தமிழ் மொழியின் தொன்மையினைச் சான்றுகளுடன் நிலை நிறுத்தியவர்! தமிழ் இலக்கியங்களின் பண்பாட்டு மேன்மையைப் புலப்படுத்தியவர்! தமிழ் இலக்கணத்தின் தனித்திறத்தை விளக்கிக் காட்டியவர்! பிறமொழி ஆதிக்கச் சூறாவளியில் சிக்கித் தவித்த தமிழ் மக்கள், தாய்மொழித் துறையின் கரை அடைவதற்குச் சேரவேண்டிய திசையினை உணர்த்தியவர்! தனித்தமிழ் இயக்கம் கண்டவர்! தமிழகத்தின் கலங்கரை விளக்கமாக ஒளிர்ந்தவர்! அவர்தான் மறைமலையடிகள்.

maraimalaiadikal 220நாகப்பட்டினம் அருகில் காடம்பாடி என்னும் சிற்றூரில், சொக்கநாத பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் 15.07.1876 ஆம் நாள் மறைமலையடிகள் பிறந்தார். அவரது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் வேதாசலம்.

நாகப்பட்டினத்திலுள்ள வெஸ்லியன் மிசன் பள்ளியில் சேர்ந்து பயின்றார். தொடக்கப் பள்ளியிலேயே வகுப்புத் தலைவன் என்னும் சிறப்பும், தலைமை மாணவன் என்னும் தேர்ச்சியும் பெற்றார். இளமைப் பருவத்திலேயே தாய்மொழி மீது மிகுந்த பற்று கொண்டு, கிடைத்த தமிழ் நூல்களையெல்லாம் விரும்பிக் கற்றார்.

‘ஆர்வமும், முயற்சியும் இருந்தால், எந்நிலையிலும் கற்றுக் கொள்ள முடியும்; மிகச் சிறந்த அறிஞராகத் திகழ முடியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார் அடிகள்.

அடிகளின் பள்ளிக் கல்வி ஒன்பதாம் வகுப்போடு நின்றுவிட்டது. சொந்த முயற்சியால், நாகப்பட்டினத்தில் நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தொல்காப்பியம், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவையார், தணிகைப் புராணம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய இலக்கிய நூல்களைப் படித்துத் தெளிவு பெற்றார்.

விழுமிய செந்தமிழ் நூல்களைக் கருத்தூன்றிக் கற்று, பயிற்சி பெற்றுச் செந்தமிழ் நடையில் எழுதும் திறமையினை இளமையிலேயே பெற்றார்.

தனது மாமன் மகள் சௌந்தரவல்லி என்பவரைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

அந்நாளில் வெளிவந்து கொண்டிருந்த, ‘நீல-லோசனி’, ‘ஞானோதயம்’, ‘திராவிட மந்திரி’ முதலிய வார இதழ்களில் ‘முருகவேள்’ என்னும் புனைப்பெயரில் ஆய்வுக் கட்டுரைகள், மறுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதித் தமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.

திருவனந்தபுரத்தில் ‘மார்த்தாண்டன் தம்பி’ என்பவர் நடத்திவந்த ஆங்கிலப் பள்ளியில் தமிழாசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார்.

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் 09.03.1898 ஆம் நாள், அடிகள் தனது 23-ஆவது வயதில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். “கற்பிப்பவர், எல்லா நாளும் கற்பவராகவும் இருத்தல் வேண்டும்” என்பதற்கு முன்னோடியாக விளங்கினார். அவரிடம் கல்லூரியில் தமிழ்கற்று, பின்னாளில் சிறந்து விளங்கியவர்கள் பலர். அவர்களுள் தணிகை மணி வ.சு.செங்கல்ராயப்பிள்ளை, இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், திவான்பகதூர் ஆர்.வி.கிருஷ்ண ஐயர், சி.என்.முத்துரங்க முதலியார், பேரறிஞர் ச.வையாபுரி பிள்ளை, டாக்டர் பி.சுப்பராயன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கல்லூரிப் பணியின்போது அடிகள் நூலாக்கப்பணி, இதழாசிரியர் பணி, சொற்பொழிவுப் பணி போன்ற பணிகளையும் சிறப்புடன் ஆற்றினார்.

‘ஞானசாகரம்’ (அறிவுக்கடல்) என்னும் திங்கள் இதழை 1902 ஆம் ஆண்டு தொடங்கினார். அந்த இதழ் மாணவர்களுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில், “தமிழர் நாகரிகத்தின் பழமையும், அதன் சிறப்பும்,” “பண்டைய காலத் தமிழர்”, “குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி”- ஆகிய தலைப்புகளில் ஆய்வுரை நிகழ்த்தினார்.

குடந்தை நகர் அருகிலுள்ள கோட்டையூரில், திருமூலர் வழிவந்த சிவராசயோகி ராசானந்தசுவாமி என்பவரைக் கண்டு வணங்கினார். அவர் மூலம் அடிகளுக்குத் துறவறத்தில் நாட்டம் ஏற்பட்டது.

