zoroastriasm

தெரிந்த விசயத்திலிருந்து தொடங்கி தெரியாத விசயத்தில் முடிப்பதா? இல்லை, தெரியாத விசயத்தில் தொடங்கி, தெரிந்த விசயத்தில் முடிப்பதா என்று இந்தக் கட்டுரையை எழுத (இப்பொழுதெல்லாம் யார் சார் எழுதுகிறார்கள்!) உட்கார்ந்தபோது சிறிது தயக்கம்... பிறகு தெரிந்த விசயத்திலிருந்தே தெரியாத விசயத்திற்குப் போகலாம் என்று முடிவு செய்து எல்லோருக்கும் தெரிந்த டாட்டா பிர்லா-வில் இருந்து தொடங்குகிறேன்.

அப்ப அது என்ன தெரியாத விசயம் என்றால் இந்தக் கட்டுரையின் தலைப்பை இதற்கு முன்பு நீங்கள் வேறு எங்கும் கேள்விப்படாதிருந்தால் அப்பொழுது அதுதான் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் தெரியாத விசயம். போன தலைமுறை மனிதர்கள், பண விசயத்தில் ஓட்டைக் கையாக இருப்பவர்களைப் பார்த்து ‘இவரு பெரிய டாட்டா பிர்லா... அப்படியே அள்ளிவிடராரு' என்று பல்லைக் கடிப்பதைப் பார்த்தோ, கேட்டோ இருக்கலாம். ஆனால் இந்த டாட்டா பிர்லாவின் பூர்வீகம் குறித்து கேள்விப்பட்டது கொஞ்சமாகத்தான் இருக்கும்.

அது என்ன வீகம், பூர்வீகம் என்றால் 200, 300 வருடப் பூர்வீகமெல்லாம் இல்லை... 3500-லிருந்து 3700 வருடங்களுக்கு முந்தைய பூர்வீகம் டாட்டா, பிர்லாக்களுக்குப் பின்னால் இருக்கிறது. உடனே நீங்கள் முதுகை நிமிர்த்திக் கொண்டு எழுந்து உட்கார்ந்தால், ஏன் இப்பொழுதே முதுகை விரைப்பாக்குகிறீர்கள் என்று கேட்கமாட்டேன். நான் சொன்னது டாட்டா, பிர்லாக்களுக்குப் பின்னால் என்று... அதாவது டாட்டாவும், பிர்லாவும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களோ அந்த இனத்திற்குப் பின்னால் 3700 வருட வரலாற்றுப் பழமை இருக்கிறது.

இந்தியாவில் இந்தியர்களில் ஒருவராக நம் சகோதரர்களாக இருக்கும் பார்சிகளைப் பற்றி நீங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். அவ்வளவாக உங்களுக்கு இவர்களைக் குறித்த அறிமுகம் இருந்திருக்காது. ஆனால் சிலரின் பெயரைச் சொன்னால் உடனடியாக உங்களுக்குத் தெரிந்துவிடும்... அதனால்தான் டாட்டாவையும், பிர்லாவையும் எடுத்தேன். இவர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மாத்திரம் அல்ல, இன்னும் பெயர் சொல்லும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களும் கூட உங்களுக்கு நன்றாகவே பரிச்சயம் ஆகியிருக்கும். ஆனால் அவர்களின் பெயரைக் கொண்டு ஒன்று அவர்களை இந்துவாகவோ அல்லது இஸ்லாமியராகோ அடையாளப் படுத்தியிருப்பீர்கள். உதாரணமாக, Ardeshir Godrej, இந்தியாவின் சிறந்த தொழில் குழுமங்களில் ஒன்றான Godrej குழுமத்தை நிறுவியவர். Farok Engineer சிறந்த கிரிக்கெட் வீரர். Homi Bhabha இந்திய அறிவியல் கழகத்தின் முன்னோடி மற்றும் Feroze Ghandhi, Dadabhai Naoroji.

