“மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு” என்ற தலைப்பில் முன்பே கீற்றில் எனது ஐந்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இக்கட்டுரைகளைக் காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுடைய, 1.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், 2.சங்க இலக்கியக் கோட்பாடுகளும், சமய வடிவங்களும், 3.ஆசிவகமும் ஐயனார் வரலாறும் ஆகிய மூன்று நூல்களை அடிப்படையாகக்கொண்டுதான் எனது இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்ச் சிந்தனை மரபில் இன்மையும் முரண்பாடும்:

ஏழு பொருள்கள்:

   “பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை

   இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப”

tholkaapiyam 400என்ற பாடலில் பொருள்கள் ஏழு என அகத்திய தருக்க நூற்பா சொல்கிறது. சிறப்பியம் குறித்துத் தமிழில் எழுதப்பட்ட 20 இரண்டடி குறட்பாக்களைக் கொண்ட ஒரு தத்துவக்குறு நூல்தான் அகத்திய தருக்க நூற்பா ஆகும்(1). இந்த நூல் தமிழின் சிறப்பிய மூல மரபை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் ஆகும். இப்பாடலின் முதலில் வரும் ‘பொருள்’ என்பது பொருளின் பொருண்மைத்தன்மை என்பதை மட்டும் குறிக்கிறது. அதாவது முழுமையான பொருள்களின் உள்ளடக்கமாக இருக்கும் ஆறினுள் ஒன்றைச்சுட்டுகிறது. அப்பாடலின் இறுதியில் வரும் “பொருள்” என்பது பொருளின் முழுமையைக் குறிக்கிறது. இவைகளின் நுட்பம் மிக ஆழமானது என்கிறார் க. நெடுஞ்செழியன். இந்த ஏழு பொருள்களும் உள்பொருள், இல்பொருள் என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. பாடலின் முதலில் உள்ள ஆறு பொருள்களும் உள்பொருள் எனவும், இறுதியாக உள்ள இன்மை என்பது இல்பொருள் எனவும் பிரிக்கப்படுகிறது. உள்பொருள்கள் ஆறும் பற்றிய தரவுகளைப் பார்ப்போம்.

1.பொருள் – பொருண்மைத்தன்மை,

2.குணம் – தனக்கென உள்ள குறிப்பிட்ட பண்புகள்

3.கருமம் – செயல் அல்லது புடைப்பெயர்ச்சிக்கான தகுதி.

4.பொது – பொது இயல்புகள்

5.சிறப்பு – தனக்கென இருக்கும் தனித்த இயல்புகள்

6.ஒற்றுமை – ஒன்றிணைந்த தன்மைகளை பெற்றிருத்தல்.

ஏழாவது பொருள் இன்மை எனும் இல்பொருள் ஆகும்.

  ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கத்திற்கும், அஃதாவது இன்மைக்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதுவே ஏழாவது பொருளாகும். இதனை இயங்கியல் கோட்பாட்டின் உருவமும் உள்ளடக்கமுமாகக்(FORM AND CONTENT) கொள்ளலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன். மேற்கண்ட அகத்திய தருக்க நூற்பாப் பாடலின் இறுதியில் உள்ள “ஏழென மொழிப” என்பதில் தமிழ் மரபின் தொடர்ச்சியும், தொன்மையும் வெளிப்படுகிறது எனலாம். அதாவது பொருள்கள் ஏழு என்பது தமிழ் முன்னோர்களின் கருத்தாகும். தமிழ் மரபைப் பின்பற்றி சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட தருக்க பரிபாடையும், தருக்க சங்கிரகமும் பொருள்கள் ஏழு என்கின்றன. ஆனால் வடமொழி மரபைப் பின்பற்றி தமிழில் எழுதப்பட்ட, பௌத்த, சைன மதங்களைப் பின்பற்றும் மணிமேகலையும், நீலகேசியும் பொருள்களை ஆறு என்று குறிக்கின்றன(2).

  ஒரு பொருள் உருவாவதற்கு முன் அது வேறு பொருளாக இருக்கும். அந்த வேறு பொருளாக இருக்கும் நிலைதான் இன்மையாகும். உலகில் உயிர் உருவாவதற்கு முன் சடப்பொருள்தான் இருந்தது. உயிர்ப்பொருள் என்பது இல்லை. ஆகவே உயிர்ப்பொருள் இல்லாத அந்த நிலைதான் இன்மை என்பதாகும். இந்த இன்மை என்ற சடப்பொருளில் இருந்துதான் உயிர்ப் பொருள் உருவாகியுள்ளது. அதுபோன்றே பெரு வெடிப்பிற்கு முன் மிகமிகச்சிறிய ஆதிமூலப்பொருள் இருந்தது. இறுதியில் அனைத்தும் இந்த ஆதிமூலப்பொருளில் சுருங்கிவிடும். இந்த ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கக் கோட்பட்டிற்குத்தான் இன்மை என்ற கோட்பாடு மூலம் தமிழ்ச்சிந்தனை மரபு விளக்கம் தந்தது.

