திராவிடர் கழகம் தோன்றுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே, திராவிடம் என்னும் சொல், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகவும், ஏழை எளிய தமிழர்களின் எழுச்சி முழக்கமாகவும் தமிழக மண்ணில் கால்பதித்துள்ளது. அண்மையில் வெளிவந்துள்ள, கறுப்பு சிகப்பு இதழியல், என்னும் நூல் இது குறித்த பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும், திராவிடம் பற்றிய பல திரிபுவாதங்களை வெளியிட்டு வருவது, ஒரு விதத்தில் நல்லதாகவும் ஆகியுள்ளது. கேட்டினும் உண்டு ஓர் உறுதி என்பதுதானே வள்ளுவர் வாக்கு! திராவிடம் குறித்த ஆய்வு நூல்களும், திராவிட ஆய்வு மையங்களும் இன்று பெருகத் தொடங்கியுள்ளன. கயல்கவின் பதிப்பகம், திராவிட இயக்க வரலாறு தொடர்பான அரிய நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் மேலே குறித்துள்ள ‘கறுப்பு சிகப்பு இதழியல்’.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தமிழகத்தில், குறிப்பாகத் தென்கோடியில் தமிழின் உணர்வும், பார்ப்பன எதிர்ப்பும் ஒருசேர உருவாகி வளர்ந்தன. அந்த எழுச்சியின் அடையாளமாகவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

1885 க்கு முன்பாகவே, திராவிடத் தீபிகை, திராவிட வர்த்தமானி போன்ற இதழ்கள் வெளிவந்துள்ளதாக ஆய்வாளர் க. திருநாவுக்கரசு குறிக்கின்றார். எனினும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரெவரன்ட் ஜான் ரத்தினம், 1885 இல் ‘திராவிடப் பாண்டியன்’ என்னும் இதழைத் தொடங்கிய செய்தி, பல்வேறு நூல்களிலும் பதிவாகியுள்ளது. அவ்விதழின் ஆசிரியர் குழுவில் அயோத்திதாசப் பண்டிதரும் இடம் பெற்றிருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. அதே ஆண்டில் ‘திராவிட மித்திரன்’ என்னும் இதழும் வெளிவந்துள்ளது.

இவற்றைத் தொடர்ந்து, 1886 ஆம் ஆண்டு, திராவிட ரஞ்சனி, திராவிட மஞ்சரி ஆகிய இதழ்கள் வெளிவந்துள்ளன.

பார்ப்பனீய ஒடுக்குமுறைக்கு எதிரான, தாழ்த்தப்பட்ட மக்களின் குரலே ‘திராவிட’ என்னும் சொல்லாக உருவெடுத்துள்ள உண்மையை, இவ்விதழ்களின் பெயர்கள் உணர்த்துகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘திராவிடன்’ பிறகு வெளிவந்துள்ளது.

01.06.1917 முதல் வெளிவரத் தொடங்கிய, திராவிடன் இதழின் ஆசிரியர் பொறுப்பைப் பக்தவச்சலம் பிள்ளை ஏற்றார். சுவாமி ருத்ரகோடீசுவரரும், பண்டிதர் வில்வபதியும் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.

இதழின் பெயர்க் காரணம் குறித்து, பண்டிதர் எஸ்.எஸ்.அருணகிரிநாதர் கொடுத்துள்ள விளக்கத்தை, ‘கறுப்பு சிகப்பு இதழியல்’ பதிவு செய்துள்ளது.

சுமார் இரண்டு மூன்று நாட்கள் டாக்டர் நாயரும் மற்ற தலைவர்களும் கூடி யோசித்த பின்னரே தமிழ் நாளிதழுக்கு திராவிடன் என்று பெயர் சூட்டப்பட்டது. பிராமணரல்லாதாராகிய எல்லா சாதி வகுப்பாரையும் ஒரே குறியீட்டுப் பெயரால் அழைத்து வரும்படியான வழக்கம் ஏற்பட வேண்டும். அக்குறியீட்டுப் பெயரால் அவர்களிடையே இன உணர்ச்சி எழுப்பிவிட வேண்டும் என்ற விருப்பம் எல்லோருடைய பேச்சிலும் தெரிவிக்கப்பட்டது. இவ்விருப்பத்திற்கு ஏற்ப ஆலோசித்து பார்த்தபோது, ‘திராவிடன்’ என்ற சொல்லே தமிழ் நாளிதழுக்கு முடிவு செய்யப்பட்டது.

இவ்வளவு தெளிவாகச் செய்திகள் சொல்லப்பட்டிருந்தும் கூட, வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுதான் உள்ளன.

இதழ்களுக்கு மட்டுமன்று, இயக்கத்திற்கும் ‘திராவிடன்’ என்னும் அடைமொழியோடு பெயர் வைத்தவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெருமக்களே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ‘பறையர் மகாஜன சபை’ என்னும் பெயரைத்தான், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 1892 ஆம் ஆண்டு, ‘ஆதி திராவிடர் மகாஜன சபை’ என்று மாற்றம் செய்தார்.

