இந்த ஆண்டிலும் அந்த நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் பரந்த வானத்தில் எண்ணில்அடங்காத பறவைகள் பறக்கப் போகின்றன. சில ‘ங' வடிவத்தில். சில சிதறிய கூட்டமாக, சில பகலில், சில இரவில். ஆனால் அந்தப் பறவைகளுக்குத் தெரியும் எங்கே போக வேண்டும் என. பறவைகள் வலசை போகும் (இடம் பெயரும்) காலம் தொடங்கி விட்டது. இனி சீக்கிரம் ஏரிகளும், நீர்நிலைகளும், பூங்காக்களும், தோட்டங்களும், இந்தியாவில் உள்ள காடுகளும் வெளிநாட்டிலிருந்து வரும் இந்த சிறகு பயணிகளால் நிறைந்து விடும்.

Birdsவலசை போதல் ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று ஆகும். நாம் கொஞ்சமாகத்தான் அதைப்பற்றி அறிந்து இருக்கிறோம். நம்மால் மிகச்சரியாக ஒரு மனிதனை நிலாவில் தரையிறக்கிவிட முடியும். ஆனால் ஒரு பறவை சைபீரியாவின் ஏதோ ஒரு ஏரியிலிருந்து கிளம்பி பறந்து வந்து இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்து ஏரியில் தரையிறங்குவதை அறிய முடிவதில்லை. ஆமாம். பறவைகள் சூரியனையும், விண்மீன்களையும், பூமியினுடைய காந்தப் புலத்தையும், புவியீர்ப்பு விசையையும் இடம் பெயர்வதற்கு பயன்படுத்துகின்றன. மலைகளும், ஆறுகளும், கடற்கரைப் பகுதிகளும் கூட அடையாளமாக இருந்து வழிகாட்டுகின்றன. ஆனால் அந்த சின்ன மூளையில் இத்தனை விசயங்களும் எப்படி பதிந்து இருக்கின்றன என்பதுதான் வியப்பளிக்கிற ஒன்றாக இருக்கிறது.

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. ஏன் சில பறவைகள் மட்டுமே இடம் பெயர்கின்றன. சில பறவைகள் இடம்பெயர்வதில்லை? ஏன் ஊசி வால் வாத்தும், கட்வால் பறவையும், மச்சவாய் வாத்தும் வலசை போவதில்லை? நம்ம ஊர் காகமோ, குருவியோ வலசை போகிறதா? பறவையியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பறவைகள் நல்ல வாழிடத்தை தேடியே வலசை போகின்றன என்று சொல்கிறார்கள்! முக்கியமாக அவைகளுக்கு போதிய அளவு உணவு கிடைக்க வேண்டும்.

குளிர்காலங்களில் வட அய்ரோப்பாவும், மத்திய ஆசியாவும், சைபீரியாவும் பறவைகள் வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதனால் வெப்பமான இந்தியாவுக்கு அவை பறந்து வருகின்றன. பறவையியல் அறிஞர்கள் மேலும் சொல்கிறார்கள், புவியின் வடபகுதி கோடை காலங்களில் பறவைகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது என்று! எனவே அப்பகுதியே பறவைகள் தங்களின் குடும்பத்தைப் பெருக்க வசதியாக இருக்கிறது. அதனால்தான் அவை வருகின்றன. ஆனால் மச்சவாய் வாத்து மட்டும் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறதே அது ஏன்? அது தெரியவில்லை. சில பறவைகள் மட்டுமே திரும்பிப்போகின்றன. காரணங்களை ஊகிக்கவே முடியும்.

பெரு நாரைகளோ, கழுகுகளோ, ஒரு வாழ்த்து அட்டையின் எடையளவே இருக்கும் வார்பிலர் பறவையோ எல்லாமே தான் பறந்து வருகின்றன. கொக்குகளும், நாரைகளும், வாத்துகளும் இமய மலைக்கும் மேலே (உயிர் வளி குடுவை இல்லாமல்!) பறக்கும் வல்லமை படைத்தவைகளாகும். இவை பகலில் பறப்பவை.

இதைவிட வியப்பு என்னவென்றால் குட்டிப் பறவைகளான வார்பிலரோ, வாலாட்டிக் குருவியோ, நீலத்தாண்டை பறவையோ எப்படி பறக்கின்றன என்பது தான். இது போன்ற ஒரு பறவையை கையில் வைத்துக் கொண்டு, இது தனியாக சைபீரியாவிலிருந்து விண்மீன்களை வழி கேட்டபடியே இரவு நேரத்தில் மட்டுமே பறந்து, இங்கே எப்படி வந்து சேர்ந்தது என்று நம்மால் ஆனால் அவை அப்படித்தான் வருகின்றன. கற்பனை செய்ய முடியுமா? நிச்சயம் அது கடினம்தான்.

இந்தப் பறவைகளின் மூளைகள் பட்டாணி அளவேதான் இருக்கும்! ஆனாலும் அவை வழிதவறாமல் பறந்து வந்து விடுகின்றன. மூளை அளவுக்கும் திறனுக்கும் தொடர்பில்லை! சோகமான செய்தி என்னவென்றால் இப்பறவைகளில் பல இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. அத்தகைய பெரிய கடலை சாகசம் செய்வது போல பறந்து தாண்டி வந்து தரையிறங்கியதும் இப்படி கொல்லப்பட்டு விடுகின்றன. இது தவறு இல்லையா, நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை நாம் தானே பாதுகாத்து உபசரிக்க வேண்டும்?

நன்றி : "தி இந்து'

(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)