ஒரு காலத்தில், சாதிச் சழக்குகள் மண்டிய சகதியாய்க் கிடந்தது கேரளம்! அதனாலேயே, கேரளத்தை “சாதி வெறிப்பித்தர்களின் சமுதாய விடுதி”என்று சுவாமி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டிலேயே விமர்சித்துப் போயுள்ளார்!

                        kumaran aasaanஆம். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை, கேரளாவில், ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயில அனுமதிக்கப்படுவதில்லை. கோயில்களுக்குள் கும்பிடப்போகமுடியாது. அது மட்டுமல்ல, கோயில்களுக்கு அருகே, சாலைகளில் கூட நடக்கவும் கூடாது. அரசுப் பணிகள் அனைத்தும் மேல் சாதியினருக்குத் தான். மரம் ஏறுதல், நெசவு நெய்தல், விவசாய வேலை செய்தல், என உடல் உழைப்புத் தொழில்களையெல்லாம் ஈழவ மக்களே செய்ய வேண்டும். இப்படிப் பல சமூகக் கொடுமைகளுக்கு ஈழவ மக்கள் ஆளானார்கள்; விலங்கினும் கீழாக அவர்கள் நடத்தப்பட்டனர்.

                        ஈழவர்கள் மட்டுமின்றி, புலையர், பறையர், குறவர் முதலிய ஒடுக்கப்பட்டவர்களுக்கு எல்லாம், உயர் சாதியினருக்கான உரிமைகளனைத்தும் வழங்கப்பட வேண்டும்; ஈழவர்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளும், தீய நடைமுறைகளும் களையப்பபடவேண்டும்; கண்மூடித்தானமான பழக்கங்கள் மண்மூடிப் போகவேண்டும்; என்றெல்லாம் கண்டித்தவர்! கனல் தெறிக்கும் பரப்புரைகளை மேற்கொண்டவர்! அவர்தான், ‘ஈழவ மக்களின் விடிவெள்ளி! நாடுபோற்றும் நல்லவரான நாராயண குரு!

அந்நாராயண குருவின் சீடராக விளங்கியவர் குமாரன் ஆசான். அவர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் காயிக்கரை என்னும் சிற்றூரில், ஈழவ சமுதாயத்தில் தோன்றியவர். நாராயணன் - காளியம்மாள் தம்பதியினருக்கு 12-04-1873 ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.

                        ஏழு வயதில் பள்ளியில் சேர்ந்து பதினான்காவது வயதில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார் குமாரன் ஆசான். பள்ளியில் வடமொழியும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இளம்வயதிலேயே மலையாளத்திலும் வடமொழியிலும், கவிதை எழுதும் ஆற்றல் பெற்று விளங்கியதால், ‘பாலகவி’ என்று பாராட்டப்பட்டார்!

                        மங்களூரில், பிராமண மாணவர்கள் மட்டுமே பயின்ற ‘ஸ்ரீ ஜய சாம ராஜேந்திரர் சமஸ்கிருத கலா சாலை’யில் சேர்ந்தார். அப்போது, வேதியரல்லாதவர் வடமொழியையும் அதிலுள்ள வேத சாத்திரங்களையும் பயிலக்கூடாது என உயர்வகுப்பு பிராமண மாணவர்கள் குமாரன் ஆசானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.. குமாரன் ஆசானை கலாசாலையிலிருந்து, அநியாயமாக வெளியேற்றினர்.

                        கல்வி மீது கொண்ட ஆர்வத்தினால் கல்கத்தாவிற்குச் சென்று ஒரு வடமொழிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, இலக்கணம், கவிதை என இரண்டையும் பயின்றார். ஆனால், கல்கத்தா நகரில் ‘பிளேக்’ நோய் ஏற்பட்டு, கல்லூரி மூடப்பட்டதால் தேர்வு எழுத முடியாத நிலை, மறுபடியும் ஏற்பட்டது. குமாரன் ஆசான் படிப்பில் ஒரு பட்டமும் பெற முடிய வில்லை. ஆனால், கன்னடம், வங்காளம், சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவராக விளங்கினார். பிறமொழியில் உள்ள காவியங்களைப் படித்தும், நூல்களைக் கற்றும் தனது அறிவை விசாலமாக்கிக் கொண்டார்.

                        சாதிக் கொடுமைகளை ஒழிக்கவும், ஒடுக்கப்பட்ட ஈழவ மக்களுக்குக் கல்வி அளிக்கவும், மடமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பிடவும் முனைப்புடன் முன்நின்றார். உரிமைகளுக்காகப் போராடச் செய்யவும், கமூக நீதி கிடைக்கவும், நாராயண குருவால், ‘ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம்’ என்ற அமைப்பு 1903 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக குமாரன் ஆசான் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.

                        ஈழவ மக்களுக்கும், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும், பொதுச் சாலைகளில் செல்ல உரிமை வேண்டும். மக்களின் வரிப்பணத்தின் மூலம் (அரசால் ) நடத்தப்படும் கல்வி நிலையங்களில் அனைவருக்கும் கல்வி பெற உரிமை வேண்டும் - கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை வேண்டும் - தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் - போன்ற சமூகக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாராயண குருவும், குமாரன் ஆசானும் தீவிரமான போராட்டங்களை நடத்தினர்.

