மாறி வரும் சூழ்நிலையில் இன்று வேளாண்மைத் துறை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வனவிலங்குகள் வயல்களுக்குள் புகுந்து பயிரை நாசமாக்கும் செயல். இதைத் தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன.

பொதுவாக யானைகள் பச்சை மிளகாய், இஞ்சி போன்ற பயிர்களை விரும்பி உண்பதில்லை. குறிப்பாக பச்சை மிளகாய் யானைகளால் வெறுக்கப்படும் ஒரு தாவரம். வடகிழக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான காரத்துடன் கூடிய மிளகாய் வகைகளைப் பயிரிடுகிறார்கள். வைக்கோலை ஒரு பந்தைப் போல சுருட்டி, அதனுள் காய்ந்த சிவப்பு மிளகாய்த் தூளை போடுகிறார்கள். அந்தப் பந்தில் இருந்து வருகின்ற புகையை யானைகள் வெறுக்கின்றன. இந்தப் புகை ஏற்படும்போது, யானைகள் அரண்டு மிரண்டு வேறுபக்கம் போய் விடுகின்றன. இது அந்த மாநில விவசாயிகளின் அனுபவம் கற்றுத் தந்த பாடம் ஆகும்.

கூட்டமாக வருகிற யானையை விட எப்போதும் தனியாக வரும் யானையே அதிக ஆபத்தானது. யானைகள் குட்டிகளுடன் இருந்தால் அவை அதிக தாக்குதல் உணர்வோடு இருக்கும். அதனால் யானை குட்டிகளுடன் இருக்கும்போது எந்த ஒரு காரணம் கொண்டும் அருகில் செல்வதைத் தவிர்க்க வேன்டும்.elephants at paddy fieldஇப்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் வருகிறது. அதனால் வனப்பகுதியைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் விடிகாலை நேரத்திலேயே எழுந்து நடைபயிற்சி செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். இதைத் தவிர்த்து, விடிந்தபிறகு செல்வது நல்லது. இதனால் சில சமயங்களில் யானைகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இருட்டில் நடைபயிற்சி செய்யச் செல்லும்போது யானை அருகே சென்று, அதனால் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. யானைகள் வயல்வெளிக்குள் அல்லது ஊருக்குள் நுழையும் இடங்களில் தேனீ வளர்க்கலாம். யானை வராமல் தடுப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. தேனீக்கள் சேகரிக்கும் தேனை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். சூழலையும் பாதுகாக்கலாம். செடிகளில் மகரந்த சேர்க்கை செய்யவும் இது உதவும். விளைச்சலும் இதனால் அதிகமாகும். உயிரியல்ரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.

யானைகளுக்குப் போதுமான நீரும், உணவும் கிடைக்காமல் போகும்போது, அவை பெரும்பாலும் வனங்களுக்குள் இருந்து வெளியே வருகின்றன. கோடை காலங்களில், வறட்சியால் யானைகள் பாதிப்பு அடையாமல் பாதுகாப்பதற்கு சிமெண்ட் தொட்டிகளைக் கட்டி அவற்றில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். ஊர் எல்லைகளிலும் இது போல அமைக்கலாம். அப்போது யானைகள் ஊருக்குள் நுழையாமல், நீரைக் குடித்துவிட்டு மனிதர்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் தராமல் திரும்பிச் சென்று விடுகின்றன.

வனத்துறையினரும் யானைகளுக்குப் பிடித்தமான மர வகைகளை வனங்களுக்குள் பயிர் செய்து வளர்க்க முயல வேண்டும். பலா, வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளும், வேறு சில இனிப்புசுவை உடைய மர வகைகளும் இன்று வனங்களில் இல்லாததால் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. வனப்பகுதியை சுற்றிலும் திறந்தவெளியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் திறந்தவெளியில் தாங்கள் வருவதை மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என்ற பயத்துடனேயே வனத்துக்குள் அவை இருக்கும்.

தற்போது பல இடங்களிலும் யானைகளை விரட்டுவதற்கு வெடிகளை வெடிக்கிறார்கள். முரசுகளை அறைந்து பேரொலியை எழுப்புகிறார்கள். விசில், அலாரம் போன்றவையும் பயன்படுகிறது. ஆனால், இந்தச் செயல்கள் எல்லாம் நீண்ட கால நன்மைகளைத் தருவதில்லை.

