காலநிலை ஆய்வாளர்களுக்கு இது அச்சுறுத்தும் சமயமாக உள்ளது. பூமியின் எதிர்காலம் மங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிரூபிக்கும்போதே அடுத்தடுத்த பேரிடர்கள் எல்லா பகுதிகளிலும் நிகழ்ந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிதீவிரப் புயல்கள், கடுமையான வறட்சி, பெருவெள்ளப் பெருக்குகள், பனிப்பாறைகளின் வேகமான அழிவு போன்றவை விஞ்ஞானிகளை மேலும் திகிலடையச் செய்கிறது. விஞ்ஞானிகள் விடும் எச்சரிக்கைகளைக் காட்டிலும் மோசமாக அதைவிட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அழிவுகள் தொடர்கின்றன.

எங்கெங்கு இலாதபடி

இங்கிலாந்தில் நிலவிய 40.3 டிகிரி வெப்பநிலை, நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நீருக்குள் மூழ்கடித்த பாகிஸ்தான் பெருமழை, வெள்ளம், சோமாலியாவில் கடந்த நான்காண்டுகளாக நிலவும் கொடும் வறட்சி, அமெரிக்காவில் வீசிய 2021 ஹரிக்கேன் ஐடா போன்றவை சூழல் நாசத்தின் எதிரொலிகளில் ஒரு சில மட்டுமே. எதிர்பார்த்ததை விட புவி வெப்ப உயர்வு ஏற்படுவது மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இதன் விளைவாக நிகழ்ந்த அழிவுகள் எதிர்பார்த்ததைவிட பேரழிவுகளாக உள்ளன என்பதே பிரச்சனை.jungle fireவெப்ப உயர்வு குறித்த மாதிரி கணிப்புகளின்படியே புவி வெப்ப உயர்வு இருந்தாலும், காலநிலை மாற்றம் அதிவேகத்தில் நிகழ்வதே இன்றுள்ள அச்சம் என்று அமெரிக்க காலநிலை ஆய்வாளரும், பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானியுமான மைக்கேல் இ மேன் (Michael E Mann) கூறுகிறார். கணிப்பதைவிட பேரிடர்கள் அதிதீவிரத்துடன் விரைவாக நிகழ்கின்றன என்று ஜெர்மனியின் பாட்ஸ்டம் (Potsdam) காலநிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோஹன் ராக்ஸ்ட்ரம் (Johan Rockstrom) கூறுகிறார்.

1.2 டிகிரி சூட்டில் சுழலும் பூமி

தொழிற்புரட்சி காலத்தை விட 1.2 டிகிரி அதிக வெப்பநிலையில் பூமி உள்ளபோது இவை நிகழ்கின்றன. சமீபத்தில் நடந்த பன்னாட்டு காலநிலை (IPCC) கூட்டத்தில் வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த நாடுகள் உறுதியளித்தாலும், 1.5 என்ற அளவு பத்தாண்டுகளுக்குள் எட்டப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விளைவு இப்போதுள்ளதை விட மோசமான வறட்சி, வெப்ப அலைத் தாக்குதல்கள், பெருவெள்ளம், அதிதீவிர நோய்ப்பரவல் உட்பட உலகம் 1.5 டிகிரி வெப்ப உயர்வை எட்டும்போது இயற்கையின் நான்கு அம்சங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஜோஹன் தலைமையில் அமைந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறுகிறது. கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுதலால் கடல்நீர் மட்டம் பல இடங்களில் பல மீட்டர்கள் அளவு உயரும்.

கனடா, ரஷ்யாவில் இருக்கும் உறைபனிப்பகுதிகள் உருக ஆரம்பிக்கும்போது அவற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைக்குடில் வாயுவான மீத்தேன் பெருமளவில் உமிழப்படும். 1.5 டிகிரி வெப்பநிலையில் எல்லா இடங்களிலும் இருக்கும் பவளப்பாறைகள் அழிய ஆரம்பிக்கும்.

பூமியில் வாழத் தகுதியான இடங்கள் இல்லை

நம் குழந்தைகளுக்கும், வரப் போகும் தலைமுறைகளுக்கும் மனிதன் வாழத் தகுதியான இடங்கள் சுருங்கிவிட்ட பூமியையே நம்மால் ஒப்படைக்க முடியும் என்பதே இதன் பொருள். பேரழிவை ஏற்படுத்தும் விளிம்பை நோக்கி பூமி மெல்ல மெல்ல தள்ளாடி தள்ளாடி நகர்ந்து கொண்டிருக்கிறது.

காப்27 உச்சிமாநாடு

எகிப்து ஷெர்ம் எல்-ஷேக் காப் 27 காலநிலை உச்சிமாநாடு ஐநாவின் “உலகம் பூமி 2.8 டிகிரி சி வெப்ப உயர்வை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கிறது” என்ற எச்சரிக்கையுடனேயே நிகழ்கிறது. 2021 க்ளாஸ்கோ மாநாட்டிற்குப் பிறகு ஒரு ஆண்டை உலக நாடுகள் வீணாக்கி விட்டன என்று கிராண்ட்தம் (Grantham) காலநிலை ஆய்வு மையத்தின் கொள்கை வகுப்புப் பிரிவின் இயக்குனர் பாப் வார்டு (Bob Ward) கூறுகிறார். காலநிலை சீரழிவுகளால் ஏழை நாடுகளில் அதிகரித்து வரும் இழப்பு மற்றும் சேதங்களை மேற்கித்திய நாடுகள் உணர வேண்டும்.

1.5 வரையறை

2050ம் ஆண்டிற்குள் சுழி நிலை கார்பன் உமிழ்வுநிலையை அடைய வேண்டுமென்றால் அதை ஆண்டிற்கு 5 முதல் 7% குறைக்க வேண்டும். இப்போது இந்த அளவு ஆண்டிற்கு 1 முதல் 2% வரை உள்ளது. அதனால் கார்பன் உமிழ்வின் குறைப்பு என்பது காப்27 மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் ஏழை நாடுகள் இழப்பு, நஷ்டைஈடு கோருவதையே முக்கிய பொருளாக எடுத்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம்

புவி வெப்ப உயர்விற்கு முக்கிய காரணமாக இருக்கும் பணக்கார நாடுகள் தங்கள் பொருளாதார வசதிக்காக கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் நாட்டம் காட்டாதபோது வெப்ப உயர்வின் பாதிப்புகளை ஏழை நாடுகளே அதிகம் அனுபவிக்கின்றன. அதனால் நஷ்டஈடு கோருதலே பேசுபொருட்களில் முக்கிய இடம் பெறும் என்று நோக்கர்கள் கருதுகின்றனர். வளரும் நாடுகளின் இந்த கோரிக்கை நியாயமானது என்று ஜோஹன் உட்பட பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதில் பணக்கார நாடுகள் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று யு கே வானிலை நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்டீபன் பெல்ச்சர் (Stephen Belcher) கூறுகிறார். இனி வெட்டிப் பேச்சுக்கள் பேசி வீணாக்க நேரமில்லை. உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்று அவர் புகழ்பெற்ற கார்டியன் நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார்.

அடைபடும் வாய்ப்புகள்

இன்னமும் காலம் இருக்கிறது. ஆனால் தாமதிக்கப்படும் ஒவ்வொரு விநாடியும் பூமியை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன. சாளரங்கள் அடைபடுகின்றன என்பதை உணர்ந்து காப்27 உச்சி மாநாட்டில் உலக நாடுகள் செயல்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்