இந்திய கிராமப்புறங்களில் அதிக அளவு மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கக் காரணம் என்ன? மற்ற நாடுகளில் உள்ளவாறு, எளிய செலவு குறைந்த மலக்குழி கழிவறைகளைக் கட்டிப் பயன்படுத்த ஏன் தயங்குகிறார்கள்? இந்திய கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகமாய் உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய கிராமங்களில் 70% வீடுகளில் கழிப்பறை இல்லை. எனவே மலம் கழிப்பு திறந்தவெளியில் தான். இதுவே சஹாரன் ஆப்ரிக்க உட்பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்போர் வெறும் 35% ஆகவே உள்ளனர். பங்களாதேஷில் 5% மற்றும் சீனாவில் 2% மக்களே திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். சஹாரன் ஆப்ரிக்கப் பகுதிகளோடு ஒப்பிடும்போது இந்திய கிராமங்கள் கல்வியிலும், பொருளாதார நிலையிலும், நீர் வளத்திலும் மேம்பட்டே உள்ளன. இருந்தும் இங்கு திறந்த வெளியில் மலம் கழிப்போர் எண்ணிக்கை மிக அதிகமாய் உள்ளதன் காரணம் அறிய வேண்டும்.

INDICATOR [2012] OPEN DEFECATION % RURAL OPEN DEFECATION % RURAL DRINKING WATER ACCESS %

GDP/PER CAPITA

$

INDIA 48.3 65.0 90.7 5,050
ALL SOUTH ASIA 38.1 52.5 89.3 4,666

PAKISTAN

23.1 34.3 89.0 4,360
BANGLADESH 4.0 5.0 84.4 2,364
SUB-SAHARAN AFRICA 24.9 34.4 52.5 3,263
NIGERIA 23.0 31.5 49.1 5,291
INDONESIA 21.9 30.7 76.4 8,855

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடு ஏராளம். அதுவும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகு நாடுகளில் மக்களின் உடல் நல பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். காலரா, போலியோ, சீதபேதி , கொக்கிப் புழு போன்ற நோய்களும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் சிசு மரணங்களும் வளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன.

திறந்த வெளியில் மலம் கழிப்பதன் காரணத்தை அறிய முற்பட்ட இந்த ஆய்வில் சுகாதாரம் குறித்த உலக நாடுகளின் புள்ளி விபரங்கள், நேபாள் மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட நேர்காணல்கள், வட இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களின் 32000 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், உத்தர் பிரதேஷ், பீஹார், ஹரியானா, மத்தியப் பிரதேஷ், ராஜஸ்தான் , குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல ஆண்டு கள ஆய்வுகளும் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

toilet 150இந்திய கிராமப்புற மக்கள் எளிய செலவு குறைந்த மலக்குழிகளைக் கொண்ட கழிவறைகளையும் கூட விரும்புவதில்லை. அதற்கான காரணம் கல்வியறிவு குறைவோ பொருளாதரா நிலையோ அல்ல. திறந்த வெளியில் மலம் கழித்தலை மக்கள் தேர்ந்தெடுப்பதன் காரணம் மக்களின் நம்பிக்கை, சுத்தம் சார்ந்த மதிப்பீடுகள், மாசு, சாதியமைப்பு மற்றும் தீண்டாமையே ஆகும். எளிய மலக் குழி கழிப்பறையில் மலம் கழித்தலை மக்கள் சுத்தமற்ற ஒன்றாகவும், மாசு ஏற்படுத்துவதாகவும் கருதுகின்றனர். மாறாக திறந்த வெளியில் மலம் கழிப்பதை சுத்தம் தரும் ஒன்றாகவும், வலிமை தரும் ஒன்றாகவும் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவதில் முதன்மையானவர்கள் ஆண்களே. கழிவறை கட்ட பணம் வேண்டும். கிராமங்களில் எதற்குப் பணம் செலவு செய்வது என்று முடிவெடுப்பது ஆண்களே என்பதையும் குறிப்பிட வேண்டும்.

