இலங்கை யாழ்ப்பாணம் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஆங்கிலேயர் வசமானது.

யாழ்ப்பாணத்தில் ஆங்கிலேய கிருஸ்துவ பாதிரிமார்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். பள்ளிகள் அமைத்து ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாக்கினர். ஆங்கிலத்தில் வல்லமை பெற்றவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளித்தனர். பண உதவியும், சலுகைகளும் ஆங்கில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சைவ சமயத்தை இகழ்ந்து பிரச்சாரம் செய்தனர். கிருஸ்துவ மதம் பரவிட சைவ சமயம் தடையாயிருப்தை அறிந்து அதை அடியோடு ஒழித்திட முனைந்தனர்.

Arumuka Navalarஇந்த சமூகச் சூழலில், “தாம் வாழ்ந்த சமுதாயத்தை நோக்கி, அச்சமுதாயத்திற்கு இன்றியமையாது வேண்டப்படுபவை எவை என அறிந்து, அவற்றைச் செயற்படுத்த தமது வாழ்க்கையைத் தியாகம் செய்தமையே, ஆறுமுக நாவலரது தனித்துவத்திற்கும், சிறப்புக்கும் அடிப்படைக் காரணமாகும்.”

மேலும், “தற்போது வரலாற்று ஆராய்ச்சியும் விஞ்ஞான அடிப்படையில் வளர்ந்திருக்கிறது. ஆயினும் இலங்கையின் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் முக்கிய ஒருவராக நலலைநகர் நாவலர் விளங்குகின்றார்.”

“நாவலர் மரபுக் கூறுகளில் ஒரு முகப்படுத்தப்பட்ட இலக்கிய நோக்கு மக்கட்சார்பு, நாட்டு நலநாட்டம் என்பன சிறப்பானவை என்பதையும் அவை மறைமுகமாகவேனும், உள்ளார்ந்த சக்தியுடனும் செயற்படுத்துவதினாலேயே தற்கால ஈழத்துத் தமிழலக்கியம் சிற்சில அம்சங்களில் தமிழக இலக்கியப் போக்கிலிருந்து வேறுபட்டு விளங்குகிறது என்பதையும் நாம் ஐயத்துக்கிடமின்றி உணரக் கூடியதாயிருக்கிறது.” என பேராசிரியர் க. கைலாசபதி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்து நல்லூரில் 18.12.1822 அன்று கந்தர் - சிவகாமி வாழ்விணையருக்கு மகனாப் பிறந்தார்.

ஐந்து வயதில் நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடத்தில் கல்வி கற்றார். வாக்குண்டாம், நிகண்டு எண் சுவடிகளைக் கற்றார். பின்னர் நைடதம், பாரதம், கந்தபுராணம் போன்ற நூற்களையும் மனப்பாடம் செய்தார். வேலாயுத முதலியாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றார். சேனாதிராய முதலியார், சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் நன்னூல், திருக்கோவையார், சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற நூற்களைக் கற்றார். தமது பன்னிரெண்டாவது வயதில் பெர்சிவல் பாதிரியார் நடத்திய யாழ் வெஸ்லியன் மிசன் பள்ளியில் ஆங்கிலம் பயின்றார். சைவசித்தாந்த சாத்திரங்களையும் சிவகாமத்தையும் கற்பதற்குத் துணைபுரியும் வடமொழியையும் நன்கு கற்றார்.

இவருடைய தமிழ், ஆங்கில மொழித் திறமையைக் கண்டு தமது பள்ளியில் கீழ்வகுப்புகளுக்கு ஆங்கிலமும், மேல் வகுப்புகளுக்கு தமிழும் கற்பிக்க வேண்டிக் கொண்டார் பெர்சிவல் பாதிரியார். ஊதியம் எதுவும் பெறாமலே அப்பணியைச் செய்தார் ஆறுமுக நாவலர். 1841 ஆம் ஆண்டு முதல் வெஸ்லியன் கல்லூரியில் பணியாற்றினார். பெர்;சிவல் பாதிரியாரின் வேண்டுகோளின்படி விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்து அளித்தார். தனது கல்வி, சமயத் தொண்டுகளுக்கு இடையூறாக இருக்கும் என்றெண்ணி தமது ஆசிரியப் பணியை 1842 ஆம் ஆண்டு துறந்தார்.