இந்தியாவிற்குள் பார்சிகள் நுழைந்தது கி.பி. 8 தொடங்கி 10-ஆம் நூற்றாண்டுகளின் இடைவெளியில். இந்தியாவில் இவர்களைப் பார்சிகள் என்றாலும், பொதுவாக இவர்களை சொராஸ்டர்கள் (Zoroasters) என்பார்கள். இவர்களுக்கும் தஞ்சைப் பகுதியில் இருக்கும் சொவ்ராஸ்டிரர்களுக்கும் (Sourashtras) தொடர்பு கிடையாது. தஞ்சைப் பகுதி சொராஸ்டிரர்கள் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். மராட்டியர்களின் தென்னகப் படையெடுப்போடு சேர்ந்து தமிழகத்திற்கு வந்த குஜராத்திகள் சொவ்ராஸ்டிரர்கள் (Sourashtras).

சொராஸ்டர்கள் (Zoroasters), ஈரானைப் பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களின் பூர்வீகம் ஈரானின் வட மேற்குப் பகுதிகளில் இருந்து, கி.மு. 3800-களில் இடம் பெயரத் தொடங்கி, ஆரிய கால்நடை மேய்ப்போர் இனத்திலிருந்து தொடங்குகிறது. இடம் பெயரத் தொடங்கிய ஆரிய இனத்தின் ஒரு கிளையானது, அன்றைய ஈரானின் Sistan பகுதிகளுக்குள் நுழைந்தது. இப்படி கிளையாகப் பிரிந்த ஆரிய கால்நடை மேய்ப்போர் இனத்தின் ஒரு கிளை தான் கைபர் கணவாய் வழியாக வட இந்தியப் பகுதிகளுக்குள் நுழைந்தது. பிற்காலத்தில் அலை அலையாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தது வேறு வரலாறு.

ஈரான் பகுதிகளுக்குள் புகுந்த ஆரிய இனத்தின் குழுவிற்கு மதப் போதகராக இருந்தவர் Zarathustra. இவரின் பெயரிலேயே Zoroastrinism என்கிற மதம் உருவானது. கிரேக்கத்தில் இவரை Zoroaster என்பார்கள். இங்கே இருக்கும் Zarathustra-வின் ஓவியத்தைப் பார்த்ததும் தவிர்க்க முடியாமல் “I am the way, the truth and the life” என்று சொல்லும் இயேசுவின் ஓவியம் நினைவிற்கு வரலாம். இயேசு கிருஸ்துவிற்கு முன்பே Rightesouness குறித்து மிகவும் வலியுறுத்தியவர் Zarathustra.

இது மாத்திரம் அல்ல... Triad என்று சொல்லப்படும் Trinity (திரித்துவம்), இறுதித் தீர்ப்பு நாள், ஏக இறைத்துவம் என்று இப்படி பல விசயங்களைப் பற்றி Zarathustra கி.மு. 1500 வருடங்களுக்கு முன்பே Avesta என்கிற zoroaster-களின் புனித நூலில் சொல்லியிருக்கிறார். சரதுஸ்டரா (Zarathustra) மிகச் சரியாக எந்த காலகட்டத்தில் வாழ்ந்தார் என்பதில் குழப்பமே நீடிக்கிறது. அவர் வாழ்ந்த காலகட்டத்தைக் குறிப்பிடும் வரலாற்று தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைத்தபாடில்லை. ஆனால் இலக்கிய ஆதாரங்கள் ஏகப்பட்டது அவர் பற்றி இருக்கிறது. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான பிளைனி போன்றவர்கள் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். இதில் முக்கியமானது zoroaster-களின் புனித நூலான Avesta. இது ஏக இறைவன் மூலம் சரதுஸ்டராவிற்கு அறிவிக்கப்பட்டது என்று zoroaster-கள் நம்புகிறார்கள். இந்தப் புனித நூல் சரதுஸ்டராவிற்கும் ஏக இறைவன் என்று அவர் குறிப்பிடும் Ahura Mazda-விற்கும் இடையே நடக்கும் உரையாடல் அமைப்பில் அமைந்த நூல்.