எளிய கழிப்பறைகளைக் கட்டிப் பயன்படுத்துவதற்கு முதல் தடையாக இருப்பது தீண்டாமையின் வரலாறும் இன்றும் தொடரும் அதன் புனர்வடிவுமே. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் எளிய மலக் குழி கழிப்பறைகள் செலவு குறைந்தவை. அதை அமைக்க அரசு மானியமும் உண்டு. ஆனால் அதில் உள்ள சிக்கல் மலக்குழி நிறைந்ததும் அதை சுத்தப்படுத்தும் பணியை மனிதக் கைகளே செய்ய வேண்டியுள்ளது. காலம் காலமாய் இந்தப் பணியைச் செய்பவர்கள் தலித்துகளே. எனவே தலித் அல்லாதவர்கள் இத்தகைய பணிக்கு வருவதில்லை. தொன்மைக் காலம் தொட்டு, வன்முறையாலும், வறுமையாலும், தலித்துகள் இத்தகைய பணிகளில் கட்டாயப்படுத்தப் பட்டனர். ஒடுக்குமுறைக்கும், அவமானத்திற்கும், ஒதுக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பாய் தலித்துகளும் இன்று வேறு பணி நாடிச் செல்கின்றனர்.

சஹாரா ஆப்ரிக்க உட்பகுதிகளில் உள் நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு இந்தியாவோடு ஒப்பிடும் போது 65% ஆக உள்ளது. ஆனால் திறந்தவெளி மலம் கழிப்பில் நம்மில் பாதியாகவே அங்கு உள்ளனர். பங்களாதேஷின் உள் நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு இந்தியாவோடு ஒப்பிடும் போது பாதியாக உள்ளது. ஆனால் பங்களாதேஷில் திறந்த வெளியில் மலம் கழிப்போர் வெறும் 5 % மக்கள் மட்டுமே. கல்வி ரீதியில் ஒப்பிடும் போதும் முடிவுகள் இது போன்றே உள்ளன.

கழிப்பறைகள் இல்லாமால் இருப்பதற்கு நீர் ஆதாரம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாய்ச் சொல்லப்படுகிறது. இது ஆதாரமற்ற காரணம். மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது நீர் ஆதாரத்திலும் இந்தியா மேம்பட்டே உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, குழாய் நீர் வசதி கொண்ட கிராமப்புற வீடுகளில், பாதிக்கும் மேல் திறந்த வெளியிலேயே மலம் கழிக்கின்றனர்.

கழிவு நீர் குழாய்களை பதித்தல், சுத்திகரித்தல் போன்றவற்றை கிராமப் புறங்களில் அமைத்தல் மிகுந்த செலவு மிக்கது. தீர்வாக மற்ற வளரும் நாடுகளில் உள்ளது போன்ற எளிய செலவு குறைந்த மலக்குழி கழிப்பறைகளைக் கட்டலாம்.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்பது 60 கன அடி கொள்ளளவு கொண்ட மலக் குழி கழிப்பறைகள். இரண்டு பெரியவர்கள் நான்கு குழந்தைகள் பயன்படுத்தினால் அது சராசரியாய் ஐந்து ஆண்டுகள் பயன்படும். அது நிறைந்த பின் அந்த மலக் குழியை சுத்தப்படுத்த வேண்டும் அல்லது புதிய குழி அமைக்க வேண்டும்.

இந்த எளிய செலவு குறைந்த மலக் குழி கழிப்பறை குறித்து நமது மக்களின் பார்வை என்ன என்பதும் மிக முக்கியமானது. இத்தகைய கழிப்பறைகளை இந்திய கிராமப்புற மக்கள் சுத்தமற்ற ஒன்றாகவும் சடங்கு ரீதியில் புனிதமற்றதாகவும் கருதுகின்றனர். பெரும்பாலான மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் கிராமங்களில் அதை வெட்கப்படத்தக்கதாகவோ வருந்தக் கூடியதாகவோ பார்ப்பதில்லை. அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொது நிகழ்வு. வெளியில் மலம் கழிப்பது சுத்தமானதாகவும், வலு தருவதாகவும், உடல் நலம் மற்றும் ஆண்மையோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது.

சுத்தம் அசுத்தம் போன்றவை பொருள் சார்ந்த ஒன்றாக பார்க்கப்படும் அதே வேளையில் அவை மதம் சார்ந்த சடங்கு ரீதியிலும் விளக்கப்படுகின்றன. இந்த ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட சில மக்கள் கழிப்பறைகளை சடங்கு ரீதியான அசுத்தமான ஒன்றாகவே பார்த்தனர். அவை எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் சடங்கு ரீதியில் அசுத்தமானவையே.