இன்மை:

  தமிழ் மரபில் பொருள்கள் ஏழு என்பதற்கும், வடமரபில் இன்மையை விடுத்துப் பொருள்கள் ஆறு என்பதற்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் உண்டு. தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள், எண்ணியக்கோட்பாடு குறிப்பிடும் அண்டத்தின் தோற்றம், முடிவு, கருநிலை ஆகிய அனைத்தும் பக்குடுக்கையாரின் ஏழு பொருள்களில் ஒன்றான ‘இன்மை’ யோடு தொடர்பு கொண்டன. இல்பொருளாகிய இவ்வின்மைதான் பொருள்கள் ஏழு எனக்கூறும் பக்குடுக்கையாரின் கோட்பாட்டிற்கு முழுமையான அறிவியல்தன்மையைக் கொடுக்கிறது. அத்துடன் உயிர்களின் திரிவாக்கக் கோட்பாட்டிற்கும்(சடப்பொருளிலிருந்து முதல் உயிர் தோன்றுவது) மிகச்சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. ஒன்று ஒரு பொருளாக உருவாவதற்கு முன்பு, அது அந்தப்பொருளாக இருக்காது. அந்தப்பொருள் சிதைந்து போனாலும் அதனை அந்தப்பொருளாகக் கருத முடியாது. ஆகவே ஒரு பொருளின் இருத்தல், அதன் தோற்றம், இடைநிலை, முடிவு என்பவைகளின் அடிப்படையில் ‘இன்மை’ என்பது ஒரு கோட்பாட்டு வடிவத்தைப் பெறுகிறது(3).

  அண்டத்தின் தோற்றம், முடிவு குறித்த எண்ணியக்கருத்துக்களை,

     பூத விகாரத் தான்மலை மரமுதல்  

     ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகந்து

     வந்த வழியே இவைசென் றடங்கி  

     அந்தமில் பிரளய மாயிறும்…..  

என மணிமேகலை(27: 222-225) கூறிச்செல்கிறது. “மூல அணுவாகிய பரமாணுவில் தோன்றிய பூதங்களுக்கிடையே ஏற்பட்ட வினை மாறுபாடுகளால் இப்பேரண்டமும் பல்வேறு பொருள்களும் தோன்றின. பின்னர் அவை வந்த வழியே சென்று அந்தமில் பிரளயமாய் இல்லாதொழிதலே அதன் இயற்கை” என அண்டத்தின் தோற்ற, ஒடுக்கங்கள் குறித்து மேலேயுள்ள பாடல் விளக்குகிறது. இந்த விளக்கங்கள் அனைத்தும் இன்மைக்கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன என்கிறார் க. நெடுஞ்செழியன். அகத்திய தருக்க நூற்பா இன்மையை நான்காக வகைப்படுத்துகிறது.

   முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை

   யொன்றினொன் றின்மை யென்றின்மை நான்கே

  அந்த நான்கு இன்மைகள் குறித்த விளக்கத்தை கீழ்க்கண்டவாறு தருகிறார் க.நெடுஞ்செழியன். பெருவெடிப்பு குறித்த கருத்து என்பது முன்னின்மையையும், ஒன்றுமில்லாத பாழ்வெளியில் ஏற்பட்ட ‘அந்தமில் பிரளமாய் இறும்’ என்ற கருத்து பின்னின்மையையும், நிலவு-கதிர் ஆகிய ஒவ்வொன்றும் ஒன்றில் ஒன்றின்மையையும், நீர் எவ்வளவுதான் கொதித்தாலும் நெருப்பை அணைக்க உதவாது என்ற கருத்து முற்றின்மையையும் உணர்த்தி நிற்கின்றன. இன்மை பற்றிய நூற்பாவில், இன்மை காலக்குறிப்பால் உணரப்படும் என்கிறார் தொல்காப்பியர்(சொல்-214). தொல்காப்பியரின் இந்நூற்பாவில் உள்ள இன்மை குறித்து “பண்போடு இவற்றிடை வேற்றுமை யென்னை எனின் இன்மை பொருட்கு மறுதலையாகலின் பொருளின்கண் கிடக்கும் பண்பெனப்படாது’ என விளக்கம் தருகிறார் சேனாவரையர். அதாவது இன்மை பொருளின் பண்பல்ல அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள். தொல்காப்பியர் இன்மையைக் காலத்தோடு இணைத்துக்கூறுவதையும், காலத்தையும், இடத்தையும் முதல்பொருளாக வைத்ததையும் இணைத்துக் காணும்பொழுதுதான் இதன் அறிவியலை உணரமுடியும் என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள்.