சைவ சமயத்தைப் பரப்பிட கிருஸ்துவ பாதிரிமார்களைப் போலவே பொது வீதிகளிலும், பொது இடங்களிலும் சொற்பொழிவு செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தார். 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலில் முதல் முதலாக கிருஸ்துவ மதப்பிரச்சாரத்தைக் கண்டித்து சைவச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

சைவ சமய மாணவர்கள் கல்வி பயில 1848 ஆம் ஆண்டு வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆறுமுக நாவலர் நிறுவினார். நாவலரது அயரா உழைப்பாலும், இடைவிடா முயற்சியாலும்
யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத்துறை, கந்தர்மடம், பருத்தித்துறை, இனுவில், கோப்பாயி, புலோலி முதலான இடங்களிலும் சைவ வித்தியாசாலைகள் உருவாக்கப்பட்டன.

ஆறுமுக நாவலர் சைவ சமய சொற்பொழிவாற்றுவதிலும், தாம் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்பிப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.

தமது சைவப்பிரகாச வித்தியாசாலையில் சைவ சமயக் கல்வி, தமிழ் இலக்கியங்களாகிய கந்தபுராணம், பெரியபுராணம் மற்றும் இலக்கணங்களாகிய நன்னூல், வீரசோழியம் போன்றவற்றையும் கற்பித்தார். மேலும், கணிதம், வரலாறு, புவியியல், வானியல், தர்க்கம், சோதிடம் வேளாண்மை, வைத்தியம், அரசநீதி ஆங்கிலம், சிற்பம் போன்ற பாடங்களும் முறையாகக் கற்பிக்கப்பட்டன.

எந்த மாணவனுக்கும் கல்வியூட்டுவதற்கு அவனுடைய தாய்மொழியே மிகச் சிறந்தது என்பதே கல்வி நிபுணர்களதும், உளநூல் வல்லுநர்களதும் முடிவு ஆகும். நாவலர் நடத்திய வித்தியாசாலையிலும் தாய் மொழியான தமிழில் அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிழையற்ற கருவி நூல்களையும், சமய நூல்களையும் தேவையெனக் கருதி தாமே எழுதினார்.
தமது பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வீடுதோறும் படி அரிசி திரட்டும் திட்டத்தை செயற்படுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வெஸ்லியன் மிஷன் ஆங்கிலப்பள்ளியில் ஆங்கிலம் கற்ற சைவ
சமய மாணவர்கள் நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு நுழைவதைப் பள்ளியில் கிருஸ்துவ பாதிரியார் தடுத்தார். இதனால் பள்ளி மாணவர்கள் ஆறுமுக நாவலரிடம் வந்து நெற்றியில் விபூதி பூசியதால் பள்ளியிலிருந்து துரத்தப்பட்டோம். நெற்றியில் பூசியுள்ள விபூதியை அழித்துவிட்டுச் சென்றால் பள்ளியில் அனுமதிக்கப்படுவோம் என்று முறையிட்டனர். மேலும், தாங்கள் எங்களுக்காக ஆங்கிலப் பள்ளி ஒன்றை நிறுவினால் நாங்கள் ஆங்கிலமும் கற்போம், புறச்சமய போதனையிலிருந்தும் விடுபடுவோம் என்று வேண்டிக் கொண்டனர். அதையடுத்து 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘வண்ணார்ப்பண்ணை சைவ ஆங்கில வித்தியாசாலை’ எனப் பெயர் கொண்ட பள்ளி ஒன்றை நிறுவினார். ஆங்கிலேய அரசின் உதவி இல்லாததால் நான்காண்டுகள் மட்டும் இப்பள்ளியை நடத்தினார்.

