batsகொரோனா வைரஸ்கள் உட்பட பலவிதமான வைரஸ்களை வௌவால்கள் கொண்டுள்ளன. உண்மையில், கொரோனா வகை வைரஸ்களால் ஏற்படும் சார்ஸ், மெர்ஸ் மற்றும் கோவிட் -19, இவையனைத்தும் வெளவால்களிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்த நோய்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை; ஆனால் வெளவால்கள் அவற்றால் பாதிக்கப் படுவதில்லை.

அனைத்து விலங்கினங்களையும் போலவே, வெளவால்களும் அவற்றுக்கேயுரிய அளவிலான வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க் கிருமிகளைக் கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் பிற உயிரினங்களோடு இணைக்கப்பட்டு, அவை மற்ற உயிரினங்களை சுரண்டுவதற்கும், அதேபோல், தான் சுரண்டப் படுவதற்குமாக உருவாகியுள்ளன. ஆகவே வௌவால்கள் ஒரு வகை வைரஸ்களை தனக்குள் வைத்துக் கொண்டு, தங்களையும் பாதித்துக் கொண்டு, தொடர்ந்து வௌவால் கூட்டத்திற்குள் அவற்றை சுழற்சி செய்தும் வருகின்றன.

COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2, வைரஸ் கொரோனவைரிடே(coronoaviridae) (கொரோனா வைரஸ்கள்) எனப்படும் வைரஸ்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகும். கொரோனா வைரஸ்கள், அல்லது “CoVக்கள்”, பல்வேறு வகையான விலங்குகளை பாதிக்கின்றன. மனித நோய்த்தொற்றுகளான எச்.சி.ஓ.வி -229 இ (HCoV-229E) முதல் ஆரம்பித்து, சில வகை ஜலதோஷத்திலிருந்து, 30% வரை இறப்பு விகிதம் கொண்ட மெர்ஸ்-கோவி (MERS - CoV) வரை உருவாக்குகின்றன .

2002 ஆம் ஆண்டில், முதல் SARS-CoV பரவியதிலிருந்து, SARS-CoV உடன் நெருங்கிய தொடர்புடைய கொரோனா வைரஸ்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெளவால்களில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் 2013 ஆம் ஆண்டில் சீன குதிரைகுளம்பு வெளவால்களைப் (horse shoe bats) பற்றி ஆய்வு செய்யும்போது, தற்போதைய SARS-CoV-2 உயிரணுக்களுடன் பிணைக்கக் காரணமான அதே ACE2 ஏற்பியைப் (ACE2 - Receptor) பயன்படுத்தும் பல SARS போன்ற CoV-களை அடையாளம் கண்டனர். இந்த வைரஸ்கள் SARS-CoV ஐப் போலவே இருந்ததால், அவை “SARS போன்ற கொரோனா வைரஸ்கள்” என்று அழைக்கப்பட்டன. அன்றிலிருந்து இந்த குழுவில் புதிய வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே வெளவால்களில் புழக்கத்தில் இருக்கும் கொரோனா வைரஸ்களில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை உள்ளது. இது இந்த வைரஸ்களில் ஒன்று ஜூனோடிக் (zoonotic) தொற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது - வேறுவிதமாகக் கூறினால், அவை விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் தாவும் தன்மையைப் பெற வாய்ப்புள்ளது. 

வௌவால்கள் பொதுவாக வைரஸ்களுக்கு சிறந்த ஓம்புயிரிகள். கொரோனா வைரஸ்கள் ஒரு குழுவாக வெளவால்களுக்குள் தொற்று ஏற்படுத்துவதிலும் மற்றும் பல்வகையாகப் பிரிவதிலும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. பல வௌவால் இனங்களில் நிலவும் சமூக இயல்புத் தன்மை, வெளவால்களுக்கு இடையில் வைரஸ் நோய்க்கிருமிகளின் தொடர்ச்சியான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. மேலும் அவற்றுக்கிடையே வைரஸ்கள் பல்வகைப்படுதலையும் அதிகரிக்கின்றது. 

பாலூட்டிகளிடையே தனித்துவமானது வௌவால்கள்

ஆபத்தான பல வைரஸ்கள் வௌவால்களில் பரவி வந்தாலும், இந்த தொடர்ச்சியான நோய்த்தொற்றுகளினால் அவை ஏன் சாவதில்லை? வெளவால்களுக்கு ஒரு வைரஸ் தொற்றுநோயை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கும், மற்ற வைரஸ் பாதிக்கும் உயிரினங்களை கொல்லக்கூடிய அதிகப்படியான அழற்சி எதிர்வினைக்கும் (inflammatory response) இடையில் ஒரு சமநிலையை பராமரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது. இதற்கான விடை பாலூட்டிகளிடையே அவற்றின் தனித்துவமான அம்சத்தில் இருக்கலாம் - அதுதான் அவற்றின் பறக்கும் தன்மை (flight).

