மாநிலங்களுக்குத் தன்னாட்சி கிடைக்க, சட்டத்தை மாற்ற வேண்டும் என்று எழுபதுகளில் கோரிய கலைஞர் கருணாநிதி கடைசியில் சட்ட மன்றக் கட்டடத்தைத்தான் மாற்றினார். அதை வாழ்நாள் சாதனை என்று கூறிக் குதூகலிக்கிறார். ஆளை மாற்ற வேண்டியதில்லை அவன் போட்டிருக்கும் சட்டையை மாற்றினால் போதும் என்ற மனநிறைவுக்கு அவர் வந்து விட்டார்.

மனநிறைவடைந்திட சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேற்றங்களை அவர் அடைந்துள்ளார். ஆனால் தமிழ்த் தேசிய இனம் எழுபதுகளில் இருந்ததை விட எவ்வளவோ பின்னடைவுகளைக் கண்டு வருகிறது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி இராசமன்னார் தலைமையில், ஒரு குழு அமைத்து மாநில அரசு கூடுதல் அதிகாரங்களைப் பெறும் வகையில் பரிந்துரைகள் கேட்டார் எழுபதுகளில்.

அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தக் கோரும் பரிந்துரைகளை அக்குழு அளித்தது. அதைப் பழைய சட்டப் பேரவைக் கட்டடத்தில் தீர்மானமாக நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

அப்பரிந்துரைகளை இந்திய ஆட்சியாளர்களும் சட்டை செய்யவில்லை. அனுப்பி வைத்த கருணாநிதியும் சட்டை செய்யவில்லை. “செலவு தந்தைக் கோர் ஆயிரம்” என்று பாரதி பாடியது போல் செலவு அரசுக்கோர் ஆயிரம் நலமோர் எள்துணையும் விளையவில்லை.

இராசமன்னார் குழு பரிந்துரை வழங்கியபோது, கல்வி மாநில அதிகாரப் பட்டியலில் இருந்தது. இப்பொழுது அது இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பொது அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்ட துறையில் இந்திய அரசின் அதிகாரமே இறுதியானது.

இந்தியக் கல்வி அமைச்சர் கபில் சிபல், இப்பொழுது இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத் திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார். இந்தி தேசிய மொழி, அதை எல்லா மாநிலங்களிலும் பாடமாக வைக்க வேண்டும் என்கிறார். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் இந்தியாவெங்கும் கல்வித் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்கிறார்.

தமிழகக் கல்லூரிக் கல்வி அமைச்சர் பொன்முடி, கபில்சிபலின் ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டு அமைதியாகி விட்டார். முதல்வர் கருணாநிதி நேரடியாக எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை.

வேளாண் துறை மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. இருந்து என்ன பயன்? மான்சாண்டோ, கார்கில் போன்ற பன்னாட்டு வேளாண் கொள்ளை நிறுவனங்களைத் தமிழகத்தில் நுழைய விடத் தமிழக அரசின் முன் அனுமதி எதையும் இந்திய அரசு கோரவில்லை. தமிழகத்திற்குள் அந்நிறுவனங்களைத் தாராளமாக இந்திய அரசு அனுப்பி வருகிறது. தமிழக ஆட்சியாளர்களும் அந்நிறுவனங்களை வரவேற்கிறார்கள்.

மரபீனி மாற்ற பருத்தி, ம.மா நெல், ம.மா. கத்தரிக்காய் என அமெரிக்கக் கொள்ளை நிறுவனத்தின் கொள்ளை நோய்ப்பயிர்கள் வரிசையாக வருகின்றன.

மாநில சுயாட்சி மாநாடு நடத்திய வீரர், தமிழகத்தின் முஜிபுர்ரகுமான் என்று பட்டம் போட்டுக் கொண்ட தீரர் கருணாநிதி தமிழக உரிமைகள் பறிபோவதைப் பற்றி எள்ளளவும் கவலைப் படவில்லை. சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் வந்து புதிய சட்டமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டதால் பிறவிப் பயனை அடைந்து விட்டதுபோல் பேசி மகிழ்கிறார்.

தமிழக உரிமைகளைப் பறித்து வைத்துக் கொண்ட இந்திய ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் தாம் சோனியாவும், மன்மோகனும்! ஆனால் தாம் பலனடையக் கூடிய உரிமைகள் சிலவற்றை இன்னும் விட்டு வைத்துள்ளனரே என்று களி கொள்ளுகிறார் கருணாநிதி.

பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்கள், இந்நாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிலம் பார்த்துக் கொடுத்தல், தடையின்றி மின்சாரம் தருதல், தண்ணீர் தருதல் போன்ற சேவைகள் மாநில அரசிடம் தானே இருக்கின்றன. அந்தச் சேவையில் கருணாநிதி குடும்பத்தார் அடையும் பலன்கள் பலநூறு கோடி! பின்னர் குதூகலிக்க மாட்டாரா கொள்கைக் கோமான்!

எழுபதுகளில் முதல்வராக இருந்த போது அடைந்த பலன்களையும் இப்போது அடையும் பலன்களையும் ஒப்பிட்டால் ஏரிக்கரைக்கும் இமயமலைக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியும்! பூச்சி மருந்து அடித்ததில் சில லட்ச ரூபாய் ஊழல் - வீராணம் குழாய் வாங்கியதில் சில இலட்ச ரூபாய் ஊழல் - இப்படிப்பட்ட இலட்சங்களை விசாரிக்க அன்றைக்கு சர்க்காரியா ஆணையம்.!