ஆறுமுக நாவலர், தமது பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல்களையும், சைவ சமய நூல்களையும் அச்சிட்டு வெளியிட அச்சு இயந்திரம் வாங்கிட முடிவு செய்தார். அச்சு இயந்திரம் வாங்கிட சதாசிவம் பிள்ளையுடன் சென்னைக்குச் சென்று வந்து அச்சு இயந்திரங்களை வாங்கினார். அந்த அச்சு இயந்திரங்களைக் கொண்டு, யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1849 ஆம் ஆண்டு ‘வித்தியாநுபாலன யந்திர சாலை’ என்னும் அச்சகத்தை நிறுவினார். அந்த அச்சுக் கூடத்திலிருந்து பாலபாடங்கள், ஆத்திச்சூடி, கொன்ற வேந்தன், கொலை மறுத்தல், நன்னூல் சங்கிர நமச்சிவாயர் உரை, திருமுருகாற்றுப்படை உரை முதலியவற்றை வெளியிட்டார்.

சென்னையிலிருந்து திருவாவடுதுறை ஆதினத்திற்கு 1849 ஆம் ஆண்டு சென்றார். இவரது கல்வித் திறனையும், ஆராய்ச்சித்திறனையும், சொற்பொழிவாற்றும் திறனையும் கண்டு வியந்து, அவ்வாதீனத்தின் பண்டார சந்நிதியாக விளங்கிய தவத்திரு அம்பலவாண தேசிகர் ‘நாவலர்’ என்னும் பட்டத்தை வழங்கினார். அன்று முதல் ஆறுமுகம்பிள்ளை நல்லூர் ஆறுமுக நாவலர் ஆனார்.

சென்னையில் ‘வித்தியாநுபாலன யந்திர சாலை’ என்ற பெயரில் பெரிய அச்சுக் கூடத்தை நிறுவினார். சென்னையிலிருந்த போது சூடாமணி, சௌந்தர்யலகிரி முதலிய நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். மேலும், பெரியபுராணத்தை வசனநடையில் எழுதி மிகச் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிட்டார்.

இராமநாதபுரம் மன்னர் பொன்னுச்சாமி தேவர் நாவலரை விரும்பி அழைத்துத் தமது சபையிலே சொற்பொழிவாற்றச் செய்வித்து, அதனைக் கேட்டு மகிழ்ந்து இவருக்குப் பல விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார். மேலும், இராமநாதபுரம் மன்னர் பொன்னுச்சாமித் தேவர் வேண்டுகோளின்படி, சென்னையில் தங்கியிருந்த ஆறுமுக நாவலர், திருவாசகம், திருக்கோவையார், திருக்குறள் பரிமேலழகர் உரை, தருக்கசங்கிரகம் முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

ஆறுமுக நாவலர் சிதம்பரத்தில் 1864 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சைவ வித்தியாசாலையைக் கட்டத் தொடங்கினார். இங்கு ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து தமிழையும், சைவத்தையும் கற்பித்தார். அங்கு ஆறு வகுப்புகள் நடைபெற்றது. ஒவ்வொரு வகுப்பிலும் திருக்குறள், சூடாமணி, பெரியபுராணம் முதலிய இலக்கியங்களும், சைவ சமய நூல்களும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.

திருவருட்பிரகாச வள்ளலார் பாடிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை, பல தொகுதிகளாக வகுத்து ‘திருவருட்பா’ என்று பெயர் சூட்டி வெளியிட்டனர்.

சமயக் குறவர்களோடு இராமலிங்க அடிகளாரை உயர்த்தி பேசக் கூடாது, அவர் பாடிய பாடல்களுக்கு ‘அருட்பா’ என்று பெயர் கொடுக்கக் கூடாது என்பதை ஆறுமுக நாவலர் முன்வைத்தார். மேலும் அருட்பாவுக்கு மருட்பா எழுதி வெளியிட்டார் ஆறுமுக நாவலர்.

இராமலிங்க அடிகளார் சிதம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆறுமுக நாவலரின் நிலைபாட்டை மறுத்து உரை நிகழ்த்தினார். இது குறித்து ஆறுமுக நாவலரால் 1869 ஆம் ஆண்டு கடலூர் மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதி மன்றம் இராமலிங்க அடிகளாருக்கு எவ்விதத் தண்டனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நாவலர் கல்வி மரபானது சைவ சமயக் கல்வி, தமிழ் மொழிக் கல்வி, தொழிற்கல்வி, முறைசாராக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த நோக்குடன் விளங்கியது.

