சமூக அநீதிகளுக்கு எதிராக 1950 களில்  போராடி, நீதியை நிலை நாட்டினார் தந்தை பெரியார்.தந்தை பெரியாரின் அப்போராட்டம் இன்றைக்கும் தொடர வேண்டுவது வரலாற்றுத் தேவையாகும்.

 “இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபை உறுப்பினர்களைக் கொண்டு வெளியார் தலையீடின்றி, சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயச் சட்டம் உருவாக்கப்படும்”என அதிகாரப் பூர்வமாக, இந்திய காங்கிரஸ் கட்சி 1936 ஆம் ஆண்டு முதல் கூறி வந்தது.

 அரசியல் நிர்ணய சபையைத் துவக்கி வைத்து 09.12.1946-ல் உரையாற்றிய தலைவர் டாக்டர் எஸ்.சின்ஹா, “அரசியல் நிர்ணய சபையானது, வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை அளித்து அந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் என காங்கிரஸ் பிரகடனம் செய்துள்ளது” என்று கூறினார்.

 1946-ல் செயல்படத் துவங்கிய அரசியல் நிர்ணய சபை அமைப்பையும், அதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களையும் நியாயப்பூர்வமான பல காரணங்களைக் காட்டி தந்தைப் பெரியார் எதிர்த்தார்.

 ஏற்கனவே, காங்கிரசினால் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி முதல் கட்டத்திலேயே மீறப்பட்டது. அன்றியும்,இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை 1945-46ல் 100க்கு 8 பேர்களுக்கே அளிக்கப்பட்டிருந்தது. அவர்களைக் கொண்டு 1946 டிசம்பரில் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டியது மிகப்பெரிய மோசடியாகும் என்பதை தந்தை பெரியார் எடுத்துரைத்தார்.

 அரசியல் அமைப்புச் சட்டம் 26.11.1949ல் நிறைவேற்றப்பட்டது. 26.01.1950-ல் அது அமலுக்கு வந்தது.

தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரியிலும்,மருத்துவக் கல்லூரியிலும் சாதி அடிப்படையில் பார்ப்பனரல்லாத பிற்பட்ட வகுப்பு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் என்கிற வகுப்புகளின் பேரால் இடம் அளிக்கப்பட்டதால்,தகுதிமிக்க பார்ப்பனருக்கு இடம் கிடைக்கவில்லை என அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர்.

 சென்னை உயர்நீதி மன்றம், ‘சென்னை மாகாண அரசு அமல்படுத்தி வரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது’என 1950 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. 1921-ல் உருவாக்கப்பட்டு, 1922 மற்றும் 1924-ல் உறுதி செய்யப்பட்டு, 1929 ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாண கல்வித் துறையிலும்,வேலை வாய்ப்புத் துறையிலும் அமலில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ (இட ஒதுக்கீடு) உத்தரவு அந்த ஒரு தீர்ப்பின் மூலம் செல்லாததாக ஆக்கப்பட்டது.

வகுப்புவாரி உரிமை செல்லாது என்ற அத்தீர்ப்பை, பெரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார்;  சென்னை மாகாண அரசும் எதிர்த்தது;அத்தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பில்,டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது சம்பந்தமான வழக்கில்,அரசியல் சட்ட வரைவுக் குழுவினருள் ஒருவராக இருந்த சர்.அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சென்னை மாகாண அரசுத் தரப்புக்கு எதிராக, மனுதாரர் தரப்பில் நின்று, அரசியல் சட்டப்படி வகுப்புரிமை பிரதிநிதித்துவம் உத்தரவு செல்லாது என வாதாடினார். அன்றியும், வழக்குத் தொடுத்த ஒரு பார்ப்பனப் பெண்மணி, எழுத்து மூலம் உறுதிமொழிப் பத்திரம் தராமலேயே அவருடைய வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கப்பட்டு,விசாரிக்கப்பட்டு அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் பின்னால் கண்டுபிடித்துக் கூறியது என்றால்,இது எவ்வளவு பெரிய மோசடியானது என்பது விளங்கும்.

