ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் என்பது அவனது முழுப்பெயர். ஸ்காட்லாந்தில் 1810 ஆண்டு பிறந்தான். தமிழகத்தில் இவனை ‘நீலன்’ என்று ஆத்திரத்துடன் அழைத்தனர். வாட்ட சாட்டமான உருவ அமைப்பும், உடலுறுதியும் கொண்டவன். தனது பதினேழாம் வயதிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் படையில் சிப்பாயாகச் சேர்ந்தான்.

முப்பது ஆண்டு அனுபவம் பெற்ற பின்னர், சென்னை கிழக்கிந்தியக் கம்பெனிப் பிரிவிற்கு 1857 ஆம் ஆண்டில் தலைவனாகப் பதவி உயர்வு பெற்றான். ஏழு மாதம் இங்கு தளபதியாகப் பணியாற்றிய இவனுக்கு, வட இந்தியாவில் எழுந்த பெரும் கிளர்ச்சியை ஒடுக்கி அடக்குகிற பணி ஒதுக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தில் ஆங்கில அதிகாரிகளுக்கும், சிப்பாய்களுக்கும் எதிராகத் தொடங்கிய தாக்குதல், விரைவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒரு விடுதலைப் போராகப் பரிணமித்தது. இந்நிலையில் மிருகத்தனமான தாக்குதலுக்கும், கண்மூடித்தனமான செயல்பாடுகளுக்கும் பெயர்போன நீலனுக்கு, வங்கள கவர்னர் ஜெனரலிடமிருந்து கலகத்தை அடக்குமாறு உத்தரவு வந்தது. இதனையடுத்து அக்கிளர்ச்சியை நீலன் கடுமையாக அடக்கினான்.

“எதிர்ப்பட்டவரையெல்லாம் வெட்டியோ தூக்கிலிட்டோ எமனுலகிற்கு அனுப்பினார்” என்று நீலனின் நடவடிக்கைகள் குறித்து அன்றைய ஏடுகளில் பதிவாகியுள்ளது. காசியை அடுத்த இருபது கிராமங்களைச் சுற்றி நெருப்பு பற்ற வைக்கப்பட்டு, அக்கிராமங்களில் வாழ்ந்த மக்களனைவரும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

நீலன் காசியில் கொடூர ஆட்சியை உருவாக்கி, அதனை ஆங்கிலேயத் தளபதி கார்டனிடம் ஒப்படைத்து விட்டு, படைப்பிரிவு ஒன்றுடன் அடுத்த ஊரான அலகாபாத் விரைந்தான். கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய சிப்பாய்கள் அலகாபாத் நகரைக் கைப்பற்றியிருந்தனர். அந்நகரின் போர் தொடுத்தான் நீலன். நகர் முழுக்க பீரங்கிக் குண்டுகளால் அதிர்ந்தது. இந்திய சிப்பாய்களிடமிருந்து அலகாபாத்தைக் கைப்பற்றினான் நீலன்.

கான்பூரில் கிளர்ச்சிப் படைக்குத் தலைமையேற்றவர் நானா சாகிப். அவரது படைகளிடம் ஆங்கிலப் படைத்தளபதி சரணடைந்திருந்தான். நீலனுக்கு தந்தி மூலம் இச்செய்தி கிடைக்கப் பெற்றவுடன், பெரும் படையுடன் கான்பூருக்குப் புறப்பட்டான். செல்கிற வழியிலேயே அலகாபாத் - கான்பூர் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமங்கள் பலவற்றை மூர்க்கத்தனமாகத் தாக்கி அழித்தான். கான்பூர் வந்து சேர்ந்தவுடன் அங்குள்ள படையின் தலைவனாகப் பதவியேற்றுக் கொண்டான்.

கான்பூர் நகரிலும் நீலன் தனது அழித்தொழிக்கும் கொள்கையை நிலை நாட்டினான். கான்பூரிலிருந்து 67 கிலோ மீட்டர் தூரத்தில் லக்னோ நகரம் உள்ளது. அயோத்திய நாட்டின் தலைநகரான லக்னோவில், ஆங்கிலேய ஆட்சியின் அப்பகுதித் தலைமை அலுவலகம் அமைந்திருந்தது. அந்த அலுவலகத்தை கான்பூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் முற்றுகை இட்டிருந்தனர். மூன்று மாத காலம் இம்முற்றுகையை ஆங்கிலயே அதிகாரிகளால் முறியடிக்க முடியவில்லை.

பதற்றம் நிறைந்த அந்தப் பகுதிக்கு நீலன் வரவழைக்கப்பட்டான். முற்றுகையிட்டிருந்த இந்திய சிப்பாய்களின் மீது தனது வழக்கமான பாணியில் அழித்தொழிக்கும் பணியில் ஈடுபட்டான் நீலன். குதிரை மீது ஏறி ஆத்திரத்தோடு களத்தில் கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீலன், இந்தியச் சிப்பாய்களின் பீரங்கித் தாக்குதலுக்கு உட்பட்டு குதிரை மீதிருந்தவாறே செத்து கீழே விழுந்தான்.

1857 ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி அவனது நாற்பத்து ஏழாம் வயதில் மரணமடைகின்ற வரை, அவனது கொலை வெறித்தாக்குதல் வார்த்தைகளுக்குள் வசப்படுத்த முடியாதவையாகும்.

“தளபதி நீலனின் இராணுவ வரலாறு, பல சாதனைகளை நிகழ்த்திய ஒன்றாகும்” என்று ஆங்கிலேய உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் ஒருமனதாக அறிவித்தனர். அவனுடைய சாதனையைப் போற்றும் வகையில் அன்றைய சென்னை மவுண்ட் ரோடில் 1861 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நீலனின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலை ஒன்றை ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எட்வர்டு மால்ட்பி திறந்து வைத்து, நீலனை வானளாவப் புகழ்ந்தார்.

லண்டன் மாநகரைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சிற்பி எம் நோபிள் இச்சிலையை வடித்துக் கொடுத்தார். ஏறக்குறைய அறுபத்தாறு ஆண்டுகள் இச்சிலை கம்பீரமான காட்சிப் பொருளாகக் கருதப்பட்டது. ஒரு வீரனின் சிலை என்று பலரால் வியந்து பார்க்கப்பட்டது.

1927 ஆம் ஆண்டு ‘இச்சிலை ஒரு அவமானச் சின்னம்’ என்று தேச பக்தர்கள் சிலரால் அறிவிக்கப்பட்டது. இச்சிலையை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் மக்கள் போராட்டமாக படிப்படியாக மலர்ந்தது. 1937 இல் ராஜாஜி அமைச்சரவை அமைந்த பிறகு, அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் தெதி இரவோடு இரவாக நீலன் சிலை அகற்றப்பட்டு, விடிவதற்குள் அச்சிலை சென்னை அருங்காட்சியக வளாகத்தில் வைக்கப்பட்டது.

நீலனைப் பொன்றவர்கள் கொடுங்கோலனாகவே வரலாற்று வரிசையில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள்.