பறக்கும் தன்மைக்கான உடலியல் தேவைகள், வைரஸின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அவற்றுள் உருவாக்குகின்றன. பறக்கும் தன்மை, வெளவால்கள் உயர்ந்த வளர்சிதை மாற்றங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதற்க்கும், அவற்றின் உள்ளார்ந்த உடல் வெப்பநிலையை 38 டிகிரி செல்சியஸ் ஆக உயர்த்துவதற்கும் காரணமாக இருக்கின்றது. இதன் பொருள், வெளவால்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கு காய்ச்சலாகக் கருதப்படும் வெப்ப நிலையிலேயே உள்ளன. வைரஸ் தொற்றுநோய்களில் இருந்து வெளவால்கள் தப்பிக்க உதவும் ஒரு பொறியமைவாக இது இருக்கலாம் என்று இங்கிலாந்தின் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்றுகள் ஓம்புயிரிக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பகுதியாக, “சைட்டோகைன் புயல்” (cytokine storm) என்று அழைக்கப்படும் கட்டுப்படுத்தவியலாத அழற்சி எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது COVID-19 உட்பட பல சுவாச நோய்களில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைக்கு கொண்டு செல்லலாம். பறக்கும் தன்மைக்கு வெளவால்கள் தகவமைத்துக் கொண்டது, அவை அதிக உடல் வெப்பநிலையை சிறப்பாக தாங்கிக் கொள்ள முடிவதென்பது ஆகியவை மற்ற பாலூட்டிகளை விட அழற்சி எதிர்வினையின் சில தீங்கு விளைவிக்கும் விளைவுகளை அவை பொறுத்துக் கொள்ள முடியும் என்றே அர்த்தமாகும்.

வெளவால்கள் அதிக உடல் வெப்பநிலையை பொறுத்துக் கொள்ள அனுமதிக்கும் பண்புகளுக்கு மேலதிகமாக, அவற்றின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்ற பாலூட்டிகளிடையேயிருந்து விலகிய அசாதாரணமான, தனித்துவமான தகவமைப்புகளையும் கொண்டிருக்கலாம்.

இன்டர்ஃபெரான் மரபணுக்களை தூண்டக்கூடிய மரபணு பிறழ்வு (Stimulator of Interferon genes - STING) 

2018 ஆம் ஆண்டில், சீனா மற்றும் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் வௌவால்களின் ஒரு மரபணுவில் ஒரு பிறழ்வைக் (Mutation) கண்டுபிடித்தனர். அது வைரஸ் தொற்றுநோய்களின் போது வெளவால்களில் வைரஸின் தாக்கத்திற்கு எதிர்வினையாற்றக் கூடியதாக இருந்தது. இந்தப் பிறழ்வு இன்டர்ஃபெரான் மரபணுக்களை தூண்டக்கூடிய (Stimulator of Interferon genes - STING) ஒரு மரபணுவில் ஏற்பட்டிருந்தது. இது அனைத்து பாலூட்டிகளுக்கும் பொதுவானதுதான். வைரஸ் தொற்றுநோய்களின் போது ஒரு உயிரினத்தின் அழற்சி எதிர்வினையை தூண்டுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வௌவால்களில் அடையாளம் காணப்பட்ட மரபணு பிறழ்வு, வைரஸ் தொற்றுநோய்களின் போது இன்டர்ஃபெரான்ஸ் எனப்படும் குறிப்பிட்ட அழற்சியினை ஏற்படுத்தும் புரதங்களின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வைரஸ் தடுப்புக் கூறுகளின் உற்பத்தியைக் குறைப்பது ஓம்புயிரிக்கு சிறந்ததாக இருக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகத் தோன்றலாம். ஆனால் அழற்சி எதிர்வினையை குறைப்பது என்பது வெளவால்களிடம் அதிகப்படியான நோயெதிர்ப்பு எதிர்வினையினால் ஏற்படும், (ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட) “சைட்டோகைன் புயல்” சேதத்தைத் தவிர்க்க உதவும் என்று தோன்றுகிறது. 

பறக்கும் தன்மை மற்றும் STING இல் ஏற்படும் மரபணு பிறழ்வு இந்த அழற்சியை கட்டுப்படுத்தவும், பொறுத்துக் கொள்ளவும் வௌவால்களுக்கு உதவுகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள், மற்ற இனங்களில் இல்லாத வகையில் தொடர்ச்சியான வைரஸ் தொற்றுநோய்களுக்கு அவை தகவமைத்துக் கொண்ட பல காரணங்களின் ஒரு பகுதியே ஆகும்.

வெளவால்கள் புதிய வைரஸ்களின் பலம் வாய்ந்த மூலகாரணமாக இருப்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருந்தாலும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சி அறிவியலின் மிக முன்னேறிய நிலையில் இருக்கிறது. புதிய ஆராய்ச்சிகளும் உருவாகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும், தரவுகளும் வெளவால்கள் மற்றும் வைரஸ்கள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதோடு நமது சொந்த நோயெதிர்ப்பு அமைப்புகள் பற்றிய நுண்ணறிவுகளையும் நமக்கு வழங்கும்.

மூலம்: கீத் கிரேஹன், லீட்ஸ் பல்கலைக் கழகம்; theconversation.com ஜூலை 8, 2020)

மொழிபெயர்ப்பு: இரா.ஆறுமுகம்