தம்பியத்தா ராவுத்தர்-நைனம்மாள் தம்பதியருக்கு 1908 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். உத்தமபாளையத்தில் 7ம் வகுப்பு படிக்கும் போது ~விடுதலை~ என்ற கையெழுத்துப் பிரதிகளை வெளியிட்டு வந்ததால் அப்பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் போடிக்குச் சென்று படித்தார். அப்போது தியாகி நித்தியானந்தம் சுவாமிகள்; போடிக்கு வருகை புரிந்தார். அந்நேரம் பொதுத்தேர்வு நடந்த சமயம், நித்தியானந்தம் சுவாமிகளோடு காந்திஜிக்கு ஜே என்று கூறியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதனால் தலைமை ஆசிரியர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் படிப்பிற்கு முழுக்குபோட்டு விட்டு விடுதலைப்போராட்ட வீரராக தன்னை இணைத்துக்கொண்டார்.

அந்நிய துணிகள் எதிர்ப்பின்போது காவல்துறையின் தடியால் அடிபட்டு விரட்டப்பட்டார். 1930 ஆம் ஆண்டு கோம்பையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடை மறியலின்போது அந்த துப்பாக்கிச்சூடும், தடியடியும் நடைபெற்றது. தடியடிச்சம்பவத்தின்போது சையது தலையை லத்திக்கம்பு பதம் பார்த்தது. ரத்தம் சொட்ட, சொட்ட காவல்துறையினர் தரதரவென்று இழுத்துச்சென்று ஆறுமாதம் சிறை தண்டனை வழங்கினர்.

சென்னையிலிருந்து உப்பு எடுக்க ராஜாஜி வேதாரண்யம் நோக்கி வந்தபோது, சையது தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தேனி மாவட்டத்திலிருந்து புறப்பட்டனர்.  இதனை அறிந்த காவல்துறையினர் சையது முகமதுவை கைது செய்தனர். 1933 ஆம் ஆண்டு கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோயில் கோட்டை மீது கொடியேற்ற முயன்றபோது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

 1934 ஆம் ஆண்டு காந்திஜி மதுரை வந்தபோது, அவரை கம்பம் நகருக்கு வரவழைத்து கம்பத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் இவரது தலைமையில் நடத்தப்பட்டது,  காந்திஜி ஆங்கிலத்தில் பேசியபோது அதனை தமிழில் கம்பம் பீர் முகமது பாவலர் மொழிபெயர்ப்பு செய்தார். 1937 ஆம் ஆண்டு கம்பத்தில் 'கள்' இறக்கும் தொழிலாளர்களின் நிலைமையைக் கண்டு கம்பத்தில் பால்பண்ணை துவக்கி தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றினார்.

 1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டாம் உலகப்போருக்கு நிதிதராதீர் எனக்கூறி பிரச்சாரம் செய்ததில் ஆங்கிலேய அரசு இவரை சிறையில் அடைத்தது.

 அதன் பின்னர் பல பொறுப்புகள் இவரை தேடி வந்தது. சுதந்திரம் பெற்ற பின்னர் தாம் அணிந்திருந்த கதர் சட்டையில் இடதுபக்கம் சிறிய கொடியினை குத்தியும், விருதினை தமது கழுத்தில் மாட்டி சுதந்திரப்போராட்ட தியாகியாகவே வாழ்ந்து 1997 ஆம் ஆண்டு மறைந்தார்.

- வைகை அனிஷ்