நாட்டிலுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் என் கண்ணின் இமைகளைப் போல பாதுகாப்பேன் என்று கூறும் தலைவர்களுக்கு மத்தியில், நான் ஆட்சிக்கு வந்தால் அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் தான் தற்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர்போல்சனாரோ.

amazon rainforest fireஅமேசான் காடுகளில் கடந்த நான்கு வாரங்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏனெனில், பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது. அதேபோல, உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வதும் இந்தக் காடுகள்தான். அதனால் தான் அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பிரேசிலை மட்டுமில்லாது, உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் தான், பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமேசானில் எரிந்து வரும் தீயை அணைக்க 20 மில்லியன் டாலர் வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

எரியும் தீக்குப் பின்னர் ஒரு பெரிய வணிக அரசியல் உள்ளது என்று பிரேசில் நாட்டு சூழலியலாளர்களே கூறுவதை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது. அது என்ன என்பது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்...

அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என 2018ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஜெய்ர்போல்சனாரோ கூறியது தான், இன்று எரியும் அமேசான் காட்டுத்தீக்கு காரணம் என்கின்றனர்.

இவரின் கவர்ச்சியான வாக்குறுதி, விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், வன வளங்களை வேட்டையாடும் மாஃபியா கும்பல்கள், பூமியைக் கிழித்து எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரையும் கவர்ந்திருந்தது. பிரேசிலிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களுக்கு அமேசான் காடுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்படியான பேராசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்கியது.

2019 ஜனவரியில் பிரேசிலின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஜெய்ர்பொல்சானேரோ, அமேசானின் ஏராளமான இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு யாரோ சில பூர்வகுடி மக்கள் எதிர்ப்பதால் அவற்றை வீணாக்கி விடக்கூடாது என்று சொல்லி, வனச் சுரண்டலுக்கான அச்சாரமிட்டார். 20 வருடங்களுக்குப் பின்பு, அமேசான் காடுகளில் சுரண்டல் மீண்டும் தலை தூக்கியது. இவரது திட்டங்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் கசிந்ததாக ஓப்பன் டெமாக்ரசி மற்றும் இண்டிபெண்டென்ட் ஆகிய இரண்டு இதழ்களும் செய்திகள் வெளியிட்டன. அதில் அமேசான் காடுகளை அழிப்பதே ஜெய்ர்போல்சனாரோவின் திட்டம் என்பதை சூழலியலாளர்கள் ஆமோதிக்கின்றனர்.

மேலும், இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பொதுவாகவே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இம்முறை மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும் விட இந்த வருடம் காட்டுத் தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதி செய்கிறது. இந்தக் காட்டுத் தீ பாதிப்புகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 84% அதிகம் என்கிறது அந்த அமைப்பு. ஜெய்ர்போல்சனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக் காட்டியது. இதற்காக, இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணி நீக்கம் செய்தது பிரேசில் அரசு.

ஈக்வடார் நாட்டிலிருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் வாவோரணி என்ற பழங்குடியின மக்கள் அந்தக் காட்டைச் சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே மாதம், ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர். 'அது நடந்த சில நாட்களிலேயே அமேசான் காடு முழுக்கக் காட்டுத்தீ ஏற்பட்டிருட்டிருக்கிறது, அது மனிதர்களால் ஏற்பட்டது தான்' என்றும், 'அமேசான் மழைக் காடுகள், கோடை காலத்தில் கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக் கூடியவை அல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்க காடுகளைக் கொண்டது. அங்கு காட்டுத் தீ ஏற்படக் காரணம் மனிதர்களே' என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

amazon rainforest fire 2அமேசான் மழைக் காடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகி விட்டன. இதற்குக் காரணம், பண்ணையாளர்களும், பெருவிவசாயிகளும் தான். அவர்கள் இதைப் பிரச்னையின்றி செய்வதற்குத் தகுந்த வகையில் சட்டத்தை எளிமையாக்கியுள்ளார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ வளர்ந்து விட்டது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பினால் உண்டான கோபம் அமேசானுக்கு இன்னும் அடங்கவில்லை என்று பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணி கூறியுள்ளார்.

ஆனால், அதிபர் ஜெய்ர்போல்சனாரோவின் எண்ணம் காடழிப்பு அல்ல! அமேசான், AAA திட்டத்தின் கீழ் சென்றுவிடக்கூடாது என்பதுதான். AAA திட்டம் என்பது, இயற்கைப் பாதுகாப்பு திட்டம். அமேசான் காடுகள் தொடங்கி அண்டெஸ், அட்லாண்டிக் கடல் வரை 135 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை இந்தத் திட்டம் பாதுகாக்கும். இந்தத் திட்டத்தை Gaia Amazonas என்ற அமைப்புடன் பல NGO- மற்றும் பிற நாட்டு அரசுகள் முன்னெடுத்துள்ளனர். இவர்களிடம் அமேசான் சென்று விடக்கூடாது என்பதில் நிலையாக நிற்கிறது ஜெய்ர்போல்சனாரோவின் அரசு. அதனால் தான், அமேசான் நதிப் படுகையில் ஒரு நீர்மின் ஆலை, ஒரு பெரிய பாலம், BR-163 தேசிய நெடுஞ்சாலையின் நீட்டிப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதியை எந்த ஒரு பிரச்சினையும் இன்றி பிரேசில் தேசிய எல்லைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இல்லையேல் AAA திட்டத்திற்காக உலக நாடுகள் தரும் அழுத்தத்தை பிரேசிலால் சமாளிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெரும்பாலும் ஜெய்ர்போல்சனாரோவின் ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள் தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக் கொள்ள பற்ற வைக்கப்பட்ட சிறிய நெருப்பு கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது என்கின்றனர்.

ஒரு நாட்டை உருவாக்கி விடலாம், ஆனால் காட்டை உருவாக்க முடியாது என்ற இயற்கையின் நியதியை அறியாத அடிமுட்டாள்களா இவர்கள்?

பிரேசிலில் காடழிப்புக்கு எதிராக உள்ள சட்டங்கள்

1965-ல் கொண்டு வரப்பட்ட பிரேசிலின் காடுகள் கொள்கையின்படி (Brazil’s Forest Code of 1965) விவசாயிகள் அமேசான் காடுகளில் நிலங்களை வாங்கி சொந்தம் கொண்டாட முடியும். ஆனால், அதில் 20 சதவிகித நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்த ராணுவ சர்வாதிகார அரசு 1988-ல் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு அமலான புதிய அரசியலமைப்புச் சட்டம் மூலம் அமேசானில் வாழும் பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் நிலத்தின் உரிமை திருப்பிக் கொடுக்கப்பட்டது. மேலும், அந்த இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் வருவதை விரும்பாவிட்டால், அதை மறுக்கும் உரிமையும் அம் மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்திற்குள் பல பாதிப்புகள் நிகழ்த்தப்பட்டு விட்டன.

2012-ல் மீட்டெடுக்கப்பட வேண்டிய காடுகளின் அளவைக் குறைத்தும், காடழிப்புக் குற்றங்களுக்குத் தண்டனைகள் குறைக்கப்பட்டும் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதைப் பிரேசிலின் உச்ச நீதிமன்றம் 2018-ல் உறுதி செய்தது.

இந்தியரின் பெருமை!

அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது 'வாலியாஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, 'ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது.

- கணியூர் சேனாதிபதி