   இன்மையைப் பொருள் திணைகளில் ஒன்றாகத் தமிழர் ஏற்றுக் கொண்டதோடு அதற்கு ஒரு சிறப்பான இடத்தையும் தந்துள்ளதற்கான காரணத்திற்குக் க.நெடுஞ்செழியன் அவர்கள், “இன்மையை பொருட்கு மறுதலையாகக் காணும் இவ்விளக்கம் மிகவும் ஆழ்ந்து எண்ணத்தக்கது. ஒரு பொருளைப்பற்றி ஆராய்கின்ற போது அதன் உள்ளமை(இருத்தல்) பற்றிய ஆய்வைப்போலவே அதன் இன்மையைப்பற்றிய ஆய்வும் சிறப்பானதாகும். இப்பேரண்டம் முழுவதும் அணுக்களின் திரட்சி என்பர். கண்கூடாகக் காணும் இப்பேரண்டம், அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேராது தனித்துக்கிடந்த காலஊழியில் தோன்றவில்லை. எனவே இப்பேரண்டம் தோன்றாத ஒரு நிலையைப்பற்றிய ஆய்வும் தவிர்க்க இயலாதது. இத்தகு ஆய்வே இன்மைபற்றிய ஆய்வாகும்” என விளக்கம் தருகிறார். மேலும் இப்பேரண்டம் தோன்றாத ஒரு நிலையைப் பற்றிய ஆய்வுதான் முதற்பொருள் பற்றியதாகும். இத்தகு ஆய்வு தமிழகத்தில் தொடர்ந்து இருந்துள்ளது. அதன் அடையாளம்தான், ‘நிலம் பொழு திரண்டின் இயல்பென மொழிப’ எனும் தொல்காப்பிய நூற்பாவாகும். நிலம் பொழுது இரண்டும் முதற் பொருள் எனக்கூறாமல், இரண்டின் ‘இயல்பே’ முதற்பொருள் எனக்கூறியதின் நுட்பம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும் என்கிறார் க. நெடுஞ்செழியன்(4).

  இங்கு இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக உருவாவதற்கு முன் இருந்த நிலையைக் குறிப்பதாகும். ஒரு பொருள் அப்பொருளாக உருவாதற்கு முன் வேறு ஏதாவது ஒரு நிலையில் அது இருந்திருக்க வேண்டும். அதுவே இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது முற்றிலும் இல்லாத நிலையைக் குறிக்கவில்லை. அதற்கு மாறாக எந்தப் பொருளைப் பற்றிப் பேசுகிறோமோ அந்தப்பொருளாக இல்லாத நிலைதான் இன்மை ஆகும். சான்றாக, முதல் உயிர்ப் பொருளை எடுத்துக் கொண்டால், அது தோன்றுவதற்கு முன் அப்பொருள், ஒரு சடப்பொருளாக இருந்தது. உயிர்ப் பொருளாக இல்லை. உயிர்ப்பொருளுக்கு முன் இருந்த, சடப் பொருளாக இருந்த நிலைதான் இன்மை எனப்படும். அதாவது உயிர்ப்பொருள் இல்லை என்பதால் அது இன்மை ஆகிறது. மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல எனவும் அது பொருளின் மறுதலை அல்லது மறு பொருள் ஆகும் எனவும் சேனாவரையர் தொல்காப்பியப்பாடலில் உள்ள இன்மை குறித்துப் பொருள் தருவது மேற்கண்ட விளக்கத்தை உறுதி செய்கிறது.