சைவ சமயத்தைப் பரப்பிட யாழ்ப்பாணத்திலிருந்து ‘சைவோதய பானு’ என்னும் பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். இராமசாமி, சைவசமயாபிமாணி, சைவப் பிரகாசர், நடுவன், கருணை, சைவன், சைவப் பிரகாச சமாஜியர் ஆகிய புனை பெயர்களில் பல்வேறு கட்டுரைகளையும், நூல்களையும் ஆறுமுக நாவலர் எழுதி உள்ளார்.

இலங்கை மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் சைவ சமயப் பிரச்சாரத்தை முழு அளவில் மேற்கொண்டவர் ஆறுமுக நாவலர். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகிய மடங்களில் சைவ சமய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

ஆறுமுக நாவலரது சைவ சமயப் பிரச்சாரம் வெளிநாட்டவரைக் கூட வியப்பில் ஆழ்த்தியது. ராபின்சன் பாதிரியார் 1867 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் வெளியிட்ட ‘இந்து பாஸ்டேர்ஸ்’ என்னும் நூலில், “பாதிரிமாராகிய நாங்கள் முயன்றது போலவே நாவலரும் முயன்று சைவ சமயப் பிரசங்கங்கள் செய்து, அச்சுக் கூட்டம் அமைத்து நாங்கள் வெளியிட்டது போல் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட்டார்’ என்று பதிவு செய்துள்ளார்.

தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடி அளவில் இருந்து, பாதுகாப்பற்றுக் கறையானுக்கும் செல்லுக்கும் மண்ணுக்கும் இரையாகிப் போவதைத் தடுத்த நிறுத்த முற்பட்டவர் ஆறுமுக நாவலர். ஓலைச் சுவடியிலிருந்து பெயர்த்தெடுத்து, பல பிரதிகளோடும், ஏட்டுச் சுவடிகளோடும் ஒப்பிட்டுப் பரிசோதித்து, அவற்றுள் எது இலக்கணம், பொருள் ஆகியவற்றுக்கு ஒத்து வருகிறது என ஆராய்ந்து அப்பாடத்தைப் பதிப்பித்தார். இவர் பாடவேறுபாடுகளை அச்சிடுவதில்லை. அதே போன்று பிரதிகளின் மூலமின்றி எந்த ஒன்றையும் தாமாகத் திருத்தியதில்லை. இலக்கணம், சித்தாந்தம் தொடர்புடைய நூல்களில் தமக்கு முன்பிருந்த ஆசிரியர்களின் துணையின்றித் தாமாக எதையும் சொல்லியதே இல்லை. நாவலருடைய பதிப்பு நூல்களில் பிழை இருக்காது.

அவர் பதிப்பித்த நூல்களில் பக்க எண் பாடல் எண், தலைப்பு எண் ஆசிய அனைத்தும் தமிழ் எண்ணாகவே இருக்கும். பதிப்பித்த ஆண்டு கூடத் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆங்கில ஆண்டு இடம் பெறாது.

இலக்கணக் கொத்து மூலமும் உரையும், உபநிடதம் மூலமும் உரையும், கந்தபுராணம், கந்தரலங்காரம், சிங்கைச் சிலேடை வெண்பா, சிவதத்துவ விவேகம், சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், திருக்குறள் மூலமும் உரையும், திருக்கோவையார், திருவாசகம், தேவாரத்திரட்டு, நன்னூல் காண்டிகையுரை, மகாபாரதம், நன்னெறி மூலமும் உரையும், வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மகாபாரதம் உட்பட 46 நூற்களைப் பதிப்பித்துள்ளார். இலக்கணச் சுருக்கம், இலக்கிய வினாவிடை, துருவாக்கியம், சிதம்பர மான்மியம், சிவாலய தரிசன விதி, சிவபூசைத் திரட்டு, சைவ சமயம், சூசனம், சைவ வினாவிடை, பாலபாடம், யாழ்ப்பாணத்துச் சமயநிலை, வள்ளியம்மை திருமணப் படலம் உட்பட 24 நூற்கள் எழுதியுள்ளார்.