சென்னைக்கு அருகிலுள்ள பல்லவபுரத்தில் (பல்லாவரம்) அடிகள் குடிபுகுந்தார். அவர் வாழ்ந்த இல்லம் சமரச சன்மார்க்க நிலையமாயிற்று. பிற்காலத்தில், அது ‘பொது நிலைக் கழகம்’ என அழைக்கப்பட்டது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல், ஏழைகளுக்கு உதவுதல், அனைத்து உயிர்களையும் காத்தல், மருந்தில்லாமல் நோய் நீக்க முயலுதல், கலைஞானங்களையும், ஒழுக்கங்களையும் போதித்தல் - ஆகியவைகளைத் தனது நோக்கமாகக் கொண்டு ‘பொது நிலைக் கழகம்’ செயல்பட்டது.

கோயில்களில் அனைவருக்கும் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும். அறிவுக்குப் பொருந்தாத, உண்மைக்கு முரண்பட்ட திருவிழாக்களையும், சடங்குகளையும் செய்யக் கூடாது. கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளும் முறையைச் செயல்முறைப்படுத்துதல் வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். தமிழ் மொழியைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதன்மையாகக் கற்பிக்க வேண்டும். இவை போன்ற சீர்திருத்தங்களையும் ‘பொது நிலைக் கழகம்’ தனது நோக்கங்களாகக் கொண்டு இயங்கியது.

                அடிகள் 27.08.1911 ஆம் நாள் துறவு மேற்கொண்டார்.

                அடிகள், தனது மகள் நீலாம்பிகையாருடன் உரையாடும் போது, பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகிறது என்பதை உணர்ந்தார். பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதால் மொழியின் இயல்பு கெடுவதையும், சொற்கள் அழிந்து விடுவதையும், மொழித் தன்மை கெட்டு வேற்று மொழியாகிவிடும் கேட்டையும் விரிவாக விளக்கிக் கட்டுரைகள் வரைந்துள்ளார்.

                ‘இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழில் பிறமொழிச் சொற்களைப் புகுத்தினால் எதுபோல் இருக்கிறது என்றால், எல்லா உறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அவ்வுறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கின்றது’ என்று அடிகள் விளக்குகிறார்.

                “ஓளி - ‘பிரகாசம்’, ஓசை - ‘சப்தம்’, மணம் - ‘வாசனை’, தொடுதல் - ‘ஸ்பரிசம்’, தண்ணீர் - ‘ஜலம்’, குழம்பு - ‘சாம்பார்’, வரிசை - ‘பந்தி’, விளக்கு-‘தீபம்’, அன்பு- ‘பிரியம்’, நட்பு- ‘சிநேகம்’, நல்வாய்ப்பு -‘அதிர்ஷ்டம்’, முழக்கம் -‘கோஷம்’, நிலம் -‘பூமி’, காற்று -‘வாயு’, நாட்டுப்பாடல் - ‘தேசிய கீதம்’, வழிபாடு- ‘பூஜை’, நினைத்தல் -‘ஞாபகம்’, தாய் -‘மாதா’, தந்தை- ‘பிதா’, கட்டாயம்- ‘அவசியம்’, துன்பம்- ‘கஷ்டம்’, தூக்கம் -‘நித்திரை’ – என்னும் பிறமொழிச் சொற்களைக் கொண்டு வந்து புகுத்தி தனித் தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பது தானா நமது அருமைச் செந்தமிழ் மொழியை வளர்ப்பது? அறிவுடையீர்! கூறுமின்கள் !” என்கிறார் அடிகள்.

                ‘எஞ்சின்’- பொறி, ‘டிக்கெட்டு’ – பயணச்சீட்டு, ‘ஸ்கூல்’ – பள்ளிக்கூடம், ‘மார்க்கெட்டு’ – அங்காடிக்கடை முதலான தமிழ்ச் சொற்களையே, கல்வியறிவும், நாகரிகமும் வாய்ந்தவர்கள் இட்டு வழங்குவர். பிறநாட்டுச் சொற்களை எடுத்துவிட்டு அவற்றிற்கு ஈடாகத் தமிழ் மொழியிலுள்ள சொற்களையே நடைமுறைப்படுத்துவர். இவ்வாறு செய்தல் தமது மொழியின் மீது கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்தும் என்பதை அடிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

                தனித் தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்ட பின்னர் படிப்படியே சுவாமி வேதாசலம் - ‘மறைமலையடிகள்’ எனவும், சமரச சன்மார்க்க சங்கம்-‘பொதுநிலைக் கழகம்’ எனவும், ஞானசாகரம் - ‘அறிவுக் கடல்’ எனவும் மொழிமாற்றம் பெற்றன.

                அடிகள் புதியதாக எழுதும் எழுத்தில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் செய்யத் துணிந்தார். தான் முன்பு வெளியிட்ட நூல்களில் கலந்திருந்த பிறமொழிச் சொற்களைக் களைந்து தனித் தமிழ் ஆக்கி வெளியிடுவது கட்டாயம் என்றும் முடிவு செய்தார்.