  ஆதிமூலப்பொருளில் இருந்து பெரு வெடிப்பு தோன்றியது. இந்தப் பெரு வெடிப்பு ஏற்படுவதற்கு முன் இருந்த இன்மை நிலை, முன்னின்மையையும், இறுதியில் அனைத்தும் இந்த ஆதிமூலப்பொருளில் சுருங்கிவிட்டபின் இருக்கும் இன்மை நிலை, பின்னிமையையும் குறிக்கும். நீரை எவ்வளவு தான் கொதிக்க வைத்துச் சூடாக ஆக்கினாலும் அது நெருப்பை எரிக்க உதவாது, அது நெருப்பை அனைக்கத்தான் செய்யும். நீரும் சூடாக ஆக்கப்படுகிறது, நெருப்பும் சூடாக இருக்கிறது, ஆனாலும் அவை ஒன்றுடன் ஒன்று இணையும்பொழுது, மேலும் சூடாவதில்லை என்பதோடு சூட்டை இல்லாது செய்துவிடுகிறது. ஏன் என்றால் நீரில் நெருப்பை எரிக்க உதவும் தன்மை சிறிதுகூட இல்லை. அதுவே முற்றின்மை எனப்படும். அதுபோன்றே நூலில் இருந்து குடத்தையோ, மண்ணில் இருந்து புடவையையோ உருவாக்க முடியாது. இதுவே ஒன்றில் ஒன்றின்மை ஆகும். அதாவது நூலில் குடத்தை உருவாக்கும் தன்மை இல்லை என்பது போலவே மண்ணில் புடவையை உருவாக்கும் தன்மை இல்லை என்பதே ஒன்றில் ஒன்றின்மை ஆகும்.

முரண்பாடு:

  முரண்பாடு என்பது இல்லாமல் பிறப்போ, இறப்போ, இயக்கமோ, வளர்ச்சியோ எதுவுமே இல்லை. முரண்பாடு என்பது இயக்கவியலின் அடிப்படை என்பதால் முரண்பாடு இல்லாத பொருள் எதுவும் இருக்க வியலாது. பொருளில் இருக்கும் இருவேறு எதிர்மறைகள், ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்ற முறையில் ஒன்றோடு ஒன்று ஒன்றியும், போரிட்டுக்கொண்டும் உள்ளன என்பது குறித்த அறிவியலே முரண்பாடாகும். பொருள் என்பதே எதிர்மறைகளுக்கிடையே உள்ள முரண்பாடு, ஒற்றுமை ஆகியவை பற்றிய விளக்கமே ஆகும். பொருட்களில் இருக்கும் இம்முரண்பாடு குறித்து, அறிவியல் நோக்கில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார் என்கிறார் முனைவர். க.நெடுஞ்செழியன். தொல்காப்பியத்தில் வரும் முரண்தொடை குறித்து, ‘மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே’ எனத்தொல்காப்பியர் கூறுவதாகவும், அதற்கு உரை எழுதிய பேராசிரியர், சொல்லும் பொருளும் பகைத்தல் காரணமாக முரண்தொடை வரும் எனவும் அது ஐந்து வகைப்படும் எனவும், முரண் எனும் சொல்லிற்கு பகைத்தல் எனப்பொருள் இருப்பதால் அப்பகை சொற்களுக்கும் பொருள்களுக்கும் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் எனவும் பேராசிரியர் தரும் விளக்கம் ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன். பொருள் குறித்து தொல்காப்பியர்,

 “இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

 ஒழுக்கமும் என்றிவை இழுக்கு நெறியின்றி

 இதுவாகித் திணைக்குரிப் பொருளெனாது

 பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப” (தொல்-பொருளதிகாரம்-513 & செய்யுளியல்-204)

எனக்கூறியுள்ளார். அதாவது, இன்பம்-துன்பம், புணர்வு-பிரிவு, ஒழுக்கம்-இழுக்கு எனப் பொருள்களில் உள்ள முரண்பட்ட நெறிகளைக் குறிப்பதோடு, இத்திணைக்கு இதுவே உரிப்பொருள் என வரையறை செய்யாது எல்லாப் பொருட்கும் பொதுவாக நிற்கும் பொருளே பொருள்வகையாகும் என்கிறார். சொல்லும் பொருளும் முரணுதல் முரண் என வகைப்படுத்திய தொல்காப்பியர், பொருள்வகையாக இன்பம்-துன்பம், புணர்வு-பிரிவு, ஒழுக்கம்-இழுக்கு எனப்பாகுபாடு செய்வதன் வாயிலாக அம்முரண்பாட்டினை ஒரு கோட்பாட்டு நிலையில் வைத்து விளக்குகிறார் எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்.