மேலும், ஆத்திச்சூடியும் கொன்றை வேந்தனும், நல்வழி, கோயிற்புராணம், சைவ சமய நெறி, திருத்தொண்டர் புராணம், திருமுருகாற்றுப்படை, பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் உட்பட 17 நூற்களுக்கு உரை எழுதி அளித்துள்ளார்.

கவிதை உலகில் இருந்த தமிழன்னையை வசன உலகிற்குச் கொண்டு வந்ததில் ஆறுமுக நாவலருக்கு மிகப்பெரிய பங்குண்டு.

“நிறைந்த கல்வியுடைய வித்துவான்களும், குறைந்த கல்வியுடைய பிறரும் எக்காலத்துக்கும் எளிதில் வாசித்து உணரும் பொருட்டும், கல்வியில்லாத ஆடவர்களும், பெண்களும் பிறரைக் கொண்டு வாசிப்பித்து உணரும் பொருட்டும், வாசிப்பவர்களுக்கு எளிதிலே பொருள் விளங்கும்படி அச்சிற்பதிப்பித்தேன்” என்று தமது உரைநடை குறித்து ஆறுமுக நாவலர் பதிவு செய்து உள்ளார்.

இலக்கண இலக்கியப் பிழைகளும், அச்சுப்பிழைகளும் இல்லாமல் உயர்ந்த தமிழிலக்கண இலக்கிய நூல்களையும், சைவ சமய நூல்களையும் ஆறுமுக நாவலர் பதிப்பித்து தமிழுலகிற்கு அளித்துள்ளார்.

“பாட்டுக்களால் இயன்ற நூல்களே மட்டுமின்றி உரை நூல்களும் இலக்கியமே என்னும் கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளாத ‘இருண்ட’ காலப்பகுதியில் உரைநடை நூல்கள் இயற்றி உய்யும் நெறி காட்டியவர் நாவலர். ‘ஆறுமுக நாவலரை, வசனநடை கைவந்த வல்லாளர்’ என பரிமாற்கலைஞர் போற்றியுள்ளார். மேலும், ‘தற்கால உரைநடையின் தந்தை’ என இலங்கைப் பேராசிரியர் வி. செல்வநாயகம் புகழ்நதுரைத்துள்ளார்.

ஆறுமுக நாவலரை ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்று தமிழறிஞர் மு. வரதராசனார் போற்றியுள்ளார்.

வீரமாமுனிவருக்குப் பின் தமிழ் உரைநடையை புதிய பாதையில் செல்ல வைத்தவராக விளங்கினார் ஆறுமுக நாவலர், அவரது உரைநடை எளிமையும், தெளிவும் கொண்டது.

“உரை எழுதும் பணி எளிதானதன்று, ஒரு நூலுக்கு உரை எழுதும் பொழுது அந்நூலைப் பன்முறை கற்றிருக்க வேண்டும். நிகண்டுகளையும் பிழையறப் பயின்றிருக்க வேண்டும். மூல நூலில் எக்கருத்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதற்கு மட்டுமே உரை எழுத வேண்டும். மூல நூலாசிரியரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்துகளைத் தாமே வலியப் புகுத்தி உரை எழுதக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, எழுதப்படும் உரையானது அனைவருக்கும் மிக எளிதில் விளங்கும் முறையில் அமைய வேண்டும். இத்தனை முறைகளையும் கையாண்டு எழுதும் உரையே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்” என உரையாசிரியருக்கான இலக்கணம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கணத்தின் அடிப்படையில் ஆறுமுக நாவலர் சிறந்த உரையாசிரியராக விளங்கினார். மேலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ‘உரைநடை வித்தகர்’ என்று பெருமை பெற்று விளங்கியவர் ஆறுமுக நாவலர்.

வில்லியம் கிரகேரி என்னும் இலங்கையின் ஆஸ்பதி 1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தார். குடநாட்டில் கொடிய பஞ்சம் நிலவியதால், பஞ்ச நிவாரணத்திலும், பொது நிர்வாகத்திலும் பல ஊழல்கள் நடைபெற்றன. அதைக் குறிப்பிட்டு 1878 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகைபுரிந்த ஜேம்ஸ்வோங்கிடன் என்ற ஆங்கிலேய அதிகாரியிடம் ஆறுமுக நாவலர் நீண்டதோர் விண்ணப்பம் கொடுத்தார்.