சில ஆராய்ச்சியாளர்கள் சரதுஸ்டராவே Avesta-வை இறைவனுக்கும் அவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் தொனியில் எழுதியது என்று கருதுகிறார்கள். சரதுஸ்டரா ஒருவரா அல்லது பல பேர்கள் பல காலகட்டங்களில் இந்தப் பெயரில் இருந்தார்களா என்பதும் ஆராய்ச்சிக்குரிய விசயமாக இருந்து வருகிறது. கிரேக்க இலக்கியத்தில் மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல சிலர் சரதுஸ்டரா பெயரைப் புனைப் பெயராகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். Avesta 17 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் கதா (Gathas) என்று அழைக்கப்படுகிறது. பெயரில் சமஸ்கிருத வாடை வருகிறதே என்று நீங்கள் சற்று உங்களின் தேடல் புலனை உசுப்பிவிட்டிருந்தால் அது சரியே. நாம் முன்பே பார்த்ததுப் போல Zoroaster-கள் ஆரியர்களின் ஒரு கிளை இனம் என்பதால் அவர்களின் சிந்தனைகளிலும் மொழியிலும் சமஸ்கிருதத்தின் மூல மொழியே பெரிதும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

Avesta ஒட்டுமொத்தமாக 17 கதாக்களைக் கொண்ட ஒரு நூல் போல தோற்றம் அளித்தாலும், அதில் இரண்டு நூல்கள் இருப்பதை 19-ஆம் நூற்றாண்டில்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டார்கள். ஒன்றிற்கு Young Avesta (புதிய) என்றும், மற்றொன்றிற்கு Old Avesta (பழைய) என்றும் பெயர் கொடுத்திருக்கிறார்கள். புதிய அவெஸ்டா பெரும்பாலும் பழைய அவெஸ்டாவில் சொல்லப்பட்டுள்ளவைகளை திரும்ப சற்று திருத்தி சொல்வது போலவே அமைந்திருக்கிறது. பழைய அவெஸ்டாவின் காலம் கி.மு. 1700 -1200 என்றும், புதிய அவெஸ்டாவின் காலகட்டம் கி.மு. 1200 – 1000 என்றும் பொதுவாக வகை பிரித்திருக்கிறார்கள். இது மிகச் சரியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் ரிக் பாடப்பட்ட காலத்தை ஒத்திருக்கிறது. ஆரிய - திராவிடம் என்கிற கருத்தாடலே பெரிய மோசடி என்று மோசடியாகப் பேசும் உதடுகள் இத்தகைய பிற வரலாற்று ஆதாரங்களையும் சற்று படிக்க வேண்டும். படித்தாலும் மோசடி பேசிய உதடும், புரட்டு செய்யும் நாக்கும் சும்மாவா இருக்கும்!

ஈரானின் வட மேற்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்து கால்நடைகளை கிளப்பிக்கொண்டு பெரும் எண்ணிக்கையில் (என்ன சுமார் ஆயிரக் கணக்கில் இருக்குமா என்று நீங்கள் சிந்தித்தால் உங்கள் சிந்தனையில் சிறிது திருத்தம் வேண்டும். அது ஆயிரக் கணக்கில் அல்ல, இலட்சக் கணக்கில்) தென் கிழக்கு திசையில் நகரத் தொடங்கிய ஆரியர்களின் ஒரு பகுதி அன்றைய பெர்சிய (Persia) நிலப்பகுதியான Sistan-ற்குள் நுழைகிறது. இது இன்றைய Afghanistan, Uzbekistan மற்றும் Tajikistan பகுதிகளில் இருக்கிறது. இது கி.மு. 1800-களில் நடைபெறுகிறது. ஆரிய இனத்தின் ஒரு கிளையான Zoroaster-களின் பூர்வீகம், அதாவது அவர்கள் இடம் பெயர்ந்து பெர்சியப் பேரரசு பகுதிகளுக்குள் நுழைந்து, முதன் முதலில் தங்கிய இடம் Azerbaijan அல்லது Rag என்று Pahlavi ஏடுகள் சொல்கின்றன. Pahlavi என்பது அன்றைய அதாவது கி.மு. 800 – 200 நூற்றாண்டுகளில் பெர்சிய பேரரசில் பெர்சிய மொழியான Pahlavi-யை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம். இது பழைய ஆராமிக் (Aramaic) மொழியில் இருந்து வளர்ந்த மொழி.

