கோவை பீளமேடு தண்டபாணி  (1944 – 2.3.1965) 

peelamedu dhandapaniகோவை பூ.சா.கோ தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் தண்டபாணி, தமிழ் அழியக் கூடாது என்பதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளத் துணிந்தார்.

தனது சாவின் காரணத்தைக் கேட்டாவது, தமிழைக் காக்கும் விழிப்புணர்வு ஓங்கும் என்று எண்ணினார்.

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் மாரியப்பன் - மாரியம்மாள் இருவரின் இளைய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி. பூளைமேட்டில் பொறியியல் மாணவராக விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.

மகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது.

இந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகள் தண்டபாணிக்குக் கவலை தந்தன.

மாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின.

தமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது.

'உயிர்தமிழுக்கு! உடல் மண்ணுக்கு! எனத் தொடங்கி, தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்தார் தண்டபாணி. தமிழ் பெற்ற தான் பெற்ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூளைமேடு (பீளமேடு) கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

முந்துவட ஆரியத்தை முறித்த வர்யாம்

 மூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம்

இந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை

 இந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை

அந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம்

 ஆளுவோர் பக்கத்தில் இருப்ப துண்மை

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.

 விடுதலையால் கெடுதலையா? தீமை! தீமை!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 17 பக்கம்: 247)

வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர்

வரக்காணில் காறிநீ உமிழ்வாய்!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 15 பக்கம்: 132)

- புலவர் செந்தலை .கவுதமன்சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(தொடரும்...)