அந்த விண்ணப்பத்தில் வயல்வரி, தலைவரியுடன் மதிப்பீட்டு வரிப்பணம் செலுத்த வேண்டிய கொடுமை. களவு, சண்டைகள் நிகழும்போது, காவல் நிலையங்கள் வெகுதொலைவில் இருப்பதால் உரிய நேரத்தில் சென்று புகார் கூற இயலாத நிலைமை, காவல் படையினரது குடிப்பழக்கம், கண்ணியமானவரைக் கூட முரட்டுத்தனமாக நடத்தும் கொடுமை, அலுவலகங்களில் சிப்பாய்கள் அதிகாரிகளைப் பார்க்க விடாமல் பெரியவர்களைத் துரத்தி விடும் கொடுமை, காவல்துறையினருக்கு எதிராக அனுப்பப்படும் குறைகளை அலட்சியம் செய்தல் முதலியவற்றை புகார்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆறுமுக நாவலர் தமது வாழ்நாளின் இறுதிநாட்களில் சமூக சேவையாலும் ஈடுபட்டார். 1877 ஆம் ஆண்டு மழை குறைந்தமையினால் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் நெல் விளைச்சல் மிகவும் குறைந்து பஞ்சம் ஏற்பட்டது. ஆறுமுக நாவலர் சிலரின் உதவி பெற்று ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றினார். மேலும் கஞ்சித் தொட்டிக் கூட்டம் நடத்தி அரிசி, காய்கறிகளை சேகரித்து ஏழைகளுக்கு உணவு அளித்திட ஏற்பாடு செய்தார்.

ஆறுமுக நாவலர் சமூகத்துறையில் தமது கவனத்தைச் செலுத்திய பொழுது, மக்கள் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய பிரச்சனைகளில் முன்னின்று உழைத்தார். உணவு, சுகாதாரம், உழைப்பு, கல்வி, ஆட்சிமுறை முதலியன அனைவரையும் பாதிக்கக் கூடியவை. இத்துறைகளிலே ஆங்கிலேயர் ஆட்சியில் காணப்பட்ட அநீதிகளையும், அபத்தங்களையும் ஆன்ம வீரர்களுக்குரிய இலட்சியப் பிடியுடனும், கண்டிப்புடனும் வெளிப்படுத்தினார்.
ஆறுமுக நாவலர் 1874 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம். இலங்கையிலே பூர்வகாலத்தில் மதுபானம் மிக அரிதரிது. தற்காலத்திலோ அது விருத்தியாகிக் கொண்டே வருகிறது. மதுபானம் மூலம் துரைத்தனத்தாருக்கு ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் வரவு வருகிறது. ஆங்கிலேய துரைத்தனத்தார், தமக்குச் சாராயத்தால் எய்தும் பொருளைப் பிறவாயில்கள் சிலவற்றால் எய்துவிக்கத் தலைப்பட்டுக் கொண்டு சாராயத்தை ஒழிப்பாராயின், இலங்கைச் சனங்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்” என்று அன்றே மதுவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்.

சர். முத்துக்குமாரசுவாமி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இருந்து போது 04.05.1879 திடீரென்று இறந்துவிட்டார். அப்போது, பொன். இராமநாதனை சட்டசபைக்கு உறுப்பினராக முன் மொழிந்த நாவலர் “சட்டசபையில் நமது பிரதிநிதியாக அமர்பவர் தமிழராயிருத்தல் வேண்டும். அவர் சிறந்த கல்வி பெற்றவராகவும், உயர்ந்த கொள்கையுடையவராகவும் இருத்தல் வேண்டும். கருத்துச் சுதந்திரமும், எந்தச் சூழலிலும் அக்கருத்தை வெளியிடும் திறமையும் வேண்டும். மேலும் ஆள்வோரதும், ஆளப்படுவோரதும் மதிப்பிற்குரியவராக இருத்தல் வேண்டும்” என அறிவித்தார். ஆறுமுக நாவலரின் வேண்டுகோளின்படி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக பொன். இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ஆறுமுக நாவலர் செல்வாக்கு பெற்று விளங்கினார்.