Zoroaster-கள் Rag பகுதிக்குள் நுழைந்த காலகட்டங்களில் பெர்சிய நிலப் பகுதியில் மிகவும் பலம் வாய்ந்த பேரரசுகளாக இருந்தவைகள் பாபிலோனியா மற்றும் எகிப்து. இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் சிந்துவெளி திராவிட பேரரசுகளை மட்டுமே எதிர்கொண்டார்கள். ஆனால் Zoroaster-களின் நிலை வேறாக இருந்தது அவர்கள் நாலாபக்கமும் இரண்டு பேரரசுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்தானோ என்னவோ சிந்துவெளிக்குள் நிறையவேற்றிய சோமபான போர் சித்துவேலைகளை மத்திய கிழக்கு பகுதிகளுக்குள் காட்ட முடியவில்லை. ஆரிய இனத்தில் மதத் தேவைகளை நிறைவேற்ற தனியாக ஒரு பிரிவினர் உண்டு. ரிக் அவர்களை ரிஷிகள் என்று சொல்கிறது. அப்படியான ஒரு பிரிவில் இருந்து வந்தவராக சரதுஸ்டரா இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சரதுஸ்டராவைப் பொருத்த மட்டில் இந்த பூமியையும் பிரபஞ்சத்தையும் படைத்து காப்பது Ahura Mazda (Wise Lord). அப்படியே மாஸ்தா இரண்டு சக்திகளைப் படைக்கிறார். ஒன்று Spenta Mainyu மற்றது Angra Mainyu (Ahriman).

Spenta Mainyu அறச் செயல்களை, உண்மையை, ஒளியை, வாழ்வை விரும்பும் சக்தி. Mainyu அழிவை, வஞ்சகத்தை, இருளை, மரணத்தை விரும்பும் சக்தி. இந்த இரண்டு சக்திகளுக்கு இடையே நடக்கும் ஓயாத சண்டைதான் உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பதாக சரதுஸ்டிரா அவெஸ்டாவில் மறை பொருளாக உணர்த்துகிறார். மித்ராவையே Ahura Mazda என்று சரதுஸ்டிரா குறிப்பிடுகிறார். வருண மித்ராவேதான். ரிக்-கில் பரிச்சயம் உடையவர்களுக்கு இந்த மித்ரா யார் என்று தெரியும். வருண மித்ரா என்றால் இன்னும் நன்றாகவே தெரியும். ஆரியர்கள் மித்ராவையும், வருணாவையும் இரட்டைச் சகோதரர்களாகவே பாவித்தார்கள். சிந்துவெளிக்குள் புகும் காலகட்டங்களுக்கு முன்பாக பாடப்பட்ட ரிக் ஸ்ருதிகளில் வருண மித்ரா மிகவும் உயர்வாகப் போற்றப்படுகிறார்கள். வருண மித்ரா ஓளிக் கடவுளாக பார்க்கப்பட்டார்கள்.

ஆரியர்கள் சிந்துவெளிக்குள் புகுந்து, சிந்துவெளி திராவிடப் பேரரசுகளை எதிர்கொள்ளத் தொடங்கியதும், வருண மித்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்திரன் முக்கியத்துவம் பெறுகிறான். ரிக்-கில் இந்திரன் ஆரியர்களின் போர்த் தளபதிகளில் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிறான். இந்த இந்திரன் ஆரியர்களின் போர்த் தளபதியா அல்லது சிந்துவெளி திராவிட அரசர்களின் தளபதிகளில் ஒருவனா என்பது ஆராய்ச்சிக்குரிய விசயம். சில ஆராய்ச்சியாளர்கள் சிந்துவெளி திராவிட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டதன் காரணமாக இந்திரன் என்னும் திராவிட அரசன் ஆரியர்களுடன் சேர்ந்து கொண்டு தனது இனத்தை எதிர்த்தான் என்று கருதுகிறார்கள். இது இந்த கட்டுரைக்கு அப்பாற்பட்ட விசயம் என்பதால் மீண்டும் மித்ர வருணாவிற்கே செல்வோம்.

