிலுமாக கைவிட்டுவிட்டார்கள். அடுத்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு இந்த இரண்டையும் காசைட்டுகள் மறந்தேவிட்டார்கள் என்றும் சொல்லலாம். இந்த இரண்டிற்கும் பதிலாக காசைட்டுகள் எல்லைக் கற்களாக பயன்படுத்திய குதுரூஸ் என்பதிலேயே புடைப்பு சிற்பங்களை செதுக்கினார்கள்.

babylonian wallpaint

(காசைட் கால சுவர் ஓவியம்)

புது பாபிலோனிய காலகட்டம் கி.மு. 629 - 539

கலை வரலாறு நோக்கில் பாபிலோனிய கலைகள் காசைட் வம்சாவளி காலகட்டத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரிகின்றன. ஒன்று அசீரிய கிளை, மற்றொன்று காசைட் கிளை. அசீரிய கிளை, காசைட் கிளையை பின்னுக்குத் தள்ளி ஒட்டுமொத்த மெசபட்டோமியாவின் முதன்மை கலையாக உருமாற்றம் அடைகிறது. அசீரிய கலை மெசபட்டோமிய நிலப்பகுதியில் கி.மு. ஏழாம் நூற்றாண்டு வரை வலிமையுடன் நிலைத்து அதற்கு பின்னான ஆண்டுகளில் வீழ்ச்சி அடைந்து காணாமல் போனது. அசீரிய கலையின் ஆதிக்கம் முடிவிற்கு வந்த பிறகு பாபிலோனில் பழைய சுமேரிய-அக்கேடிய கலைப் பாணி உயிர்த்தெழுகிறது. இதை புது பாபிலோனிய கலை என்று இன்றைக்கு வகைப்படுத்துகிறார்கள். ஒருவகையில் சுமேரிய கலையின் இரண்டாம் கட்ட பின்நவீனத்துவ எழுச்சி என்று இதைக் குறிப்பிடலாம். இந்த காலகட்டத்தைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க அரசன் நெபுகண்ட்நேச்சர் II-யின் கட்டிடங்கள் அன்றைய உலகின், உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பெற்றவைகள். வரலாற்றின் துர்அதிர்ஷடம் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டிடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் என்று எதுவும் முழுமையாக இன்றைக்கு கிடைக்கவில்லை.

ஆனால் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச விசயங்களைக் கொண்டு பார்க்கும்போது சுமேரியர்களின் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசத்தையே தங்களின் கலைப் படைப்புகளில் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள் இந்த காலகட்ட கலைஞர்கள். கட்டிக் கலையில் புதுமையாக இனாமல்ட் பிரிக் (சாயம் பூசப்பட்ட செங்கற்கள்)-களை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த செங்கற்கள் இன்றைக்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் போன்ற தோற்றத்தை கொண்டவைகள். நெபுகாண்ட்நேச்சர் கட்டிய கேட் ஆப் இஸ்தார் இத்தகைய செங்கற்களைக் கொண்டு கட்டிய கட்டிடத்திற்கு உதாரணம்.

இந்த சுவரில் சிங்கம், எருது மற்றும் டிராகன் போன்ற மிருகங்கள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச அடிப்படையில் புடைப்பு சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டிருக்கின்றன.

gate of istar(கேட் ஆப் இஸ்தாரில் இருக்கும் மிருகங்களின் புடைப்பு சிற்பம் மற்றும் ஓவியம்)

பழைய சுமேரியக் கலையை பிரம்மாண்டத்தை நோக்கி நகர்த்தி உலக கலை வரலாற்றில் என்றென்றைக்குமான நினைவுச் சின்னங்களாக நிலைபெற வைத்துவிட்டார்கள் இந்த காலகட்ட கலைஞர்கள். இதில் அடுத்து வருவது மர்டூக் சான்க்சுரி. இது நெபுகண்ட்நேச்சர் மர்டூக் கடவுளுக்கு கட்டிய கோயில். இதன் அந்திமக் கால கட்டிடப் பகுதிகளே இதன் பிரம்மாண்டத்திற்கான அடையாளமாக இன்றைக்கும் நம்மிடையே நின்று கொண்டிருக்கின்றன. இந்தக் கோயில் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்பதை இதன் மிஞ்சிய கட்டிட அடித்தளங்கள் உணர்த்துகின்றன.

marduk sanctuary temple

(மார்டுக் சான்க்சுரி கோயில்)

அடுத்த பிரம்மாண்டம் டவர் ஆப் பாபேல். இதன் மிச்ச சொச்சம் கூட இன்றைக்கு இல்லை. ஆனால் இந்த கோயில் எப்படி இருந்தது என்பதற்கான புற ஆதாரங்கள் இருக்கின்றன. அதைக்கொண்டு அனுமானமாக வரையப்பட்ட இந்த கோயிலின் ஓவியப் படங்கள் இருக்கின்றன.

மற்றொரு பிரம்மாண்டத்தை பற்றிக் குறிப்பிடாமல் புது பாபிலோனிய கலை வரலாற்றை முடிவிற்கு கொண்டு வர முடியாது. அது தொங்கு தோட்டங்கள். இது நெபுகாண்ட்நேச்சர் அவனுடைய மனைவிக்காக கட்டியதாக சொல்லப்படுகிறது. இதன் எஞ்சிய பகுதிகள் கூட வழமைபோல இன்றைக்கு கிடைக்கவில்லை.

babylonian garden

(நெபுகாண்ட்நேச்சர் கட்டிய தொங்கு தோட்டங்களின் அனுமான ஓவியம்)

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்