எனவே திராவிட எதிர்ப்பு என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எதிரானதே என்பது புலனாகின்றது.

சாதிக்கு எதிரான சண்டமாருதம்

நம் இதழின் பொறுப்பாசிரியர் தோழர் எழில். இளங்கோவனிடம் உரையாடிக் கொண்டிருந்த ஒரு பொழுதில், அவர் வெளியிட்ட செய்தியொன்று, பெரியாரியக் கொள்கையாளர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் விளங்கப்படுத்தியது.

பெரியாரியத்தில் உங்களுக்கு எப்படி நெருக்கம் வந்தது? என்று நான் கேட்டபோது, அவர் அந்தச் செய்தியைக் கூறினார்.

1970களின் நடுவில், மதுரை, கோ.புதூரில் வாழ்ந்து வந்த, பெரியாரியக் கொள்கையாளர் தென்பாண்டியனோடு ஏற்பட்ட நட்பே, அவரைப் பெரியாரியச் சிந்தனைகளுக்கு ஈர்த்து வந்துள்ளது. கா.பாண்டியன் என்னும் இயற்பெயர் கொண்ட அந்நண்பரை, அனைவரும் தென்பாண்டியன் என்றே அறிந்திருக்கின்றார். மத்திய அரசுப் பணியாளரான அவர் திராவிடன், விடுதலை நெஞ்சன் என்னும் புனை பெயர்களில் கொள்கை வழிச் செயல்பட்டு உள்ளார்.

தென்பாண்டியன், எழில்.இளங்கோவன் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த அனல் விவேகானந்தன், வழக்கறிஞர் அகவன், வரிச்சியூர் அரசு மணி ஆகியோரும் உரையாடல்களில் பங்குபெறும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

துணைவியார் மறைந்துவிட்ட நிலையில், இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, இயக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தவர் தென்பாண்டியன். வீட்டில் அவருடைய விருந்தோம்பலும் நண்பர்களுக்கு என்றும் உண்டு. நண்பர்கள் இணைந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடக்கும் தருணத்தில், விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின்படி, கள்ளழகரைக் கைது செய் என்று துண்டறிக்கைகளை வீசிப் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இச்சூழலில்தான், ஒருமுறை தன் வீட்டில் தங்க வைப்பதற்காக எழில்.இளங்கோவனைத் தென்பாண்டியன் அழைத்துச் சென்றுள்ளார். செய்தியறிந்த, அக்கம்பக்கத்திலிருந்த மறவர் வகுப்பைச் சேர்ந்த அவருடைய உறவினர்கள், வீட்டின் வாசலுக்கே வந்து கூச்சலிட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எப்படி வீட்டுக்குள் சேர்க்கலாம் என்பது அவர்களின் கோபத்திற்குக் காரணம். ‘இது என் வீடு, யாரை வேண்டுமா னாலும் அழைத்து வருவேன். நீங்கள் யார் கேட்பதற்கு?’ என்று தென்பாண்டியன் உரத்துச் சொல்லியிருக்கிறார்.

மெல்ல மெல்லச் சொற்களில் சூடு ஏறுகிறது. உறவினர் ஒருவர் கையில் அரிவாள் ஏந்தி வருகின்றார். “ஒரு சக்கிலியப் பயலை எப்படி நீ உள்ள சேக்கிற?” என்று கேட்டவுடன், தென்பாண்டியனுக்குச் சினம் உச்சத்தில் ஏறுகிறது. உள்ளே போய் அவரும் ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

“நீ வெட்டினா, நானும் வெட்டுவேன். பாத்துருவோம். உயிரே போனாலும் சரி, அவரு இங்கதான் தங்குவாரு”

தென்பாண்டியனின் ஆவேசம் கண்டபின், ஆட்கள் மெதுவாய்க் கலைகின்றனர். பிறகு இரவு முழுவதும், அரிவாளைத் தலைமாட்டிலேயே வைத்துக்கொண்டு தென்பாண்டியன் படுத்திருக்கிறார்.

உறவினர்களை, ஊர்க்காரர்களைப் பகைத்துக் கொண்டு, தனக்காக அன்று அவர் நின்ற போர்க்கோலம், எழில்.இளங்கோவனை நெகிழ வைத்திருக்கிறது. சாதிக்கெதிராய்ச் சண்டமாருதம் புரிந்த தென்பாண்டியனை, அப்படி உருவாக்கியது அய்யாவின் கொள்கைகள்தாம் என்பதை அறியும்போது, பெரியாரியக் கோட்பாடுகளினாலும் எழில். இளங்கோவன் ஈர்க்கப்பட்டுள்ளார்.

திராவிட இயக்கத் தோழர்கள் என்றைக்கும், எப்போதும் சாதிக்கெதிரான சமத்துவக் கொள்கையில் ஊற்றம் உடையவர்கள் என்பதைக் கண்ணெதிரே கண்ட அவர், இன்று வரையில் பெரியாரிய - அம்பேத்கரிய நெறியில் நின்று வாழ்கிறார் என்பதைக் காலம் நமக்கு உணர்த்தியுள்ளது.

Pin It