குமாரன் ஆசான். ஈழவ மக்கள் விழிப்புணர்வு கொள்ளவும், அறிவு வெளிச்சம் பெறவும் ‘விவேகோதயம்’ என்ற இதழைத் தொடங்கினார். அதன் ஆசிரியராகவும் விளங்கினார்.

                        ‘உதிர்ந்த மலர்’ (வீணபூவு) என்னும் தனது கவிதை நூலை 1908 ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிட்டார். அதன் மூலம் மலையாளக் கவிதை உலகில் நுழைந்தார். அந்தக் கவிதை நூல் நவீன மலையாள இலக்கியத்தில் சிறந்த ஓர் இடத்தைப் பெற்றது.

பானுமதி என்பவதை 1917 ஆம் ஆண்டு தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

‘ப்ரமீராதனம்’, ‘ஸீதா’ என்ற இரு மகா காவியங்களை இயற்றி கேரள நாட்டிற்கும், மலையாள மொழிக்கும் மகுடம் சூட்டினார்.

                        வேல்ஸ் இளவரசர் 1922 ஆம் ஆண்டு சென்னை நகருக்கு வருகை புரிந்தார். அப்போது, புகழ் பெற்ற மலையாளக் கவிஞரான, குமாரன் ஆசானுக்கு, மன்னர், பட்டாடையும், தோடாவும் அளித்துச் சிறப்பித்தார்.

            குமாரன் ஆசான், சமூக அநீதிகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகக் கவிதையைக் கையாண்டார்.

“மாற்றுக நம்முடைய சட்டங்களை! இன்றேல்

 மாற்றும், சட்டங்கள் நம்மையே!!

“சாதி எதுவென்று மனிதர்

குருதியும் எலும்பும் சொல்லுமோ?”

“பொட்டும் பூணூலும் குடுமியும்

பூமியிற் பிறக்கும் போதுண்டோ?”

என்பன போன்ற தனது வீரிய கவிதை வரிகள் மூலம் சாதியின் அநீதிகளைச் சாடினார். ‘உன்னதமானதும், மேன்மையானதுமான சமத்துவச் சமுதாயத்தைப் படைப்பதற்காகப் பாடுவதே, ஒவ்வொரு கவிஞரின் கடமை’- என்று ஓங்கி முழங்கினார்.

குமாரன் ஆசான் ‘துரவஸ்தை’ என்ற கவிதை நூலின் மூலம் சமுதாயப் புரட்சிக்கு அடிகோலினார். அதில் இடம் பெற்ற, கவிதைகள் யாவும், சாதி வேறுபாடுகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை எனச் செப்பின; மனிதப் பண்புகளுக்கும், நாகரிகத்திற்கும் மாயச்சாதிகள் புறம்பானவை என்ற உயர்ந்த கருத்துக்களை ஊட்டின; ஊர் மக்களை விழிப்படையச் செய்தன.

‘மடையர்களின் மனத்திலிருந்து எழும் புகைச்சல் தான் சாதி என்னும் சண்டாளத்தனம்’ என்று தோலுரித்துக் காட்டினார்.

காதலைப் போல சமூகத்தின் வேற்றுமைகளை அகற்றும் சக்தி வேறு எதற்குமில்லை. எல்லோரும் ஒன்றுபடுவதற்கு, ஏற்றவழி கலப்புத் திருமணமே என்று வலியுறுத்தினார் ஆசான்.

மொழிபெயர்ப்பின் மூலம் மலையாள இலக்கியத்திற்குத் தொண்டு செய்துள்ளார். ஜேம்ஸ் ஆலன் எழுதிய ஆங்கில நூலை “மனம் போல மாங்கல்யம்” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியிட்டார்.

‘புஷ்பவாடி’, ‘மணிமாலை’, ‘வனமாலை’ – போன்ற அவரது கவிதைகள் கருத்திலும், வடிவத்திலும் மலையாளக் கவிதை இலக்கியத்தின் மணிகளாக ஒளி வீசுகின்றன.

‘கருணை’ என்ற மிகச் சிறந்த கவிதை நூலைப் படைத்தார் ஆசான். அக்கவிதை, பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது என்பது சிறப்புக்குரிய செய்தி!

ஆங்கில மகாகவி ஷெல்லி! மலையாள மகாகவி குமாரன் ஆசான்! இவ், இருபெரும் மகா கவிஞர்களும் நீரில் மூழ்கி இறந்து போனவர்கள் என்பது கூட நெஞ்சை உருக்கும் நெருக்கமான தகவலே!

குமாரன் ஆசான், ஆல்வாய் நகரத்திலிருந்து ஆலப்புழைக்குச் செல்லும் போது படகு மூழ்கி 16-01-1924 ஆம் நாள் மரணத்தைத் தழுவினார்.

அவர் பிறந்த ஊரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தோன்னைக்கல்லில் நினைவு மாளிகையும், நூலகமும் நிறுவியுள்ளது.

குமாரன் ஆசான் பெயரில் கேரள மாநிலத்திலும் மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் பல செயல்படுகின்றன. இலக்கியச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தலைநகர் சென்னையில் ஆசான் நினைவுப் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது என்பது தமிழர்களுக்குச் சிறப்புச் சேர்க்கிறது!

மலையாள கவிதை உலகில் மட்டுமல்ல ‘குமாரன் ஆசான்’ பெயர் உலக இலக்கியங்களிலும் ஊன்றிப் புகழ்கொண்டு நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன்