ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூமி தினத்திற்கு வயது 50. அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், கள ஆய்வுகள் என பல்வேறு அறிவியல் தொடர்பான செய்திகளை வெளியிடும் Journal Nature இதழில் எரிமலைகள் தொடர்பாக வெளிவந்திருக்கும் ஓர் அறிக்கை (case study) நம்மை சிந்திக்க வைக்கும் விதமாக இருக்கிறது.

kilauea eruptionவழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் விளைவாக பூமியின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகப்படியான வெப்பச் சலனம், காட்டுத் தீ போன்றவைகள் என்றால், ஆர்டிக், அண்டார்டிகா போன்ற பகுதிகளில் பதிவான அதிக வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகுகிறது. இதனால் கடல் பகுதிகளில் கடல் நீர் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. காலம் தவறாமல் பருவ மழை பொழியும் பகுதிகளில் கூட தலை விரித்தாடிய வறட்சியும், அதற்கு நேர் எதிராகக் கொட்டித் தீர்த்த தொடர் மழைப் பொழிவும் பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது. அதிக மழைப் பொழிவால் உண்டான விளைவுகளில் ஒன்றாக 'Kilauea என்ற எரிமலை வெடித்துச் சிதறியது இருக்கலாம்' என்று ஓர் அறிவியல் அறிக்கை வெளிவந்துள்ளது.

உலகில் அதிகப்படியான எரிமலைக் குழம்புகள் (lava) வெளிவந்து கொண்டிருக்கும் பகுதி பசுபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சில தீவுக்கூட்டங்கள் ஆகும். இதில் ஒன்று தான் ஹவாய் தீவுகளில் இருக்கும் 'Kilauea' என்ற தீவுப் பகுதி. இங்கு 1983 ஆம் ஆண்டு முதல், எரிமலை ஒன்று தீக் குழம்பாய் வெளிவந்து கொண்டிருக்கிறது, அது 'Kilauea' என்ற எரிமலை. இது 2018 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக வெடித்துச் சிதறியது. கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் அங்கு வசித்து வந்த மக்கள் அத் தீவில் இருந்து அப்போது வெளியேறி விட்டார்கள். இந்த எரிமலை வெடித்த சம்பவத்தை கணக்கிடும் போது, இது கடந்த 200 ஆண்டுகளில் காணப்படாத எரிமலை தீப்பிழம்புகள் ஆகும். இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்ட அறிவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் 'அப்பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையால் நிலத்தடியில் சென்ற நீரினால் வெப்ப அழுத்தம் மாறுபட்டதுதான் திடீரென அதிகப்படியான லாவா குழம்புகள் வெளியேறக் காரணம்' என்று கூறியிருக்கிறார்கள்.

நமது பூமியானது சூரியனிலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய பகுதிதான் என்பதற்கு இன்றளவும் சான்றாக இருப்பது எரிமலைக் குழம்புகள். பூமியின் மேற்பரப்பில் இருந்து அதன் அடிப்பகுதி வரை அவை நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவைகள் முறையே Crust, Mantle, Outer core, Inner core ஆகும்.

1. நாம் வசிக்கும் மேற்பரப்பானது Crust ஆகும். இது பூமியின் முதல் நிலை என்று அழைக்கப்படுகிறது. மண், மலைப் பகுதிகள், கடல் சார்ந்த பகுதிகள் இவைகள் எல்லாம் 5 கிலோ மீட்டரில் தொடங்கி 40 கிலோ மீட்டர் ஆழம் வரை அமைந்திருக்கிறது. இந்த Crust layer எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பது கிடையாது. Mantle -ன் மேற்பரப்பில் உடைந்து போன பாகங்கள் plates என்று‌ அழைக்கப்படுகிறது. இவை மெதுவாக சுழன்று கொண்டிருக்கும். சில பகுதிகளில் சிதைந்து போன மண் பரப்பு பகுதிகளாக இருக்கிறது. இதில் தான் மழை நீர் கீழே சென்று ஈரப்பதம் மிக்கதாக அமைந்திருக்கிறது. இது 'light blocks on the upper mantle' என்று அழைக்கப்படுகிறது.

2. இரண்டாவது நிலையில் இருப்பது Mantle ஆகும். இது முழுக்க லாவா நிரம்பி இருக்கிறது என்று உலகில் அனேக மக்களால் நம்பப்படுகிறது. ஆனால், இங்கு இருப்பது தடிமனான பாறைகள். இதிலிருக்கும் வெப்பப் பாறைகள் அதிகப்படியான அழுத்தத்தால் ஆறு (ரோட்டின் மீது தான் தார் இருப்பது போல்) போன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பகுதியில் மட்டும் கனிம மூலக்கூறுகள், பாறைகள் திரவ நிலையில் இருக்கும். இதைத்தான் 'Magma' என்று அழைக்கிறார்கள். அதிக வெப்பநிலையில் உள்ள திரவப் பாறைகள் தீப்பிழம்பு போல் இருப்பதால் இது லாவா என வர்ணிக்கப்படுகிறது. இது 2,900 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

3. இதற்கடுத்து மூன்றாவதாக கீழே அமைந்திருப்பது Outer core. இங்கு‌ இருக்கும் இரும்புத் தாதுக்கள் உருகிய நிலையில் சற்று தடிமனாக இருக்கிறது. இதன் வெப்பநிலை சுமார் 4000 முதல் 5000 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. இந்தப் படிநிலையில் இருக்கும் இரும்புத் தாதுக்கள், சல்பர் மற்றும் நிக்கல் போன்றவைகள் சேர்ந்து பூமியின் காந்தப் புலத்தை உருவாக்குகின்றன.

4. நான்காவதாக இருப்பது Inner core. இது வெப்பமான ஒரு இரும்புக் குண்டு போல் தடிமனாக அமைந்திருக்கும். இங்கு வெப்பநிலை சுமார் 5000 முதல் 7000 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.

எரிமலைகளைப் பற்றி ஆராய்ந்து வரும் அறிவியலாளர்கள், எரிமலை வெடித்துச் சிதறிய பகுதிகளில் மழை நீர் அதிகமாகி நிலத்தடியில் சென்றிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் விளக்கிக் கூறுகிறார்கள். அமெரிக்காவின் நாசா மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையத்தின் மழைப்பொழிவு பதிவாகிய செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்த்ததில், 2018ஆம் ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் அதிகப்படியாக 2.25m மழைப்பொழிவு இப்பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் பரவலாக மழை பொழிந்து உள்ளது.

ஹூவாய் தீவுக்கூட்டங்களில் எரிமலைகள் வெடித்துச் சிதறி வரும் பகுதிகளை 'East Rift zone' என்று அழைக்கிறார்கள். நிலத்தடி நீர் அதிகப்படியாக உள்ளே சென்றதால் இந்த பகுதிகளில் 'dyke intrusion' என்ற கூற்றின் படி magma என்ற லாவா குழம்புகள் அதிக அழுத்தம் கொண்டதாக மாறி வெடித்துச் சிதறி இருக்கக்கூடும் என்கிறது அந்த அறிக்கை. 2018 ஆம் ஆண்டு பசுபிக் பெருங்கடல் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிகளும் கனமழையும் பெய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக மழைப்பொழிவு எரிமலையை ஏற்படுத்தக்கூடுமா? இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து இருக்கிறார்கள் அறிவியலாளர்கள். "இதை நிரூபிப்பது கடும் சிக்கலான காரியம். நீர் அதிக விஷயங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இருக்கிறது. இயற்பியல் நமக்குத் தெளிவாக ஒன்றை விளக்குகிறது, சூடாக இருக்கும் ஒரு பாறையின் மீது தண்ணீரைத் தெளித்தால் அத்தண்ணீர் செயலிழந்து போய்விடும்" என்கிறார் மியாமி பல்கலைக்கழகப் பேராசிரியர் Falk Amelung.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். 2018ல் ஹவாய் தீவுக் கூட்டங்களில் வெடித்துச் சிறிய எரிமலை கூட காலநிலை மாற்றத்தால் கொட்டித் தீர்த்த மழையினால் தான் உண்டாகி இருக்கலாம். இப்பூமியில் வாழும் மனிதர்கள் நாம்தான் கால நிலை மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

(நன்றி: https://www.npr.org/2020/04/22/839866607/did-heavy-rain-cause-hawaiis-historic-volcanic-eruption)

- பாண்டி