                “அடிகளின் தனித் தமிழ் இயக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாமல் காத்தது. பாடநூல்கள் தமிழ் வடிவில் வெளிவந்தன. குடிநீரைத் தூய நீராகக் காத்தல் போல தமிழைத் தூயதாகக் காத்திட வழிகாட்டினார். அதற்காக இளைஞர் படையை ஏற்படுத்தினார். கலப்பு மிகுதியிருந்தாலும் பல நாளிதழ்கள் தமிழை முடிந்த அளவு பயன்படுத்தி வருகின்றன. வாழ்த்துக்கள், வரவேற்புகள், அழைப்பிதழ்கள் அனைத்தும் தமிழில் மிளிர்கின்றன. இம்மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த் தாய் பெற்றாள்!” – என்று அறிஞர் வ.சுப.மாணிக்கம் மதிப்பீடு வழங்கியுள்ளார்.

                மறைமலையடிகள், “தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று போற்றப்படுகிறார். தமிழர் சடங்குகளும், கோயில் வழிபாடுகளும் தமிழிலேயே நடத்தப்படுதல் வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்.

சென்னை மாகாண அரசின் முதல்வராக 1937 ஆம் ஆண்டு இராசாசி பதவியேற்றார். அவர் பள்ளி வகுப்புகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை எதிர்த்துத் தமிழ் அறிஞர்கள் போர்க்களத்தில் இறங்கினர்.

                “அந்தோ! வடமொழி வந்து தமிழைப் பெரிதும் வீழச்செய்து விட்டதே. அதை மேலும் குற்றுயிர் ஆக்கிவிட்டதே ஆங்கிலம்! இனி இந்தியும் வந்தால் தமிழ் ஒழிதல் திண்ணமே!” என வருந்தினார் அடிகள்.

                இந்தித் திணிப்பைக் கண்டித்து, சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 11.09.1937 ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்திலும் கோகலே மண்டபத்தில் 04.10.1937 ஆம் நாள் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும், சைதா பேட்டையில், 03.06.1938 ஆம் நாள் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும், தலைமை தாங்கி இந்தியைக் கட்டாயமாக்குவதை எதிர்த்துப் போர் முரசு கொட்டினார். மேலும், “இந்தி பொது மொழியா?” என்னும் பெயரில் நூல் வெளியிட்டு மொழிப் போர் வீரர்களுக்கு ஆக்கம் அளித்தார். அடிகளின் மகன்களும், மருமகன்களும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு சிறையேகினர்.

                நாடு விடுதலை பெற்றதும், 1948 ஆம் ஆண்டு இந்தி கட்டாயக் கல்வியாகும் நிலைமை ஏற்பட்டது. அதை எதிர்த்து சென்னை தூயமேரி மன்றத்தில், 17.07.1948 ஆம் நாள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அடிகள், “கட்டாய இந்தியைக் கொணராதீர்!” என எச்சரித்தார். அம்மாநாட்டில் திரு.வி.க, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், ம.பொ.சி, நாரண துரைக்கண்ணன், அப்துல் மசீது ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

                தமிழர்களுக்கெனத் தனி ஆண்டு முறை வேண்டும் என்றும், அவ்வாண்டு திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்றும் ஆராய்ந்தார் அடிகள். கி.பி. ஆண்டுடன் 31 ஆண்டுகளைச் சேர்க்கத் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும். கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சியில் திருவள்ளுவர் ஆண்டு முறையை தமிழக அரசு ஏற்றுச் செயல்படுத்தியது. தமிழாண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டே. அதன் தொடக்கம் தை முதல் நாளிலிருந்தே தொடங்குவதாகும்.

                இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து தமிழுலகுக்கு அளித்துள்ளார், அடிகளார்.

                “தமிழில் பிறமொழிக் கலப்பை ஒதுக்கித் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள்; வல்லோசைகளைப் பெருக்காதீர்கள்” என்றார்.

                “சங்க இலக்கியங்களின் சுவையைத் தமிழ் மக்களுக்கு ஊட்டியவர், தனது பேச்சாலும், எழுத்தாலும் தமிழக மக்களை விழிப்புறச் செய்தவர் அடிகள்” - என திரு.வி.க. புகழ்ந்து உரைப்பார்.

                மறைமலையடிகளும், கா.சு.பிள்ளையும் என் வலக்கையும், இடக்கையும் போன்றவர்கள் என்று தந்தை பெரியார் கூறுவார்.

                அடிகள் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூல் நிலையத்தை தனது வீட்டில் அமைத்திருந்தார். சென்னையில் தற்பொழுது “மறைமலையடிகள் நூலகம்” என்னும் பெயரில் அது இயங்கி வருகிறது.

                அடிகள் 15.09.1950 ஆம் நாள் மறைந்தார்.

                அடிகள் பெயரில் பாலம், நகர், பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு மறைமலையடிகளுக்கு அவர் வாழ்ந்த பல்லாவரத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் . தமிழ் உள்ளவரை மறைமலையடிகளின் புகழ் வாழும்!

பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)