சில வெளிநாடுகளில், ஒவ்வொரு யானையின் கழுத்திலும் ரேடியோ காலர் என்னும் மைக்ரோசில்லியைப் பொருத்தி, அதன் மூலம் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறார்கள். அதன் வரவை முன்கூட்டியே கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இதனால் அவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். இது உயிர் பாதுகாப்புக்கும், உடைமை பாதுகாப்புக்கும் உதவுகிறது.

யானைகள் போல அதிக பிரச்சனை தருவது காட்டுப்பன்றிகள். இவை திருவண்ணாமலை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. சில விவசாயிகள் தாங்களாகவே பல நூதனமான வழிகளைக் கண்டுபிடித்து இதை சமாளித்து வருகிறார்கள். சிறிய வெடிகளை உருளைக்கிழங்கிற்குள் மறைத்து வைத்து வயலில் போட்டு விடுகிறார்கள். அவற்றை பன்றிகள் வந்து கடிக்கும்போது அவை வெடித்து பன்றிகள் இறந்து விடுகின்றன. ஆனால், எந்த ஒரு வனவிலங்கையும் கொல்வதற்கு நமக்கு உரிமை கிடையாது. அதனால் இவ்வாறு செய்வது வனவிலங்கு சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இவை வயலுக்குள் நுழையாத வண்ணம் வயலைச் சுற்றிலும் ஆழமான குழிகளைத் தோண்டி இரும்புவேலிகளை அமைக்கலாம். இவற்றின் மூக்கிற்கு நீளம் அதிகம். இதனால் அவை சுலபமாக மண்ணை நோண்டிவிடும் திறன் பெற்றவை. இதனால் இவை ஆங்கிலத்தில் digger என்றும் அழைக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கு, காரட் போன்ற பயிர்களை ஆழமாகத் தோண்டி தின்றுவிடும். அதனால் வேலியை ஆழமாகப் போட வேண்டும்.

காட்டு எருமைகள் பெரும்பாலும் கூட்டமாக வரும் இயல்பு உடையவை. பார்ப்பதற்கு ஒரு சாதாரண எருமை போலவே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நாம் அருகில் சென்றால் அது உடனடியாக நம்மைத் தாக்க முற்படும். இந்த வனவிலங்கை தடுப்பதற்கும் ஒரே வழி இரும்புவேலியை அமைப்பதுதான். எந்த வனவிலங்குப் பிரச்சனை ஒரு பகுதியில் இருக்கிறதோ அதற்குப் பிடிக்காத உணவு வகைகளை நாம் தேர்வு செய்து அவற்றை அங்கு பயிரிடவேண்டும். இவ்வாறு செய்யும்போது விவசாயிக்கும் நஷ்டம் ஏற்படாத பயிரைத் தேர்வு செய்ய வேண்டும்.

வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், இப்போது கிராமங்களில் ஆடுகளையும் செம்மறி ஆடுகளையும் வளர்க்கிறார்கள். சிலர் வெள்ளாடுகளையும் மாடுகளையும் வளர்க்கிறார்கள். அவற்றைத் திறந்தவெளிகளில் கட்டி வைக்கிறார்கள். கன்றுக் குட்டிகள், வெள்ளாடுகள் போன்றவை சிறுத்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இரைகள். நாய்கள் கூட சிறுத்தைகளுக்குப் பிடித்த ஒரு உணவாகவே கருதப்படுகின்றன. சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆட்டைக் கூண்டில் கட்டி வைப்பதை விட நாயை கூண்டில் கட்டினால் சிறுத்தை சுலபமாக மாட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சிறுத்தைக்கு நாய் பிடித்தமான உணவாக இருக்கிறது. இது போன்ற விலங்குகளை நாம் வனங்களை ஒட்டிய பகுதிகளில் வளர்க்கும்போது, வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தான் செய்யும். பறவைகள் இருந்தால் வனப்பகுதியில் இருக்கும் பாம்புகள் கண்டிப்பாக அவற்றைத் தேடி வரும். அதற்காக ஆடு, மாடு, பறவைகள் போன்றவற்றை வளர்க்கவே கூடாது என்பது இல்லை. எந்த ஒரு விலங்கை வளர்த்தாலும் உரிய பாதுகாப்பை அவற்றுக்குக் கொடுக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் இருக்கும் இடங்கள் எந்த ஒரு வனவிலங்கும் சுலபமாக உள்ளே நுழையாத வண்ணம் சரியான பாதுகாப்பைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவை உறுதியாக கட்டப்பட்டிருக்க வேண்டும்.