ஹரியானாவைச் சார்ந்த பார்ப்பனர் ஒருவர் கழிப்பறைகள் ஏன் கூடாது என்பதற்குச் சொன்ன காரணம் வீட்டில் கழிப்பறை இருந்தால் கெட்ட நாற்றம் வரும், கிருமிகள் வளரும். வீட்டில் கழிப்பறை என்பது நரகத்தை ஒத்தது. சுற்றுச் சூழல் முற்றிலும் மாசுபடும். வீட்டில் விளக்கு வைப்பதால் எந்தப் பயனும் இல்லாது போகும்.

இதில் கெட்ட நாற்றம் என்று அவர் குறிப்பிடுவது இங்கு ஒரு சிறப்பு பொருள் கொள்ளப்படுகிறது. நாற்றத்தின் சாதாரண பொருளுடன் அது சடங்கு ரீதியான அசுத்தமாகவும் காணப்படுகிறது.

குஜராத்தைச் சார்ந்த ஒரு நடுத்தர வயதுக்காரர், இடைச் சாதியைச் சார்ந்தவர், கழிப்பறை குறித்து குறிப்பிடும் போது கழிப்பறை வீட்டில் இருந்து 25 - 30 அடி தொலைவில் இருக்க வேண்டும். நகரங்களில் மக்கள் உண்பதும், கழிவதும் ஒரே இடத்தில். கிராமங்களில் மக்கள் அவ்வாறு வாழ்வதில்லை. நாங்கள் இரண்டையும் வெவ்வேறாக வைத்துள்ளோம், அது நல்லது தானே?”

வீடுகளில் கழிவு குறித்த கிராம மக்களின் பார்வை சற்று குழப்பமான ஒன்று. குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மதில் சுவரின் உள்ளேயோ மலம் கழிக்கின்றனர். அவை பெண்களால் சுத்தப்படுத்தப் பட்டு வீட்டிற்கு வெளியில் வீசப்படுகிறது. இந்த மலம் புனிதத்தைக் கெடுக்கவில்லை. ஆனால் கழிப்பறைகள் புனிதத்தைக் கெடுக்கின்றன. எளிய கழிவறைகள் கட்டும் அளவு பொருளாதார வசதி கொண்டவர்களும் “சுத்தம்“ என்ற காரணம் காட்டி கழிவறை கட்டுவதில்லை. சமூகவியலாளர் டமரியாஸ் லூதி, தமிழ் நாட்டில், கோட்டார் பகுதியில் ஆய்வு செய்து மக்கள் மனப்பாங்கு குறித்து எழுதினார் குப்பையை வீட்டில் எங்கும் சேர்த்து வைக்கக் கூடாது, அதனால் குப்பைத் தொட்டி வைப்பதில்லை. குப்பையை நாங்கள் வீட்டினுள் தரையில் அங்கங்கே போட்டு விடுவோம். பிறகு பெருக்கி சுத்தப்படுத்தி விடுவோம்.”

எளிய செலவு குறைந்த மலக்குழி கழிப்பறைகளை மக்கள் விரும்புவதில்லை. மற்ற வளரும் நாடுகளில் அதுவே தீர்வாக இருக்கும் போது இங்கு அது முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. முதல் காரணம் அது சில மாதங்களிலேயே நிறைந்து விடும் என்ற தவறான கருத்து. உண்மையிலும் அவை பல ஆண்டுகள் நீடிக்கக் கூடியவை. அவை நிறைந்தவுடன் அவற்றை சுத்தப்படுத்துவதில் உள்ள சிக்கல். யார் செய்வது என்ற கேள்வி? மற்ற நாடுகளைப் போல் அல்லாது இங்கு மலக் குழி சுத்தம் செயல் சாதிய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாய் உள்ளது. மலக் குழி சுத்தம் செய்தல் சபிக்கப்பட்ட தலித்துகளின் செயல் என்பதும், அது இழிவானது என்பதும் இங்கு பொதுப் புத்தியில், சாதியப் புத்தியில் நன்றாகப் பதியப்பட்டுள்ளது. நமது கழிவறைகளை நாமே சுத்தம் செய்வோம் என்பதிலும் சாதியத்தின் மனத் தடை உள்ளது. எளிய மலக் குழி கழிப்பறை கொண்டு மற்ற வளரும் நாடுகள் இந்த சிக்கலை எளிதில் கடந்து செல்லும் போது நமது சாதிய சமூகம் நமக்கு இதில் தொடர்ந்து தடை விதித்துக் கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகள் நீடிக்கும் பெரிய தொட்டிகள் கொண்ட கழிவறைகளை மக்கள் விரும்புகின்றனர். சொல்லப் போனால் அத்தகைய கழிவறைகள் செல்வத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. அதில் கழிவு நீக்கம் பல பல ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதால் அதை விரும்புகின்றனர். தீண்டாமையின், சாதிய அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ஆழமான புரிதலுடன் அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு தொலை நோக்குப் பார்வையும் வேண்டும்.