இன்றைக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் குவிகிறது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட நூறு கோடி ரூபாய் தட்சிணை என்கிறார்கள். ஒரு கோடி ரூபாயெல்லாம் வெறும் பிச்சைக் காசு!

கருணாநிதி மகிழ்ச்சியாக இருக்க இது போதாதா? சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் இது தெரியாதா? தெரியும்.! அவர்கள் இந்தியாவையே விற்று ஏப்பம் விடுகிறார்கள். சோனியாவின் ஊழல் பசிபிக் கடல், கருணாநிதியின் ஊழல் சேதுக் கடல்தான்!

கருணாநிதியின் ஊழலை செயலலிதா அம்பலப்படுத்துவாரா? மாட்டார். ஏற்கெனவே செயலலிதா செய்ததைத்தானே இப்பொழுது கருணாநிதி செய்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் இவ்வளவு விரிந்த அளவில் இலஞ்சம் பெறுவதற்குத் துணிந்து வழிகாட்டியவர் செயலலிதாதான்!

தமிழகச் சட்டமன்றம் என்பது இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனி ஆட்சியை மறைக்கும் மூடுதிரை. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் என்ற பெயரில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உருவாக்கிய நாடக அரங்கம்! அயல் இனத்தாருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை மண்ணின் மக்கள் அறிந்து கொள்ளாமல், அவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது போன்ற கற்பனைத் தோற்றத்தை உருவாக்கும் மாயமாளிகை!

ஒரு சட்டத்தைக் கூட தற்சார்பாக இயற்ற முடியாமல், இந்திய அரசின் கருணையை நம்பி மசோதாக்களை நிறைவேற்றி, ஆளுநர் கையொப்பமோ அல்லது குடியரசுத் தலைவர் கையொப்பமோ பெற்று சட்டமாக்கிக் கொள்ளும் அண்டிப் பிழைக்கும் அடிமை மன்றம் அது. சட்டமன்றம் என்பது ஒரு சவடால் பெயர்! 234 சோதாக்கள் கைதூக்கி மசோதாக்கள் நிறைவேற்றும் மசோதா மன்றம் அது!

அமெரிக்காவில், செர்மனியில், கனடாவில் கூட்டாட்சி நடக்கிறது. அங்கெல்லாம் மாநில அரசைக் கட்டுப்படுத்த மைய அரசு அமர்த்தும் ஆளுநர் பதவி கிடையாது. மாநில அரசைக் கலைப்பதற்கான விதியே அரசமைப்புச் சட்டத்தில் கிடையாது.

குதிரை மாதிரி தோன்றுமே தவிர குதிரையன்று. இது இன்னொரு விலங்கு. அப்படிப்பட்டதுதான் தமிழகச் சட்டமன்றம்!

அண்டிப் பிழைப்போர், ஆதாயந் தேடுவோர், மண்டியிடுவோர், மானத்தை விற்போர் அங்கே மகிழ்ச்சியாக இருப்பார்கள். மனச்சான்றுள்ளவர்கள் அதில் மாட்டிக் கொண்டால் மனநோய்க்கு ஆளாவார்கள்!

இது ஒரு சனநாயக மன்றமன்று. வாக்குகளை அதிக விலை கொடுத்து வாங்க முடிந்தவர்களுக்கிடையே நடந்த போட்டியில் வென்றவர்களின் இலஞ்ச மன்றம். அரசியல்வாதிகள் தங்களது ஊழல் காசநோயை மக்களிடம் பரப்பும் தொற்றுநோய்க் கூடம்.

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசுக்கான நாடாளுமன்றக் கட்டடத்தை நிர்மாணித்து விட்டதுபோல் கருணாநிதி கழிபேருவகை அடைகிறார். மக்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறார். இது தில்லி ஏகாதிபத்தியத்தின் கங்காணி மன்றம். இதைக் கட்டியது கங்காணி அரசியல் தலைமை!

மேற்கத்தியக் கட்டடக் கலை நிறுவனமொன்றில் வரைபடம் வாங்கி, வடநாட்டு ஒப்பந்தக்காரர்களையும் வடநாட்டுத் தொழிலாளிகளையும் கொண்டு கட்டப்பட்டதுதான் தமிழக சட்டப் பேரவைக் கட்டடம்! தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பிய இராசராசப் பெருந்தச்சன் குஞ்சரமல்லன் வாரிசுகளா இக்கட்டடத்தைக் கட்டினார்கள்? இல்லை? உத்தரமேரூர் கல்வெட்டுடன் ஓர் உறவை ஒட்டுப் போட்டுத் தைக்கிறார் கருணாநிதி!

சோழர் கால அதிகார அடுக்குமுறைக் கட்டமைப்பைப் பின்பற்றி, இந்த மசோதா மன்றம் கட்டப்பட்டதாம். கற்பனைச் சுகத்தை உருவாக்குவதில் வல்லவர் அல்லவா அவர்! வாத்து அன்னமாகாது ; வான்கோழி மயிலாகாது; மசோதா மன்றம் சட்டமன்றம் ஆகாது.

வேடிக்கை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதும் ஆர்வமுண்டு. கலைஞர் கருணாநிதி 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடங்கள் கட்டி வேடிக்கை காட்டுகிறார். இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமையும் போது உண்மையான சட்ட மன்றம் - நாடாளுமன்றம் உருவாகும்!

 
- தமிழர் கண்ணோட்டம் செய்தியாளர்
Pin It