மயில்களும், கிளிகளும் கூட வயலை நாசப்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு பளபளப்பான காகிதங்களைக் கட்டிவிட வேண்டும். அவை காற்றில் பறக்கும்போது எழுப்பும் ஒலியைக் கேட்டு இவை பயந்து வயல்பக்கம் வராமல் போய்விடும். பழைய ஒலிநாடாக்களையும் இதற்காக நாம் பயன்படுத்தலாம். வயலைச் சுற்றிலும் ஒரு வேலியைப் போல இதைக் கட்டிவிடும்போது, இதனால் ஏற்படும் சத்தத்தைக் கேட்டுப் பயந்து, இத்தகைய பறவைகள் வயல்கள் இருக்கும் பகுதியில் நுழையாமல் சென்று டுகின்றன.

புறாக்களும் கூட சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் இதைச் சமாளிப்பதற்காக தொடர்ச்சியாக சைரன் ஒலிப்பதைப் போல மெல்லிய ஒலியை எழுப்புவதற்காக, ஒரு சங்கை அமைத்தனர். இந்தச் சங்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதைக் கேட்ட புறாக்கள் அதற்குப் பிறகு, அந்தப் பக்கம் வரவில்லை. இதுபோன்ற புதுமையான முறைகளையும் விவசாயிகள் கையாள்கிறார்கள்.

ஒரு சில விவசாயிகள், வயலைச் சுற்றிலும் தகர டப்பாக்களை கயிற்றில் கட்டித் தொங்க விடுகிறார்கள். இந்த டப்பாக்கள் காற்றில் ஆடும்போது அவை எழுப்பும் ஒலியைக் கேட்டு யானைகள் கூட்டமாக வந்தாலும், வயலுக்குள் நுழைவதில்லை. வனவிலங்குகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் எந்த ஒரு முறையையும் நாம் பின்பற்றி பயிர்களைப் பாதுகாக்க முயல வேண்டும். அவற்றுக்கு உடல்ரீதியாகவோ அல்லது அவற்றின் உயிருக்கோ ஆபத்து ஏற்படுத்தாத வண்ணம் நாம் மேற்கொள்ளும் செயல் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்குப் பதிலாக விஷம் வைத்து புலியையும், சிறுத்தையையும் கொல்வது போன்ற செயல்கள் வனவிலங்கு சட்டத்தின் படி குற்றம் ஆகும்.

குரங்குகளைப் பொறுத்தமட்டும் நாம் பல நேரங்களிலும், அவை பாவம் என்று நினைத்து அவற்றுக்குக் கடலைப்பருப்பு போன்ற அவை விரும்பி உண்ணும் உணவு வகைகளைப் போடுகிறோம். அவ்வாறு செய்யும்போது நமக்குத் தேவையான உணவு இவர்களிடம் இருந்து கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு அந்தக் குரங்குகள் மனிதர்களுக்கு அருகில் வர ஆரம்பிக்கின்றன. அப்போது அவற்றை குச்சியை எடுத்து அடிப்பதாலும், கல்லால் அடிப்பதாலும் அவற்றின் மனதில் ஒரு முரட்டு சுபாவம் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. அதனால் அதன் பிறகு அது யாரைப் பார்த்தாலும் அருகில் வருவோரை எல்லாம் தாக்க ஆரம்பித்து விடுகிறது. எந்த ஒரு வனவிலங்குக்கும் நாம் செயற்கையாக உணவை கொடுக்கக்கூடாது. அதற்குத் தேவையும் இல்லை.

இந்த வழிமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு நாம் செயல்படும்போது வனங்களும், அவற்றில் வாழும் வனவிலங்குகளும் காக்கப்படுவதுடன் நம் வேளாண்மையும் பாதிப்பு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்