பானி புயல் வங்கக் கடலில் மையங்கொண்டு தீவிர சூறாவளியாக மாறி ஒடிசாவைத் தாக்கியுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 170 கிலோமீட்டரில் இருந்து 180 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இப்புயல் ஒடிசாவின் பூரி மற்றும் பாலசபூர் இடையே கரையை கடக்கும் என அறிவித்தது வானிலை ஆய்வு மையம். கடந்த 118 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் மிக வலிமையான புயல் பானி புயல்தான் என்று கூறியுள்ளார் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன்.

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு கடற்கரையை அதிகமான புயல்கள் தாக்கி உள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

1.ஜல் 2010
2. தானே 2011
3.நீலம் 2012
4.மடி 2013
5.ரோனி 2016
6.கியான்ட் 2016
7.நாட 2016
8. வர்தா 2016
9.ஒக்கி 2017
10.கஜா 2018
11.பானி 2019

cycloneகடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 11 புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்கி உள்ளன‌. இவற்றில் நான்கு புயல்கள் தமிழகத்தைத் தாக்கி உள்ளன‌. அதாவது வங்கக்கடலில் ஏற்படும் மொத்த புயல்களில் மூன்றில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்குகிறது. இயற்கை நிகழ்வுதானே என்று நாம் யோசிப்போம். ஆனால் புயல்கள் பின் உள்ள பருவநிலை மாற்றம்தான் முதன்மையான காரணம் ஆகும். இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, புயல்களாக மாறி கரையைத் தாக்குகிறது. இந்தப் புயல்கள் ஏற்படும்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகளவிலான மழைப்பொழிவு ஏற்படுத்துகிறது.

புயல்கள் ஏற்படும் கால இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. அதனாலதான் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 11 புயல்கள் வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ளது. அதாவது 11 மாதங்களுக்கு ஒரு புயல் என்ற விகிதத்தில் வங்கக் கடற்கரை பகுதிகளை தாக்குகிறது. இது வெறுமனே வங்கக் கடற்கரை மட்டுமான பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுபோல தொடர்ச்சியாக புயல்கள் தாக்குகின்றன‌. அதுவும் குறிப்பாக பருவ காலங்களில் அல்லாமல், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புயல்கள் கடற்கரையில் உள்ள பகுதிகளைத் தாக்குகிறது.

பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இதற்கு முதன்மையான காரணம் புதைபடிம எரிபொருட்கள் எரிப்பதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் நேரடியாக வளி மண்டலத்தைத் தாக்குவதால் தொடர்ந்து புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகின்றது. புதைபடிம எரிபொருட்களான டீசல், பெட்ரோல், நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரி வாயுக்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை குறைத்துக் கொண்டு, வேகமாக புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை பயன்படுத்துவதை அதிகப்படுத்தியுள்ளன‌. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளன‌. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் உள்ள பல நாடுகள் மிக வேகமாக புதைபடிவ எரிபொருட்களை பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளன‌. உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசு, புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டு அளவை குறைக்கக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதிக அளவிலான அனல் மின் நிலையங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. இது போதாதென்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது இந்திய அரசு. இது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பதினோரு மாதங்களுக்கு ஏற்படும் புயல் என்பது ஆறு மாதங்களுக்கு ஒரு புயல் என்ற நிலைக்கு மாறும். இது மட்டுமல்லாமல் தற்போது 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களின் வேகத்தின் அளவு மேலும் அதிகமாகும். 

இந்தியாவின் அடிமைக் காலனியாக இருக்கும் தமிழகம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லை. காரணம் தமிழகத்தின் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் இந்திய அரசு அனைத்தையும் கொள்ளை அடித்துச் செல்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான புயல், பெருவெள்ளம், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்றவற்றில் இருந்து மீள்வதற்கான நிதியை இந்திய அரசு கொடுப்பதில்லை. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் எதனையும் பெரிய அளவில் இந்திய அரசு செய்வது இல்லை.

தமிழ்த் தேசத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரணியில் திரளுவதுதான் பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளில் இருந்து தமிழகத்தைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.

- செந்தூவல்