   இடையறாத மோதலையும், இயக்கத்தையும் உள்ளடக்கியதே பொருளாகும். பொருதுதல், மோதுதல் எனும் செயலின் அடிப்படையில்தான் பொருள் என்னும் சொல்லும் உள்ளதெனலாம். தொல்காப்பிய இலக்கணத்தில் வரும் அகப்பொருள் என்பது களவு-கற்பு எனும் எதிர்மறைகளை உள்ளடக்கியுள்ளது போலவே, புறப்பொருள் என்பது முற்றுகை–தற்காப்பு, வெற்றி–தோல்வி, புகழ்–இழிவு ஆகிய எதிர்மறைகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. அத்துடன் அகப்பொருள் என்பது புறப்பொருளின் எதிர்மறையாக அமைந்துள்ளது. இவைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பொருள் என்பது முரண்பாடுகளுக்கும் எதிரும் புதிருமான தன்மைகளுக்கும் இடையேயான ஒற்றுமை என்பதன் விளக்கமாகவே இவை அமைந்துள்ளன என்பது தெளிவாகிறது. முன்பு குறிப்பிட்ட, ‘இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்’ எனத்தொடங்கும் தொல்காப்பியப் பாடலும்கூட பொருள்வகையின் தன்மையை, அதாவது முரண்பாடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை, பொதுமையை விளக்குவதாகவே அமைந்துள்ளது எனலாம். மெய்யியலில் முரண்பாடு வகிக்கும் அடிப்படைப் பங்கு குறித்து, ‘பொருள்களில் உள்ள முரண்பாடுகளைப்பற்றிய விதி, அஃதாவது, எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய விதி பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படையாகும்’ என மாவோவும். ‘இயங்கியல் என்பது சரியான கருத்தில் பொருட்களின் அடிப்படையில் உள்ள முரண்பாடுகள் பற்றிய ஆய்வேயாகும்’ என லெனினும் கூறியுள்ளதாக க.நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார்(5)

தொல்காப்பியர்- ஒரு பொருள்முதல்வாத மெய்யியல் அறிஞர்

  தொல்காப்பியர் குறிப்பிடும், பிறப்பு-இறப்பு, இன்பம்-துன்பம், ஊதியம்-இழப்பு ஆகிய எதிர்மறைகளின் ஒற்றுமையாலும், போராட்டத்தாலும் அமைவதே வாழ்க்கை என்ற கோட்பாட்டை விளக்கும் மூலச்சான்றாக இருப்பவை பக்குடுக்கை நன்கணியார், கணியன்பூங்குன்றனார் ஆகியவர்களின் புறநானூற்றுப் பாடல்களாகும். வாழ்க்கையை இயங்கியலாகப் பார்த்த இவ்வறிவியல் பார்வை பொருள்முதல்வாதக் கோட்பாட்டிற்கு உரியதாகும். ‘ஒரு பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படைக்காரணம் புறத்தில் அல்ல அகத்திலேயே இருக்கின்றது; அதற்குள்ளே நிலவும் முரண்பாட்டியல்பில் இருக்கிறது; இந்த அக முரண்பாட்டியல்பு ஒவ்வொரு பொருளிலும் உண்டு. எனவேதான் பொருட்களில் இயக்கமும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. அதே வேளையில் இதர பொருட்களுடன் கொண்டுள்ள அதன் உறவுகளும், பாதிப்புகளும் இரண்டாம் நிலைக்காரணங்களாகின்றன’ என மாவோ அவர்கள் கூறுகிறார். இவ்விளக்கத்தின் அடிப்படையில் தொல்காப்பியரை ஆராயும் போது அவர் எண்ணியப் பொருள்முதல்வாதப் பள்ளியைச்சேர்ந்தவர் என்பதை அறியலாம் எனவும், அவருடைய ஐம்பூதக்கோட்பாடும், உயிர்களின் வளர்ச்சி பற்றிய அவரின் படிமுறைக்கோட்பாடும் அதற்கான சான்றுகள் எனவும் குறிப்பிடுகிறார் க. நெடுஞ்செழியன்.

  கரும நிகழ்வே இடமெனச் சொல்லும் தொல்காப்பியர், அக்கரும நிகழ்வுகளை நேற்றுநடந்தது, இன்று நடக்கிறது, நாளை நடக்கும் என வகைப்படுத்துவதே காலம் எனவும் தெளிவுபடுத்துகிறார். இவ்வாறு நிகழ்ச்சிகளே இடமாகவும், காலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதையும், அதனாலேயே அவை முதற்பொருளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன என்பதையும் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இடம் காலம் ஆகியனவற்றின் இயல்புகளை, “இடமும் காலமும் பொருளது இருத்தலின் வடிவங்கள், பொருள்களின் எல்லா நிலைகளுக்கும் அவை இயல்பானவை. எந்தப் பொருளியல் இயக்கமும் எங்காயினும் ஏதெனும் ஒரு இடவெளியில், எப்போதாயினும், ஏதேனும் ஒரு காலத்தில்தான் நடைபெறுகிறது. காலத்திற்கும் இடத்திற்கும் புறம்பான இருத்தல்(BEING) நிலவுகிறது என்ற கருத்துமுதல்வாத-மதவரையறுப்பை ஏங்கெல்சு விமர்சித்தார். காலத்திற்குப் புறம்பான இருத்தல், இடத்திற்குப் புறம்பான இருத்தல் என்பன வெற்றுரைகளாகும் என அவர் கூறினார். பொருள்களின் இடவெளிப் பண்புகளும், காலவெளிப்பண்புகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை என்பதை தற்கால அறிவியல் உண்மைகள் காட்டுகின்றன” என மார்க்சியம் விளக்குகிறது. தொல்காப்பியர் இடத்தையும் காலத்தையும் முதற்பொருளாக வைத்ததும், கருப்பொருளும், உரிப்பொருளும் அம்முதற்பொருளை சார்ந்து நிகழ்வன என்று குறிப்பதும் இப்பின்புலத்தில் இருந்து ஆராயத்தக்கவை எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(6)