1950 ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பையே உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

 சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.09.1950-ல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார்.  தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழகமே திரண்டெழுந்தது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘அரசியல் சட்டம் ஒழிக! ‘வகுப்புவாரி உரிமை வேண்டும்!’ என முழங்கினார்கள்.

 டெல்லி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் வகுப்புவாரி உரிமைக்கு எதிராக  அமைந்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு ,‘வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது’ – என மத்திய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களைத் திரட்டினார் பெரியார்; திருச்சியில் 03.12.1950-ல் ‘வகுப்புவாரி உரிமை மாநாடு’ ஒன்றைப் பெரிய அளவில் நடத்திப் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். நடுவணரசு அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி நம் வெறுப்பை,எதிர்ப்பை உணர்த்த வேண்டும் என தமிழக மக்களுக்கு தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார்.

 தமிழகத்தில் ஏற்பட்டிருந்த மக்களின் கொந்தளிப்பை உரியவர் மூலம் அறிந்த சர்தார் வல்லபாய் படேல், தாமும் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதை நினைவு கூர்ந்து, மத்திய அமைச்சரவையிலும்,பாராளமன்றத்திலும் பெரியாரின் கொள்கைக்கு வலுவுண்டாக்கி, இந்திய அரசியல் சட்டத்தின் விதி 15-ல் 4-வது உட்பிரிவாக ஒரு புதுப்பிரிவினைத் திருத்தமாகக் கொணரச் செய்தார். அத்திருத்தமாவது: விதி (15) (4):  “குடிமக்கள் சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள எந்த வகுப்பினருக்கும், அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அவர்களின் முன்னேற்றங்கருதி அரசு எந்தத் தனி எற்பாட்டினைச் செய்வதையும் இந்த விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-ன் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது” என்பதாகும்.

 இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் 1951, பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தமே – அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட ‘முதல்’ – திருத்தம் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து நாடாளுமன்றத்தில் 29.05.1951-ல் நேரு இவ்வாறு பேசினார்.

“இந்தக் குறிப்பிட்ட விஷயமானது இந்தக் குறிப்பிட்ட வடிவத்தில் இங்கு முன் மொழியப்படக் காரணம் -சென்னையில் அண்மையில் நடந்துவிட்ட சில நிகழ்ச்சிகளே ஆகும். இது பற்றி அவையினருக்கு நன்கு தெரியும். இதைமூடி மறைப்பது அவசியமற்றது. சென்னை மாகாண அரசு குறிப்பிட்ட வகுப்பினருக்கு,ஏன் எல்லாச் சாதியினருக்குமே இடஒதுக்கீடு தந்து ஆணை பிறப்பித்துவிட்டது.அந்த ஆணை முறையானதாக இல்லையென்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கருத்துக்கு விரோதமாக உள்ளதென்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியதே இந்த திருத்தம் வரக் காரணமாகும்” இவ்வாறு மூடி மறைக்காமல்,நாடாளுமன்றத்தில் நேரு பெருமகனார் இதைப் போட்டு உடைத்து விட்டார்.

 இந்த சட்ட திருத்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. விவாத முடிவில் 01.06.1951-ல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசியல் சட்டவிதி 15-ல் உட்பிரிவு 4என்பதைச் சேர்த்து நேரு கொண்டு வந்த திருத்தத்துக்கு ஆதரவாக 243 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதிவாயின.

 இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ‘முதல்’- திருத்தம், வகுப்புவாரி உரிமைக்கான ‘சமூக நீதிக்காக’ – செய்யப்பட்டது. மக்கள் எழுச்சிகளும், போராட்டங்களும் மக்கள் நலனுக்குப் புறம்பான தீர்ப்புகளையும்,தடைகளையும்,உடைத்தெறியும் என்பதே வரலாற்று உண்மையாகும்.