உத்தர் பிரதேசில் கழிப்பறைகளின் நன்மைகள் குறித்து அரசு சுவர் விளம்பரம் செய்துள்ளது. அவற்றில் ஒன்று உங்களுடைய மகள்களும், மருமகள்களும் வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது. எனவே வீட்டில் கழிப்பறை கட்டுங்கள்.“

இதில் அரசின் தொலை நோக்குப் பார்வை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை. மாறாக பெண் குறித்த அரசின் மதிப்பீடாகவே உள்ளது.

சரி என்ன தீர்வு?

இதில் சரியான துவக்கமாய் என்ன செய்யலாம்? முதலாவதாய் மனிதக் கழிவை மனித கைகளால் அகற்றுவதற்குத் தடை செய்யும் சட்டத்தை முழுமையாய் அமல்படுத்துவது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ எட்டு லட்சம் வீடுகளில் உலர் கழிவறைகள் உள்ளன. உலர் கழிவறைகள் என்றால் மனிதக் கழிவை மனிதரே நீக்க வேண்டும். உட்காருபவர் ஒருவர். அதை வழித்துச் செல்பவர் இன்னொருவர். அந்த இன்னொருவர் தலித் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தடை செய்யப்பட்ட உலர் கழிப்பறைகள் கொண்ட வீட்டு உடைமையாளர்களில், கழிவு நீக்கத்துக்கு தலித்தை வேலைக்கு அமர்த்தும் ஒருவர் கூட இது வரையிலும் கைது செய்யப்பட்டதில்லை. தனி வீடுகள் மட்டுமல்ல பஞ்சாயத்துகளும், நகராட்சிகளும், மாநகராட்சிகளும், ரயில்வே துறையும் தொடர்ந்து இத்தகைய பணிகளில் சட்டத்தை மீறியே செயல்படுகின்றனர். தண்டவாள மனிதக் கழிவுகள் மனிதக் கைகளாலேயே சுத்தப் படுத்தப் படுகின்றன.

இன்னொரு தீர்வாய் இரட்டைக் குழி கழிவறைகள் சொல்லப்படுகின்றன. முதல் குழி நிறைந்ததும் இரண்டாவது குழி பயன்பாட்டுக்கு வரும். முதல் குழியின் கழிவு ஆறு மாதங்களில் மக்கி விடும். பின்னர் அதை சுத்தப்படுத்துவது எளிது. இது குறித்த பிரசாரத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் முழு தீர்வாகாது. புதிய தொழில் நுட்பங்கள் புதிய கழிப்பறை வடிவுகளைக் கொண்டு வரலாம். ஆனால் அவை முழுத் தீர்வாகாது. சிக்கல் தொழில் நுட்பம் சார்ந்தது அல்ல. அது சமூகம் சார்ந்தது. மலக் குழி சுத்தம் செய்யும் செயல் சாதிய ஒடுக்குமுறையின் ஒரு கருவியாகப் பயன்பட்டு, சாதி இந்துக்களால் தங்களது மேலாண்மையையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்தும் ஒரு வழி முறையாக இருக்கும் வரை விடிவில்லை.

ஆங்கில மூலக் கட்டுரை: EPW, Diane Coffey, Aashish Gupta, Payal Hathi, Dean Spears, Nikhil Srivastav, Sangita Vyas

தமிழில் சுருக்கி எழுதியது

- எஸ்.யோகேந்திரகுமார்