சரதுஸ்டரா வருணனைக் குறிப்பிடவில்லையென்றாலும் வருணனின் குணாதியசங்களையும் மித்ராவான Ahura Mazda-வின் இயல்புகளாக சித்தரிக்கிறார். Spenta Mainyu மற்றும் Angra Mainyu இடையே நடைபெறும் சண்டையில் Ahura Mazda, Spenta Mainyu-வுக்கு உதவுகிறார். இதற்காக அவர் மேலும் ஆறு amesha spentas-களைப் படைக்கிறார். இந்த ஆறு spentas-களில் குறிப்பாக Vohu Manah (நன் மதி) என்கிற spenta-வை இந்த காரியத்திற்கு Ahura Mazda பயன்படுத்துகிறார். அவெஸ்டாவின் பல கதாஸ்-களில் Vohu Manah பல முறை முதன்மையானதாக கையாளப்பட்டிருக்கும். நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெறும் சண்டை குறித்த கருத்தாக்கம், மித்ர (Ahura Mazda) வழிபாடு, ஒளியின் அடையாளமான (மித்ராவின்) நெருப்பை வழிபடுவது ஆகியவைகள் சரதுஸ்டராவால் அவெஸ்டா புனித நூல் வழியாக ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது. அவெஸ்டா திரித்துவம் (Trinity), இறுதித் தீர்ப்பு (The Judgement Day) நாள் பற்றியும் பேசுகிறது.

மித்ரா (Mithra - divine judge), ராஸ்னு (Rašnu - the god of righteousness) மற்றும் சரோசா (Sraoša - the god of obedience) ஆகிய மூவரும் இந்த உலகத்தின் முடிவான இறுதித் தீர்ப்பு நாளில் மனிதர்களின் நன்மை தீமைகளை எடை போட்டு நியாயம் வழங்குவார்கள் என்று அவெஸ்டா குறிப்பாக சொல்கிறது. இந்த திரித்துவ கருத்து அன்றைய அதாவது கி.மு. 2000-களில் மத்தியத் தரைக் கடல் பகுதி முழுவதும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. Zoroaster-களின் சம காலத்தவரான Elamite-களும் திரித்துவம் பற்றிப் பேசுகிறார்கள். Elamite-கள் குறித்த பைபிலின் பழைய ஏற்பாடு பேசுகிறது. ஆனால் அவர்களிடம் இருந்த திரித்துவக் கருத்துக்களைப் பற்றி அல்ல என்பது வேறு விசயம். Elamite-களின் Inshushinak, Ishnikarab மற்றும் Lagamar ஆகியவர்கள் இறுதித் தீர்ப்பு நாள் அன்று மனிதர்களின் நன்மை தீமைகளை வகை பிரித்து அவர்கள் நியாயம் வழங்குவார்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

இதே திரித்துவம் கிருஸ்தவத்தில் ஏக இறைவன் (The God Almighty), The Son (Jesus the Savior) மற்றும் பரிசுத்த ஆவி (The Holy Spirit) என்று சொல்லப்படுகிறது. இயேசு கிருஸ்து திரித்துவம் குறித்த பேசினாரா என்பது ஆராய்ச்சிக்குரிய விசயமென்றாலும் இயேசுவிற்கு முன்பே திரித்துவம் என்னும் கருத்து மத்திய தரைக் கடல் பகுதிகளில் ஏறத்தாழ 2000 வருடங்களாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. யூதர்கள் திரித்துவும் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் திரித்துவத்தை நம்புவதும் இல்லை. ஆனால் முதல் தலைமுறை யூத கிருஸ்தவர்களான இயேசு கிருஸ்துவின் சீடர்கள் திரித்துவக் கொள்கையை எங்கிருந்து பெற்றார்கள் என்பது விளக்கப்பட வேண்டிய விசயம். இயேசு கிருஸ்து நிச்சயம் அன்றைய காலகட்டத்தில் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் வழக்கிலிருந்த Zoroastrianism குறித்து அறிந்திருந்திருக்க வேண்டும். நன்மை, தீமை, நீதி (righteousness), ஒளி (light) குறித்துப் பேசும் இயேசு கிருஸ்து திரித்துவம் குறித்துப் பேசுவதில்லை.