‘புத்தகம்’ என்ற தலைப்பில் நாவலர் எழுதிய கட்டுரையில், “கல்வியை விரும்பிக் கற்கும் மாணாக்கர்களும், கல்வியிலே தேர்ச்சியடைந்த வித்துவான்களும், இனிக்கற்க முயல்பவர்களுமாகிய எல்லாருக்கும் புத்தகங்கள் இன்றியமையாதனவாம். புத்தகங்களின்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர் போல்வர். யாதாயினும் ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதனைச் செய்வதற்குரிய ஆயுதம் இன்றியமையாதது போல, கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு அதனைக் கற்றற்குரிய புத்தகம் இன்றியமையாததேயாம். ஆதலால், வித்தையை விரும்பிக் கற்கும் சிறுவர்கள் புத்தகங்களைச் சம்பாதித்து, அவைகளைக் கிழியாமலும், அழுக்குப்படியாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாத்து வைத்துப் படித்தல் வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கல்வியில் விருப்பமுடையவர்களாகிய வறிய பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தல் பெரும் புண்ணியம் என வலியுறுத்தினார்.

நமது தேசத்து அரசர்களும், மடாதிபதிகளும், பிரபுக்களும் கருவி நூல்களையும், ஞான நூல்களையும் சம்பாதித்து வைத்து, ஊர்கள் தோறும் புத்தகசாலைகளைத் தருமத்தின் பொருட்டு ஸ்தாபித்து, கல்வியில் விருப்பமுடைய எவரும் எளிதில் வாசித்து ஈடேறும்படி அவைகளை நடத்தி வருதல் உயர்வொப்பில்லாத பெரும் புண்ணியம்”என சுமார் 138 ஆண்டுகளுக்கு முன்பே ஊர்தோறும் நூல்நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் ஆறுமுக நாவலர்!

“மொழிபெயர்ப்புக் கலையில் ஈழத்தவர் தலைசிறந்தவர் என்பதையும், யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்பதையும், விவிலிய தமிழ் மொழி பெயர்ப்பு வழி நிலைநாட்டி ஈழத்திற்குப் பெரும்புகழ் சேர்க்கப் பணிபுரிந்து இளமையிலே தன் திறமையை நிறுவியவர் ஆறுமுக நாவலர் என்பதில் ஐயமில்லை” என பேராதானைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வை. கனகரத்னம் புகழ்ந்துரைத்துள்ளார்.

ஆறுமுக நாவலர், தமிழ் மொழியில் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தவர். தமிழில் கட்டுரை இலக்கியம் முதலில் இவரால் நல்ல முறையில் எழுதப்பட்டது. தமிழில் எழுந்த பாடநூல்களுக்கு இவரே வழிகாட்டியாவார். உரைநடையிற் ஆங்கிலக் குறியீட்டு முறையை முதன் முதலிற் புகுத்தியவர். சைவ – ஆங்கில பாடசாலையை முதல் முதன் நிறுவியவர்.

ஆறுமுக நாவலரை செந்தமிழைப் பேணி வளர்ந்த பெரும்புலவன்” என கவிமணி போற்றியுள்ளார்.

தமிழகத்தின் சமய வரலாறு, இலக்கிய வரலாறு, சமூக வரலாறுகளில் ஆறுமுக நாவலர் தமது முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளார். ஆறுமுக நாவலரை ‘தேசிய இலக்கிய பிதா’ என பேராசிரியர் கா. சிவத்தம்பி புகழ்நதுரைத்துள்ளார்.

சைவப் பிரசாரகராக, பதிப்பாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, நூலாசிரியராக உரையாசிரியராக, பாடநூலாசிரியராக விளங்கிய ஆறுமுக நாவலர் தமது ஐம்பத்து ஏழாவது வயதில் 18.11.1879 அன்று மறைந்தார்.
யாழ்பாணத்தில் நாவலர் கலாச்சார மண்டபம், சைவ நூல் நிலையம் அவரது நினைவைப் போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இலங்கை அரசு 29.10.1971 அன்று ஆறுமுக நாவலருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

- பி.தயாளன்