மு.குருமூர்த்தி
பிரிவு: சுற்றுச்சூழல்

 

Fruitsசுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் மனிதர்களின் வாயில் உள்ள சிலபாக்டீரியாக்கள்தான் உணவுகளின் சுவையையும் மணத்தையும் அறிய உதவுகின்றன என்கிறார்கள்.

சில காய்கறிகளிலும், பழங்களிலும் மணமற்ற 'தையோல்' என்னும் கந்தக கூட்டுப்பொருள் அடங்கியுள்ளது. இந்த மணமற்ற தையோல் என்னும் வேதிப்பொருளை மணமுள்ளதாக மாற்றி நம்முடைய நாக்கிற்கு சுவையையும், மணத்தையும் அளிக்கும் வேலையை வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் செய்கின்றன.

திராட்சை, வெங்காயம், மிளகு போன்ற உணவுப்பொருட்களில் இந்த தையோல் என்னும் வேதிப்பொருள் உள்ளது. வெங்காயத்தை கடித்த சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அதற்குரிய சுவையையும் மணத்தையும் அறிய முடிகிறது இல்லையா? ஆவியாகக்கூடிய வேதிக்கூட்டுப் பொருட்கள் இதுபோன்ற உணவுப் பொருட்களில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே சுவையையும் மணத்தையும் அறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும் இதுவரை கருதப்பட்டது.

சுவையறிவதில் பயிற்சிபெற்ற 30 நபர்களுக்கு இந்த 'மணமற்ற தையோல்' வேதிப்பொருளை உண்ணக் கொடுத்து விவரங்களை சேகரித்தனர். இந்த நபர்கள் சுவையையும் மணத்தையும் அறிவதற்கு 20 முதல் 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு அறியப்பட்ட சுவையும் மணமும் மூன்று நிமிடங்களுக்கு நீடித்து இருந்தது.

மணமற்ற வேதிப்பொருட்களை மணமுள்ள தையோல்களாக மாற்றும்பணியை வாயில் உள்ள பாக்டீரியாக்கள் செய்வதாகவும், இதனால்தான் நமக்கு சுவையும் மணமும் அறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர் காரணமாகத்தான் இந்த தையோல்களினால் எழுந்த சுவையும் மணமும் நீடித்த நேரத்திற்கு வாயில் நிலைபெற்று இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

- மு.குருமூர்த்தி