பிறகு எப்படி திரித்துவம் கிருஸ்தவத்திற்குள் வந்திருக்க வேண்டும் என்பதற்கு விடை திரித்துவக் கொள்கை என்பது அன்றைய காலகட்டத்தில் Zoroastrianism மற்றும் Elamite-களின் மதங்களில் வழக்கிலிருந்த ஒரு விசயம். மனிதர்கள் நீதி தவறி நடப்பார்களேயானால் அது மிகப் பெரிய பாவமாக அன்றைய மத்திய தரைக் கடல் மதங்களான Zoroastrianism-த்திலும் Elamite மதத்திலும் வகைப்படுத்தப்பட்டது. Zoroastrianism-த்தில் இப்படி நீதி தவறி நடப்பதே பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம். அப்படிப்பட்டவர்களை Mithro-Druj (sinners against Mithra) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கிருத்தவத்தை வெளியில் இருந்து அணுகுபவர்கள் ஏன் கிருத்தவத்தவர்களே கூட இத்தகைய விசயங்களைக் குறித்து அதிகம் கண்டுகொள்ளவதில்லை. கிருத்தவத்தைத் தாக்குபவர்கள் திரித்துவ கருத்தாக்கத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசாமல் மொட்டையாக திரித்துவம் இயேசுவில் இருந்தே தோன்றியதாக வாதங்களை முன்வைக்கிறார்கள். இந்த வாதங்களை எதிர்கொள்ளும் கிருஸ்தவர்களும் திரித்துவ கருத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அதற்கான விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள்.

அடுத்து இயேசுக் கிருஸ்து கிருஷ்ணரின், திருமாலின் அவதாரம் என்று கதை கட்டுபவர்கள் அவர்களுடைய ஆரிய கிளைப் பிரிவான zoroaster-கள் குறித்து மூச்சே விடமாட்டார்கள். மூச்சு, பேச்சு காட்டினால் அவர்கள் வந்தேறிகள் என்பது சபை ஏறிவிடும் என்கிற காரணத்தால். எங்களுடைய கிளையினமான zoroaster-களின் இறுதித் தீர்ப்பு நாள் திரித்துவக் கொள்கை பார்த்தீர்களா... கிருத்தவம் வரை பிரதிபலித்திருக்கிறது என்று கருத்துச் சொல்வார்களா என்றால்...?

ஈரானில் கி.மு. 1700-களில் தோன்றிய Zoroastrianism, Achaemenid பேரரசு காலம் (கி.மு.550–330), Seleucid பேரரசு காலம் (கி.மு. 323–129), Parthian பேரரசு காலம் (கி.மு. 247– கி.பி. 224) மற்றும் Sasanian பேரரசு காலமான கி.பி. 224–651 வரை ஈரான் தொடங்கி மத்திய தரைக் கடல் பகுதியின் பல பகுதிகளில் வழக்கிலிருந்தது. இதைத் தோற்றுவித்த சரதுஸ்டரா ஒருவரா அல்லது ஒரு குழுவின் பெயர் சரதுஸ்டராவா என்பதெல்லாம் இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. அவெஸ்டாவில் சரதுஸ்டரா தன்னை இறைவனின் இறைத் தூதராக பாவித்துக் கொள்கிறார். Ahura Mazda நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெறும் சண்டை குறித்து தன்னிடம் சொன்னதையே அவெஸ்டா என்கிற புனித நூலாக எழுதியதாக சொல்லிக் கொள்கிறார்.

(இந்த இடத்தில் Manichaeism என்று சொல்லப்படும் ஒரு மதக் கருத்தும் குறிப்பிடத்தக்கது. இது ஈரானில் பெரிசிய மானி (Mani) என்பவரால் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டது. Manichaeism-த்தில் இறைவன் Zurvan என்று அழைக்கப்படுகிறார். இந்த மதக் கருத்திலும் நன்மைக்கும் (Good) தீமைக்கும் (Evil) இடையே சண்டை நடக்கிறது. Ormazd என்பவர் நன்மை விரும்பி, Ahriman என்பவர் இருளின் பக்கம் நிற்பவர். இந்த மதத்தில் Zoroastrianism, Elamite, Christianity மற்றும் Buddhism ஆகியவற்றின் தாக்கம் இருக்கின்றன).

- நவீனா அலெக்சாண்டர்