எதிர்மறைகளின் ஒற்றுமை:

  ஒற்றுமை என்பதற்கு இணங்கியிருத்தல், ஒன்றிணைதல், சார்ந்திருத்தல் எனப்பல பொருள்கள் உண்டு. ஊடலும், கூடலும் காமத்தின் இரு எதிர்மறைகள். ஊடியபடியே இருந்தாலும் வாழ்வு திகட்டிவிடும். ஆகவே முற்றான ஊடல், முற்றான கூடல் ஆகிய இரண்டும் பயனற்றவை. ஆகவே ஊடல்-கூடல் ஆகிய இரு எதிர்மறைகளின் ஒற்றுமை மூலமே காமம் பெறப்படுகிறது. ஒன்றில்லாமல் ஒன்று சுவைக்காது. இவை மிகுந்தாலும், குறைந்தாலும் இனிமையற்றது; அதனால் பயனற்றது எனச் சொல்வது, வாழ்க்கை குறித்த ஒரு அறிவியல் பார்வை ஆகும்.

 எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதற்கு,

 “நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்

 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்ற தொல்காப்பியரின் இந்நூற்பா சான்றாகிறது. இதில் ஒன்றோடு ஒன்று மாறுபட்டதும் முரண்பட்டதுமான பூதங்கள் ஐந்தும் கலந்த மயக்கம் தான் உலகம் என தொல்காப்பியர் கூறுகிறார்.. உலகமானது முத்தும் மணியும் கலந்தார்போல ஐம்பூதங்களிலும் விரவி நிற்கும் எனவும், பொன்னும், வெள்ளியும், செம்பும் உருக்கி ஒன்றானது போல வேற்றுமையின்றி ஒன்றிணைந்ததே இவ்வுலகம் எனவும் இளம்பூரணர் இதற்கு விளக்கம் தந்துள்ளார்(7). எதிர்மறைகளான இந்த ஐந்து பூதங்களும் இணங்கியும், ஒன்றிணைந்தும், சார்ந்தும் உருவானது இவ்வுலகம் எனக் கூறுவதன் மூலம், எதிர்மறைகளின் ஒற்றுமையால் உருவானதே இவ்வுலகம் என தொல்காப்பியர் கூறுகிறார் எனலாம்.

  “முரண்பட்ட தன்மைகளின் ஒன்றையொன்று சார்ந்த நிலையும், அந்தத் தன்மைகளுக்கிடையிலான போராட்டமும், பொருட்கள் அனைத்திலும் வாழ்வை நிர்ணயிப்பதோடு அவற்றின் வளர்ச்சியையும் முன் தள்ளுகின்றன” என மாவோ கூறுகிறார். முரண்பட்ட தன்மைகளின் ஒன்றையொன்று சார்ந்த நிலைக்கும், அந்தத் தன்மைகளுக்கிடையிலான போராட்டத்திற்கும் தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒருசிறந்த எடுத்துக் காட்டாக இருக்கிறது எனலாம். அகத்திணையின் புறனாகப் புறத்திணையையும், அகத்திணைக்கு உள்ளும் களவின் முரணாகக் கற்பையும் அடிப்படையாகக் கொண்டு, அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல்கள் அமைக்கப்பட்டிருப்பதன் நுட்பம் கருதத்தக்கதாகும். ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’ எனத்துவங்கும் நூற்பா முரண்பாடுகளின் இயல்பினை, அவை ஒன்றையொன்று சார்ந்துள்ள நிலைக்கும், ஒன்றில் ஒன்று மாறுபட்டு நிற்கும் நிலைக்கும் உள்ள தொடர்பை நல்லவண்ணம் விளக்குகின்றது என்கிறார் க. நெடுஞ்செழியன்(8)

