‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வைக்காண 1942 –ஆம் ஆண்டு அவரது வீட்டிற்குச் சென்றார் செங்கல்வராயர். அப்போது உ.வே.சா.உடல் நலம் குன்றிப் படுக்கையில் சாய்ந்திருந்தார். தம்மைக் காண வந்திருந்த செங்கல்வராயரைத் தமது அருகில் அழைத்து, இரு கரங்களையும் பற்றி, ‘இந்தக் கைகள் திருப்புகழ் ஆராய்ச்சி செய்த திருக்கைகள் ஆயினவே’ எனப் பெரிதும் நெகிழ்ந்து கண்களில் ஒற்றிக் கொண்டார். அந்த இருபெரும் புலவர்களின் சந்திப்பின்போது, பண்பாட்டுணர்வு, பைந்தமிழ் வரலாற்றின் சிகரத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது!

               thanigaimani sengalvarayarஅருட்தமிழ்ச் செல்வமாகிய ‘திருப்புகழுக்கு உரை எழுதியதுடன், ‘திருப்புகழ்ப் பாக்களைப் பதினொரு திருமுறைகளாகப் பகுத்தார். சைவத் திருமுறை பன்னிரெண்டினைப் போல், முருகவேள் திருமுறையில் பன்னிரெண்டாவதாக ’சேய்த் தொண்டர்புராண’ அமைப்பை வகுத்தார்!

               செங்கல்வராயரின் தந்தையார் வ.த.சுப்பிரமணியபிள்ளை திருப்புகழை முறையாகப் பதிப்பித்து வழங்கியதால், ‘திருப்புகழ் பதிப்பாசிரியர்’ எனப்பெரும் புகழ் பெற்றவர். பதிப்பாசிரியரின் மைந்தரோ திருப்புகழுக்கு உரை எழுதியும், உரிய ஆராய்ச்சிச் செய்திகளை வெளிப்படுத்தியும் பெருமை பெற்றதோடு, ‘அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திர ஆராய்ச்சி’ எனும் நூலை வெளியிட்டுத் தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்!

               ‘அப்பர் தேவார ஆராய்ச்சி’, ‘நால்வர் பிள்ளைத் தமிழ்’, ‘தேவார ஒளி நெறி’, ‘திருவாசக ஒளிநெறி’, ‘திருக் கோவையார் ஒளி நெறி’ முதலிய நூல்களையும், ‘வள்ளி கல்யாண கும்மி’ ‘அறுபத்து மூவர் துதிப்பா’ முதலிய செய்யுள் நூல்களையும் பாடி தமிழுலகுக்கு வழங்கினார் செங்கல்வராயர்!

               பழநியில் 1942-ஆம் ஆண்டு நிகழ்ந்த திருப்புகழ் மாநாட்டில், சூரியனார் திருக்கோயில் ஆதீனத்தலைவர் தவத்திரு மீனாட்சி சுந்தர தேசிகர், செங்கல்வராயருக்கு ‘தணிகைமணி’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தார்.

               தமது வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்த செங்கல்வராயர் மதுரை சாமராசர் பல்கலைக் கழகம் 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ பட்டமளித்துச் சிறப்பித்தது.

               மதுரைத் திருவள்ளுவர் கழகம் ‘சித்தாந்த கலாநிதி’ என்னும் பட்டத்தை ஒளவை துரைசாமி பிள்ளை தலைமையில், தமிழ்ச் சங்கத் தலைவர் ‘தமிழ்வேள்’ பி.டி. இராசனைக் கொண்டு பொன்னாடை அணிவித்துப் போற்றியது.

               ஒன்பதாம் திருமுறையான ‘திருவிசைப்பா’ ஆராய்ச்சியில் அப்பெருந்தகை ஈடுபட்டு, தமது எண்பத்தி எட்டாவது வயதில் திருவிசைப்பா ஆராய்ச்சியை நிறைவு செய்து ஆராய்ச்சிப் படைப்பை கழக ஆட்சியாளர் வ.சுப்பையாவிடம் பெருமகிழ்ச்சியுடன் ஒப்படைத்தார்.

               கடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பத்தில், வ.த.சுப்பிரமணிய பிள்ளை-தாயாரம்மாள் தம்பதியினருக்கு 1883-ஆம் ஆண்டு பிறந்தார்.

               மஞ்சக்குப்பத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எண்ணும், எழுத்தும் கற்றார். தமது தந்தையார் நாமக்கல்லில் முன்சீப்பாகப் பணியாற்றியபோது, அங்குள்ள கழக உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் தந்தையார் கும்பகோணம் மாற்றலாகி வர அங்கும் கல்வி பயில்வதைத் தொடர்ந்தார்.

               செங்கல்வராயர் தமது தமையனாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை விரும்பிக் கற்றார். பதினாறு வயதிலேயே பாடும் திறம் பெற்று விளங்கினார்.

               மதுரையில் எஃப் ஏ படித்துத் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதால், செங்கல்வராயருக்கு ‘இராமநாதபுரம் இராணி கல்வி உதவித் தொகை’ ரூபாய் நாலரை, திங்கள்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ., வகுப்பில் சேர்ந்து பயின்று, பல்கலைக் கழகத் தேர்வில், தமிழ் மாநிலத்திலேயே முதன்மை பெற்றதால், ‘பல்கலைக் கழகத் தங்கப் பதக்கமும்’, ‘சேதுபதி தங்கப் பதக்கமும்’ செங்கல்வராயரைத் தேடி வந்து சேர்ந்தன.

               செங்கல்வராயருக்கு பி.ஏ., வகுப்பில் தமிழ்ப் பேராசிரியர்களாக பரிதிமாற் கலைஞர், கோபாலாச்சாரி, மறைமலை அடிகள் ஆகிய தமிழ் அறிஞர்கள் விளங்கினர். அத்தமிழ் அறிஞர்கள் மூலம் செங்கல்வராயரின் சிந்தையுள் தமிழ் மணம் கமழ்ந்தது.

               முதுகலைத் தேர்வில் 1905-ஆம் ஆண்டு முதன்மை பெற்று வெற்றியடைந்தார். எம்.ஏ., படிக்கும்போது பேரறிஞர் பரிதிமாற் கலைஞரின் வழிகாட்டுதலின்படி ‘தமிழ் உரைநடை வரலாறு’ எனும் சிறந்த ஆங்கில ஆய்வு நூலை எழுதி, அச்சிட்டு பல்கலைக் கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைத்தார். இந்நூலே செங்கல்வராயர் எழுதிய முதல் நூல்!

               கல்லூரியில் படித்து முடித்த பின்னர், பத்திரப் பதிவுத் துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் சார் பதிவாளராகவும், துறைத் தலைவரின் அணுக்கச் செயலாளராகவும் பதவி வகித்து 1938-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

               ‘தணிகை நவரத்தின மாலை’, ‘சேவல் பாட்டு’, ‘வள்ளிக் கிழவர் வாக்குவாதம்’ முதலிய பக்தி நூல்களை இயற்றி வெளியிட்டார். தமது இறுதிக் காலத்தில் தேவார திருவாசக ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

               செந்தமிழ் வளர்ச்சிக்காக அயராது தொண்டாற்றிய ‘தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயர் தமது எண்பத்தொன்பதாம் வயதில் 1972-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

- பி.தயாளன்