      முரண்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையை அகப்புறத் திணைகளில் மட்டுமில்லாமல் அகத்திணையின் உரிப்பொருள்களில், புணர்தல்-பிரிதல், இருத்தல்-இரங்கல், ஊடல்-கூடல் எனவும், எண்வகைச்சுவைகளை விளக்கும் மெய்ப்பாட்டியலில், நகை-அழுகை, இழிவு-வியப்பு, அச்சம்-வீரம், வெகுளி-கோபம் எனவும் தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார் என்கிறார் க. நெடுஞ்செழியன். முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய பண்பு குறித்து ஆராயும் ஏங்கெல்சு, “முரண்பாடு என்பது வாழ்கின்ற உயிரினத்திற்கும் அதனுடைய வளர்ச்சிக்கும் கூட பொருந்தும்……நொடிக்குநொடி ஒரு பொருள்தானாகவும் வேறாகவும் உள்ளது…..ஆகவே உயிர் என்பதே ஒரு முரண்பாடாகும். உயிர்ப்பொருட்களின் உள்ளேயும் அவற்றின் இயக்கங்களிலும் பொதிந்து கிடப்பதும்; இடையறாது தோன்றிக்கொண்டும் தாமாகவே மறைந்துகொண்டும் இருப்பதும் அதுவேயாகும். அம்முரண்பாடு முடியும்பொழுது, உயிரும் முடிவுறுகின்றது. சிந்தனையும் கூட அம்முரண்பாட்டிலிருந்து தப்ப முடியாது என்பதைப்பார்க்கிறோம்” எனக் கூறுகிறார். முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய பண்பு இங்கு ஏங்கெல்சால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

   பொருளின் ஒவ்வொரு இயக்க வடிவத்திலும் இருக்கும் முரண்பாடு தனக்கெனத் தனித்தன்மை வாய்ந்த இயல்புகளைக் கொண்டுள்ளது. பொருள்களைப் பற்றிய மனித அறிவு என்பதே இந்த இயக்க வடிவங்களைப் பற்றிய அறிவே ஆகும். இந்தச்சிறப்பான அறிவுத்துறையை தமிழர் கோட்பாடாகிய எண்ணியம் நன்கு வளர்த்தெடுத்தது. ஒன்றினுள் ஒன்று கலக்கும் அதே வேளையில் ஒவ்வொன்றும் தன் தனித்தன்மைகளை இழக்காமலும் இருக்கின்றது. ஐம்பூதங்களும் கலந்த மயக்கம் இவ்வுலகம் எனக் கண்டுணர்ந்த தமிழ் மெய்யியல் அறிஞர்கள், ஒவ்வொரு பூதத்தின் தனித்தன்மைகளையும் அவற்றின் இயல்புகளையும் ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு பால், சீர் எனப்பெயரிட்டுள்ளனர். சான்றாக நீர் என்பதன் பால் குளிர்மை ஆகும். அதன் சீர் எனும் இயல்நெறி கீழ் நோக்கிப் பாய்தல் ஆகும். ‘மண் திணிந்த நிலனும்’ எனத்தொடங்கும் புறநானூற்றுப்பாடல் பூதங்கள் ஐந்தும் ஒன்றனுள் ஒன்று கலந்திருத்தலும் ஒன்றிற்கொன்று முரண்பட்டு நிற்றலும் அவற்றின் இயற்கைப் பண்புகள் எனக் குறிப்பதன் மூலம் தமிழரின் இயல்புக்கோட்பாடு விளக்கம்பெறக் காணலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன்(9).

முதன்மைக்கூறும் பகைமையும்:

  பொருட்கள் அனைத்துமே முரண்பாடுகளின் தொகுப்புகளாக உள்ளன. மிகச்சிறிய அணுவில் மின்மம்(ELECTRON), நேர்மம்(PROTON), நடுமம்(NEUTRON) ஆகிய இம்மூன்றிற்குமான முரண்பாடுகள் உண்டு. அம்மூன்றின் முரண்பாடு இன்றி அணு இல்லை. இப்படி பொருட்களில் முரண்பாடு உண்டு எனினும், சிலபோது அவற்றில் ஏதேனும் ஒன்று முதன்மையான பங்கை வகிக்கும். முதன்மையான பங்கை வகிக்கும் அம்முரண்பாடு அப்பொருளின் இயக்கம்-வளர்ச்சியின் மீது செல்வாக்கு வகிக்கும். பிற முரண்பாடுகள் இரண்டாம் நிலையில் இருக்கும். மேலாண்மை வகிக்கும் முரண்பாட்டின் முதன்மைக் கூறு குறித்து தொல்காப்பியரின் இப்பாடல் விளக்கம் தருகிறது.

  ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

  ஒன்றி உயர்ந்த பால தாணையின்

 ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப

 மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே – (பொருளதிகாரம்:90, களவியல்:2) இந்நூற்பா காமம் குறித்த அறிவியல், உளவியல், இயங்கியல் பார்வையைக்கொண்டதாக அமைந்துள்ளது என்கிறார் க. நெடுஞ்செழியன்.

   இப்பாடலில், காதல் தோன்றக்காரணமாக உள்ள பால் ஆண்பால் என்றோ, பெண்பால் என்றோ தொல்காப்பியர் கூறவில்லை. இந்த இரண்டையும் சம்மாகக்கருதி, அதில் எது மேலாண்மை செலுத்துமோ அது காதலை முன்னெடுத்துச் செல்லும் என்பதே அவரின் கருத்தாகும். சமமான இரு எதிர்மறைகளில் எது மேலாண்மை செலுத்துமோ அது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்ற இயங்கியல் நோக்கோடு இப்பாடல் பாடப்பட்டுள்ளது எனலாம். சமமான இரு எதிர்மறைகளில் ஏதேனும் ஒன்றே முடிவான, தீர்மானமான பங்கை வகிக்கக் காணலாம் என்பதைத்தான் தொல்காப்பியர் ‘ஒன்றி உயர்ந்த பாலது ஆணை’ எனக் குறிப்பிடுகிறார். சான்றாக குறிஞ்சிக்கலியின் முதல் பாடலில் தலைவி காதலை முன்னெடுத்துச்செல்வதையும், குறிஞ்சிக்கலியின் 15ஆம் பாடலில் தலைவன் காதலை முன்னெடுத்துச்செல்வதையும் முனைவர் க.நெடுஞ்செழியன் விரிவாகக் குறிப்பிடுகிறார்.

  எதிர்மறைகளுக்கு இடையேயான முரண்பாடுகளில் மேலாண்மை செலுத்தும் கூறு அகத்திணையில் ஆக்கத்திற்குத் துணையாகிறது. அதுவே புறத்திணையில் போர் ஏற்படக் காரணமாகிவிடுகிறது. ஆநிரைகளைக் கவர்தலும், மீட்டலும்; அரணை முற்றுகையிடலும், தற்காத்தலும்; போரில் முன்னேறுதலும், பின்வாங்கலும் இவை எல்லாம் முரண்பாட்டில் பகைமையின் பங்களிப்புக்கள் எனலாம். இம்முரண்பாடுகளையும், முரண்பாடுகளின் பல்வேறு தன்மைகளையும் உள்ளடக்கி அவற்றை வாழ்வியல் நெறியாக, மெய்யியல் கோட்பாடாக வடித்தளித்த பெருமை பக்கடுக்கை நன்கணியாருக்கு உரியதாகும். இருள் இன்றிப் பகல் இல்லை; இன்னாமை இன்றி இனிமை இல்லை. துன்பமே உலக இயற்கை. அத்துன்பத்தில் இனிமை காண்பதே வாழ்க்கை என அறிவுறுத்தியவர் அவர்.

 ‘இன்னா தம்மஇவ் வுலகம்

 இனிய கண்கிதன் இயல்புணர்ந் தோரே’ (புறம்-194). அவரது இப்புறப்பாடல் அதனைத்தான் கூறுகிறது. இனிமை, இன்பம் இவற்றிற்கான முரண்பாடுகளுக்கிடையே அமைந்ததே மனித வாழ்க்கை என்னும் இயங்கியல் கோட்பாடு இப்பாடலில் முழுமை பெறுகிறது. தமிழரின் வாழ்வியலுக்கும் மொழியியலுக்கும் மட்டும் உரிய இலக்கணமாகத் தொல்காப்பியத்தைக் காணாமல், தமிழரின் மெய்யியலுக்குரிய இலக்கணமாகவும் காண வேண்டும். அப்படிக்காணும் பொழுதுதான் இந்தியப் பொருள் முதலியல் வரலாற்றிலும், கிரேக்கப் பொருள் முதலியல் வரலாற்றிலும் தமிழர் வகித்த பங்கை, அவர்களின் பங்களிப்பை அறிய இயலும் எனக் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(10)

பார்வை:

  1. தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்: 54.

2. ஆசிவகமும் ஐயனார் வரலாறும், க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் – இரா. சக்குபாய், பாலம் பதிப்பகம், தை-2014, பக்: 44-47.

  1.  “ “  “  பக்: 47

4  “  “  “  பக்: 50,51.

5.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்: 69-73.

  1.  “ “  “  பக்: 74-77

7.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர்:முனைவர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016 பக்: 332.

  1.  தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:78-81
  1.  “ “  “  பக்: 82-88

10.  “  “  “  பக்: 90-97

- கணியன் பாலன், ஈரோடு